

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் கண்டனப் பொதுக் கூட்டம், மாநில அரசியல் களத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
÷இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், கோவை, திருச்சி போன்ற பொதுக் கூட்டங்களில் அ.தி.மு.க.வே ஆச்சரியப்படும் வகையில் கூடிய பெரும் கூட்டம்தான்.
தென் மாவட்டங்களை மையமாக வைத்து அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழக முதல்வரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் கோட்டையாகக் கருதப்படும் மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடப்பதும் அரசியல் பரபரப்புக்கு மற்றொரு காரணம் என்று சொல்லலாம்.
"மதுரையில் எனது தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும்' என்று ஜெயலலிதா அறிவித்த உடன் அதிமுகவினரிடையே பரபரப்பு காணப்பட்டதோ இல்லையோ, திமுகவினரிடையே ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கியபாடில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஜெயலலிதா அறிவிப்பு வெளியானவுடனேயே மதுரையில் எந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது என அதிமுகவினர் ஆலோசனை நடத்தினர். திமுகவினர் இடையூறு ஏற்படுத்தலாம் என்பதால் கள ரீதியாக அதைச் சந்திக்கும் வகையில் முதலில் தமுக்கம் மைதானத்தைத் தேர்வு செய்வதாக அதிமுகவினர் அறிவித்தனர். அதற்கு அனுமதி வழங்குவதாக முதலில் ஒப்புக்கொண்ட மதுரை மாநகராட்சி, பின்னர் அ.தி.மு.க. கேட்டுள்ள அந்த நாள்களில் வேறு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்கெனவே அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டது.
இதையடுத்து அதிமுகவினர் உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடி, தமுக்கத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதியைப் பெற்றனர். ஆனாலும், அந்த இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மதுரையில் கூட்டம் நடத்த இதேபோல் 10 இடங்களைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவலை திமுகவினரிடையே வேண்டுமென்றே அதிமுகவினர் பரப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது பாண்டி கோயில் அருகே ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளதுடன், இடத்தைத் தேர்வு செய்வதில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அதிமுகவினர் கூறிவருகின்றனர். ஆனால், ஜெயலலிதா மதுரையில் பங்கேற்க உள்ள பொதுக் கூட்டத்துக்கு கோவை, திருச்சியைப்போல் தொண்டர்கள் கூட்டத்தைச் சேரவிடக்கூடாது என்பதில் திமுகவினர் உறுதியாக உள்ளனர்.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்களை அறிவித்து கிராமங்கள்தோறும் நேரில் சென்று கிராம மக்களுக்குத் தேவையான திட்டங்களை முன்னிருந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அவருடன் மாவட்ட நிர்வாகமும் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவினரும் ஜெ. பேரவை, மாணவரணி, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை போன்ற எந்த அணியினராயிருந்தாலும் கூட்டம் நடத்துவதென்றால் மதுரையை மையப்படுத்தித்தான் நடத்தவேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை கட்சித் தலைமை விடுத்துள்ளதாம். இதனால், மாநில நிர்வாகிகள் தலைமையில் தினமும் தென்மாவட்டங்களில் ஏதாவது ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையெல்லாம்விட ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டு வரும் கொலை மிரட்டல் கடிதங்கள் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது. பொதுக்கூட்டத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதா தனது பொதுக்கூட்டத்தை ரத்து செய்யலாம் என்ற தகவலை உளவுத்துறை மூலம் திமுக கசியவிட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இக்கருத்தையே அண்மையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் எங்கள் களப்பணி அமையும். அக்.18-ம் தேதி ஜெயலலிதா கண்டிப்பாக மதுரையில் பேசுவார். அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சியை யாராலும் தடுக்கமுடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.