தமிழக பாஜக தலைவர்களின் செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை...

மூத்த அரசியல் தலைவராகவும், ஊழலில் ஈடுபடுபவரை இடித்துரைப்பவராகவும் சமூகத்தில் வலம் வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி.
தமிழக பாஜக தலைவர்களின் செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை...
Updated on
5 min read

மூத்த அரசியல் தலைவராகவும், ஊழலில் ஈடுபடுபவரை இடித்துரைப்பவராகவும் சமூகத்தில் வலம் வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி. தமிழகத்தைச் சேர்ந்த இவர், தேசிய அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்? மாநில பாஜகவை அவர் தவிர்க்க காரணம் என்ன? மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசுடனான அவரது உறவு எப்படிப்பட்டது? போன்றவை குறித்து "தினமணிக்கு' மனம் திறந்து அளித்த பேட்டி:
கே: ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து பாஜக உருவானவுடன் சேராமல் தாமதமாக வந்த காரணம் என்ன?
 பதில்: ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஜனதா கட்சி உருவானபோது "ஜன சங்கம்' அதில் இணைந்தது. 1979-இல் ஜனதா கட்சி உடைந்ததும், பழைய ஜனசங்கத்தினர் பலரும் சேர்ந்து 1980-இல் பாஜகவை உருவாக்கினர். அப்போது நான் வலியுறுத்தி வந்த "இந்துத்வா' கொள்கையை அடல் பிஹாரி வாஜ்பாய் முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், ஜனதா கட்சியிலேயே நீடித்தேன். "ஜெயேந்திரர் (காஞ்சி சங்கராச்சாரியார்) மீது தமிழக அரசு பொய் வழக்கு புனைந்த போது ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர் சுதர்சன், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர், வாஜ்பாய் உடல்நிலை குன்றியதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். எனவே, பாஜகவுக்கு வர வேண்டும்' என அழைத்தனர். அந்த நேரத்தில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு, இந்து கட்சியாக பாஜக உருவெடுத்தது போன்றவை எனது கொள்கையுடன் ஒத்துப்போனது. அதனால் பாஜகவில் சேர்ந்தேன்.
 கே: பாஜகவில் சேர்ந்த பிறகு தமிழகம் மீது உங்களுக்கு ஆர்வம் குறைந்தது ஏன்?
 ப: வாஜ்பாய் பதவிக் காலத்தில் இளைஞர்களாக இருந்த பல தமிழக பாஜக தலைவர்கள் இப்போது கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கைக் கூலிகளாக இருந்தே சில பாஜக தலைவர்கள் பழக்கப்பட்டு விட்டனர். அந்த இரு கட்சிகளின் தோள் மீது நிற்காவிட்டால் தங்களின் அடையாளம் மக்களுக்கு தெரியாது என்ற கலாசாரத்துடன் அவர்கள் வாழுகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.
 கே: பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர முடியும் என்று நம்புகிறீர்களா?
 பதில்: தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பொது தேர்தல்களிலாவது பாஜக தனித்து போட்டியிட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். திராவிட கட்சிகள் மக்களிடையே பொய்யான பிரசாரத்தை செய்து, வட மாநிலங்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. அந்த எண்ணம் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க அவர்கள் உரிமை கொண்டாடும் நிலையை உருவாக்கும். இந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க வலுவான பாஜக தலைமை தமிழகத்தில் அமைந்தால் பட்டி, தொட்டியெல்லாம் பாஜக வளரும்.
 கே: உங்கள் நோக்கத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு உள்ளதா?
 பதில்: தமிழக பாஜகவில் உள்ள சில தலைவர்களின் செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை. அதனால் என்னை சில தலைவர்கள் ஆதரிப்பதில்லை. கூட்டணி இருந்தால் நான்கு, ஐந்து பேரை தலைவராக வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுக்கலாம் என்றும், மத்திய அமைச்சரவையில் சேரலாம் என்றும், தில்லியில் இருந்து பணம் நிறைய வரும் என்ற எதிர்பார்ப்பிலும் சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவையும் பாஜகவுக்கு பணம் கொடுக்கும் என சிலர் உள்ளனர். இதனால், களப்பணியில் ஈடுபடாமல் சுகமாக வாழும் கனவுடன் தன்மானமின்றி வாழும் சில தலைவர்கள் என்னை ஆதரிப்பதில்லை.
 கே: பாஜக அகில இந்திய தலைமை உங்களுக்கு உரிய மதிப்பை அளிக்கிறதா?
 பதில்: பாஜகவில் சேர்ந்த பிறகு என்னை தமிழகத் தலைவர்கள் மதிக்காவிட்டாலும் எனது ஆலோசனைகளை எல்லா தருணத்திலும் கட்சித் தலைமை கேட்கிறது. தேசிய செயற்குழுவில் உறுப்பினராக்கி, "மூத்த தலைவர்' என்ற அங்கீகாரத்தை பாஜக மேலிடம் அளித்துள்ளது. பிரதமர் மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து மக்கள் நலனுக்காக முறையிடும் உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் என்னை மட்டுமின்றி என் பின்னால் இக்கட்சியில் சேர்ந்த எனது தொண்டர்களையும் அரவணைப்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை.
 கே: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும் திட்டம் உள்ளதா?
 பதில்: இந்த அழைப்பை பாஜக மேலிடம் விடுத்த போது, "தன்மானத்தை விட்டு விட்டு என்னை மதிக்காத மாநிலத்தில் உள்ள சில தலைவர்களுக்காக எனது உழைப்பை எவ்வாறு செலவிட முடியும்?' என்று கேட்டேன். பாஜகவை வளர்க்க கட்சி மேலிடம் விரும்பினால், செயல்படாத தலைவர்களை கேள்வி கேட்டு நீக்கவும், அவர்களை செயல்பட வைக்கும் அதிகாரத்தையும் எனக்கு பாஜக மேலிடம் தர வேண்டும். அப்படிச் செய்தால் தேர்தலின்போது தனித்துப் போட்டியிடும் உத்வேகத்தை தொண்டர்களுக்கு அளிப்பேன். அனைத்துத் தொகுதிகளிலும் இப்போதே வேட்பாளர்களைக் களமிறக்கி தொகுதிவாரியாக பிரசாரம் செய்வேன். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் திமுக, அதிமுக ஆகிய இரு ஊழல் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடும் துணிவு எங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மக்களுக்கு நிரூபிப்போம்.
 கே: தமிழக மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளதா?
 பதில்: எனது நேர்மை, பொதுவாழ்வில் நான் கடைப்பிடிக்கும் தூய்மையை தமிழர்கள் அறிவார்கள். ஊழலை ஒழிப்பேன், சிறந்த நிர்வாகத்தை தருவேன் என்று தேர்தலின் போது அறிவிப்பதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். அந்தத் தகுதி எனக்கு உள்ளது. பாஜகவுக்கு பின்புலமாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என பலம் வாய்ந்த அமைப்புகள் உள்ளன. அவற்றைச் சரிவர பயன்படுத்துவதில்லை. இந்த சக்திகள் ஒருங்கிணைந்தால் தமிழ்நாட்டில் நிச்சயமாக பாஜக ஆளும் கட்சியாக உருவெடுக்கும். இதை செய்யத் தவறினால் தேர்தல் காலங்களில் "கூட்டணி பிச்சை' கேட்டு ஒவ்வொரு கட்சித் தலைமைகளிடமும் பாஜக மாநிலத் தலைவர்கள் நிற்க வேண்டிய நிலைமைதான் தொடரும்.
 கே: அதிமுக, திமுக, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகளுக்கு மத்தியில் பாஜகவால் ஈடுகொடுக்க முடியுமா?
 பதில்: தமிழகத்தில் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர். மேல்முறையீடு வழக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அவரது தண்டனை உறுதிசெய்யப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு. கருணாநிதியை பற்றி நான் கூறி மக்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அவரைப் போன்ற "தேசத் துரோகி' இந்தியாவில் ஒருவர் இருக்க முடியாது. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, இந்து விரோதி, எல்லையின்றி பொய் உரைப்பவர், அற்ப புத்தி ஆகிய தீய பண்புகளைக் கொண்டவர் கருணாநிதி.
 தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் கருணாநிதியின் பெயரே சம்ஸ்கிருதம் தான். திமுக தேர்தல் சின்னமான "உதய சூரியன்' கூட சம்ஸ்கிருத வார்த்தை. நாட்டில் ஒற்றுமையைக் குலைக்க வெளிநாட்டில் உள்ள சக்திகளிடம் இருந்து பணம் வாங்கியும் "பிரவுன் சுகர்' விற்கும் கும்பலின் பணத்தையும் வைத்தும் வளர்ந்தவைதான் சில திராவிட இயக்கங்கள். அதில் தேமுதிக விதிவிலக்கு. தேமுதிக தலைவர் விஜய்காந்த் தேசிய உணர்வு மிக்கவர் என்பதை அண்மையில் அவரைச் சந்தித்தபோதுதான் உணர்ந்தேன்.
 கே: காங்கிரஸ், திமுக தலைவர்களுக்கு எதிரான உங்கள் வழக்குகளின் நிலை என்ன?
 பதில்: ஊழல்வாதிகள் பற்றி தகவல் தெரிவிக்கும் இடித்துரைப்பாளர் என்ற முறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான "நேஷனல் ஹெரால்டு' வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கும் நிலையை உருவாக்கியுள்ளேன். இனி சட்டம் அதன் கடமையை செய்யும். அதில் இருந்து அவர்கள் தப்ப முடியாது.
 திமுகவைச் சேர்ந்த ராசா, கனிமொழி உள்ளிட்ட அக்கட்சித்தலைமையின் குடும்பத்தினர் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட ஊழல் வழக்குகளிலும் அவர்கள் சிறை செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய நிதி, உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோருக்கு எதிரான முறைகேடு, ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளேன். பாஜகவில் சேரும் முன்பே இதை எல்லாம் அம்பலப்படுத்தினேன்.
 கே: இவ்வாறு வழக்கு தொடுப்பதால் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
 பதில்: மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியில் நான் கிடையாது. அதில் எனக்கு செல்வாக்கும் இருந்ததில்லை. எனது கட்டுப்பாட்டில் புலனாய்வு அமைப்புகள் இல்லை. நம் நாட்டில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சமூகத்தின் மிக உயரிய நிலையில் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த தனிப்பட்ட நபராலும் முடியும். போராடும் குணம் இருந்தால் ஒவ்வொரு குடிமகனாலும் ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும் என்பதை நிரூபித்து வருகிறேன். அரசியல் மட்டுமின்றி, ராமர் பால விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் அந்த பாலம் இருந்த பகுதியை தொடவே மாட்டோம் என நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு உறுதி அளிக்கும் நிலையை ஏற்படுத்தினேன். மக்களுக்காக செய்கிறேன் என்ற திருப்தியில் இந்த சமுதாயப் பணியைத் தொடருகிறேன்.
 கே: தமிழகத்தில் உங்களுக்கு எதிராக சில கட்சிகளும் அமைப்புகளும் போராடுவது பற்றி..
 பதில்: சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசில் நான் மத்திய அமைச்சராக இருந்த போது திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுத்தேன். அப்போது தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்திய விடுதலைப்புலிகளை அறவே ஒழித்தேன். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வீழ்த்த 2009-இல் இலங்கையில் ஆட்சியில் இருந்த அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு பல உதவிகளை செய்தேன். அப்போது இந்திய பிரதமரும் எனது நண்பருமான மன்மோகன் சிங் மூலம் பல அனுமதிகளை பெற்றுத் தர உதவினேன். ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் அது வலுவடைய காரணமாக இருந்தவர்களையும் ஒடுக்கியதற்காக என்னை தமிழின விரோதி என யாராவது அழைப்பார்களா? இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்களை மீட்க பல முறை அந்நாட்டு அதிபரிடமும் அரசு உயரதிகாரிகளிடமும் பேசினேன். எனது செயல்பாடு நேர்மையானது என்பது எனக்கும் என்னை நம்பி வருபவர்களுக்கும் தெரியும். என்னை விமர்சிப்பவர்களிடம் வலியச் சென்று நியாயத்தை விளக்க வேண்டிய அவசியம் கிடையாது.
 கே: தன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்புடைய புகார்களுக்கு ஆதாரமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளாரே?
 பதில்: எந்த குற்றவாளியும் தன்னை நிரபராதி என்றே கூறுவார். சிதம்பரம் தனது பதவிக்காலத்தில் பல முறைகேடுகளுக்கும் ஊழலுக்கும் துணை போனார். அதன் விளைவை அவர் மட்டுமின்றி அவரது மகன், மருமகள் ஆகியோரும் அனுபவிக்க வேண்டும். சிதம்பரத்தின் அறிக்கைகளுக்கு ஊடகங்கள் மூலம் பதில் அளிக்க எனக்கு நேரமில்லை. நான் பேசக் கூடிய இடமும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய இடமும் நீதிமன்றம். அங்கு எனது வாதத்தை முன்வைத்து தண்டனை கிடைக்க வழிகோலுவேன்.
 கே: காங்கிரஸ், திமுக தலைவர்களை மட்டுமே குறிவைத்து நீங்கள் செயல்படுவதாக கூறப்படுவது பற்றி...
 பதில்: யார் மீது வேண்டுமானாலும் ஊழல் வழக்கோ அவதூறு வழக்கோ தேச துரோக வழக்கோபோட இது தமிழ்நாடு கிடையாது. இது தேசியத் தலைநகர் தில்லி. இங்கு சட்டம் அதன் கடமையை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படுகிறது. யாருக்கும் வளைந்து கொடுக்காது. தவறு செய்தவர்கள் சட்டத்துக்கு பதில் கூற வேண்டும். முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றம்தான்.
 கே: காவி பயங்கரவாதத்தின் தாக்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசில் இருப்பதாக சில முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே...
 பதில்: காவி பயங்கரவாதம் என்பது மாயை. அப்படி குறை கூறும் முஸ்லிம் தலைவர்கள் எந்த "காவி' (இந்து) அமைப்பு என பெயரிட்டு குற்றம்சாட்டத் தயாரா? அத்தகைய பெயரில் ஒருவித பயங்கரவாதம் உண்டு என்றால், அதற்கும் எனக்கும், பாஜகவுக்கும், இந்து அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆதாரத்துடன் குற்றம்சாட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு துணிவு இருக்கிறதா?
 கே: சுப்பிரமணியன் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிரானவரா?
 பதில்: இந்து மறுமலர்ச்சி மூலம் சாதி வேறுபாடுகளைக் களைய பாடுபடுகிறேன். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பதால் ஒட்டுமொத்த மதத்துக்கே நான் எதிரானவனாக சித்திரிக்கப்படுகிறேன். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பல பெண்கள் என்னைத் தொடர்பு கொண்டு எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று கேட்கின்றனர். அவர்களுக்காக சில கருத்துகளை வெளியிடுகிறேன்.
 கே: இந்திய முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர ஆர்வம் காட்டுவதாக கூறுவது பற்றி...
 பதில்: இது அபத்தமானது. இந்துக்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் போது, முஸ்லிம்களுக்கு மட்டும் எப்படி அந்த வாய்ப்புகள் மறுக்கப்படும்? "தேச துரோகி' என்பவன் தேசத்துக்கு விரோதமாக செயல்பட முடிவெடுத்தவன். "தேச பக்தி கொண்டவர்' என்பது வறுமை, வேலைவாய்ப்பின்மை என எந்தப் பிணி வந்தாலும் தேசத்தை விட்டுக் கொடுக்காதவர். பணம் இருந்தால்தான் தேசத்தை பாதுகாக்க இளைஞர்கள் முன்வருவார்களா? தீய வழிக்கு செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் இத்தகைய தீய எண்ணத்தை ஒழித்து விட்டு தேச வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com