கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும்!

கடந்த காலத் தேர்தல்களைவிடவும் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கூட்டணி உத்திகள் கையாளப்படுவது தொடங்கியிருக்கிறது.
Published on
Updated on
1 min read

கடந்த காலத் தேர்தல்களைவிடவும் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கூட்டணி உத்திகள் கையாளப்படுவது தொடங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் பிரதான கட்சிகளை ஆதரிப்பது என்ற நிலை மட்டுமே இருந்து, அதன்பிறகு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதாக மாறியது. அந்தக் கூட்டணியும் தேர்தல் நேரத்தில் மட்டும்தான், அதாவது, தேர்தலுக்கான இடப் பங்கீடு மட்டும்தான் என்ற நிலை உருவானது.

ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய அம்சமாக கூட்டணி அமைத்தலில் புதிய "பார்முலா' கையாளப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

பாஜக - பாமகவுக்குமான கூட்டணி முயற்சிகள்: பாஜகவின் தேசிய அளவிலான அணியில் ஏற்கெனவே தமிழகத்தில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன், மீண்டும் அந்தக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத்தான் போட்டியே தவிர - பாஜகவுடன் சேர்ந்து போட்டி என்பதல்ல என அந்தக் கட்சி முடிவெடுத்து கறாராக இருந்ததுதான் அதற்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதாவது, முதல்வர் வேட்பாளரை அறிவித்து முன்கூட்டியே பணியைத் தொடங்கிவிட்ட பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருந்தது. அதேநேரத்தில், முதல்வர் வேட்பாளர் என்று அந்தக் கட்சி உருவாக்கிக் கொண்ட அடிப்படையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சென்று தேர்தலைச் சந்தித்தால் பாமக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த முடியாது. ஏறத்தாழ இதே நிலையில்தான் தேமுதிகவும் இருந்தது. இதற்காகவே மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளையும் பாஜக அணிக்குள் அழைத்துச் செல்லும் முயற்சிகளையும் விஜயகாந்த் மேற்கொண்டார்.

அங்கும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் சிக்கலையும், மக்கள் நலக் கூட்டணியை விட்டு வர மறுத்த மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடும் தேமுதிக, பாஜக அணியில் சேருவதற்குத் தடையாக இருந்தன.

இந்த நேரத்தில்தான் மக்கள் நலக் கூட்டணிக்குள் விஜயகாந்த் இணைவதில் விருப்பமாக இல்லை என்ற போது, அந்தக் கூட்டணியும் தேமுதிகவும் புதிய கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

ஓர் கூட்டணியில் இணையாமலேயே ஒரு கட்சி கூட்டுச் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க முடியும் என்ற புதிய "பார்முலா' இந்தத் தேர்தலில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ இதே "பார்முலா'வை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பாமக முயற்சித்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. பாஜக அதை உறுதியாக மறுத்திருக்கலாம்.

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவைப் போன்ற பார்முலாவுடன் தமாகா, புதிய தமிழகம் போன்ற இன்னும் சில கட்சிகளை இணைக்கவும் அந்தக் கூட்டணியினர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com