
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வரவை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை என்ற ரீதியில் மக்கள் நலக் கூட்டணி இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கமாகத் தொடங்கி, பின்னர் மக்கள் நலக் கூட்டணியானது. இந்தக் கூட்டணியுடன் தற்போது நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது.
மேலும், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என எதிர்பார்ப்பதாக இந்தக் கூட்டணியினர் தெரிவித்து வந்தனர்.
ஆனால், தமிழ் மாநில காங்கிரûஸ கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதாக மக்கள் நலக் கூட்டணியினர் தெரிவித்திருந்தாலும், தற்போது அவர்களது நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதாகவே தெரிகிறது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் வழக்குரைஞர்கள் மாநாட்டில் பேசிய இந்தக் கூட்டணியின் தலைவர்கள், தங்களது கூட்டணிக்கு வாசன் வந்தால் நல்லது, வராவிட்டால் பாதிப்பு ஏதுமில்லை என்ற கருத்தை மையப்படுத்தியே பேசினர். அவருக்காக பெரிய அளவில் காத்திருக்கவில்லை என்பதையும் சூசகமாகக் குறிப்பிட்டனர்.
குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தனது பேச்சில் வடை, பாயசம், காய்கறிகளுடன் சாப்பாடு தயாராக இருக்கிறது. ஊறுகாய் மட்டும்தான் இல்லை. வந்தால் ஊறுகாயாக இருந்து பயன்படலாம். அதேநேரத்தில், ஊறுகாய் இல்லாமல் நாங்கள் சாப்பிடத் தயாராக இருக்கிறோம். வந்தால் அவர்களுக்கு நல்லது, வராவிட்டால் இழப்பு ஒன்றும் இல்லை என்று மறைமுகமாக தமிழ் மாநில காங்கிரûஸ குறிப்பிட்டே பேசினார்.
மேலும், மக்கள் நலக் கூட்டணி என்னும் ரயில் புறப்பட்டுவிட்டது. கூட்டணியில் 6-வது கட்சியாக, 7-வது கட்சியாக சேரும் கட்சிகளின் அதிர்ஷ்டம் அவர்களைப் பொருத்ததே. ரயிலில் சீட்டும் இருக்கிறது, பெர்த்தும் இருக்கிறது என்று குறிப்பிட்டார் முத்தரசன்.
அவரைப் போல மற்ற தலைவர்கள் பேசவில்லையென்றாலும், யாரும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் கட்டாயம் சேர வேண்டும் என்பதை மையப்படுத்திப் பேசவில்லை. மாறாக, ""திமுக, அதிமுக ஆகியவை ஊழல் கட்சிகள், இவ்விரு கட்சிகளும் ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளன என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வழக்குரைஞர்களுக்கு இருக்கிறது, இரு பெரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகிக்கும் திட்டத்துடன் இருக்கின்றன. இதை முழுமையாகக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்'' என்பதையே வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.