
மாநிலங்களவை திமுக குழுத் தலைவரும், அந்தக் கட்சியின் மகளிரணிச் செயலருமான கனிமொழி "தினமணி'க்கு அளித்த பேட்டி
எதிர்பார்த்த கூட்டணியை அமைக்க முடியாததால் கருணாநிதியின் ராஜதந்திரம் தோற்றுப் போய்விட்டது என்று கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களின் விமர்சனம். தோல்வி பயம் உள்ளவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கவே செய்வர். அரசியலில் எதிர்பார்ப்புகளும் இருக்கும், ஆருடங்களும் இருக்கும். ஆனால், அது எல்லாமுமே நிஜமாக வேண்டிய அவசியம் இல்லை, தேவையும் இல்லை. அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்ட இயக்கம் திமுக. தலைவரும், தளபதியின் உழைப்பும், தொண்டர்களும்தான் திமுகவின் அடிப்படை பலம். திமுகவுடன் இணைந்து தோழமையுடன் பணியாற்றக் கூடிய கட்சிகளும் உள்ளன. அதனால், எங்களுக்கு வெற்றி நிச்சயம்.
தேமுதிக வரும் என்று கருணாநிதி ஏமாற்றப்பட்டாரா அல்லது திமுகவின் பெயரைக் கடைசிவரை பயன்படுத்திக் கொண்டு விஜயகாந்த் ஏமாற்றிவிட்டாரா?
அரசியலில் ஓர் கூட்டணி உருவாகலாம் அல்லது உருவாகாமலும் போகலாம். தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று கருதி, அதற்கான அழைப்பை தலைவர் விடுத்தார். அதை ஏற்பதும், ஏற்காததும் அவர்கள் விருப்பம். அதனால், யாரும் யாரையும் ஏமாற்றத்துக்கு உள்படுத்தியதாகவோ, ஏமாந்ததாகவோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் முடிவுகள் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டப்பேரவையாகக்கூட அமையலாம். அப்போது விஜயகாந்தின் வீட்டு வாசலுக்கு திமுக வரவேண்டிய சூழல்கூட ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாரே ?
யாரும் யாரையும் எளிதில் இழுத்துவிட முடியாது. அதிமுகவிலிருந்துகூட பலர் விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி, கட்சியில் மாவட்டச் செயலர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அப்போதெல்லாம் திமுக மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. எனவே, தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைய முற்படுபவர்களை, எங்களது கட்சிக்கு வர வேண்டாம் எனத் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மேலும், தமிழக மக்கள் எப்போதும் தேர்தல் முடிவுகளைத் தெளிவாகத்தான் அளித்து வருகின்றனர். கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய சூழலை மக்கள் ஏற்படுத்தியது இல்லை. அதனால், தொங்கு சட்டப்பேரவைக்கான வாய்ப்பு இல்லை.
தேமுதிக, மதிமுக, பாமக, விசிக என தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தக் கட்சிகளும் திமுகவையே பிரதானமாக விமர்சிப்பதுடன், புறக்கணிக்கவும் செய்கின்றனவே?
திமுகவையே பிரதானமாக இந்தக் கட்சிகள் எதிர்ப்பதன் பின்னால் உள்ள அரசியலை நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனினும், திமுகவை யார் யார் எதிர்க்கிறார்கள் என்பதல்ல முக்கியம். மக்கள் அதிமுகவுக்கு மாற்றாக யாரை நினைக்கின்றனர் என்பதுதான் முக்கியம். அந்த மாற்றாகத் திமுக மட்டும்தான் இருக்கிறதே தவிர இந்தக் கட்சிகள் எதுவும் இல்லை.
முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் காணும் விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் திமுக, அதிமுகவுக்கான மாற்றான அரசியலை முன்வைக்கப் போவதாகக் கூறுகின்றனரே?
முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து இதுவரை எந்தக் கட்சியும் தேர்தலைச் சந்தித்தது இல்லை. அதிமுக வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வர் என்பதும், திமுக வெற்றி பெற்றால் எங்கள் தலைவர்தான் முதல்வர் என்பதும் தெரிந்த விஷயம். ஆனால், மற்றவர்களுக்குத் தங்களை முதல்வராக வலிந்து அறிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் அறிவித்துக் கொள்கின்றனர். மாற்றம், முன்னேற்றம் என்றெல்லாம் பேசுகின்றனர். இவர்களால், தமிழகத்தில் இல்லாமல் இருந்த ஜாதிய பிரச்னைகள், கெüரவக் கொலைகள் எல்லாம் இப்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இதை மாற்று அரசியலாகவோ, முன்னேற்றமான பாதைக்குக் கொண்டு செல்லும் என்றோ கருத முடியாது.
கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை என்று சில தலைவர்கள் கூறுகின்றனரே?
அவரது உடன்பிறப்பே என்ற ஒற்றைச் சொல்லில்தான் தொண்டன் உயிர்ப்புடன் வேலை செய்கிறான். திமுக தொண்டனின் இதயத் துடிப்பே தலைவர்தான். அதனால், அவரது கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பது ஏற்புடையது இல்லை.
திமுக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு உண்டா?
கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், 33 சதவீத இடஒதுக்கீடு என்ற அளவில் தருவார்களா எனத் தெரியவில்லை. தனித் தொகுதிகள் என்று இல்லாவிட்டால், பொதுத் தொகுதிகளில் எத்தனை தலித் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அரசியல் என்பது அதிகாரப் போட்டி. அதனால், எல்லாத் துறைகளையும்விட, இங்கு கடும் போராட்டத்தை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, சமூக அளவில் மாற்றம் வரும் வரையிலாவது, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். சட்டம் கொண்டு வராமல் எல்லாக் கட்சிகளும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் கடினம்.
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகப் பெண் தலைவர்களின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தப் பதிலைத் தெரிவிக்கிறேன். பெண் தலைவர்களாக இருக்கிறார்கள் என்றால் பல போராட்டங்களைக் கடந்தே அவர்கள் வருகின்றனர். நான் உள்பட பெண்கள் பலரும் அரசியல் குடும்பத்தில் இருந்துதான் வந்துள்ளோம். எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் வந்து, ஒரு பெண் அரசியல் களத்தில் முன்னேறும்போதுதான் அது ஆரோக்கியமான களமாக இருக்கிறது எனக் கொள்ள முடியும்.
முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது?
முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர். முதல்வராக இருப்பவர். முதல்வரை ஆண், பெண் எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது. ஒரு பெண்ணாக நினைத்து அவரை விமர்சிப்பதும் தவறு. அதேசமயம், பெண் என்பதற்காக அவருக்கு அதிக மதிப்பெண்களும் போட முடியாது. ஓர் அரசியல் தலைவராக, முதல்வராகத்தான் அவரைப் பார்க்கிறேன். என் அளவில் அவரிடம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள்தான் அதிகம் இருக்கின்றன.
ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று திமுக மீது விமர்சனம் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், இப்போது முஸ்லிம் அமைப்புகளையே திமுக கூட்டணியில் அதிகமாக இணைத்து வருகிறீர்களே?
ஹிந்துக்களுக்கு திமுக எதிரான கட்சி இல்லை. மதத்தின் வழியாக வரக் கூடிய தவறுகளை, அது எந்த மதமாக இருந்தாலும், அதை திமுக கேள்வி எழுப்பியுள்ளது. ஜாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறோம் என்றால், அதை ஹிந்து மதத்துக்கு எதிராகப் பேசுகிறோம் என்று பார்க்கக் கூடாது. சிந்திக்கக்கூடிய சக்தி உடைய எந்த ஹிந்துவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் இது. எனவே, எந்த மதத்துக்கும் எதிரியாக திமுக இருந்தது இல்லை. குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராகச் செயல்படக்கூடியவராக எங்களைச் சொல்ல முடியாது. ஹிந்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வோம் என்று சொல்பவர்கள் அந்த மதத்தினருக்கு ஒன்றுமே செய்தது இல்லை. கோயில்களைப் பராமரிக்கவில்லை. கோயில் கும்பாபிஷேங்களை நடத்தவில்லை. ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பொறுப்புகளைச் சரியான முறையில் செய்த அரசாக திமுக அரசுதான் திகழ்ந்தது.
இப்படிக் கூறும் நீங்கள் ஹிந்து அமைப்புகள் எதையும் உங்கள் கூட்டணியில் இணைப்பது இல்லையே?
எந்த மதத்துக்கும் எதிராக இல்லாமல், எல்லோருடனும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. பாஜக நடுநிலையாகச் செயல்படும் என்ற நம்பிய காலத்தில் அவர்களுடனும் இணைந்து செயல்பட்டுள்ளோம்.
ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதி இல்லை என்று அன்புமணி கூறுகிறாரே?
இது நல்ல நகைச்சுவை. இதை அன்புமணியா கூறுவது?
பலமுனைப் போட்டி திமுகவுக்குத் தோல்வியைத்தான் தரும் என்கின்றனரே?
பலமுனைப் போட்டி எப்போதுமே திமுகவுக்குத்தான் சாதகமாக இருந்திருக்கிறது. நிஜமாக பலவீனப்பட்டிருப்பது அதிமுகதானே தவிரத் திமுக அல்ல. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இருந்த தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் வெளியேறியுள்ளது. இதனால், அதிமுகவுக்குத்தான் இழப்பு அதிகமாக இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதிமுக எதிர்ப்பலையாக மாறி இருக்கிறது. இந்தச் சூழலில் அதிமுக மீதான அதிருப்தி திமுகவுக்குத்தான் சாதகம்.
""பலமுனைப் போட்டியில் எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும்போது அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாறுவதுதானே இயல்பு?''
அதையே இப்படி மாற்றிப் பாருங்கள். பலமுனைப் போட்டியில், மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக என்று பல்வேறு கட்சிகளும் ஆளுங்கட்சியின் குறைகளையும் பலவீனங்களையும் படம் பிடித்துக் காட்டும்போது, அதன் விளைவாக அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் திமுகவுக்கு வாய்ப்பளித்து வெற்றிபெறச் செய்வார்கள். அதிமுகவுக்கு மாற்றாக திமுகதான் இருக்க முடியும்.
விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
விமர்சனங்களில் நியாயம் இருக்கும்போது, அதிலிருந்து நிச்சயம் கற்றுக் கொள்கிறேன். ஆனால், பொறுப்பற்ற முறையில், உண்மைக்கு மாறான வகையில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அதைப் புறம்தள்ளுகிறேன். என் நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக இருக்கிறேன். இதனால், இரண்டுவித விமர்சனங்களுக்கும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.