
ஆட்சித்திறனும் அரசியல் திறனும் ஒருங்கே பெற்றிருக்கும் சித்தராமையா தலைமையில் 2013-இல் கர்நாடகத்தில் அமைந்த காங்கிரஸ் ஆட்சிக்கு ஆரம்பத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2013-இல் நடந்த மண்டியா, பெங்களூரு ஊரகம் மக்களவை இடைத்தேர்தல், 2014-இல் நடந்த சிக்கோடி, பெல்லாரி, ஷிகாரிபுரா இடைத்தேர்தல், 2015-இல் நடந்த சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றியை பெற்றுத் தந்த சித்தராமையாவால், கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.
சித்தராமையாவின் மக்கள் செல்வாக்கை நம்பியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தின் மக்களவைத் தேர்தல் முடிவுகள், அதிர்ச்சியை அளித்தது. அந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் அலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால், மோடிக்கு சம்பந்தமே இல்லாத பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி சித்தராமையா தலைமை மீதான நம்பிக்கையை தகர்த்தது.
கடந்த ஜனவரியில் நடந்த சட்டமேலவைத் தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாமல் காங்கிரஸ் திணறியபோது, சித்தராமையாவை பலிகடாவாக்க கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். கட்சி மேலிடம் அளித்த ஊக்கத்தால் அரசியல் உள்ளடி வேலைகளைத் திறம்படக் கையாண்ட சித்தராமையா, அண்மையில் பூதாகரமாகி வெடித்த ஆடம்பரக் கைக்கடிகாரச் சர்ச்சையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில், ஹெப்பாள், தேவதுர்கா, பீதர் தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. குறிப்பாக ஹெப்பாள் தொகுதியை 3-ஆவது முறையாக பாஜகவிடம் பறிகொடுத்ததானது சித்தராமையாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தன்னால் பரிந்துரைக்கப்படாத அப்துல் ரகுமான் ஷெரீபை ஹெப்பாள் தொகுதிக்கு வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோதே, தனது அரசியல் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவதைக் கண்ட சித்தராமையா, தற்போது இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் புழுங்கிவருகிறார்.
இடைத்தேர்தல் தந்த தோல்வி, அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் பிரதிபலித்துள்ளதால், என்ன செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார் சித்தராமையா. மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், சித்தராமையாவின் முதல்வர் பதவி ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த போதிலும், இந்த மக்கள் அதிகம் வசிக்கும் தேவதுர்கா, ஹெப்பாள் தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், சித்தராமையாவின் மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கட்சி மேலிடம் கருதுகிறது.
2018-ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து கவலையடைந்துள்ள கட்சி மேலிடம், இந்த பின்னணியில் சித்தராமைவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளதா என்பதை நேரில் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு நம்பிக்கையான அரசியல் குழுவை கர்நாடகம் அனுப்பிவைத்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
இதனால் முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிக்க முடியுமா என்ற பேச்சுதான் தற்போது கர்நாடக அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது.
-ந.முத்துமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.