
4 கட்சிகள் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 2 கட்ட சுற்றுப் பயணங்களை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும், திமுக, அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ ஒவ்வொரு கூட்டத்திலும் தனது பேச்சின் சாராம்சத்தை மாற்றி வருவது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும், கூட்டணிக் கட்சித் தொண்டர் மட்டுமின்றி திமுக தொண்டர்களையும் தனது பேச்சால் ஈர்த்து வருகிறார் வைகோ.
அண்மையில் முடிக்கப்பட்ட 2 கட்ட பிரசாரக் கூட்டங்களிலும், திமுக தொண்டர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான யுக்திகளை வைகோ மேற்கொண்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி மீதும், அவரது மகன் மு.க.ஸ்டாலின் மீதும் நேரடியாக விமர்சனக் கணைகளைத் தொடுக்கும் முன்பு, கடந்த 1993ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தான் திமுகவில் இருந்த போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை குறிப்பிட்டு பேசுகிறார் வைகோ.
மதிமுகவை நடத்தி வந்தாலும், வைகோவின் பேச்சுக்கு திமுக தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களில் பெரும்பாலானோரிடமும் ஆதரவு இருப்பது வழக்கம். இந்நிலையில், திமுகவில் தனது கடந்த கால வசந்தங்கள் குறித்து வைகோ தற்போது பேசி வருவது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட தொண்டர்களை அதிகமாக ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
மாணவர் அணித் தலைவராக இருந்தது முதல், திமுகவிலிருந்து வெளியேற்றப்படும் வரை கட்சிக்காகவும், கட்சித் தலைவருக்காகவும் தான் சந்தித்த சவால்களையும், தியாகத்தையும் சுவாரஸ்ய தகவல்களுடன் எடுத்துரைக்கிறார். மேலும் தேர்தல் காலங்களில் திமுகவின் வெற்றிக்காக, தான் பேசிய இடங்கள் குறித்தும், அன்றைய சூழ்நிலையில் தன்னுடன் இருந்த திமுக நிர்வாகிகள் குறித்தும் பட்டிலிடுகிறார். வைகோவின் இந்த அணுகுமுறை, திமுக தொண்டர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
எடுத்த எடுப்பில் கருணாநிதியை நேரடியாக தாக்கி பேசாமல், கடந்த கால சம்பவங்களை பட்டியலிட்டு பேசுவதால், தூரத்தில் செல்லும் திமுக தொண்டர்களையும் தன் பக்கம் வைகோ ஈர்த்து வருகிறார். இந்த அணுகுமுறை, திமுக தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-ஆ.நங்கையார் மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.