
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை "மிஷன் உ. பி' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுக்காகவும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு அணிக்காகவும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரை இதற்காக காங்கிரஸ் தலைமை நாடியுள்ளது. அவரும் காங்கிரஸ் கட்சிக்கான உத்திகளை வகுக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் வெற்றிக்கான திட்டங்களையும் பிரசார உத்திகளையும் வகுத்துக் கொடுப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவர் நிகழ்த்திக்காட்டிய காணொலிக் காட்சியைக் கண்டு வியந்த ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பிரசாந்த் கிஷோரின் உத்திகள் ஏற்படுத்தும் என்று நம்புவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதையடுத்து, லக்னௌவில் மார்ச் 10-இல் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பிரசாந்த் கிஷோர் பங்கேற்க கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவருடன் கட்சி விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பிரதிநிதியாக தனது தீவிர ஆதரவாளர் மதுசூதன் மிஸ்திரியை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.
-எம்.ஏ. பரணி தரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.