பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது!

மக்கள் நலக் கூட்டணி எத்தகைய மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது? தமிழ்நாட்டில் அரசியல் தாக்கத்தை
பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது!
Published on
Updated on
3 min read

தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க தலைவராகப் பரிணமித்து வரும் தமிழர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா. "தினமணி'க்கு அளித்த பேட்டி:
 மக்கள் நலக் கூட்டணி எத்தகைய மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது?
 தமிழ்நாட்டில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, கொள்கை சார்ந்த, மக்கள் நலனுக்காகப் போராடும் அமைப்பாக மக்கள் நலக் கூட்டணி விளங்கி வருகிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு, திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் கொண்ட மாற்று அரசியல் அணியாக உருவாகி, ஊடகங்கள், மக்கள் மத்தியில் அது ஏற்புடைய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
 தலைமையின்றிச் செயல்படும் மக்கள் நலக் கூட்டணியில் முடிவெடுப்பதில் குழப்பம் நிலவுகிறதா?
 "ஒரே கட்சி தலைமையில்தான் ஓர் அணி இருக்க வேண்டும்' என்ற வரலாற்று நியதி எதுவும் இல்லை. கொள்கை அடிப்படையில், மாற்று அரசியல் நோக்குடன் இந்த அணி உருவாகியுள்ளது. சில தனிநபர்களை முன்னிறுத்தி அரசியலைக் கொண்டு செல்லாமல், பல கட்சிகள் இணைந்து ஜனநாயகப் பண்புடன் அரசியல் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
 இடதுசாரிக் கட்சிகள் ஓர் அணிக்குத் தலைமை தாங்கியோ, நல்லகண்ணு போன்ற தலைவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியோ ஏன் தேர்தலைச் சந்திக்கவில்லை?
 தமிழக மக்களின் அன்பைப் பெற்று, கட்சிகளுக்கு அப்பால் போற்றப்படுபவர் நல்லகண்ணு. மக்கள் நலக் கூட்டணி ஜனநாயக நெறிகளின்படி ஒருங்கிணைந்த கூட்டுத் தலைமையாகச் செயல்படுகிறது. தேர்தல் முடிவைப் பொருத்து, ஜனநாயக மரபின்படி இந்த விஷயத்தை எங்கள் கூட்டணி தீர்மானிக்கும்.
 உங்கள் கூட்டணியின் கொள்கை என்ன?
 வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், ஆட்சி முறை ஆகியவை தொடர்புடைய ஆக்கப்பூர்வ திட்டங்கள் அடங்கிய குறைந்தபட்ச கொள்கை அறிக்கையை மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டுள்ளது. அது ஒரு பொதுவான ஆவணம். அதை எவரும் எப்போது வேண்டுமானாலும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
 தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக எப்படிக் கூறுகிறீர்கள்?
 இன்றைய காலச் சூழலில் புதிய அணுகுமுறையும் திட்டங்களும் திமுகவிடம் இல்லை. பெரியார் பேசிய பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தம் போன்ற அடிப்படைக் கொள்கை நிலையிலிருந்து அதிமுக தடம் மாறிவிட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கொள்கைகளைச் சார்ந்து செயல்படக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகளும் மாறிவிட்டன. வருவாயைப் பெருக்க சாராயம் விற்கும் நிலையில்தான் மாநில அரசு உள்ளது. வேலைவாய்ப்பை பெருக்காதது, சமூக நீதிக் கொள்கைகளை வகுக்காதது போன்றவைதான் இந்தக் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி அடையக் காரணம்.
 இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக இடதுசாரிக் கட்சிகள் வருந்தியுள்ளனவா?
 அரசியல் சமநிலை என வரும் போது யாருடன் கூட்டணி சேருவது, சேர வேண்டாம் என நாங்கள் எடுத்த முடிவு அன்றைய சூழலில் சரியாக இருந்தது. மற்றொரு கட்டத்தில் தமிழகத்தின் நலன் கருதி வேறு முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க பிரச்னையாக ஊழல் உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டே திமுக, அதிமுக ஆகியவை அல்லாத கட்சிகள் அடங்கிய மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து இடதுசாரிக் கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
 பல முனை அணிகள் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
 தமிழக வாக்காளர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. திமுக, அதிமுகவை பரஸ்பரம் எதிர்ப்பவர்கள் இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. பல முனைப் போட்டி வருவதுகூட, தமிழக அரசியலை ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும் வளர்ச்சியாகக் கருத வேண்டும்.
 தேர்தல் முடிவில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக உருவெடுத்தால், அப்போது ஆட்சி அமைக்கத் தகுதி பெறும் இரு திராவிடக் கட்சிகளில் ஒரு கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவிக்குமா?
 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட சூழலில், ஊக அடிப்படையிலான கேள்விகள் தேவையற்றவை.
 விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, உங்கள் கூட்டணிக்கு அவசியமாகிறதா?
 மக்கள் நலக் கூட்டணியில் பல்வேறு ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பிருக்கும் தலைவர்களுடன் கூட்டணி பற்றி தலைவர்கள் பேசி வருகின்றனர். தேமுதிக யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை அந்தக் கட்சியில் உள்ளவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்?
 மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. கூட்டணியின் மாநாடுகளுக்கு வரும் மக்கள் வெள்ளம் அதை பிரதிபலிக்கிறது. வெற்றிக்காக அனைவரும் உழைக்கிறோம். முடிவுக்காகக் காத்திருக்காமல் தொடர்ந்து உழைப்போம்.
 தில்லியில் ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்தது போல, தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியால் வளர முடியுமா?
 தலைநகருக்கே உரிய பிரச்னைகளை முன்வைத்து தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதுபோலவே, தமிழகத்துக்கு என சில அரசியல் பார்வையும் பிரச்னைகளும் உள்ளன. மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. அதன் நோக்கமும், கொள்கையும் மாநில வளர்ச்சி சார்ந்தது.

கேரளம் நீங்கலாக தென் மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகள் பலம் பெறவில்லையே?
 இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை பலம் தேசியம் சார்ந்தது. ஆனால், தேர்தல் என வரும் போது மாநிலத்துக்கு மாநிலம் நிலவும் சூழலைப் பொருத்து முடிவு எடுக்கிறோம். சில தேர்தல்கள் எங்களுக்கு வெற்றி தேடித் தராமல் இருந்திருக்கலாம். கொள்கைக்கும் தேர்தல் வெற்றிக்குமான இடைவெளியை எவ்வாறு சரி செய்வது என இடதுசாரிக் கட்சிகளுக்குள்ளாக விவாதித்து முடிவெடுத்து வருகிறோம்.
 தமிழக மீனவர் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
 மீனவர் உரிமையைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை ஒட்டிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் குரல் கொடுப்போம் என உறுதியளித்து வருகிறோம். மற்ற கட்சிகளும் இவ்வாறே கூறுகின்றன. ஆனால், நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்? யாரால் செய்ய முடியும்? என்ற விழிப்புணர்வை மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. நிச்சயமாக மீனவர் பிரச்னை தேர்தலில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும்.
 பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்கு பின்னடைவாகுமா?
 ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் போன்ற பெயரில் ஒற்றைப் பரிணாம மதவாத ஆட்சி என்ற எண்ணத்தை திணிக்க ஆர்எஸ்எஸ், பாஜக முற்படுகின்றன. தமிழ்நாட்டில் ஹிந்து மத வெறி அரசியலை முன்னிறுத்தி பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அதனால்தான், சமூகத்தின் அடிமட்ட அளவில் தொடர்பில் உள்ளவர்களின் கைப்பிடித்து தேர்தலைச் சந்திக்க அந்தக் கட்சித் தலைவர்கள் முயன்று வருகிறார்கள். தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது.
 தனித்து தேர்தல் களம் காணும் அன்புமணியை ஏன் உங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை?
 இதற்கான பதிலை அவரிடம்தான் கேட்க
 வேண்டும்.
 -எம்.ஏ. பரணி தரன்
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com