
தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்கள் களம் காணும் தொகுதியாக 1980 ஆம் ஆண்டு முதல் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்ந்து வருகிறது. 1980 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
கடந்த 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவரது சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொகுதியில் பிரசாரம் செய்யாமலேயே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு, இந்தத் தொகுதி விஜபி தொகுதியாகவே விளங்கி வருகிறது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், இந்தத் தொகுதியில் ஐந்து முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கடந்த 2002 ஆம் ஆண்டு இடைத் தேர்தலிலும், 2006 பேரவை பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் ஆண்டிபட்டி பேரவை உறுப்பினராக இருந்த போது இந்தத் தொகுதிக்கு அண்ணா நூற்பாலை மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததால் இந்தப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு, ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வரானார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி, ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அரசு மகளிர் தொழில் பயிற்சி நிலையம், அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர சாலை வசதி, கடமலை- மயிலை ஒன்றியத்தில் குடிநீர்த் திட்டம் என இந்தப் பகுதி மக்களுக்கு பல திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவை பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவில்லை. இதனால், இந்தப் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே, விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து ஆண்டிபட்டியைச் சேர்ந்த மயிலை பரமசிவம் (80) கூறியதாவது:
ஆண்டிபட்டி தொகுதி என்பது பஞ்சமும், வறட்சியும் உள்ள தொகுதி என்று ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, முதல்வரான பிறகு பல திட்டங்களைச் செயல்படுத்தி தொகுதியை வளப்படுத்தினார். மலைப் பகுதியில் வசித்து வந்த நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். எனவே, மீண்டும் எங்கள் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்றார்.
-எஸ். பாண்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.