

குட்டிப் பாப்பாவுக்கு என்ன சாப்பாடு எப்படி தரலாம்னு நிறைய கருத்துக்கள் சொல்லப்பட்டது இல்லையா? முக்கியமானவை என்ன? (carry home message)
1. தாய்ப்பால் தொடர்ந்து தர வேண்டும்.
2. குழந்தைக்கு வீட்டில் தயாரித்த உணவுகள் மட்டுமே தரப்பட வேண்டும்.
3. குறித்த நேரத்தில் தினம் உணவு ஊட்டினால் குழந்தைக்கு ஒரு பழக்கம் (ரொட்டீன்) சீக்கிரம் வரும்.
4. நன்கு மசித்து விழுங்குவதற்கு எளிதாகக் கொடுக்க வேண்டும்.
5. கைகளால் அல்லது கரண்டியால் மசித்து தர வேண்டும்.
6. மிக்ஸியில் / அம்மியில் அரைக்கக் கூடாது.
7. வாரம் ஒரு முறை அம்மா தன்னுடைய நகங்களையும் குழந்தையின் நகங்களையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
8. அம்மா, தன் கைகளையும், குழந்தையின் கைகளையும் கழுவிக் கொண்டு சாப்பாடு ஊட்ட ஆரம்பிக்க வேண்டும்.
9. சிறு அளவில் வாயில் உணவு தர வேண்டும்.
10. குழந்தையை உணவில் கை வைக்க / கையாள / விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.
11. இதனால் தானே உணவு எடுத்துக் கொள்ள குழந்தை எளிதில் பழகும்.
12. திட உணவு தர ஆரம்பித்த முதல் 2-3 வாரங்கள் துப்பிக் கொண்டு இருக்கும். இது இயற்கை! பால், திரவ உணவு மட்டும் பழகிய வாயும் தொண்டையும் திட உணவை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகும்.
13. துப்புவதால் ருசி பிடிக்கவில்லை என்ரு அர்த்தம் கொள்ளக் கூடாது.
14. அந்த நேரம் சாப்பிட விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
15. பாதி ஊட்டிய உணவை மூடி வைத்து மறுபடி / மறுமுறை தரப்படக் கூடாது. புதிதாகத் தர வேண்டும்.
ஆறு மாதங்கள் முடியும் நேரம் குழந்தை குப்புற விழுந்து நகர ஆரம்பித்திருக்க வேண்டும். ஆறு மாதத்திலிருந்து குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் 1/4 - 1/2 கிலோ எடை அதிகரிக்கலாம். உச்சிக் குழி லேசாக மூட ஆரம்பிக்கும்.
கைகளை நன்கு நீட்டி சாமான்களை வாங்க ஆரம்பிக்கும். 7 மாதத்தில் உட்கார வைத்தால் கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு உட்காரும் குழந்தை. 8-9 மாதங்களில் தானாக எழுந்து உட்காரும். இப்போது கைகளை ஊன்றாமலே உட்கார்ந்து கொள்ளும். தவழ ஆரம்பிக்கும். தவழ்ந்து சென்று மாடிப்படிகளில் ஏற ஆரம்பிக்கும். மாடிப்படி வீட்டின் உட்பக்கம் இருந்தால் சிறு கதவு போட்டு பாதுகாப்பு செய்ய வேண்டும். குழந்தைக்கு இப்போது ஏற மட்டும் தான் தெரியும். எல்லா பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும். மேலும் கீழும் 2-3 பற்கள் முளைத்து விடும். எனவே எதையாவது கடிக்க ஆசைப்படும். கடிப்பது புது அனுபவம் அல்லவா! எனவே உங்கள் ராஜாப்பயலுக்குக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆபத்தில்லாத கலர் பெயிண்ட், கூர்மையான முனைகள் உள்ள பொம்மை, பொம்மைக்குள் கழன்று விழும் விசில் மற்றும் சிறு சிறு பாகங்கள் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலித்தீன் பைகளை குழந்தைக்கு அருகில் போடக் கூடாது.
குழந்தை நகரும் போது முன்னால், பின்னால் பக்கவாட்டில் எப்படி வேண்டுமானாலும் நகரலாம். கைகளை ஊன்றி உட்கார ஆரம்பித்த பிறகு தான் தலையணைகள் அணைப்பாகக் கொடுத்து ரூம் மூலையில் உட்கார வைக்கலாம். அவசரப்பட்டு உட்கார வைப்பது, அவசரப்பட்டு வாக்கரில் வைத்து நடக்க வைப்பது குழந்தையின் முதிர்ச்சி அடையாத கை கால் எலும்புகள் மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு நல்லதல்ல. கொஞ்சம் ஓவர்லோட் ஆகலாம். கவனம் தேவை.
பாப்பாகுட்டி 9 மாதங்களில் 2-3 விரல்களை நன்கு பயன்படுத்தக் கற்றுக் கொண்டு விடுவாள். சந்தோஷம் தான். ஆனால் தரையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் அவள் வாயில் இருக்குமே..உலர்ந்த பூவிலிருந்து சிறு பூச்சிகள் வரை. அதிக கவனம் தேவை. குழந்தையின் கைகள் தரை ஆகியவை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
8 மாதங்களில் மா, பா, தா (ரோஜா செண்டுக்கு அம்மா, அப்பா, தாத்தா என்று அர்த்தமாக்கும்) என்று ஒற்றை எழுத்தால் கூப்பிடுவாள் உங்கள் அருமை மகள். 9 மாதங்களில் அம்மா, அப்பா, மாமா போன்ற சொற்கள் வந்து விழும். ரசியுங்கள்! அவளுடன் நிறைய பேசுங்கள்.
காது நன்றாக கேட்கத் தொடங்கும். சிறு ஒலிக்கும் உடனே திரும்பிப் பார்ப்பாள்! பாட்டுக்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவாள். ஒரு குறிப்பிட்ட ஒலி அல்லது பாட்டுக்கு அடம் பிடிக்கும். அல்லது ஒரு குறிப்பிட்ட பாட்டால் சமாதானமும் ஆகும் குழந்தை.
நாம், நமது முகத்தைத் துணியால் அல்லது கைகளால் மூடிக் கொண்டு லேசாகக் குரல் கொடுத்து சிறிது நேரம் சென்று கையை எடுத்துப் பார்த்தால் குழந்தை அழகாகச் சிரிப்பாள். 9 மாதங்களில் தானாகவே துணியை எடுக்க முயற்சிப்பாள். இந்த விளையாட்டை peak - a - boo என்பார்கள். மறைவுக்குப் பின்னால் உருவம் உள்ளது என்று குழந்தை புரிந்து கொள்ளத் தொடங்கும்.
லேசாக வேற்று முகம் ஆரம்பிக்கும். தன் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அம்மா அழுதால் குழந்தையின் முகம் சுருங்கும். தானும் அழ ஆரம்பிக்கும்.
திட உணவு சாப்பிடுவதால் மலம் கழிப்பது semi solid ஆக 2-3 தடவையாக செட்டில் ஆகியிருக்கும். தானாக முதுகை நிமிர்த்தி நேராக உட்கார ஆரம்பித்த குழந்தையை நமது பாட்டி செய்தது போல் கால்களில் காலை நேரம் உட்கார வைத்து பழக்கலாம். பிடித்துக் கொண்டு potty chair ல் பழக்கலாம். மிகவும் அவசரப்பட்டு டாய்லெட் ட்ரெயினிங் செய்வது கூடாது. இது எதிர்மறையாகிவிடலாம். ஆறு மாதங்கள் முடிந்த பிறகு பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல் ஆகியவற்றை உண்டாக்கும் இன்ப்ளூயன்ஸா வேக்சின், புது வகை டைபாய்டு ஊசி (conjugated typhoic vaccine) மூன்றாவது தவணை, B வகை மஞ்சள் காமாலை ஊசி ஆகியவை போட வேண்டும். இரவு 2-3 முறை குழந்தை பாலுக்கு அழலாம். தாய்ப்பால் போதவில்லை என்று உணர்ந்தால் மாட்டுப்பால் தரலாம். மற்றபடி தூக்கம் ஒருவாறு பழகி ஆகியிருக்கும். இரவு முழுவதும் டயபர் போட்டு வைப்பது ஆபத்தானது. தவிர்க்கப்பட வேண்டும்.
தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.