

’அம்மா! அம்மா! எங்கே இருக்கீங்க? அனன்யாவை பாருங்க! தரையிலிருந்து எதையோ பொறுக்கி வாயில் போட்டுவிட்டாள்! எல்லோரும் வாங்களேன்’ என்று அலறிக் கூப்பாடு போட்டாள் IT பணியில் இருக்கும் 25 வயது பூமா!
ஓடி வந்த அம்மா அனன்யா பாப்பாவின் வாயிலிருந்து ஒரு காய்ந்த மல்லிகைப்பூவை எடுத்தாள். ஆம்! 9 மாதம் முடிந்தவுடன் உங்கள் பட்டுக்குட்டியிடம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் கை விரல்களை உபயோகிக்க கற்றுக் கொண்டுவிடும். எந்த சிறு பொருளும் குழந்தையின் வாயில் தான்! சும்மாவே எதை எடுத்தாலும் வாயில் வைத்துக் கொள்ளும் உங்கள் சுட்டி இப்போது யார் கண்ணிலும் படாத சிறு பொருட்களையும் அழகாக பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். வாயில் போட்டுக் கடிக்கும். பொருள்களை வாயில் வைப்பதன் மூலம் குழந்தைக்கு சில புரிதல்கள் ஏற்படுகின்றன. பொருள்களின் பலவித அளவு, வடிவம், தன்மை ஆகியவற்றைத் தெரிந்து கொள்கிறது. ஆமாம், இது ஒரு திறன் வளர்ப்பு முறை. Mouthing is oral form of learning. குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது, சாப்பாடு ஊட்டும் போது இந்த திறமை பயன்படும். ஆனால் குழந்தையின் மென்மையான வாய் மற்றும் நாக்குப் பகுதிகளைக் காயப்படுத்தாத விளையாட்டு சாமான்களே தரப்பட வேண்டும். பொம்மைகளில் உள்ள சிறு பாகங்கள் கழன்று அல்லது உடைந்து மூச்சுபாதை அல்லது உணவுக் குழாய் மூலம் உள்ளே போய் விட்டால் ஆபத்து! கவனமாக இருக்க வேண்டும். பொம்மைகளில் உள்ள கலர் பெயிண்ட் வகைகள் கெமிக்கல்ஸ் இல்லையா? நிறைய பெயிண்ட்களில் காரீயம் (lead) பயன்படுத்தப்படுகிறது. அவை குழந்தைக்கு பலவகை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
விரல்களால் பொறுக்கி வாயில் போடும் இந்த இயற்கைத் திறனை குழந்தைக்கும் நமக்கும் சாதகமாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சாதம் அல்லது நல்ல உதிர்ந்த இட்லியைத் தட்டில் போட்டு வைக்கலாம். தானாக பொறுக்கி எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும். இது சாப்பிட, தானாக எடுத்து சாப்பிட என்ற இரண்டு வகை திறன்களை ஏற்படுத்தும். 11-12 மாதங்களில் பொடியாக நறுக்கி வேக வைத்த காரட், உருளைக்கிழங்கு, சிறு துண்டுகளாக்கி மசித்த வாழைப்பழம் ஆகியவற்றைப் போட்டுப் பழக்கலாம். 8 மாதங்களில் உள்ளங்கை மற்றும் எல்லா விரல்களாலும் கோணலாகப் பிடித்து பொறுக்கி எடுக்க முயற்சிக்கும். இதை immature pincer grasp என்பார்கள். பாப்பா குட்டி 9 மாதத்தில் விரல்களை சரியாக உபயோகித்து டக்கென்று பொறுக்கி (mature pincer) எடுத்து வாயில் வைக்கும். அதே போல் 9 மாதங்களில் நன்கு தவழ்ந்து வீடு முழுக்க அலைவான் உங்கள் வம்சத்து இளவரசன்.
தான் தவழும் ரோட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை (நாற்காலி, ஸ்டூல், பென்ச்) பிடித்துக் கொண்டு நிற்க முயற்சிப்பான். முதலில் தடுமாறுவான், விழுவான்! சுமார் 15-20 நாட்கள் முயன்று விழுவதே எழுந்திருக்கத்தான் என்ற முடிவோடு முயன்று பிறகு கைகளால் பிடித்துக் கொண்டு அழகாக நிற்பான். உங்களையும் பார்த்து கண்களில் ஒளி வீச ஒரு சிரிப்பு காட்டுவான் பாருங்களேன். இந்த அற்புதக் காட்சிக்கு மில்லியன் டாலர் தரலாமா! இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற வரிகள் மனத்தில் ஓடும். அதே போல் ஏதாவது ஒரு விளிம்பைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி இரண்டு அடி எடுத்து வைப்பான் பாருங்கள். இதற்கு எத்தனை பில்லியன் டாலர் விலை நிர்ணயிக்கலாம்! நீங்கள் உற்று கவனித்தால் குழந்தையின் முயற்சியும் ஜாக்கிரதை உணர்வும் (sense of safety) தெளிவாக விளங்கும். மெது மெதுவாக கவனத்துடன் கால்களைத் தரையில் பதிப்பான். ஏதாவது காலில் பட்டால் கைகளை விட்டு விடாமல் மெதுவாகக் குனிந்து பார்த்துக் கொள்வான். பாதத்தால் தட்டிவிட்டுப் பிறகு நடக்கலாம் என்று அவனுக்குத் தெரியாது. கைகளில் உள்ள பிடியை விட்டுவிட்டு பொறுக்கவும் பயம். பெரிதாக ஒரு கூக்குரல் கொடுத்து அழுவான் பாருங்கள். நீங்கள் போய் அவனது ரோட்டை (ரூட்டை) கிளியர் செய்து தர வேண்டுமாம்!! முயற்சி – முயற்சி! மீண்டும் முயற்சி. இது ஒன்றுதான் குழந்தையின் குறிக்கோள். எவ்வளவு முறை தவறினாலும் மீண்டும் அதை செய்ய முயற்சிப்பாள். உங்கள் ராஜ்ஜியத்தின் குட்டி அல்லி ராணி! பார்த்து பார்த்து விநாடி விநாடியாக அனுபவிக்க வேண்டும். நேரம் ஏது என்கிறீர்களா? கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்களேன். இப்போது மொபைல், கேமரா, வீடியோ எல்லாம் உண்டே. இந்த வானமே எல்லையான ஸ்மார்ட் ஃபோன் உதவியுடன் உங்கள் ரோஜாச் செண்டின் ஒவ்வொரு அசைவையும் பதிய வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து ரசிக்கலாம். அவன் வளர்ந்து வரும் போது இவற்றைக் காட்டி அவனையும் மகிழ வைக்கலாமா! இதற்கு விலை எல்லாம் குறிப்பிடவே முடியாது. உணர்வுகளுக்குத்தான் இதன் மதிப்பும் மேன்மையும் புரியும்.
பத்து மாதங்களில் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை தெளிவாகச் சொல்லத் தொடங்குவாள் உங்கள் செல்லக்கிளி. மாமா, தாதா, பாப்பா, அக்கா என்பது போன்ற எளிய வார்த்தைகளை முதலில் சொல்ல ஆரம்பிக்கும் குழந்தைக்கு ஒரு வயதில் 10-15 வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும். அப்பா அம்மா மற்றும் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர்கள் யாராவது கொஞ்சம் லேட்டாகப் பேச ஆரம்பித்து இருந்தால் குழந்தைக்கு பேச்சு வருவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். ஒரு வயதிற்குள் ஒரு சில வார்த்தைகளாவது (Bi syllables) வந்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மருத்துவ ஆலோசனை தேவை.
ஆனால் குழந்தை பேசுவது Stimulus response phenomenon தான். நாம் குழந்தையோடு கண்ணோடு கண் பார்த்து நிறையப் பேச வேண்டும். குழந்தை பலவித ஒலிகளைக் கேட்க வேண்டும். வாய், முக அசைவுகளைப் பார்க்க வேண்டும். Child learns by hearing sounds and observing lip movements. எத்தனைக்கு எத்தனை குழந்தையிடம் பேசுகிறோமோ அத்தனையும் வட்டியுடன் சேர்த்துக் கிடைக்கும்.
பேச ஆரம்பிக்கும் காலத்தில் அவனை கவனித்து ஊக்கப்படுத்த வேண்டும். இப்படிப் பேசாதே அப்படிச் சொல்லாதே என்று உருட்டி மிரட்டினால் குழந்தை பேசுவதைக் குறைத்துக் கொள்ளும்! சில சமயம் நிறுத்திக் கொள்ளும். தப்பாக உச்சரித்தாலும் மழலையின் சுகம் அனுபவித்தவர்களுக்குத் தானே புரியும்! குழலையும் யாழையும் விட பாப்பாவின் மழலை இனியது என்கிறார் வள்ளுவர். குழலை ரசிக்கும் நாம் மழலையும் ரசித்து அனுபவிப்போமே!
தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.