21. அந்த 100 நாட்களுக்குப் பிறகு

இளம் அம்மாக்களே! குழந்தையை ரசிக்க அனுபவிக்க ஆரம்பித்து விட்டீர்களா
21. அந்த 100 நாட்களுக்குப் பிறகு
Updated on
2 min read

(3 லிருந்து 6 மாதங்கள் வரை பாதுகாப்பு)

இளம் அம்மாக்களே! குழந்தையை ரசிக்க அனுபவிக்க ஆரம்பித்து விட்டீர்களா? ஆம்! முதல் 100 நாட்கள் குழந்தையை வளர்ப்பதில் பயம், பதற்றம், கவலை, தன்னம்பிக்கை இன்மை, முடியுமா என்ற சந்தேகம் இப்படிப் பல பல! குழந்தை அழுதாலும் பயம், அழாவிட்டாலும் பயம்! அதிகம் தூங்கினாலும் பதற்றம். தூங்காவிட்டாலும் பதற்றம். இப்படி பற்பல தேவையற்ற பயத்துடன் கழிந்திருக்கும்! இப்போது, குழந்தை என்றால் இப்படித்தான் போலிருக்கிறது என்று 10 லிருந்து 20 சதவிகிதம் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு மனம் தெளிந்திருக்கும்! வீட்டிலுள்ளவர்கள், டாக்டர், அம்மா, மாமியார் போன்றவார்கள் என்ன ஆறுதல் சொன்னாலும் கேட்காமல் மனம் அலை பாய்ந்திருக்கும். குழந்தைக்கு 3 மாதங்கள் ஆன பிறகு அம்மாவுக்கு பய உணர்வு குறையும். இப்போது தான் குழந்தையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் தாய் ஆழ்ந்து கவனிக்கத் தொடங்குவாள். குழந்தையை ரசிக்க, அனுபவிக்க, என் குழந்தை, என் உதிரத்தில் உதித்த தாமரை என்ற பெருமித உணர்வுடன் குழந்தையை அணுக ஆரம்பிக்கிறாள் ஒரு பெண்!

குழந்தை எடை ஏறி இருக்கும். குறைந்தபட்சம் 1 கிலோ எடை அதிகரித்து இருக்க வேண்டும். பால் குடிப்பது, தூங்குவது, விளையாடுவது அகியவை உங்கள் இளவரசியின் அன்றாட நடவடிக்கைகள் இல்லையா? இதில் எல்லாம் ஒரு ஒழுங்கு ஏற்பட்டு இருக்கும். அவளின் அழுகை பலவிதம் என்று அம்மாவிற்கு புரிய ஆரம்பிக்கும். இது தூக்கத்திற்கு, இது பசிக்கு, இது பிடிவாதம் என்று தாய் தரம் பிரிக்க ஆரம்பித்துவிடுவாள்! குழந்தையைத் தூக்க பயந்த அம்மா ரொம்பவே இயல்பாக குழந்தைக்கு சட்டை, இடுப்புத் துணி மாற்றி விடுவாள்!

குழந்தை நன்கு கண்ணோடு கண் பார்த்து சிரிக்கும். நாம் வாயைத் திறந்து மூடினால் உற்று கவனிக்கும்.

3-4 மாதங்களில் தலை கழுத்தில் திடமாக நிற்க ஆரம்பிக்கும். 6 மாதங்கள் முடிவதற்குள் குழந்தை குப்புற விழுந்து நகர ஆரம்பிக்கும். முன்னே, பின்னே அல்லது பக்கவாட்டில் நீந்தலாம். நெஞ்சு வயிறு கால்களை இழுத்துக் கொண்டு வேக வேகமாக தரையில் நீச்சல் அடிக்க ஆரம்பிப்பான் சுட்டிப் பயல்! இதனை ஆங்கிலத்தில் creeping என்கிறார்கள். Creeper என்றால் கொடி போல. ஆம், முல்லைக் கொடி போல் படருவான் குழந்தை. குப்புற விழுந்து தலையை நன்கு திடமாகத் தூக்கிப் பார்க்க ஆரம்பிப்பான்! பல கலர் பந்துகளை முன்னால் போட்டால் அதை உற்று நோக்கி வேகமாக நீந்தி செல்வான்! இந்த சமயத்தில் குழந்தைக்கு காயம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். முற்றம், படிக்கட்டுகள், வீட்டில் பர்னிச்சர் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படலாம். காயங்களைத் தவிர்க்க கவனம் அதிகம் தேவை.

4-5 மாதங்களில் இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு அதை ஆட்டி ஆட்டி ரசிப்பான் உங்கள் செல்லம். இந்த விளையாட்டை Hand Regard என்பர். 6 மாதங்களில் பொம்மை, பந்து ஏதாவது ஒன்றை நீட்டினால் தன் கையை நீட்டி வாங்க ஆரம்பிக்கும். இரண்டு கைகளை சேர்த்து பிடித்துக் கொள்ளும். வேறு ஒரு பொருளைக் காட்டினால் முதல் பொம்மையை கீழே போட்டுவிட்டு அடுத்ததை வாங்கிக் கொள்ளும். கால் கட்டை விரலைப் பிடித்து வாயில் வைத்துக் கொள்ளும். குழந்தைக் கண்ணனைப் போன்ற இந்தக் காட்சி மிகவும் அருமையானது. ரசிக்க வேண்டிய ஒன்று!

குழந்தையைப் பேர் சொல்லி அழைத்தால் கழுத்தைத் திரும்பிப் பார்க்கும். கூப்பிடும் குரலை – சத்தத்தை அதிகரித்து, குறைத்து கூப்பிட்டுப் பார்த்தால் குழந்தையின் காது கேட்கும் திறனை அறிந்து கொள்ளலாம். பெரிய சத்தங்களுக்கு நிறைய குழந்தைகள் அழத் தொடங்கும். சமாளிக்க முடியாமல் வீரிட்டு தொடர்ந்து அழும் குழந்தைகளும் உண்டு. பஸ்சில் கேட்கும் ஹார்ன் சத்தம், பட்டாசு சத்தம் குழந்தைகளை பயமுறுத்தும் (என் மூத்த மகள் எனக்கு இந்த அனுபவ பாடத்தை அளித்தாள்). குயில் மற்றும் கிளிப்பேச்சு மாற்றம் அடைந்து ஒரு புரியாத மொழியில் குழந்தை ஏதோ பேசும்! இதனை babbling என்று சொல்வார்கள்! நாம் viva-ல் அல்லது oral exam - புரியாத பாஷையில் உளறுவது இல்லையா! அதே போலத்தான்! குழந்தை பேசிக் கொண்டே இருக்கும். நாம் அதை ஏற்று பதில் பேச வேண்டும். நமது உதடுகள் அசைவதையும், முக பாவனைகளையும் குழந்தை கவனித்து தானும் அதே போல பேச கற்றுக் கொள்கிறது.

குழந்தையின் வளர்ச்சித் திறன் என்பது அடிப்படையில் stimulus-response phenomenon தான்! எத்தனை அளவு ஊக்கப்படுத்துகிறோமோ அந்த அளவு குழந்தையின் திறன் வளரும்!

அம்மா அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்தால் கூட குழந்தையின் முகபாவம், உணர்வுகள் மாறும்! உதாரணமாக ஹாலில் லேசக அழுகின்ற குழந்தையிடம் சமையல் அறையிலிருந்து அம்மா, ‘ரோஜாக்குட்டி! இதோ வரேண்டா செல்லம்; அழாதே!’ என்று குரல் கொடுத்தால் உடனே அழுகை நிற்கும். மல்லாந்து அல்லது குப்புறப்படுத்து இருக்கும் குழந்தைக்கு அருகில் யாராவது நடந்து – கடந்து போனால் அவர்கள் உருவம் மறையும் வரை குழந்தை கழுத்தை திருப்பிப் பார்க்கும்!

இவை ஒவ்வொன்றும் குழந்தைக்கு சாதனை! மைல் கல்! குழந்தை இதை சரியாக அடைந்திருக்கிறதா என்று பெற்றோர், மருத்துவர் கவனிக்க வேண்டும். இவற்றில் மாறுபாடு அல்லது கால தாமதம் தெரிந்தால் மருத்துவ ஆலோசனை தேவை!

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com