16. நீங்கள் கங்காரு ஆகலாம்

பச்சிளம் குழந்தையை வெதுவெதுப்பாக பராமரிக்க வேண்டியிருப்பதால் கங்காரு மதர் கேர் அறிவுறுத்தப்படுகிறது.
16. நீங்கள் கங்காரு ஆகலாம்
Updated on
3 min read

பச்சிளம் குழந்தையை வெதுவெதுப்பாக பராமரிக்க வேண்டியிருப்பதால் கங்காரு மதர் கேர் அறிவுறுத்தப்படுகிறது. தாயின் நெஞ்சுப் பகுதியில் குழந்தையின் நெஞ்சும் வயிறும் படும்படியாக குழந்தையை வைக்க வேண்டும். இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் அழகாக குழந்தை ஒட்டிக் கொள்ளும். தலைக்குக் குல்லா, கைகளுக்கு உறை, இடுப்புத் துணி மட்டும் அணிவிக்க வேண்டும். தாயின் ஜாக்கெட்டினுள் அருமையாக ஃபிட் ஆகிவிடும் குழந்தை! ஜாக்கெட்டுக்கு வெளியே தாயின் கழுத்துக்கு அருகில் குழந்தையின் தலை! இப்படி பல மணி நேரங்கள் பராமரிக்கலாம். இதற்கு மேலும் சூடு தேவைப்பட்டால் தாயையும் குழந்தையையும் ஒரு ஷால் கொண்டு போர்த்தலாம். அம்மாவுக்கும் பாப்பாவிற்கும் எத்தனை அதிகமாக தொடு உணர்வு கிடைக்கிறதோ அந்த அளவு தாய் சேய் பாசப்பிணைப்பு (mother infant bonding) வலுவடையும்.

அம்மாவுக்கு களைப்பாக இருந்தால் பாட்டி, அத்தை, அப்பா, தாத்தா, மாமா ஆகியோர் கங்காரு ஆகலாம். ஆண்கள் இந்த முறையைக் கடைபிடிக்கும் போது சிறிது லூசான பனியனை அணிந்து அதன் மேல் வேட்டி அல்லது லுங்கி கட்டிக் கொண்டால் குழந்தை ந்ழுவி விடாது. கங்காருப் பையில் குட்டியை சுமப்பது போல் நாமும் சுமந்து கொண்டே வீட்டில் நடமாடலாம்.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாயிடம் பாலூட்ட விட வேண்டும். ஆபரேஷன் செய்திருந்தால் தாய்க்கு மயக்கம் தெளிந்தவுடன் சுமார் 2 மணி நேரத்தில் அருகில் இருப்பவர் உதவியுடன் குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும். பிறந்த சிசுவிற்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் தரக்கூடாது. சர்க்கரைத் தண்ணீர், க்ளுக்கோஸ், தேன், விளக்கெண்ணை, வெல்லக் கலவை போன்ற எதுவும் தரக் கூடாது. இந்த வகைப் பொருட்களை ருசி கண்ட குழந்தை தாயிடம் சரிவர பால் குடிப்பதில்லை. பவுடர் பால், மாட்டுப்பால், ஊட்டி போன்றவையும் கூடாது. குழந்தை பிறந்த 2-3 நாட்கள் தாயிடம் சுரப்பது colostrums எனப்படும் சீம்பால். இதில் நோய் எதிர்ப்பு சக்திகள் செரிந்து இருக்கின்றன. குழந்தைக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்கின்றன. முதல் முதலில் பால் ஊட்டப்பழகும் குழந்தைக்கு சில கஷ்டங்கள் இருக்கும். இதனை மிக அழகாக baby shy breast. Breast shy baby என்பார்கள். அதாவது ஆரம்பத்தில் குழந்தையும் சரியாக பால் ஊட்டாது, மார்பகமும் சரியாக பாலை சுரக்காது. குழந்தை உறிஞ்சிக் குடிக்க குடிக்க பால் சுரக்கும். இது ஒரு Reflex செயல்பாடு. இறைக்க இறைக்க நீர் ஊறுவது இல்லையா. அதைப் போல! ஒரு வாரத்தில் தானாகப் பழகிவிடும். முதல் 1 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதால் 10 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம். பாலூட்டும் போது தாய்க்கு முதுகு, அடி வயிறு, மார்பகம் போன்றவை வலிக்கலாம். நமது குடும்பத்தின் வாரிசிக்கு அமுதைத் தருகிறோம் என்று நினைத்து விட்டால் எப்படிப்பட்ட வலியும் பறந்தோடி விடாதா?

பிறந்த குழந்தை சுமார் 18 மணி நேரம் தூங்கும். இது இயற்கை. சில சமயம் அரை மணி நேரத்தில் பாலுக்கு அழும் குழந்தை 5 மணி நேரம் வரை தூங்கலாம். அமைதியான தூக்கம் குழந்தைக்கு கட்டாயம் தேவை. உறங்கும் போதுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி நடைபெறுகிறது. வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) சுரக்கிறது. குழந்தை தூங்கும் போது எழுப்பக் கூடாது. மூளை வளர்ச்சி தடைபடக் கூடும். வாய் காய்ந்து விடும். குடல் ஒடுங்கிவிடும். எழுப்பிப் பாலைக் கொடு என்றெல்லாம் பாட்டியோ ஆயாவோ சொன்னால் தயவு செய்து காதில் வாங்காதீர்கள். சிறு பாப்பாவிற்கு வயிறு கடாமுடா என்று அடிக்கடி உறுமும். சீறும்! இது குடலில் அசைவுகள் நல்ல முறையில் ஏற்படுவதைக் குறிக்கிறது. அஜீரணம் அல்ல!

தொப்புள் கொடி காய்ந்து உலரும் வரைக் குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. பிறந்த குழந்தையின் மேல் படர்ந்திருக்கும் Vernix Caseasa என்ற ஒரு வகை வெண் படிமத்தைக் கூட அதிகம் துடைத்து எடுக்க வேண்டாம். குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க இது உதவும். குறை மாத அல்லது எடை குறைந்த குழந்தைக்கு தேங்காய் எண்ணை, கடுகு எண்ணை, ஆலிவ் எண்ணை போன்ற ஏதாவது ஒன்றை தோலில் தடவலாம். இது உடல் வெப்பத்தைப் பராமரிக்கும். தோலையும் மென்மையாக்கும். அதிக குளிர் பிரதேசங்களில் கடுகு எண்ணை தேவை! ஆலிவ் எண்ணை விலை அதிகம்! கட்டாயமில்லை. இந்த எண்ணையால் தோலின் நிறம் வெண்மை அடையாது. தோலின் நிறம் ஜீன் சம்மந்தப்பட்டது.

தொப்புளில் சாதாரணமான பவுடர், ஆயின்மெண்ட் ஏதும் வேண்டாம். சீழ் தெரிந்தால் மருத்துவ ஆலோசனை படி செய்யலாம். தொப்புள் கொடி உலர்ந்து விழுவதற்கு ஒரு வாரம் ஆகலாம். சீழ் பிடித்துவிட்டால் அதிக நாளாகலாம். இந்த நேரத்தில் தாயின் வளையல், செயின், தாலிக் கொடி ஆடையில் ஹூக், பட்டன் போன்றவை மாட்டி இழுக்கலாம். ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தொப்புள் உதிரும் வரை துணியால் உடம்பை நன்கு துடைத்து விடலாம். (Sponge bath) சுத்தமான வெள்ளை காட்டன் துணியை வெந்நீரில் நனைத்து, பிழிந்து சுத்தம் செய்யலாம். தொப்புளை நோக்கித் துடைக்கக் கூடாது. தனியான ஒரு துணியால் பிறப்பு உறுப்பை முன்புறம் ஆரம்பித்து பின்புறமாக சுத்தம் செய்யலாம். கண்களையும், காது மடல்களின் பின்னேயும் ஈரத்துணியால் துடைக்கலாம்.

தொப்புள் கொடி உலர்ந்து விழுந்த பின், புண் ஆறிய பிறகு எண்ணை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு குளிக்க வைக்கலாம். அமிலத் தன்மையுள்ள சோப் (low ph soap) அல்லது சோப் திரவம் கொண்டு குழந்தையை குளிக்க வைக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் இருமுறை தலைகுளிக்க வைக்கலாம். இது சீசனுக்குத் தகுந்தபடி தலைக்கு எண்ணைத் தேய்த்து குளிக்க வைக்கக் கூடாது. சாம்பிராணி போடக் கூடாது. குழந்தையின் ஒரு கண்ணில் மட்டும் அல்லது இரண்டு கண்ணிலும் நீர் வடியலாம். கண்களில் பீளை ஏற்பட்டு கண்கள் காலை நேரங்களில் ஒட்டிக் கொள்ளலாம். இது கண்ணீர் சுரக்கும் பாதையில் கோளாறு (Naso laerimal apparatus) என்பதைக் காட்டுகிறது. மருத்துவ ஆலோசனைப் படி கண்களுக்கு சொட்டு மருந்து, கண்ணின் அருகே மசாஜ் ஆகியவை பயன் அளிக்கும்.

சுமார் 2 மாதம் முடியும் வரை குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறை சிறுநீர் கழிக்கும். முதல் 10 நாட்களில் 10-15 முறை மலம் கழிக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பளிச் மஞ்சள் நிறத்தில் 2 நாணயம் அளவு சிறிது பிசுபிசுப்பில் ஒரு புளிப்பு வாடையுடன் மலம் கழிக்கும். பால் குடிக்கும் போதே மலம் வெளியாகும். இதெல்லாம் இயற்கை. இதே போல் உங்கள் செல்லம் 3-4 நாட்கள் மலம் போகாமலும் இருக்கலாம். மற்றபடி எந்த தொந்திரவும் இல்லையெனில் பயப்பட வேண்டாம்.

பிறந்த சிசுவிற்கு பல காரணங்களால் மஞ்சள் காமாலை இருக்கலாம். இதைப் பற்றிய விளக்கம் உங்கள் டாக்டர் சொல்வார். அப்போது தாய்க்கு பத்தியம் ஏதும் தேவையில்லை. மஞ்சள் காமாலை குணமடைய காலை மாலை வெய்யிலில் வைக்கக் கூடாது. இதனால் வேறு பிரச்னைகள் உண்டாகும். முதல் 2-3 மாதங்கள் குழந்தை வாந்தி எடுப்பது இயற்கை. ஒவ்வொரு முறை பால் தரும்போதும் வாந்தி எடுத்தால் உங்கள் மருத்துவரைக் கேளுங்கள்.

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com