19. குழந்தைகளுக்கு மேக்கப் தேவையா?

பனியில் நனைந்த வாசமிகு மலர்கள் போன்ற அழகும் மென்மையும் நிறைந்தவர்கள் குழந்தைகள்!
19. குழந்தைகளுக்கு மேக்கப் தேவையா?
Updated on
2 min read

பனியில் நனைந்த வாசமிகு மலர்கள் போன்ற அழகும் மென்மையும் நிறைந்தவர்கள் குழந்தைகள்! கண்கள் பளிச்சிட, அழகே உருவாக, கள்ளமில்லா பொக்கை வாய் சிரிப்பினை நமக்குப் பரிசாகத் தரும் குழந்தை செல்வங்களுக்கு மேக்கப் தேவையா? தேவையில்லை என்கிறது தற்போதைய மருத்துவ அறிவியல்! அழகுக்கு அழகு சேர்த்துப் பார்ப்பது ஒரு ரசனை! தாய்மையின் பாசத்தின் வெளிப்பாடு! ஆனால் அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகி விடுமல்லவா! கவனத்துடன் செயல்படுவது நல்லது!

முற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையைக் குளிக்க வைப்பார்கள்! தற்போது, தொப்புள் கொடி விழுந்த பிறகுதான் நீர் ஊற்றிக் குளிக்க வைக்க வேண்டும் என்பது அறிவுரை. அதாவது ஒரு வாரம் வரை, டவல் அல்லது ஸ்பான்ச் குளியல்தான்! பிறந்தவுடன் குழந்தையின் தோலில் படிந்திருக்கும் மாவு போன்ற பிசுபிசுப்பான படிவம் முழுவதும் களையப்படக் கூடாது. இந்தப் படிவம் குழந்தையின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. பிறந்தவுடன் குழந்தையின் தோலின் மேல் இருக்கும் ரத்தம், பிறப்புப் பாதை திரவங்கள் போன்றவற்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்த மென்மையான துணியால் துடைக்கலாம்.மிகவும் மிருதுவாகத் துடைக்க வேண்டும். தோலில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்புப் படலத்தை முழுவதும் எடுக்கக் கூடாது. தொப்புளுக்கும் எந்த மருந்தும் தேவையில்லை.

குழந்தையின் தலைக்கும், உடம்புக்கும் சுத்தமான தாவர எண்ணெய் தடவலாம். அவரவர் இருக்கும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, குடும்பப் பழக்கம், பண வசதி ஆகியவற்றைப் பொறுத்து ஏதாவது ஒரு எண்ணெயைப் பயன்படுத்தலாம். வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பேபி ஹேர் ஆயில் தேவையில்லை. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை விளக்கெண்ணை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆலிவ் ஆயில் விலை அதிகம். முடிந்தால் பயன்படுத்தலாம். ஆனால் இதனால் தோலின் நிறம் மாறுவதில்லை. எனவே ஆலிவ் ஆயில் கட்டாயம் இல்லை. வட மாநிலங்களில் குளிர் அதிகம் இருப்பதால் கடுகு எண்ணெய் தடவுவார்கள். அதன் வாசனை தென்னகத்து மக்களுக்குப் பிடிப்பதில்லை. விளக்கெண்ணைக் கெட்டியாக இருப்பதால் லேசாகத் தடவினால் போதும்.

குழந்தைக்குத் தலையில் எண்ணெய் தடவி கடலை மாவு / பயத்தம் மாவு / சீயக்காய் போன்றவை உபயோகித்துத் தேய்க்கக் கூடாது. சோப் அல்லது ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தம் செய்வது நல்லது. தினமும் காலை அல்லது மாலை தலையில் எண்ணெய் தடவலாம்.

குழந்தைக்கு சாம்பிராணி புகை கட்டாயம் போடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணி போடுவதால் பலவிதமான மூச்சுப்பாதை நோய்கள் ஏற்படுகின்றன. நிமோனியா பிராங்கியோலைட்டிஸ் போன்ற சளி நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. குளிக்க வைக்கும் போது குழந்தைகள் அழும்! அப்போது தலையில் உள்ள அழுக்கு, எண்ணெய், நீர்,கடலை மாவு அல்லது சோப்பு போன்றவற்றை குழந்தை புறைக்கு ஏற்றிக் கொள்கின்றன! தலையிலிருந்து முகத்தில் வடியும் அசுத்த குளியல் நீர் குழந்தை அழும் போது நாசித் துவாரத்தில் சென்றுவிடுகிறது. சாம்பிராணிப் புகையும் அப்படித்தான்! எனவே இவை தவிர்க்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்குப் பவுடர் போடலாமா?

தேவையில்லை என்கிறது தற்கால அறிவியல்! எந்தப் பவுடரிலும் டால்க் என்ற ஒரு வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது தோலில் அலர்ஜி ஏற்படுத்தலாம். பவுடரில் வாசனைக்குச் சேர்க்கபடும் வேதிப் பொருட்களும் அலர்ஜி உண்டாக்கலாம். குழந்தையின் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் எண்ணெய்ச் சுரப்பிகள், முடிக்காம்புகள் ஆகியவை திறந்து இருந்தால் தான் நல்லது. பவுடர் போடுவதால் இந்த துவாரங்கள் அடைபடுகின்றன. உள்பக்கம் சுரக்கும் வியர்வை, எண்ணெய் (சீபம்) போன்றவை வெளியில் வராமல் அடைபட்டு தோலில் அழற்சி, கிருமித் தொற்று ஏற்படலாம். கோடை காலத்தில் வியர்க்குரு பவுடர்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் டாக்டர்கள் அவற்றை சிபாரிசு செய்வதில்லை. பவுடர், வியர்வை துவாரங்களை அடைத்து உள் வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன. அதே போல்தான் சிறு குழந்தைக்கும்! மேலும் கிராமப்புறங்களில் பவுடர் அடிப்பது என்று ஒரு சிறு புகை மண்டலத்தை குழந்தையின் முகத்துக்கு அருகில் ஏற்படுத்துகின்றனர். பவுடரின் துகள்கள் மற்றும் புகை, புரையேறி சளி நோய்கள் ஏற்படலாம். பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதியில் அதிகமாக பவுடர் தங்குவதால் இயற்கையான திரவங்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com