14. பச்சிளம் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ்

குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு முன்னால், எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அதற்கான வழிமுறைகள் -
14. பச்சிளம் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ்
Updated on
3 min read

குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு முன்னால், எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அதற்கான வழிமுறைகள் -

  1. குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  2. பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.

  3. தினமும் 2 - 3 முறை அல்லது ஒரு முறையாவது தருவது நல்லது.

  4. சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.

எப்படி மசாஜ் செய்வது?

  1. அறை / இடம் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்.

  2. மசாஜ் செய்பவர்களுக்கு நீண்ட நகங்கள், குழந்தையைக் குத்திக் காயப்படுத்தும்படியான நகைகள் இருக்கக்கூடாது.

  3. மெல்லிய, இனிமையான இசையும் சேர்ந்தால் இன்னும் மகிழ்ச்சிதான்!

  4. மெதுவாக, ஆனால் குழந்தை உணரும் அளவு அழுத்தமாக மசாஜ் செய்யலாம்.

  5. மசாஜ் செய்யும் முன் இரண்டு உள்ளங்கைகளையும் நன்கு தேய்த்து சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்.

  6. இரண்டு மூன்று மாதமே ஆன குழந்தைக்கு மசாஜ் செய்யப்படும் பகுதியைத் தவிர, மற்ற பாகங்களை வெதுவெதுப்பாக மூடி வைக்க வேண்டும்.

  7. கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

  8. குழந்தையின் கை கால் அசைவுகளுடன் ஒத்துப்போகுமாறு மசாஜ் செய்ய வேண்டும். அதாவது, குழந்தை கைகளை நீட்டினால் நீட்டிய வாக்கில் மசாஜ் செய்ய வேண்டும். நம் விருப்பப்படி கை கால்களை நீட்டிப் பிடிப்பதை குழந்தை விரும்பாது.

  9. கை, கால் தசைகளை அதிகமாக அழுத்துவது, பிசைவது, முறுக்குவது கூடாது.

  10. நம் கைகள் மிகவும் மென்மையாக குழந்தை மேல் வழுவழுவென்று ஓட வேண்டும்.

குழந்தை மசாஜை விரும்புகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

  1. குழந்தை அமைதியாக இருக்கும்.

  2. கண்ணோடு கண் பார்த்து சிரிக்கும்.

  3. பேச ஆரம்பிக்கும்.

  4. கை விரல்களைச் சப்ப ஆரம்பிக்கும்.

  5. மூச்சு சீராகும்.

  6. கைகளை, கால்களைப் பிடித்துக்கொண்டு விளையாடும்.

  7. தூங்க ஆரம்பிக்கலாம்.

மசாஜ் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டிய தருணங்கள்

  1. அதிகமான அழுகை.

  2. முகத்தில் பய உணர்வு.

  3. தோலின் நிறம் வெளுத்தல் / நீலமாகத் தெரிதல்

  4. கண்ணோடு கண் பார்க்காமல் வெறித்துப் பார்த்தல்.

  5. உடம்பை வளைத்தல் / முறுக்குதல்.

  6. அதிக விக்கல்.

  7. வாந்தி.

சில ஆராய்ச்சி முடிவுகள்

  1. இளம் வயதில் தொடு உணர்வு அனுபவிக்காத குழதைகளுக்கு உடல் எடை மற்றும் உயரம் குறைவாகவே இருக்கும். நல்ல ஊட்டச் சத்துணவு கிடைத்தாலும் பலன் இருக்காது.

  2. குறைமாத குழந்தைக்கு தினமும் 3 முறை 15 நிமிடங்கள் மசாஜ் செய்தால் எடை வேகமாக அதிகரிக்கிறது.

  3. மருத்துவமனையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

  4. இந்தக் குழந்தைகளை மூளை மற்றும் நரம்பு மண்டலம் விரைவில் முதிர்ச்சி அடைகிறது.

  5. குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதைவிட எண்ணெய் மசாஜ் செய்யப்பட்ட குழந்தைகள் சீக்கிரம் அமைதியாகத் தூங்குகின்றன.

  6. ஆறு வாரங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் உள்ள எபிநெப்ரின், நார் எபிநெப்ரின் (Epinephrine; non Epinephrine), கார்டிசால் போன்ற மன அழுத்த வேதிப் பொருட்கள் குறைந்து, செரட்டோனில் (Serotonin) என்ற வேதிப்பொருள் அதிகரித்து, குழந்தைக்கு மன அமைதி ஏற்படுகிறது.

சரியான வழியில் குழந்தையைத் தேய்த்துக் கொடுப்பது (மசாஜ் செய்வது)

  1. முதலில் குழந்தையின் தலையில் சிறு வட்டமாகத் தேய்க்கவும். பிறகு, குழந்தையின் இரு கைகளாலும் நெற்றியின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்புறமாகப் புத்தகத்தைத் திறப்பதுபோல் தேய்க்கவும். குழந்தையின் தாடையில் சிறு வட்டங்களாகத் தேய்க்கவும்.

  2. கையில் இருக்கும் எண்ணெய்யை குழந்தையின் மார்பில் தேய்க்கவும்.

  3. இரண்டு கைகளையும் மேலிருந்து கீழாக நீவி விடவும். கைகளிலுள்ள விரல்களைத் திறந்து மசாஜ் செய்யவும்.

  4. வயிற்றில், வலமிருந்து இடமாக ஒவ்வொரு கையாக மாற்றி மசாஜ் செய்யவும்.

  5. உங்கள் இரண்டு கைகளுக்கும் இடையே குழந்தையின் கால்களைப் பற்றிக்கொண்டு நீவி விடவும். பாதங்கள் இரண்டையும் மசாஜ் செய்யவும்.

  6. முதுகை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மசாஜ் செய்யவும். தோள் முதல் பாதம் வரை நீவி விடவும். மசாஜை ஒரு முத்தம் கொடுத்து முடிக்கவும்.

(நன்றி – இந்தியக் குழந்தைகள் நலக்கழகம் வழங்கும் பெற்றோர்களுக்கான கையேடு)

குழந்தையின் கண்களுக்கு மசாஜ்

குழந்தையின் மூக்குக்கு அருகில் இரண்டு பக்கமும் உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும். விரல்களை லேசான அழுத்தத்துடன் நகர்த்தி, கண்ணைச் சுற்றி நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்துக்கு வரவும். வலது கண்ணுக்கு நம் இடது ஆள்காட்டி விரலும், இடது கண்ணுக்கு நம் வலது ஆள்காட்டி விரலும் பயன்படுத்தப்பட வேண்டும். இரு கண்களின் இமை மீதும் லேசாக தடவவும்.

நெற்றிக்கு மசாஜ்

குழந்தையின் கண்களை மறைக்காமல், நமது இரண்டு கைகளின் விரல்களை நெற்றியில் தலைமுடிக்கு அருகில் வைக்க வேண்டும். லேசான அழுத்தத்துடன் இடதுபுறம், வலதுபுறம் என்று விரல்களை நகர்த்தவும்.

முதுகுக்கு மசாஜ்

குழந்தையை அதற்கு வசதியாக குப்புறப் படுக்கவைத்து, நமது இரண்டு உள்ளங்கைகளையும் முதுகில் வைத்து பக்கவாட்டிலும், மேலும் கீழுமாக மசாஜ் செய்யவும். குழந்தையை ஒருவர் தோளில் போட்டுக் கொண்டு, மற்றவர் மசாஜ் செய்யலாம்.

இப்படி தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது மசாஜ் செய்யப்படும் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, மன முதிர்ச்சி அதிகமாகிறது.

மசாஜ் செய்யும்போது குழந்தை அமைதியாக இருக்க வேண்டும். மசாஜ் முடிந்தவுடன் உடனே கைகளை எடுக்காதீர்கள். சிறிதுநேரம் தடவிக்கொடுத்து, குழந்தை மேலும் மசாஜ் அல்லது தடவுவதை எதிர்பார்க்கிறதா என்று உணருங்கள்! அமைதியாகத் தூங்கிவிட்டால் அல்லது கை கால்களை உதைத்து விளையாட ஆரம்பித்தால், குழந்தை திருப்தி அடைந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தையின் இடுப்புக்குக் கீழ் தொடைப்பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இரண்டு கட்டை விரல்களும் மேல் பக்கமும் மற்ற விரல்கள் கீழ்ப் பக்கமும் இருக்க வேண்டும். கணுக்காலை நோக்கி லேசாக வட்டமிடுவது போன்று கட்டை விரலைச் சுழற்றவும். இரண்டு கட்டை விரல்களாலும் மாற்றி மாற்றி நிதானமாகச் சுழற்ற வேண்டும். இதே முறையில், முழுங்காலுக்குக் கீழ் ஆடு தசைப் பகுதிகள் செய்யலாம்.

வயிற்றுப் பகுதிக்கு மசாஜ்

குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். இடது உள்ளங்கை வயிற்றில் படுமாறு, கட்டை விரல் தொப்புள் அருகில் இருக்குமாறு வைக்க வேண்டும். முழுக் கையையும் தொப்புளைச் சுற்றி மெதுவாக லேசான அழுத்தத்துடன் வலமிருந்து இடமாக நகர்த்தவும். இதேபோல், குழந்தையின் வயிற்றுப் பகுதியின் இடதுபுறம் உங்கள் வலதுகையை வைத்து இடமிருந்து வலமாகச் செய்யவும். இது குழந்தையின் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி சீர் செய்யும்.

தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதிக்கு மசாஜ்

குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். வலது உள்ளங்கையை குழந்தையின் மார்பில் இடது பக்கமும், இடது உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வலது பக்கமும் வைக்கவும். கட்டை விரல்களை கீழ்நோக்கி நகர்த்தி ஒரே கோடாக வையுங்கள். இப்போது குழந்தையின் மார்பு உங்கள் கைகளுக்கு நடுவில் ஒரு முக்கோணம்போல் தெரியும். இந்த முக்கோணத்தை கீழிலிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் நிதானமாக லேசான அழுத்தத்துடன் நகர்த்துங்கள். கட்டை விரல்கள் தொப்புள் பகுதியை அடையும் வரை கோணத்தை நகர்த்தவும்.

தோள்பட்டைக்கு – குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். இரண்டு உள்ளங்கைகளையும் குழந்தையின் மார்பின் இரண்டு பகுதியிலும் வைக்கவும். கைகளை மேல் நோக்கி லேசான அழுத்தத்துடன் நகர்த்தி, அப்படியே தோள்பட்டைகளை அடைந்து புஜங்களை மசாஜ் செய்யவும். குழந்தையின் மணிக்கட்டுவரை மசாஜ் செய்யவும்.

கைகளுக்கு மசாஜ்

தொடையைப் பிடித்ததுபோல் உங்களை இரு கைகளாலும் குழந்தையின் தோள்பட்டைகளின் கீழே பிடித்துக்கொள்ளவும். ஒரு கையின் கட்டை விரல் மேல் பாகத்திலும், மற்றொரு கையின் கட்டை விரல் கீழ் பாகத்திலும் இருப்பதுபோல் உங்கள் கைகளால் குழந்தையைப் பிடித்துக்கொள்ளவும். லேசான அழுத்தத்துடன் உங்கள் கைகளை மெதுவாக நகர்த்தி, முழங்கை வரையிலும் பிறகு தொடர்ந்து மணிக்கட்டு வரையிலும் பிடித்து விடுங்கள்.

உள்ளங்கைக்கும் விரல்களுக்கும் மசாஜ்

குழந்தையின் உள்ளங்கையை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்துக்கொண்டு, உங்கள் விரல்களால் குழந்தையின் விரல்களில் தொடங்கி உள்ளங்கை மணிக்கட்டுவரை தட்டி, லேசான அழுத்தத்துடன் நீவிவிடவும்.

(தொடரும்)

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com