15. பச்சிளம் சிசுவைப் பாதுகாப்பது எப்படி?

இந்த மலர்க்கொத்தைக் காணும்போது மனத்தில் மகிழ்ச்சி பொங்கும். சந்தேகமில்லை.
15. பச்சிளம் சிசுவைப் பாதுகாப்பது எப்படி?
Updated on
2 min read

பிறந்தது முதல் ஒரு மாதம் வரை

பிரசவம் முடிந்தவுடன் ஒரு மிருதுவான ரோஜாச் செண்டை வெள்ளைத் துணியில் நன்கு பொதிந்து முகம் மட்டும் தெரியுமாறு தாய்க்கும் மற்ற உறவினர்களுக்கும் காட்டுவார்கள்! இந்த மலர்க்கொத்தைக் காணும்போது மனத்தில் மகிழ்ச்சி பொங்கும். சந்தேகமில்லை. அதே நேரம் ஒரு மெல்லிய பய உணர்வும், பொறுப்பும் மனத்தில் படர்வது இயற்கையே! இந்த அருள் கொடை நம் பொறுப்பில் என்பது சுகமான சுமை!

குழந்தை ஆணா, பெண்ணா என்ன எடை என்றெல்லாம் கேள்விகளை அடுக்குவோம். அன்றலர்ந்த தாமரை போல் பொக்கை வாயும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு அழும் இந்த குழந்தையில் ஆண் பெண் வித்தியாசமெல்லாம் தேவையா? பிறந்தவுடன் இருந்த எடையை அறிந்து கொள்வது கட்டாயம். தாய்க்கு கடைசியாக மாதவிடாய் வந்த நாள் (Last menstrual period - LMP) முதல் 270 நாட்கள் சேர்த்து அத்துடன் முன்னே அல்லது பின்னே ஒரு வாரம் என்று கணக்கிட்டு குழந்தை பிறக்கும் தேதியைக் கணக்கிடலாம். (Expected date of delivery) மீளா ஒலி அலை (Ultra sound scan) செய்து கருவில் சிசுவின் எடை, நீளம், சுவாசப் பாதை முதிர்ச்சி, உடல் அசைவுகள், பனிக்குடநீரின் முதிர்ச்சி ஆகியவற்றை கணக்கிட்டு, பிறக்கும் தேதியை சுமாராகக் கணிக்கலாம். இதில் சில மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையே!

37-40 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை நிறை மாதம் (Full term) என்று அறியலாம். 37 வாரங்களுக்கு முன்பாகப் பிறந்தால் குறைமாதக் குழந்தை (Pre Term) என்றும் குறிக்கப்படுகிறது.

நிறை மாதம் ஆன குழந்தை பிறக்கும் போது குறைந்த பட்சம் 2.5 கிலோ எடை இருக்க வேண்டும். அதிக எடையாக 4 – 4.5 கிலோ இருக்கலாம். 2.5 கிலோவிற்குக் குறைவாகப் பிறக்கும் குழந்தை குறைந்த எடையுள்ள குழந்தை எனப்படுகிறது.

குறை மாதக் குழந்தை, பிறப்பு எடை குறைந்த குழந்தை (Low birth weight), பிறப்பு எடை மிக அதிகமான குழந்தை போன்றவரக்ளை High Risk Babies என்கிறோம். அவர்களுக்கு மருத்துவச் சிக்கல்கள் வரலாம். நோய்க் கிருமித் தொற்று (Infection) மூச்சுத் திணறல், உடல் வெப்பநிலை குறைதல் (Hypothermia) ரத்தத்தில் சர்க்கரை, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் மாறுபடுதல், ரத்தத்தில் அமிலத்தன்மை (Ph) மாறுதல்கள் போன்ற பலதரப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் உயிருக்கு ஆபத்தாகலாம். அதனால் தான் நிறை மாதமா, பிறந்த எடை என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. மகப்பேறு மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் பிரச்னைகளை எதிர்பார்த்து மருத்துவம் செய்ய தயார்படுத்திக் கொள்ள வேண்டும். (Anticipatory preparedness).

குழந்தை பிறந்தவுடன் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது நுரையீரல் நன்கு சுருங்கி விரிந்து மூச்சு விடுவது சீராகும். மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் ஏற்படும். பிறந்தவுடன் குழந்தை சரி வர அழவில்லையானால் மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

குழந்தை பிறந்த உடன் பிரசவ அறையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் குழந்தையை நன்கு பரிசோதனை செய்வார்கள். வெளியில் தெரியும் பிறவிக் கோளாறுகள் (உ.ம்) 6 விரல்கள், தலை சுற்றளவு, உடலில் உள்ள 9-10 துவாரங்கள் – 2 கண்கள், 2 காதுகள் 2 நாசித் துவாரங்கள், வாய் மற்றும் அண்ணம் தொண்டை, சிறுநீர்த் துவாரம், மலத்துவாரம், பெண் குழந்தைக்கு பிறப்புப் பாதைத் துவாரம் ஆகியவற்றை சரி பார்ப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையை நன்கு துடைத்து 2-3 அடுக்கு துணிகள் கொண்டு சுற்றி வெதுவெதுப்பாக வைக்க வேண்டும். எடை குறைந்த அல்லது குறை மாதக் குழந்தைக்கு உடல் வெப்பம் குறைவது – Hypothermia ஒரு உயிர்க் கொல்லி நோய். குளிர் காலத்தில் 5 – 6 அடுக்குத் துணிக் கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில் பிரிண்ட் – டிசைன் எதுவும் இல்லாத காட்டன் சட்டையை முதலில் போட்டு அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியன் மெட்ட்ரீரியலில் சட்டை போடலாம். தலைக்கு காட்டன் குல்லாய், கைகளுக்கு குத்துச் சண்டை வீரர் போன்ற உறை, கால்களுக்கு காட்டன் சாக்ஸ் எல்லாம் போட்டு பாதுகாக்க வேண்டும். குழந்தையின் சட்டையில் பட்டன், ஹூக், ஜிப் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது. விற்கப்படும் நாப்கின், டயாபர்களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி பிறப்பு உறுப்புப் பகுதியில் இன்பெக்‌ஷன் பூசணத் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்த குழந்தை நீர், மலம், இரண்டுமே அதிகம் போகும் என்பதால் புண்ணாகும் வாய்ப்பு அதிகம்! பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக்கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற காட்டன் துணிகளை முக்கோணமாக மடித்து லூசாக இடுப்பில் கட்டிவிடலாம். இது தருமே இயற்கை பாதுகாப்பு!

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com