தொப்புள் கொடி உறவு

திருமால் படுத்திருக்கிறார். ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனில் படுத்திருக்கிறார். அவரது தொப்புளில் இருந்து நீண்டு செல்கிறது ஒரு தாமரைத் தண்டு. விரிந்திருக்கும் அதில் பிரம்மா அமர்ந்திருக்கிறார்.
Published on
Updated on
4 min read

திருமால் படுத்திருக்கிறார். ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனில் படுத்திருக்கிறார். அவரது தொப்புளில் இருந்து நீண்டு செல்கிறது ஒரு தாமரைத் தண்டு. விரிந்திருக்கும் அதில் பிரம்மா அமர்ந்திருக்கிறார். இந்தப் பௌதீகப் பிரபஞ்சத்தை ‘சிருஷ்டிப்பவர்’ அவர்தான். இந்தச் சித்திரத்தை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆண் தெய்வமான விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பௌதீகப் பிரபஞ்சம் உருவாகிறது. தொப்புள் கொடி ஒரு தாமரைத் தண்டாகச் சித்தரிக்கப்படுகிறது. பிரம்மா, பருப்பொருள் பிரபஞ்சத்தின் விரிவை காட்டும் தெய்வம். விஷ்ணுவோ, முழுமையான தன்னறிவின் வடிவம். நாம் அறியும் பருப்பொருள் பிரபஞ்சத்துக்கும், அதன் அடிப்படையில் அறிதுயில் கொண்டிருக்கும் தன்னறிவுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, ஒரு தாமரைத் தண்டு; தொப்புள் கொடி உறவு. ஆனந்த குமாரசாமியிலிருந்து தேவதத் பட்நாயக் வரை இதன் பிரபஞ்ச குறியீட்டுத்தன்மை குறித்து பேசிவிட்டார்கள்.

ஆனால் மிகவும் அன்றாட இந்திய கிராமப்புற வாழ்க்கையில் இந்த சித்தரிப்பு வாழ்கிறது. தாமரைத் தண்டுக்கும் தொப்புள் கொடிக்குமான உறவு, இந்தியப் பண்பாட்டின் ஒரு முக்கியச் சித்தரிப்புகளில் ஒன்று. எந்த ஒரு சமுதாயத்திலும் ஆண் மையத்தன்மை என்பது மானுட வளர்ச்சியில் ஒரு காலகட்டம். அப்போது, பிறப்பும் பிரசவம் சார்ந்த விஷயங்களும் ‘தீட்டாக’ பார்க்கப்படும் தன்மை உருவாகும். ஆனால் அதைத் தாண்டி, தொப்புள் கொடி மீது ஒரு மரியாதை நம் பண்பாட்டில் தொடர்ந்து இருந்துள்ளது. ஆனால், ஆண்-மையத்தன்மை ஏற்படுவதற்கு முன்னால் வேதங்களிலேயே தொப்புளிலிருந்து பிரபஞ்சம் உருவாகும் தொன்மவிதை விழுந்துவிட்டது. தொப்புள் கொடியை தாமரைத் தண்டாக உருவகிப்பது ஊர்ப்புற பேச்சு வழக்குகளில் – குறிப்பாக, பிரசவம் பார்க்கும் பெண் மருத்துவச்சிகளிடம் - உள்ளது. பெண் உறுப்பு தாமரையாக (புண்டரீகம்) கூறப்படுவதை நாம் அறிவோம். லலிதா சஹஸ்ரநாமம், குண்டலினியை தாமரைத் தண்டுக்குள் இருக்கும் நூலிழையாக உருவகிக்கிறது. இந்தியக் கிராமப்புற கதைகளில், இறந்த குழந்தையை உயிர்ப்பிக்க தொப்புள் கொடி தேவைப்படுவதாக கூறப்படுகின்றன. இவை அனைத்தையும் இணைக்கும்போது, ஒரு மிக நுண்ணிய உறவினை பல தளங்களில் இயங்கும் படிமமாக நம் பண்பாடு மாற்றி அளித்துள்ளது என்பதை உணர முடியும். (உதாரணமாக Sarah Pinto, Where There Is No Midwife: Birth and Loss in Rural India, Berghahn Books,2013).

இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவுவதற்கு முன்னால், தொப்புள் கொடியில் வசிக்கும் ஒரு பெண் தெய்வம் மத்திய ஆசியப் பகுதிகளில் வணங்கப்பட்டு வந்தாள். அவள் பெயர் ‘உமை’. உமா என்பதற்கு காளிதாசன் ஓர் அழகிய விளக்கம் அளித்தாலும், அவள் புராதனமான தாய்மையின் தெய்வம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவள் குழந்தை பிறப்புடன் தொடர்புடைய தெய்வம். தொப்புள் கொடி மட்டுமல்ல; கருவறையும் இந்தியப் பண்பாட்டில் ஒரு மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. எல்லா தெய்வங்ளும் கருவறைக்குள்தான் இருக்கின்றன. ஆக, கருவறைக்கும் தொப்புள் கொடிக்குமாக நம் பண்பாட்டில் இருக்கும் இந்த இடம், ஒரு சுவாரசியமான மர்மம். யோசித்துப் பார்த்தால், இது பாலூட்டிகளுக்கான தனித்தன்மை. பாலூட்டும் உயிரினங்களில், தாய்மை என்பது ஒரு மிக ஒரு முக்கியமான உயிரியல் மாற்றம்.

பரிணாம வெற்றியைத் தீர்மானிப்பதில், ஓர் உயிரினம் தனது சுயநலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும். ஆனால், தாய்மை எனும் தன்மை அடையும்போது, அதே உயிரினத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஒன்று வருகிறது. ‘தனக்காக, தன் வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட உயிரினம், தன் குழந்தைகளின் நல்வாழ்வையும் அவற்றுக்குப் பராமரிப்பு அளிப்பதையும் மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்குகிறது’. கருவைச் சுமக்கும்போதும் தாய்ப்பால் அளிக்கும்போதும் தாயின் மூளையில் சில ஆதார நியூரானிய மாற்றங்கள் ஏற்படுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்மைப் பண்புக்கென சில பகுதிகள் மூளையில் இயங்குவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். தாய்மை அடையும் ஒரு பாலூட்டியின் மூளையில் இந்தப் பகுதிகளின் செயல்பாட்டில் மாற்றம் வருவது எதிர்பார்க்கப்படக்கூடியதுதான். ஆனால், அவற்றில் மட்டுமல்லாது பொதுவாக கற்றலிலும் ஞாபகத்துக்கான செயல்பாட்டிலும்கூட மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் கண்டறிந்தது.

கன்னித்தன்மை கொண்ட எலிகளையும், தாய்மை அடைந்த எலிகளையும் கொண்டு புதிர்களை விடுவிக்கும் பரிசோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் நடத்தும்போது, தாய்மை அடைந்த எலிகள் அவற்றில் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்கள். இதற்குத் துல்லியமான காரண காரியத் தொடர்புகளை நாம் கண்டறிய முடியும். உதாரணமாக, நம் மூளையில் ஹைப்போதலாமஸ் என்கிற சமாசாரத்தில் இருக்கும் மீடியல் ப்ரிஆப்டிக் பகுதி (medial preoptic area) என்கிற இடத்தில் இருக்கும் நியூரானிய செல்கள், தாய்மையின்போது விரிவடைகின்றன. இதைச் செய்யவைப்பவை, ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்டிரான் என்கிற ஹார்மோன்கள். அத்துடன், இதற்கான ஹார்மோன்கள், ஹிப்போகாம்பஸ் என்கிற பகுதியில் நியூரான்களின் பரப்பளவை அதிகரிக்கின்றன. இதனால், ஞாபகசக்தியும் கற்கும் ஆற்றலும் மேம்படுகின்றன. கருவகமும் சரி, கருக்குடையும் (placenta) சரி; ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன.

தாய்மை, தைரியத்தையும் அளிக்கிறது. அபாயகரமான வெட்டவெளி உயரங்களில் செல்வதை கன்னித்தன்மை கொண்ட எலிகள் தவிர்க்கின்றன. ஆனால், தாய்மை அடைந்த எலிகளோ அந்த இடங்களுக்கு அஞ்சாமல் செல்கின்றன.

ஆக, தாய்மை கொண்ட எலிகள், கன்னி எலிகளைக் காட்டிலும் அறிவார்ந்த மாற்றங்களை அடைகின்றன. மானுட அன்னையரிலும், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் (multitasking), தாய்மையிலிருந்து மேம்பட்டு எழுந்த ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. இது, பெண்கள் பணி செய்யும் இடத்திலும் அவர்களின் செயல்பாட்டுத் திறமையை அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த விஷயங்களெல்லாம், 2006-ல் ‘ஸயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழில் முகப்புக் கட்டுரையாக வந்த விஷயங்கள். (Craig Howard Kinsley & Kelly G. Lambert, The Maternal Brain, Scientific American, ஜனவரி 2006).

தாய்மை என்பது குழந்தையால் உருவாவது. குழந்தை, தாய்மையால் பாதுகாக்கப்பட்டு உருவாக்கப்படுவது மட்டுமல்ல; குழந்தையும் தாய்மையை உருவாக்குகிறது. கருக்கொடி, குழந்தைக்கு உணவை மட்டுமல்ல நோய் எதிர்ப்புத்தன்மையையும் தாயிடமிருந்து கொண்டு செல்கிறது. அதற்கென ஒரு ‘அறிதிறன்’ இருக்கிறது என கருதும் அளவுக்கு அது செயல்படுகிறது. மேலும், கருக்கொடியிலிருந்து ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் மற்றும் கார்ட்டிக்கோட்ராபினை சுரக்கவைக்கும் ஹார்மோன் (CRH) ஆகியவை வெளிவந்து, அன்னையின் ஹார்மோன்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களில், இறுதியில் சொல்லப்பட்ட CRH என்பது ப்ரைமேட்கள் என்கிற குரங்குகளுக்கே (மனிதன் உட்பட) உரியது.

பரிமாண மாற்றங்களில், பாலூட்டிகளின் தாய்மை என்பது உயிரின் ஒரு முக்கியமான தாவல். இந்தத் தாய்மைக்குத் தெளிவான உயிர்-வேதியியல் காரணிகள் இருக்கின்றன. தாய்க்கும் சேய்க்கும் உறவுப்பாலமாக விளங்குவது கருக்கொடி. இதுவே ஒருவித அறிதிறனுடன் இயங்குகிறது. இக்காலகட்டத்தில், தாயின் மூளையின் அடிப்படை நியூரானிய செயல்பாட்டில் சில முக்கிய மாற்றங்களை தாய்மை உருவாக்குகிறது. இதில், கருக்கொடி ஒரு தனித்தன்மை கொண்ட இருப்பாகவே செயல்படுகிறது. உயிர்த் துடிப்புள்ள இரு திசைப் பாலமாக அது இருக்கிறது. இந்தக் கருவறைச் செயல்பாடுகள், நம் இறுதிவரை நம்முடன் வரும் தாக்கங்கள் கொண்டவை. தாய்க்கும் சந்ததிக்குமாகத் தொடரும் ‘தொப்புள் கொடி உறவு’ ஒரு உருவகம் மட்டுமல்ல; அது ஒரு உயிர்-வேதியியல் பரிணாம உண்மையும்கூட.

உயிரின் இந்தத் தொடக்க வேர் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்த க்ரிஸ்டோபர் (Christopher Coe) எழுதுகிறார் – ‘கருக்கொடிக்கு இருக்கும் இந்த உயிர்த்துவமான உயிரளிக்கும் பங்கினை உள்வாங்கிப் பார்க்கும்போது, சில பண்பாடுகளில் இந்த உறுப்பு நம்மை வரையறை செய்வதில் பிரிக்கமுடியாத ஒன்றாகக் கருதப்படுவது ஆச்சரியமானதல்ல. சில பண்பாடுகளில், அது சடங்கு ரீதியாகப் புதைக்கப்படுகிறது, இறந்த பின்னர் அதனுடன் ஒன்றிடும்படியாக. உயிரியல் ரீதியாகக் காணும்போதும், அதுதான் நமக்கு உயிரளிக்கிறது. அதுதான், நாம் எப்போது உலகைக் காண்போம் என்பதை முடிவு செய்கிறது’. (Christopher Coe, The Prescient Placenta, The Scientist, ஆகஸ்ட் 1, 2015).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com