தமிழ்நாடு அர்ச்சகர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், எதிர்பார்த்தது போலவே அதை கடுமையாக விமர்சிக்கும் குரல்கள் எழும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால், தீர்ப்பு கூறியிருக்கும் விஷயமோ தெளிவானது. சமூக நீதி எனச் சொல்லப்படும் விஷயத்துக்கு எதிரானதும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அர்ச்சகராக இருப்பதோ அல்லது பிறரை விலக்குவதென்பதோ சாதி அடிப்படையிலோ, பிறப்பு அடிப்படையிலோ இன்ன பிற சட்டம் அனுமதிக்காத அடிப்படைகளிலோ அமையாதபட்சத்தில், அது அரசியல் நிர்ணய சட்டத்தின் சமத்துவம் என்பதன் க்ஷரத்துக்கு புறம்பானதல்ல என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
பிறகு என்னதான் பிரச்னை?
கோவில் அர்ச்சகர்களின் நியமனங்கள் ஆகம விதிகளின் அடிப்படையிலாக இருக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு.
அடிப்படையில், இந்து மதம் பிற மதங்களைப்போல உறைந்துவிட்ட ஒரு மதமல்ல.
அரவிந்தர் கூறுகிறார் - இந்து மதத்தின் இறுதி ஞானியும், இறுதி ஞானச் சொல்லும் இன்னும் கூறப்படவில்லை. அது தொடர்ந்து பரிணமித்துவரும் ஒரு உயிரியக்கமாகவே உள்ளது. ஏனென்றால், அது வெளிப்பாடுகளின் அடிப்படையில் அல்லாது, அனுபவ அடிப்படையில் சத்தியத்தை அணுகுகிறது. தனி மனித சுதந்தரத்தையும் சமுதாய கட்டமைப்பையும் ஒரு நுண்ணிய புள்ளியில் ஒருங்கிணைக்கும் தொடர் நடன இயக்கமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்து மதம் இருந்து வருகிறது.
ஆகமங்களை இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே காண வேண்டும். வேத சடங்குகளின் அழகியலை சமுதாயம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதற்காக ஏற்பட்டவை ஆகமங்கள் எனக் கருத இடமிருக்கிறது. உயர் தத்துவம், அது சார்ந்த சடங்கு ஆகியவற்றை எல்லாத் தரப்பு மக்களிடமும் குறியீடுகள் மூலமாகவும் விக்கிரக ஆராதனை வழியாகவும் எடுத்துச் செல்ல ஒரு சாத்தியத்தை ஆகமங்கள் ஏற்படுத்தின. இவை தந்திர சாஸ்திரங்களுடன் தொடர்புடையவை.
வேதங்களுக்கு அப்பால் உள்ள அம்சங்களைக் கொண்டவை எனக் கூறும் P.T.ஸ்ரீனிவாச ஐய்யங்கார், அதே சமயம் அவை உபநிடதங்கள் போலவே பிராமணங்களின் நீட்சி எனக் கூறுகிறார். பூஜை முறைகளின் தாந்திரீக அடிப்படை குறித்து சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளார். 'ஹிமாலயம் முதல் கன்யாகுமரி வரை சைவ, வைணவ, சாக்த வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் சடங்கு முறைகளிலும் பூசனை முறைகளிலும் ஸரௌத்த, ஸ்மார்த்த சடங்குகள் தவிர்த்த அனைத்து சடங்கு முறைகளும் தாந்திரீக அடிப்படை கொண்டவையே’.
கேரளாவை எடுத்துக்கொள்வோம். அது ஒரு மனநோய் பீடித்த மாகாணமாக இருக்கிறது என்றார் விவேகானந்தர். அந்த அளவுக்கு அங்கே சாதியக் கொடுமைகள் தாண்டவமாடின. தீண்டாமையைத் தாண்டிப் பார்த்தாலே தீட்டு என்பது போன்ற அவைதீக அனாச்சாரங்கள், வைதீகத்தின் பெயரில் அரங்கேற்றப்பட்டு வந்தன. ஆனால் இன்று, அதே கேரளத்தில் நிலை முற்றிலுமாக மாறியுள்ளது.
1983-ல், விஸ்வ ஹிந்து சம்மேளனம் கேரளாவின் எர்ணாகுளத்தில் நடந்தது. உலகமெங்கும் உள்ள இந்துக்களின் அந்த மாநாட்டில், அதன் தலைமை தாந்திரீகராக இருந்த அந்தணர், ஈழவ குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது உதவியாளராக இருந்தவர் நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த ஒருவர். இன்று, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 2000 கோவில்களில் பணிபுரியும் பூசகர்கள், 50 சதவிகிதத்துக்கு மேல் பிறப்பால் பிராமண குடும்பங்களில் பிறக்காதவர்கள். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 12 மார்ச் 2012).
காரணம் என்ன? மார்க்ஸியர்கள்? என்றைக்குமே மார்க்ஸியம் நிகழ்ந்து முடிந்த விஷயங்களுக்குத் தன் கோட்பாட்டின் அடிப்படையில் வியாக்கியானங்களை அளித்து, பின்னர் தன் கோட்பாட்டை நிர்ப்பந்தமாக சட்டங்கள் மூலம் திணிக்கும் ஒரு செயல்பாட்டையே பின்பற்றி வந்திருக்கிறது. அறிவியல் தத்துவவியலாளர் கார்ல் பாப்பர், மார்க்ஸியத்தை போலி அறிவியல் என வகைப்படுத்துகிறார். இப்படி ஒரு அடிப்படை மாற்றத்தை மார்க்ஸியத்தால் நிகழ்த்த முடியாது.
இதற்கான முயற்சிகள், கேரளாவில் அரசாங்கத்தால் 1969-லேயே தொடங்கப்பட்டு தோல்வி அடைந்தன. அபிராமண பூசகர்களால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை வாங்கக்கூட பெரும்பாலான மக்கள் சாதி பேதம் இல்லாமல் மறுத்தனர். ஆனால், அதே கேரளத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தீர்ப்பு 2002-ல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டபோது, பெரும்பாலான மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள். அரசாங்கத்தால் செயல்படுத்த முடியாத விஷயம், கேரளாவில் இன்று எப்படி சாத்தியாமாகி உள்ளது?
இம்மாற்றத்தை நிகழ்த்தியது, கேரளத்தில் வேர் கொண்ட வேதாந்த இயக்கம். இந்த வேதாந்த இயக்கம், கேரளத்துக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்லமுடியாது. சட்டம்பி ஸ்வாமிகள், ஸ்ரீ நாராயண குரு, மகாத்மா ஐயன் காளி என இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆன்மிக - சமூகப் போராளிகள் பலர் இந்த மாற்றத்தை உருவாக்க தங்களையே அர்ப்பணம் செய்துகொண்டார்கள்.
தமிழ்த் திருமறைகளிலும் வடமொழி மூல நூல்களிலும் பயிற்சியும் பாண்டித்தியமும் கொண்ட இவர்கள், களத்தில் இறங்கி வேலை செய்தனர். தலைமுறைகளாக உழைத்தனர். (திருப்பராய்த்துறை மேவிய சுவாமி சித்பவானந்தரிடம், திருவாசகத்துக்கான உரையை எழுதச் சொன்னவர் ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளே ஆவார்).
கேரளத்தில் சிவகிரியில் செயல்படும் பிரம்ம வித்யா குருகுலம், அலுவாவில் செயல்படும் ‘தந்திர வித்யா பீடம்’, பூசகர் கலையில் அடிப்படை தத்துவ செயல்முறை பயிற்சிகளை அளிக்கிறது. இந்த அமைப்பின் சான்றிதழ், தேவசம் நிர்வாகத்தில் இருக்கும் கோவில்களில் அர்ச்சகராகும் தகுதியை அளிக்கிறது. சாதி வேற்றுமை இல்லாமல் அனைவரும் அர்ச்சகராகும் பயிற்சி அளிக்கும் இந்த வித்யா பீடத்தை நிறுவியவர் ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவார். இப்பயிற்சிப் பீடத்தின் முதல் சான்றிதழ்கள், காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியால் வழங்கப்பட்டன.
ஆக, உண்மையான சமுதாய மாற்றத்துக்கு இந்து மதம் எதிர்நிற்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த மாற்றத்துக்கான ஆன்மிக வினைஊக்கியாகவும் அது செயல்படுகிறது. எனில், ஏன் தமிழ்நாட்டில் அது நிகழவில்லை?
தமிழ்நாட்டிலும் கேரளாவைப் போன்றே சமுதாய மாற்றம் கொண்டுவரும் ஆன்மிக அருளாளர்களுக்குக் குறைவில்லை. ஐயா வைகுண்டர், சுவாமி சகஜானந்தர், காவிய கண்ட கணபதி, மதுரை பிள்ளை, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், சுவாமி சித்பவானந்தர் ஆகியோர் ஆன்மிக - சமுதாய மறுமலர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உழைத்த மகான்கள், வள்ளல்கள். துரதிர்ஷ்டவசமாக, நாம் அவர்களை மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக, இனவாதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக மாற்றத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் வெறும் பிராமண எதிர்ப்பாகக் குறுக்கிவிட்டோம். நாசிகளின் யூத வெறுப்பு மனநிலையை ஒத்த ஒரு கோட்பாட்டால், சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியாது.
இங்கு இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்து மதம் என்பதே ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதி வேலை என்றும் ஆபாசக் குவியல் என்றும் கூறுவதை தம் கோட்பாடாக வைத்துள்ள ஒரு அரசியல் இயக்கம், மிக மோசமான முறையில் கோவில் நிர்வாகத்தை நடத்தும் ஒரு அரசு இயந்திரம் – இவற்றை வைத்துக்கொண்டு கோவிலில் அர்ச்சகர்களை அரசாங்கம் நியமிக்கும் – தாங்கள் நடத்தும் பயிற்சிப் பள்ளிகளின் அடிப்படையில் - எனக் கூறுவது, தமிழ்நாட்டின் எந்த ஒரு சாதாரண இந்துவுக்கும் ஐயத்தையே ஏற்படுத்தும்.
அரசியல் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், ஆட்சியில் இருக்கும்போது அனைவருக்கும் பொதுவானவர் என்பதைக்கூட நினைவில் கொள்ளாமல், அடிப்படை நாகரிகமின்றி இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் எவ்வித வாழ்த்தும் சொல்லாத பண்பற்ற அடிப்படைவாதச் செயல்பாடு, இந்து என்றால் திருடன் என்கிற ரீதியில் வெறுப்புப் பிரசாரங்களை செய்வதைப் பகுத்தறிவு என நினைக்கும் போக்கு, திருமுருக கிருபானந்த வாரியார் போன்ற தமிழ் அறிஞரும் ஆன்மிகச் செல்வரையும்கூட வன்முறையாகத் தாக்கி தமிழருக்கு அழியா இழிவைத் தேடித்தந்தமை – இவையெல்லாம் தம் ஆதார அடையாளங்களாகக் கொண்ட ஒரு அமைப்பு, கோவில் கருவறையில் அர்ச்சகர்களை நாங்கள் நியமிப்போம் எனச் சொல்வது – சமூக நீதிக்காகவா அல்லது குறிப்பிட்ட சாதியினர் மீதான காழ்ப்புணர்ச்சியாலா? என்கிற கேள்வி மிகவும் நியாயமானது. தமிழ் அர்ச்சனை என்கிற பெயரில், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின் புகழ் துதிகள் இறை நாமங்கள் எனச் சேர்க்கப்பட்ட கொடுமையும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது.
இவையெல்லாம்தான், இங்கு பெரும் சந்தேகத்தை இந்தச் சமுதாய மாற்றத்தின் மீது எழுப்பியிருக்கின்றன. இனவாத வெறுப்பை மீறி நம்மால் நம் சமுதாய மாற்றத்தை அணுக முடியுமென்றால், ஆன்மிக அடிப்படையில் ஆகம விதிகளின் உயிர்த்துடிப்பையும் சாராம்சத்தையும் அறிந்துகொண்டு நம்மால் அக்கல்வியை ஜனநாயகப்படுத்த முடியுமென்றால், இந்து சமுதாயத்துக்குத் தேவையான இந்த அத்தியாவசியமான மாற்றத்தை நம்மால் கொண்டுவர முடியும்.
ஆனால், அந்த நம்பிக்கையை ஊட்டும்விதமாக, சமூக முன்னேற்றத்தை உண்மையாக விரும்பும் சக்திகள் செயல்பட வேண்டும். இந்து மதத்தின் உள்ளார்ந்த மதிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற இனவாதக் கோட்பாட்டை கைவிட வேண்டும். கோவில் நிர்வாகத்தை திறமையின்மையின் சிகரமாக விளங்கும் அறநிலையத் துறையிடமிருந்து விடுவித்து, அதை இந்துச் சான்றோர்கள் அமைப்பு ஒன்றிடம் கொடுக்க வேண்டும். இந்துக் கோவில்களின் கலைச் சிறப்புகளைப் பாதுகாக்க, அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் தன்னார்வத் தொண்டர்களும் கொண்ட ஒரு குழுவிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களை ஒப்படைக்க வேண்டும். இவற்றுடன் கூடவே, கேரளத்தில் இருப்பதுபோல தமிழ்நாட்டிலும் ஆகமக் குருகுலங்களை இந்து அமைப்புகள் மூலம் நடத்த வேண்டும்.
இவற்றைச் செய்தால், ஆகம வழிபாடு நடத்தும் கோவில்களில் அனைத்து இந்துகளும் அர்ச்சகராவது ஆகம விதிப்படியே நடந்தேறும். ஏனெனில், இந்து வேதாகமங்கள் உண்மை விடுதலை அளிக்கும் அற்புதக் கையேடுகள் – அவற்றின் சாரத்தை உணர்ந்தவர்களுக்கு.
ஆனால், இந்தப் பிரச்னைக்கு இன்னொரு முகமும் உண்டு.
அது அடுத்த வாரம்.
Photo Courtesy – www.vinavu.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.