அண்மையில் தமிழ் நாளேடு ஒன்றில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெற்ற ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ குறித்தது அது. எப்போதெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்துத்துவத்தை உள்ளே இழுப்பது அவசியமற்றது. அதைப் போன்றதுதான் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புடன் இந்துத்துவ மைய அமைப்புகளை ஒப்பிடுவதும். அப்படி ஒப்பிட்டே ஆக வேண்டிய இந்த மனநிலை ஆரோக்கியமானதல்ல. இது இந்துத்துவத்தையும் இந்து மதத்தையும் குறித்த அடிப்படை புரிதல் இல்லாததால் எழுவது.
இந்துத்துவமும் வகாபியிஸமும்
இந்துத்துவம் என்பதற்கான தெளிவான வரையறை இருக்கிறது. அதன் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்துத்துவர்கள், தர்கா வழிபாட்டை எதிர்க்கிறார்களா? கோட்பாட்டளவில் இல்லை. செயல்முறைகளில் மிகச் சில தருணங்களில் அதிலும் மிக விதிவிலக்காக. உதாரணமாக, சில பத்தாண்டுகளுக்கு முன்னர் ‘விஜயபாரதம்’ பத்திரிகையில் வாவர் தர்காவுக்கு செல்ல வேண்டாம் என ஐய்யப்ப பக்தர்களைக் கேட்டுக்கொண்ட ஒரு குருசாமியின் பேட்டி நினைவுக்கு வந்தது. ஆனால், அதுகூட விதிவிலக்கே. இயக்க இந்துத்துவர்கள், இன்றைக்கும் மாலை போட்டு ஐய்யப்பனை காணச் செல்பவர்கள், வாவர் சாமியை வழிபடவே செய்கிறார்கள்.
அதேசமயம், இந்துத்துவர்கள் இயக்க அளவிலும் சரி, கோட்பாட்டளவிலும் சரி, தொடர்ந்து இந்திய மரபு சார்ந்த இஸ்லாமியரைக் கொண்டாடி வருவதைக் காணமுடியும். சில எடுத்துக்காட்டுகள் -
இதோ, இக்கட்டுரையாளனின் கண் முன்னால் ஒரு புத்தகம் உள்ளது. சிறுவர்களுக்கான புத்தகம். ஒரு வாழ்க்கை வரலாறு. இந்தப் புத்தகம் ஒரு விடுதலைப் போராட்ட தியாகியின் வாழ்க்கை. அவரை குழந்தைகளுக்கு இந்த நூல் இப்படி அறிமுகப்படுத்துகிறது - ‘தூக்குக் கயிற்றை அல்லாவின் பெயரை கூறியபடியே முத்தமிட்ட பட்டாணிய தேசபக்தன்’. நூல் மேலும் கூறுகிறது -
அவன் ஆறடி உயரம். அகன்ற மார்பு. எஃகேறிய உடல். சிங்கத்தின் இதயம். முகத்துக்கு அழகு சேர்க்கும் தாடி. அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை இப்போதும் பிரகாசித்தது. என் கரங்கள் சக மானுடர் எவரையும் கொன்ற ரத்த பாவத்தால் கறைபடவில்லை. அக்குற்றச்சாட்டு பொய்யானது. இறைவன் எனக்கு நீதி வழங்குவான் என அமைதியுடன் சொன்னான் அவன். பின்னர் அவன் பிரார்த்தித்தான் ‘‘லா இல்லாஹி இல்லல்லா முஹமதுர் ரசூலல்லா…’’ தூக்கிலிடுபவன், அவன் கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினான்.
இதை வெளியிட்டது ஒரு இஸ்லாமிய அமைப்பு அல்ல. ராஷ்ட்ரோத்தன் பரிஷத் என்கிற சங்க பரிவார் அமைப்பு. அதாவது, இந்துத்துவ அமைப்பு. ஆங்கில நூல். இந்த நூல் முதலில் வெளியிடப்பட்டது 1976-ல். மறுபிரசுரம் 1996-ல். நூல் ஆசிரியரின் பெயர். என்.பி.சங்கரநாராயண ராவ். பகத் சிங்கின் குருக்களில் ஒருவரான அஷ்ஃபகுல்லாகான் என்கிற தேசபக்த பலிதானி குறித்த நூல். இன்றைக்கும் சங்க அமைப்புகளின் பள்ளிக்கூடங்கள் பலவற்றில் இந்த ராஷ்ட்ரோத்தன் பரிஷத் அமைப்பு வெளியிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள் (தேசபக்தர்கள், தேச சிற்பிகள் இத்யாதி) குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன.
காஜி குலாம் முகமது அஸம் கல்வி டிரஸ்ட், பூனேயில் செயல்படுகிறது. அதன் சேர்மனாக இருப்பவர் பி.ஏ. இனாம்தார். இவரது கல்வி அமைப்பு, முதன்முதலாக பூனே கல்வி மாவட்டத்தில் உயர்நிலைக் கல்வித் தேர்வில் மாவட்ட முதன்மைத் தகுதியில் இஸ்லாமிய மாணவர்களை உருவாக்கியுள்ளது. அதற்கு உதவியவர்கள் யார்? ‘தி இண்டு’ நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை சொல்கிறது -
இந்துக்களின் உதவியில்லாமல், இந்த இஸ்லாமிய மாணவர்கள் மாவட்டத்தில் முதல் ரேங்க் அடைந்திருக்க முடியாது என கூறுகிறார் இனாம்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நடத்தப்படும் பள்ளி ஆசிரியர்கள், இனாம்தார் அழைத்தபோதெல்லாம் வந்தார்கள். தாம் தேர்ந்தெடுத்திருந்த மாணவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி வகுப்புகள் எடுத்தார்கள். (‘Changing face of Pune schools’, The Hindu, 22 Aug 2003).
கல்வியாளர் பி.ஏ. இனாம்தார்
பாரதமெங்கும், அதிகாலையில் ஒரே நேரத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரு பிரார்த்தனை அனைத்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களிலும் பாடப்படும். அதன் பெயர், ஏகாத்மதா ஸ்தோத்திரம். காலை வணக்கப் பாடல். அதில் கபீரையும், இப்ராகீம் ரஸ்கானையும் மரியாதை செய்வார்கள் இந்துத்துவர்கள். 1980-களில், இந்துத்துவ ஆராய்ச்சி மையமான தீன்தயாள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரபூர்வ இதழான ‘மந்தன்’, சூஃபி பக்தி இயக்க ஞானிகள் குறித்த சிறப்பு வெளியீட்டைக் கொணர்ந்தது.
இந்துத்துவம் பண்பாட்டு தேசியத்தை வலியுறுத்தும் கோட்பாடு. பன்மையை மதிக்கும் பண்பாட்டு தேசியம் இந்துத்துவம். அது மத அடிப்படைவாதம் அல்ல. இந்துத்துவர்கள் மீது குற்றங்கள் சொல்லலாம். குறைகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அடிப்படைகளைத் திரிப்பது தேவையற்றது.
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் அபாயம்
திருச்சியில் ஜனவரி 31-ம் தேதி நடந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு, தொடர்ந்து ஆறு மாதங்களாக தமிழ்நாடெங்கும் நடைபெற்ற பிரசாரத்தின் முடிவு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு, முன்னர் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பர்தா குறித்த நிகழ்ச்சியைத் தடைசெய்தது. அப்போது தவ்ஹீத் ஜமாத்துக்குத் தகவலளித்து உதவியவர், திரைப்பட இயக்குநர் அமீர். பின்னர், இந்த அமைப்புடனான கூட்டணி ஒன்றுக்குத் தனது திரைப்படத்தை தானே முன்வந்து போட்டுக்காட்டி, இந்த அமைப்புக்கு ஊடக வெளிச்சம் அளித்தவர் கமல்ஹாசன் என்கிற நடிகர். அது, அந்த நடிகருக்கே வினையாக முடிந்தது என்பது வேறு விஷயம்.
இன்று பெரும் பலத்துடன், இந்த அமைப்பு தர்கா வழிபாட்டையும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகளையும் எதிர்த்து, ஒரு தூயவாத இஸ்லாமை – சவூதி இஸ்லாமை முன்வைக்கிறது. ‘ஷிர்க்’ என்றால் இணை வைப்பது. இறைவனாகிய அல்லாவுக்கு இணையாக எதையும் கற்பிப்பதை இஸ்லாம் பெரும்பாவம் எனக் கூறுகிறது. தர்கா மரபினை ஷிர்க் என்பதாக தவ்ஹீத் ஜமாத்தினர் பிரசாரம் செய்கின்றனர். பாரதத்துடன் தொடர்புடைய எல்லாவித பண்பாட்டு அடையாளங்களையும் ஒழிக்கும் பெருமுயற்சி இது.
கோம்பை அன்வர், பண்பாட்டு வெளிப்பாடுகளில் இஸ்லாம் எப்படி தமிழகப் பண்பாட்டு அடையாளங்களுடன் தன்னை இசைவுப்படுத்திக்கொண்டது என்பதை, தம் புகழ்பெற்ற ‘யாதும்’ ஆவணப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். அவர் பண்பாட்டின் புற அம்சங்களையே அதில் முக்கியத்துவப்படுத்துகிறார் எனினும், அல்லாவை பரம்பொருள் என பாரத மரபு சார்ந்த தத்துவப் பெயரால் இஸ்லாமிய பக்திப் பாடல்களில் அழைப்பதை ஆவணப்படுத்தியுள்ளார். இஸ்லாமும் பாரத மெய்ஞான மரபும் கொண்ட அக-உறவுகள் இன்னும் முக்கியமானவை. இன்று உண்மையில் தாக்கப்படுபவை அவைதாம்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய மறைஞான மரபு ஆழமாக வேரூன்றி உள்ளது. பாரத யோக – சித்தாந்த – வேதாந்த மரபுகளை உள்வாங்கியும் உறவாடியும் உரையாடியும் அது நம் பண்பாட்டில் இன்றியமையாத ஒரு அங்கமாகியுள்ளது. குணங்குடி மஸ்தான், தக்கலை பீரப்பா என்கிற ஞானி என இம்மரபுக்கு நீண்ட பரந்த வரலாறு உண்டு. இடதுசாரிகளில், கவிஞர் ரசூல் போன்ற சிலர் இம்மரபுகளை கவனப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இடதுசாரி வரலாற்றுப் பார்வையால் இம்மரபுகளின் உள்கிடப்பை, ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இயலாது. எனவே, இயக்க ரீதியாக செயல்படும்போது, இடதுசாரி அமைப்புகள் இயல்பாக வகாபிய சக்திகளுடனோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளையோ தம் தோழமைகளாகக் கண்டடைகின்றன. உதாரணமாக, மேலப்பாளையத்தில் பர்தாவுக்குக் கட்டுப்படாத இஸ்லாமியப் பெண்கள், அடிப்படைவாத அமைப்புகளால் கொல்லப்பட்டனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உள்ளூர் பிரமுகர், இதற்குக் காரணம் இந்திய அரசியலமைப்பில் ‘ஒழுக்கமில்லாத பெண்களை’ தண்டிக்க இடமில்லாததே எனக் கூறினார். ஆனால், தமுமுக நடத்திய டெல்லிப் பேரணியில் இடதுசாரிகள் கலந்துகொண்டார்கள்.
தொடரும் மெய்ஞான பாரம்பரியம்
ஆனால், பாரதிய இஸ்லாம் உருவாக்கிய மெய்ஞான மரபு இன்றளவும் தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டுதான் உள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டிலும் அப்பாலும் பெரிய அளவில் தியானத்தையும் யோகத்தையும் முன்னெடுத்த பெரியோர், இஸ்லாமியரான பரஞ்சோதி மகான் என்பவரின் தாக்கம் உடையவர்கள். அல்லது சீடர்கள். வேதாத்ரி மகரிஷிக்கு பரஞ்சோதி மகானே குண்டலினி யோகத்தைக் கற்பித்தார் என்பார்கள்.
அமெரிக்காவில் சூஃபி மெய்ஞானத்தை பரப்பியவர்களில் முக்கியமானவர், இலங்கைத் தமிழரான ஷேக் பாவா மொகய்தீன். இவரது போதனைகளில் கந்த புராணம் உட்பட பாரதிய மரபு சார்ந்த ஞானநூல்களைப் பயன்படுத்தியுள்ளார். இஸ்லாமிய பதங்களுக்கு முழுக்க முழுக்க அகப்பொருட்களை இவர் அளிக்கிறார். உதாரணமாக, காபா என்பது இவரது பார்வையில் தூய ஆதி இறை இல்லம். அதாவது, மனிதன் தன் தூயநிலையில் இறைவனை முகத்துக்கு முகம் உணர்வது.
இவர்களைப் போலவே, மற்றொரு முக்கிய மெய்ஞானி முகமது அப்துல் காதிர் (1891 - 1959). மகானந்த பாபா ஒலியுல்லா என அழைக்கப்படுகிறவர். அத்வைத அனுபூதியை மிக அழகான சந்தங்களும், எளிமையான சொல்லாட்சியும் கொண்ட பாடல்களாக இவர் தந்திருக்கிறார். பெயர் சொல்லாமல் முன்வைத்தால், ரமண பக்தர்கள் இவை ரமண மகரிஷி எழுதியதாக இருக்குமோ எனக் கருதும் அளவுக்கு மெய்ஞான செறிவு கொண்டவை இப்பாடல்கள். சிலவற்றைப் பார்க்கலாம்.
ஜகத்து-மகத்து வினா விடையென அவர் எழுதியுள்ள பாடலிலிருந்து சில வரிகள் -
ஆன உடலுயிர் ஆங்கொன்றி நிற்பது
ஏனிது விந்தையன்றோ – மகத்தாய்
ஏனிது விந்தையன்றோ?
விந்தை யோர் முட்டைக்குள் மேவும் சிறுபட்சி
வந்ததைப் போன்றிடுமே – ஜகத்தாய்
வந்ததைப் போன்றிடுமே.
ஜகத்து என்பது நாம் பார்க்கும் மாற்றமுடைய இந்த இருப்பு. மகத் என்பது ஆதி அறிவு. இவை இரண்டுக்குமான தத்துவ உரையாடலாகச் செல்லும் இப்பாடல், எந்த அளவு நம் மண் மரபுகளில் வேரூன்றி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்கது. திருவள்ளுவர் சொல்கிறார் -
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
(குறள் – 338; அதிகாரம் - நிலையாமை)
மஹானந்தபாபா
முட்டை தனித்துக் கிடப்ப, அதனுள் இருந்த பறவை, பருவம் வந்ததும் பறந்துபோனது போன்றதே, உடலுக்கும் உயிருக்குமான நட்பு என்கிறார் வள்ளுவர். வள்ளுவரையும் மகானந்த பாபா ஒலியுல்லாவையும் இணைக்கும் இழைகள், இம்மண்ணின் மெய்ஞான இழைகள். தூய அறிதல் நிலையின் ஆனந்தமயத்தைச் சொல்லும்போது, கற்கண்டு பொம்மையை உவமிப்பது வேதாந்த மரபு. கற்கண்டு பொம்மையின் காலை உடைத்து உண்டாலும், தலையை உடைத்து உண்டாலும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒரே சுவையாகவே இருக்கும். மரபார்ந்த இந்தச் சித்திரத்தை மஹானந்த பாபா பயன்படுத்துகிறார் -
ஓதமுடியாது கற்கண்டி லோரின்பம்
பேதமு மேதுமில்லை – ஜகத்தாய்
பேதமு மேதுமில்லை!
முல்லா நசுருதீனின் கதை ஒன்றுண்டு. வீட்டுக்குள் தொலைத்த பொருளை அவர் வீதியில் தேடிக்கொண்டிருப்பார். ஆழ்ந்த உட்பொருள் கொண்ட நகைச்சுவை கதை அது. மஹானந்த பாபா கூறுகிறார் -
வீட்டினிலே வைத்தபொருள்
வீதியெங்கும் தேடுதல்போல்
ஏட்டினிலே காண்பதற் கங்(கு)
இல்லையென்று சொன்னேனே
நான் யார் என்பதற்கு அவர் விடை கூறுகிறார் -
நானே யாரென் றே நவின்றே
நாம ரூப மாகினேன்
நானே இந்த நானா விந்த
நாத விந்து மாகினேன்
தானே யாரென் றே யுணர்ந்தே
தற் சொரூப மாகினேன்
தத்வ மசியாய் எங்கு மொன்றாய்ச்
சாரனந்த மாகினேன்
முக் குணாதி மூவிட மாய்
முன்னி நிற்ப தாகினேன்
முச்சுடராய் முப்பொருள் சேர்
மூதறிவா யாகினேன்
ஹஸ்ரத் மஹானந்த பாபா ஒலியுல்லா தர்கா - கீழக்கரை
மானுடர் உருவாக்கிய செயற்கை எல்லைகளைக் கடந்து, இந்திய மெய்ஞானத்துக்குக் கட்டியம் கூறும் பாடல்கள் ‘மஹானந்த கீதம்’. இவையெல்லாம் இன்று சிறு குழுக்களால் ஆங்காங்கே வெளியிடப்படுகின்றன. ‘மஹானந்த கீதம்’ எனும் இந்தத் தொகுப்பு, ஜமால் முகமது என்பவரால் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் 2007-ல் வெளியிடப்பட்டது. அதற்கு முன், இது 1957-ல் வெளிவந்தபோது, அதற்கான முகவுரையை எழுதியவர் சுத்தானந்த பாரதி. இன்றும் இம்மகானின் அடக்கத்தலம் கீழக்கரையில் ஒரு முக்கிய ஆன்மிகக் கேந்திரமாக உள்ளது.
இன்று இந்த மரபு பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாரதத்தில் பேணப்பட்ட மரபு இது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாரதம் முழுவதும் உள்ள மரபு. இதை இன்று பாதுகாக்க, இந்துத்துவர்களை விட்டால் எவரும் இல்லை என்பதுதான் உண்மை.
வைக்கம் முகமது பஷீர் (1908 - 1994)
ஒரு அண்மை வரலாற்று நிகழ்வு இதைக் காட்டும். மலையாள எழுத்தாளர் முகமது பஷீர், அனல்-கக் என்கிற சிறுகதையை எழுதினார். பாரசீக மறைஞானி மன்சூர் அல் ஹலாஜின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது அது. அல் ஹலாஜ், தம் ஞானத்தேடலின் வழியாக ‘அனல் ஹக்’ - நானே சத்தியம் என்கிற அறிதலை வந்தடைந்தார். அதைப் பிரகடனப்படுத்தினார். இது இறை மறுப்பாகக் கருதி, அவர் இஸ்லாமிய ஆச்சாரவாதிகளால் கொல்லப்பட்டார். பஷீர் அனல் ஹக் என்பதை, உபநிடத மகாவாக்கியமான அகம் பிரம்மாஸ்மி என்பதுடன் தொடர்புபடுத்தியிருந்தார். 1982-ல், இக்கதை மீண்டும் அவரது படைப்புகள் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டபோது பஷீர் எழுதினார் -
இக்கதை நாற்பதாண்டுகளுக்கு முன்னர் எழுதியது. இப்போது மானுடர்கள், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றும், தன்னை இறைவனாக உணர்வது பாவம் என்றும் கருதுகிறேன். முதலில் இக்கதையை எழுதியபோது, இது வரலாற்று அடிப்படை கொண்டது எனக் கூறினேன். ஆனால், இப்போது இது வெறும் அதி-கற்பனைக் கதை என்றே கருதுகிறேன்.
இன்றைக்கு நாம் திருச்சியில் காணும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பின்னால் உள்ள சக்திகளுக்கு முப்பதாண்டுகளுக்கு முன்னரே, கேரளத்தின் படைப்பாளி மண்டியிட்ட நிகழ்வு இது. இந்நிலையில், பெட்ரோ டாலர் உதவியுடன் பாரதிய இறைப்பன்மையை அழிக்க முனையும் இச்சக்திகளை எதிர்கொண்டு நம் பாரத இஸ்லாமியரின் மெய்ஞான மரபைக் காக்க எவரால் இயலும்?
இன்றைய உலகில் இஸ்லாமிய மெய்ஞான மரபு
நவீனத்துவத்துடனும் அறிவியலுடனும் இஸ்லாம் உரையாடும்போதெல்லாம், அதன் மெய்ஞான மரபுக்கான வேர்களை இந்தியத் தத்துவத்தில் அறிஞர்கள் அடைந்திருக்கிறார்கள். அப்படி இஸ்லாமிய மெய்ஞானத்தை முன்வைத்தவர்களில் ஒருவர், ப்ரிட்ஜாப் ஸ்சுவான் (Fritjof Schuon, 1907 - 1998) என்கிற ஈஸா நுர் அல்-தின் அகமது. ‘இஸ்லாமைப் புரிந்துகொள்ளுதல்’ (Understanding Islam, 1963) என்கிற இவரது நூல் முக்கியமானது. இஸ்லாத்தை வேதாந்த அறிதல் சட்டகத்தில், இஸ்லாமிய இறையியலுக்கு எவ்விதத்திலும் ஊறுவராத விதத்தில் அவர் முன்வைக்கிறார்.
ப்ரிட்ஜாப் ஸ்சுவான் (1907 - 1998)
குரான், மீண்டும் மீண்டும் இயற்கையிலிருந்து கிடைக்கும் அறிதல்கள் குறித்துப்பேசுகிறது. ஸாகீர் நாயக் போன்றவர்கள், நேரடி பொருட்களுடன் இதை அறிவியலுடன் இணைக்கிறார்கள். இது ஒருபக்கம் நகைப்புக்குரியதாகவும், மறுபக்கம் அடிப்படைவாதத்துக்குத் துணையாகவும் போகிறது. ஸ்சுவான், குரானின் இயற்கை குறித்த பார்வை ஆழமுடையது எனக் காட்டுகிறார் -
குரான், மீண்டும் மீண்டும் இயற்கையில் இருக்கும் ஞானத்தைக் குறித்துப் பேசுகிறது. இயற்கையில் காணக்கிடைக்கும் இந்த ஞான அடையாளங்களை அறிதலுடையவர் புரிந்துகொள்வர் எனக் கூறுகிறது. குரானில் வசனங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஆயத்து என்பதன் பொருளும் அதுவே. இயற்கை காட்டும் அடையாளங்கள் போலவே, அவை ஒரு சேர தாய்த்தன்மையும் கன்னித்தன்மையும் கொண்டவை. அவை, ‘புத்தகங்களின் அன்னை’யாகக் கருதப்படும் குரானிலிருந்து வந்து இறைவனை அடையாளம் காட்டுகின்றன.
அடையாளம் காட்டும் மறைநூலுக்கு அன்னைத்தன்மை இருப்பதை இஸ்லாமிய இறையியல் காட்டுவதையும், அதேபோல இயற்கை இறை இருப்புக்கு அடையாளம் பகர்வதையும் இணைப்பதன் மூலம் இயற்கையின் பெண்மைத்தன்மையை இஸ்லாமிய இறையியல் ஏற்பதைக் காட்டுகிறார். இயற்கையே பெரும் இறைநூலாக மாறிவிடுகிறது. இப்போது அறிவியல், இறைவனை அறிதலாகிறது. இவ்வாறே அடிப்படை மறைவாசகங்களையும் அவர் காண்கிறார். ஆத்மா என்பது தூய தன்னறிவு. இப்போது, தூய கலிமா (மறை வாசகம்) என்பது ஒரு பெரும் ஆத்மாவின்றி வேறு ஆத்மா இல்லை என்பதாகவும், மாயை ஆத்மாவின் வெளிப்பாடே என்றும் அவர் கூறுகிறார்.
தாரா ஷுகோ, இதேபோன்ற ஒரு கருத்தையே முன்வைக்கிறார். உபநிடத வேதாந்தம் மூலமே குரானை சரியாக அறிந்திட முடியும் என்கிறார் அவர். இது உண்மை என்றே தோன்றுகிறது.
அல்லாவின் முகம்
பொதுவாக, இஸ்லாமிய பிரசாரங்களில், சுவனத்தின் சுகங்கள் உலகியல் பார்வையில் பெரிதாகப் பேசப்படுகின்றன. இது கேலிக்குரியதாக பிற மதத்தினருக்கு உள்ளது. அடிப்படைவாதிகளால் மத வெறியர்களை உருவாக்கவும் பயன்படுகிறது. ஆனால், நபி மொழிகளிலும் சரி, மறை மொழியிலும் சரி அல்லாவின் முகம் குறித்து கூறப்படுகிறது. நீங்கள் எந்தத் திசையில் நோக்கினாலும் அங்கே அல்லாவின் முகமே இருக்கிறது (2:115). இபின் அராபி என்கிற சூஃபி ஞானி, இதன் அடிப்படையில் அத்வைத தன்மை கொண்ட இஸ்லாமிய மரபை உருவாக்கினார். அவர் இந்தியரல்ல. அத்வைதம் குறித்து அவர் அறிந்திருக்கவும் இல்லை.
இபின் அராபி
ஆனால், இந்த மரபு விரைவில் இந்தியாவை வந்தடைந்து, இம்மண்ணில் வெகு இயல்பாகவும் அழகாகவும் வேரூன்றி வளர்ந்தது. இந்த மரபினை இஸ்லாமிய ஆச்சாரவாதிகள் பெரும் ஆபத்தாக உணர்ந்தனர். இபின் அராபியை பொறுத்தவரை, எங்கெல்லாம் இறை அன்பு வெளிப்படுகிறதோ அவை எல்லாவற்றையும் அவர் இறை இல்லமாகவே உணர்ந்தார் – அது, யூதர் வணங்குமிடமோ, சிலை வழிபாடு நடக்கும் இடமோ, கிறிஸ்தவ மடாலயமோ அல்லது காபாவோ – அவருக்கு அதில் பிரச்னை இல்லை. வஹத்-அல்-வஜூத் என்கிற அவரது கோட்பாடு, இஸ்லாமிய சூழலியலுக்கும் அடிப்படையாக விளங்கமுடியும். தாரா ஷுகோ, இபின் அராபி மரபில் வந்தவர் ஆவார். சுவன சுகங்களுக்கு அப்பால், இன்னும் சிறப்பானதாக அல்லாவின் முகத்தைக் காண்பது கூறப்படுகிறது. திரையால் மூடப்பட்டதாக இருக்கும் இம்முகம், தீயோரால் காண இயலாதது என நபி மொழிகளில் கூறப்படுகிறது.
இஸ்லாமிய இறையியலில் இன்றும் விவாதங்களை எழுப்பும் அல்லாவின் முகம் குறித்து, உபநிடத பார்வையில் சிறிது காணலாம். மாறும் இவ்வுலகின் அனைத்துமே இறைவனால் நிரப்பப்பட்டுள்ளதாக ஆரம்பிக்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம். பொன்மயமான திரையினால் உண்மையின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. சத்திய நிஷ்டை உடையவனான எனக்கு அதைக் காண்பதற்காக மறைப்பை நீக்குவாயாக என அதே உபநிடத மந்திரம் கூறுகிறது. எப்படி வஹத் அல் வஹூத், இஸ்லாமிய சூழலியல் கோட்பாடுகளுக்கு ஆன்மிகச் சட்டகமாக விளங்க முடியுமோ, அப்படியே ஈசாவாஸ்யம் இதம் சர்வம் என்பது இந்து மரபார்ந்த சூழலியலுக்கான உத்வேகத்தை அளித்து வந்துள்ளது.
தாராஷுகோ
ஏகத்துவம் - கலாமின் பார்வை
இபின் அராபி, தாரா ஷுகோ, ப்ரிட்ஜாப் ஸ்சுவான் எனத் தொடரும் இத்தகைய அறிதலுக்கு, இஸ்லாமிய மரபில் இன்று என்ன இடமிருக்கிறது எனும் கேள்வி எழலாம். நம் காலகட்டங்களில், டாக்டர் அப்துல் கலாம் இதே போன்றதொரு பார்வையை முன்வைத்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள பிரம்மாண்டமான கோவில் அக்க்ஷர்தாம். சுவாமி நாராயண் அமைப்பினரின் கோவில். ஷிர்க் மாநாடு நடத்துவோர் பார்வையில், அது உருவ வழிபாடு செய்யப்படும் இடம். அல்லாவுக்கு இணைவைக்கும் இடம். ஆனால், கலாம் இஸ்லாமிய இறையியல் அடிப்படையிலேயே இக்கோவிலை புனிதமான இடம் எனக் கூறுகிறார் -
இறைப் படைப்புகள் அனைத்திலும் இறைப் பண்புகளை அறிந்திட இயலும். அவற்றில் அறிவினை அடைந்து உண்மையை நோக்கி நகர்வதே மாபெரும் இறை அருட்கொடை. இதை, புனித குரான் அருமையாகக் கூறுகிறது. (சூரா அல் பகரா: ஆயத்து 163 - 64)… வழிபாட்டுத் தலங்கள், இறையையும் இறைப் படைப்பையும் மானுடம் அறிந்துணர்வதைக் காட்டும் இடங்கள். …அக்ஷர்தாம் கோவில், நம் பூமி சார்ந்த பழம் பெருமரபு பிரபஞ்சமெங்கும் இருக்கும் இறைவனுக்காக உருவாக்கிய ஆகச்சிறந்த திறப்பு.
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினர், எந்தக் குரானின் வசனங்களைப் பயன்படுத்தி தர்கா எதிர்ப்பு செய்கிறார்களோ, அதே புனிதக் குரானின் வசனங்களைக் கலாம் பயன்படுத்தி, இந்துக் கோவில் ஒன்றின் இறை மாட்சியைக் கூறுகிறார். இன்றைக்கு, பல இந்துக்களின் வீடுகளையும் அவர்களின் பூஜை அறைகளையும், சாதி மொழி வேறுபாடின்றி இந்து தெய்வ வடிவங்களுக்கு அலங்கரிக்கும் ஒரு ஞானியின் படம், ஷீர்டி சாயிபாபா என்கிற முஸ்லிம் பக்கீர். உலகில் வேறெங்கும் இந்த அளவுக்கு மற்றொரு மத அடையாளம் கொண்ட ஞானியை அந்த அடையாளங்களுடனேயே தனதாக்கிக் கொண்டாடும் பண்பாடு பிறிதொன்றிருக்கிறதா என்பது ஐயமே.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கையில், ஒரு முடிவுக்கு மட்டுமே வர முடியும். பயங்கரவாத தீவிரவாத அடிப்படைவாத இஸ்லாமுக்கு வெளியில், ஒரு பெரும் இஸ்லாமிய மரபு உள்ளது. பன்மைத்துவமும் உயிர்த்துடிப்பும் கொண்ட இஸ்லாமிய மரபு. பாரதிய இஸ்லாமியரின் பெரும்பான்மையினரின் வேர்கள், இந்த இஸ்லாமிய மரபில்தான் உள்ளன.
ஆனால்…
முகமதலி கரீம் சாக்ளா, ஒரு இஸ்லாமிய தேசபக்தர். பண்பாட்டால் மூதாதையரால் தேசத்தால், தான் இந்து என உரக்கச் சொன்னவர் அவர். வகாபியிசத்தில் சக இஸ்லாமிய மதக்குழுவினரான அஹ்மத்தியாக்கள்கூட இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள். ஆனால், இந்துத்துவத்தில் இறை நம்பிக்கையில் எவ்வித சமரசமும் செய்ய அவசியமில்லாமலே, இந்தத் தேசத்தையும் அதன் பண்பாட்டையும் நேசிக்கும் இஸ்லாமியர் கொண்டாடப்படுவார். அஷ்பக்குல்லாகான், முகமதலி கரீம் சாக்ளா, ஹமீது தல்வாய், அப்துல் கலாம் என அனைவருமே இந்துத்துவர்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றனர். அவர்களை இஸ்லாமியருக்கு மட்டுமல்லாமல், அனைத்து இந்தியருக்கும் முன்னுதாரணமாக இந்துத்துவர்கள் வைக்கின்றார்கள்.
கரீம் சாக்ளா, ஒருமுறை வேதனையுடன் கூறினார் - தேசியவாத முஸ்லிம்களைக் கைவிட்டு, ஜின்னா போன்ற பிரிவினைவாத இஸ்லாமியரை தாஜா செய்யும் காந்தியின் போக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று. காந்தியின் அந்தத் தவறுக்கு இந்தியா இன்றும் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நாம் மீண்டும் செய்ய வேண்டாம். பாரதிய இஸ்லாம் உலகுக்கு பாரதமும் இஸ்லாமும் வழங்கும் ஒரு நன்கொடை. அதனை அதன் தாயகத்தில் பாதுகாப்பது நம் பண்பாட்டு தேசியக் கடமை.
மேலதிக விவரங்களுக்கு
மஹானந்த கீதம், [தொகுப்பு கு. ஜமால் முகமது], 2007, 106 சி அதியமான் நகர், ஈரோடு-638004 தொடர்பு எண்: 0424-2294739
Mailk Mohammad, The Foundations of the Composite Culture in India, Aakar Books, 2007
Frithijof Schuon, Understanding Islam, Mandala Books, 1963:1986
M.R. Bawa Muhaiyaddeen, Sheikh and Disciple, The Fellowship Press, 2005
APJ Abdul Kalam, Transcendence – My spiritual experiences with Pramukh Swamiji, Harper Element, 2015
http://hadithaday.org/hadith-qudsi/seeing-allah-in-paradise/
Mahomedali Currim Chagla, Roses in December, Bharatiya Vidya Bhavan, 1974
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.