1859-ல் டார்வினின் புகழ்பெற்ற ‘உயிரினங்களின் தோற்றம்’ வெளியானது. அதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு தொன்மையான எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. ஆனால், 1856-ல் ஜெர்மனியில் அதேபோன்ற எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டபோது, அது சாதாரணமான மானுட எலும்புக் கூடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தார்கள். இவர்கள் நமக்குப் பல பத்தாயிரமாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஒரு கிளை இனம் – நாமாக இருக்கும் இன்றைய மானுட இனம் அல்ல.
நிலவியலாளர் வில்லியம் கிங், இவர்களை மானுடத்திலிருந்து வேறுபடுத்தினார். மானுடர்கள் ஹோமோ சாப்பியன்ஸ் என்றால், இவர்கள் ஹோமோ நியாண்டர்தலின்ஸிஸ். பொதுவாக, இவர்கள் நியாண்டர்தல்கள் என அறியப்படுகிறார்கள். நவீன மானுட இனத்துக்கு மிகவும் நெருக்கமான, ஆனால் மாறுபட்ட மற்றொரு சிறு கிளை இனம். மானுட பொதுபுத்தியில், இவர்கள் வளர்ச்சி அடையாத பண்பாடற்றவர்கள். ஏறக்குறைய அஃறிணைகள். பல நகைச்சுவைகளிலும் சரி, பொதுப்பேச்சிலும் சரி, பண்பாடற்ற நடத்தையை ‘நியாண்டர்தல்’ என சொல்வது வாடிக்கையாகும் அளவு, இவர்கள் குறித்த தாழ்வானச் சித்திரம் நம் மனத்தில் பதிந்துவிட்டது. மந்தபுத்தி உடையவர்கள். பேசும்திறன் இல்லாதவர்கள். எனவே, மொழியற்றவர்கள். பரிணாமத் தோல்விகள்.
நியாண்டர்தல் மண்டையோடு
நியாண்டர்தல்கள் குறித்த இந்தப் பார்வையை மாற்றிய முக்கியக் கண்டுபிடிப்பு 1950-களில் நிகழ்ந்தது. வடக்கு இராக்கின் குர்திஷ் பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சி ஒன்றில், ரால்ப் ஸொலெக்கி (Ralph Solecki) எனும் மானுடவியலளார், நியாண்டர்தல் எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்தார். புதைக்கப்பட்டிருந்த அந்த எலும்புக் கூடுகளில் காயங்களின் ஆறிய வடுக்களின் தடங்கள் இருந்தன. காயம்பட்டவர்களுக்குக் கவனம் அளித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்த எலும்புக் கூடுகளுடன் மலர்களும் இருந்தன. ‘‘இறந்தவர்களுக்கு மலர்களை வைப்பது என்பது இன்று மானுடர்களுக்குப் பார்க்க மிகவும் சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்கிறார்கள் என்பது முற்றிலும் வேறுவிதமான சமாச்சாரம்” என எழுதினார் ஸொலெக்கி.
ஷனிதார் குகை (வட இராக்), நியாண்டர்தல் அடக்கம் - அது எப்படி இருந்திருக்க வேண்டுமென்று காட்டும் ஊக ஓவியம்
ஷனிதார் – IV (shanidar-IV) எனும் இக்குகைகளின் கண்டுபிடிப்புகள் விரைவில் மிகவும் பிரசித்தி பெற்றன. ஹிராலால் சக்ரவர்த்தி, இந்தியாவின் புகழ்பெற்ற மரபுசார் தாவரவியலாளர்களில் ஒருவர். அவர் அலி-அல் ரவாய் எனும் இராக்கிய தாவரவியலாளருடன் இணைந்து இராக்கின் மருத்துவப் பயன் கொண்ட தாவரங்களை அட்டவணை இட்டிருக்கிறார். ‘அதிக சுவாரசியமான தற்செயல்’ என ஸொலெக்கி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ஷனிதார் – IV குகையில் கண்டடைந்த மகரந்தத் துகள்கள், 8 வகை தாவரங்களிலிருந்து வந்தவை. அவற்றில் ஏழு தாவரங்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என சக்ரவர்த்தி - ரவாய் நூலில் பட்டியலிடப்பட்டவை! நியாண்டர்தல்களின் மனிதத்தன்மையைக் குறித்த புதிய பரிமாணத்தை இக்கண்டுபிடிப்பு காட்டுவதாகக் கூறுகிறார் ஸொலெக்கி. நியாண்டர்தல்களுக்கு ‘ஆன்மா’ இருந்ததெனக் காட்டும் கண்டுபிடிப்பு என வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நமக்கு நியாண்டர்தல்கள் குறித்த பார்வையை மாற்ற ஆரம்பித்தன. உதாரணமாக, ஹைராய்ட் எலும்பு எனும் ஒரு எலும்பு, மனிதர்களில் மட்டுமே நாக்கின் பல அசைவுகளை தொண்டைக்குழியுடன் இணைவித்து ஒலி எழுப்புதலுக்குக் காரணமாகும்படியாக அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு நம் மானுட இனத்துக்கு மட்டுமே அமைந்துள்ள சிறப்பாகக் கருதப்பட்டது. எனவே, மொழி மானுடத்தின் உயிரியல் சிறப்பாகக் கருதப்பட்டது. 1985-ல் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தல் எலும்புகளில் இதே அமைப்புடனான ஹைராய்ட் எலும்பு கண்டெடுக்கப்பட்டது. அவர்களின் கருவிகளின் பன்மையும் பயன்பாடும் தொல்-மானுட ஆராய்ச்சியாளர்களால் விரிவாக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.
1995-ல் இவான் துர்க் எனும் ஆராய்ச்சியாளர், இந்த ஸ்லோவேனியக் குகையில் 43,100 ஆண்டுகள் பழமையான ஒரு எலும்புத் துண்டைக் கண்டுபிடித்தார். அதில் இரண்டு ஓட்டைகள். ஒருவேளை அந்த எலும்பின் உரிமையாளரைக் கடித்துக் கொன்ற விலங்கின் பல் தடமாக இருக்கும் என்றுதான் அது கருதப்பட்டது. பிறகு, அப்படி இருக்க முடியாது என்பது தெளிவாயிற்று. இன்றைக்கு ஸ்லோவேனிய தேசிய அருங்காட்சியகத்தில் அந்த எலும்புத் துண்டு வைக்கப்பட்டுள்ளது, உலகின் மிகப் பழமையான புல்லாங்குழலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு, காட்சிப்பொருளாக அது வைக்கப்பட்டிருக்கிறது.
நியாண்டர்தல் புல்லாங்குழல்?
வேட்டையாடுவோர் - உணவு சேகரிப்போர் (hunter-gatherer) என்கிற வகைப்பாடு, தொல்-மானுட சமுதாயங்களுக்கே உரியது. அதற்கு முன்னால், குறிப்பாக நியாண்டர்தல்கள் வேட்டையாடினார்கள் என்பதே நம் பொதுவான அறிவு. நியாண்டர்தல்கள் பெண்களும் வேட்டையாடினார்கள். எனவே, அவர்களின் உடல் வலுவானது என்பதெல்லாம் நியாண்டர்தல்கள் குறித்த நம் பொதுவான சித்திரம். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளில் நியாண்டர்தல்கள் தாவர உணவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவற்றை பதப்படுத்தி – சூடாக்கி வேகவைத்து - உண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. நியாண்டர்தல்களின் மண்டையோடுகளில் உள்ள பற்களை ஆராய்ந்து இம்முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இனி ஒரு பிரச்னையான சுவாரசியத்துக்கு வருவோம்.
சுவிட்சர்லாந்தில் டிராகன் குழி (Drachenloch) என்கிற பெயரில் ஒரு குகை. 1920-ல், பயில்முறை அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் அகழ்வாராய்வு மேற்கொண்டார். அவர் பெயர் எமில் பேக்லர். அங்கே அவர் கரடி எலும்புகளைக் கண்டார். சுண்ணக்கல் பெட்டகம் போன்ற ஒரு அமைப்பில், அவை ஒரு ஒழுங்குமுறையுடன் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இது ஒருவித மதச்சடங்கு என அவர் நினைத்தார். கரடிகளை வழிபடும் சடங்கு (bear cult) எனக் கருதினார். இவற்றை செய்தவர்கள் நியாண்டர்தல்கள். நியாண்டர்தல்களின் கரடி வழிபாட்டுச் சடங்கு பிரபலமடைந்தது.
டிராகன் குழி குகை - கரடி எலும்புகள்
எந்த அளவு பிரபலமானதோ அதே வேகத்துடன் இக்கோட்பாடு கேள்விக்குள்ளாக்கவும்பட்டது. பொதுவாகவே, கரடிகள் குகைகளில் வாழ்பவை. எனவே, அவை அங்கே இறப்பது இயற்கையான ஒரு விஷயம்தான். அவ்வாறு இறந்துபோன கரடியின் எஞ்சிய எலும்புகள் அப்படிக் கிடந்திருக்கலாம். மானுடவியலாளர் இயான் டாட்டர்ஸால் (Ian Tattersall), இந்த கரடிச் சடங்குப் பார்வையை முழுமையாக மறுத்தார். நியாண்டர்தல்களுக்கும் நவீன மானுடர்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், நவீன மானுடர்களுக்கு இருக்கும் படைப்பாற்றல் நியாண்டர்தல்களுக்கு இல்லை என அவர் கருதினார். குறியீட்டுத்தன்மை கொண்ட நடத்தை (symbolic behavior) அவர்களிடம் இருந்ததற்கான திட்டவட்டமான ஆதாரம் எதுவும் இல்லை என அவர் கூறுகிறார்.
நரம்பியல் பரிணாம ஆராய்ச்சியாளர் பேட்ரிக் மக்நமாரா, நியாண்டர்தல்களின் குறியீட்டுணர்வையும், சமய உணர்வு சார்ந்த நடத்தையையும் முழுமையாக ஏற்கிறார். அவரைப் பொறுத்தவரை, நவீன மானுடர்கள் (Anatomically Modern Humans - AMH) தங்கள் ஈமச்சடங்குகளைக்கூட நியாண்டர்தல்களிடமிருந்து பெற்றிருக்கலாம். ‘‘சமயம் என்பதை உருவாக்கி நமக்கு அளித்தவர்களே நியாண்டர்தல்களாக இருக்கலாம்” என்கிறார் அவர். நியாண்டர்தல் உடல் அடக்கங்களில் பிறிதொரு அம்சம் – இறந்தவர்கள் நிர்வாணமாக கருப்பைக்குள் கரு இருப்பதுபோல வைக்கப்படுவது. ‘பூமிக்குள் வந்ததுபோல திரும்பச் செல்’ என சொல்லுவதுபோல, அவர்களின் நீத்தார் அடக்கங்கள் இருக்கின்றன என்கிறார் மக்நமாரா.
பிரபல ‘லைஃப்’ பத்திரிகை அட்டை (1955): நியாண்டர்தல் கரடிச் சடங்கு
அப்படியென்றால், கரடிச் சடங்கு ஏன் அத்தனை கடுமையாக மானுடவியலாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டும்? மக்நமாரா கூறுகிறார் -
நவீன உடற்கூறு கொண்ட மானுடர்களுக்கே (Anatomically Modern Humans - AMH) மத உணர்வுகள் இருக்க முடியும் என்கிற மனச்சாய்வு பல அறிவியலாளர்களுக்கு உள்ளது. எனவே, அவர்கள் நியாண்டர்தல்கள் சமயச் சடங்கு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதைக் காட்டும் ஆதாரங்களை எப்படியெல்லாம் இயற்கையான விளக்கங்கள் அளித்து மறுக்க முனைகிறார்கள். டிராகன் குழி குகையில் கிடைத்த கரடிச் சடங்குக்கான ஆதாரங்களை தனியாகப் பார்க்க முடியாது. நமக்கு மேலும் மேலும் கிடைத்துள்ள தரவுகளுடன் ஒட்டுமொத்தமாகப் பொருத்திப் பார்க்கவேண்டி உள்ளது.
முனைவர் ப்ரியான் ஹைடன் ஒரு அகழ்வாராய்ச்சியாளர். நியாண்டர்தல்களால் கரடிச் சடங்குகள் செய்யப்பட்டன என அவர் உறுதியாகக் கருதுகிறார். சமய அனுபவம் என்பது பிரக்ஞையின் மாற்றுத் தளங்களுக்குச் சென்று கிடைக்கும் அனுபவம். அதை சடங்குகள் மூலம் உருவாக்கிக்கொள்ள முடியும். தனிப்பட்ட சமய அனுபவங்கள் என்பதைத் தாண்டி, அவை குழும ஒற்றுமையையும் ஏற்படுத்தும். நியாண்டர்தல்களிடம் அத்தகைய ஒற்றுமையான குழுமங்கள் இருந்தன. குழுமங்களில் அவற்றுக்குள் ஒற்றுமை இருந்தது மட்டுமல்ல, வெவ்வேறு குழுமங்களிடையே பகையும் இருந்தன என்கிறார் ஹைடன்.
நியாண்டர்தல்களின் அக-வாழ்க்கைக்கான பார்வை மாற்றத்தை ஏற்படுத்த ஆதார அடிப்படையாக அமைந்தவை ஷனிதார் IV குகைகளில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மலர்களின் மகரந்தத் தூள்கள் படர்ந்து கிடந்த நீத்தார் அடக்கங்கள்தாம் என்பதைக் கண்டோம். ஆனால், அவையும்கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டன. அந்த மகரந்தத் தூள்கள் காற்றாலோ அல்லது தேனீக்களாலோ இயற்கை நிகழ்வுகளால் அங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.
முப்பதாயிரம் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் சொற்பத் தடயங்களை வைத்து நம் தொல்-மூதாதைக் கிளை ஒன்றின் அக வாழ்க்கையை ஊகிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு செயல்தான்.
கோர்கம்மின் குகை (ஜிப்ரால்டர்), நியாண்டர்தல் செதுக்கிய கலை?
கோர்கம்மின் குகை (Gorham’s cave) என்பது ஜிப்ரால்டரில் மத்திய தரை கடலைப் பார்த்து இருக்கும் ஒரு குகை. இக்குகையில், குறைந்தது 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியாண்டர்தல்களின் ஒரு குழு தங்கியிருந்தது. இதை எப்படி நியாண்டர்தல்களின் குழு என சொல்ல முடிகிறதென்றால், அப்போது அந்தப் பகுதியில் இன்றைய மானுட இனத்தவர்கள் கிடையாது. அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இவ்விடத்துக்கு வந்து சேர இன்னும் 10,000 ஆண்டுகள் ஆகும். எனவே, அவர்கள் நியாண்டர்தல்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் நெருப்பு வளர்த்தனர். அவர்களிடம் கற்கால ஆயுதங்கள் சில இருந்தன. அங்கே அவர்களில் சிலரோ அல்லது ஒருவரோ, கோடுகளால் ஆன ஒரு வடிவத்தை செதுக்கினர். இன்று பார்க்க அது ஏதோ தாய விளையாட்டுக்கான கோடுகளை குகைச் சுவரில் செதுக்கியதுபோல இருக்கிறது.
அதை, ஐரோப்பாவின் மிக ஆதி குகை ஓவியங்கள் / செதுக்கல்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். நிச்சயமாக, நியாண்டர்தல்களுக்கு ஒரு அக வாழ்க்கை இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இது இருக்க முடியும்.
இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் நடுவில்தான், தொல்-மானுடவியலாளர்கள் தென் மேற்கு பிரான்ஸில் ஒரு குகையில் ஒரு மகத்தான அதிர்ச்சியை சந்தித்தார்கள். அக்குகையின் உட்பகுதி அதன் இதய ஸ்தானம் என சொல்லலாம் – ஏறக்குறைய 1,75,000 ஆண்டுகள் பழமையானவை என கணிக்கிறார்கள். அதாவது, அந்தக் காலகட்டத்தில் மானுடர்கள் அங்கே இல்லவே இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.
ஸ்டாலக்மைட் வட்டங்கள் - 1,75,000 ஆண்டுகளுக்கு முன் நியாண்டர்தல்கள் உருவாக்கியவை
குகைகளில் ஸ்டாலக்மைட்கள் (stalagmite) என சொல்லப்படும் சுண்ணாம்புப் புற்றுகள் - தரையிலிருந்து கூரிய முனையுடன் மேலெழும்பும் - இந்தக் குகைகளிலும் இருக்கின்றன. ஆனால், அவை உடைக்கப்பட்டு குகைகளின் உள் ஆழங்களில் வட்ட வளையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. 1,75,000 ஆண்டுகளுக்கு முன் இப்படி வட்ட வளையங்களை, குகைக்குள் சென்று அதன் ஆழ உட்பகுதியில் யார் செய்திருப்பார்கள்? அன்று ஐரோப்பாவில் நம்மைப் போன்ற மானுடர்கள் இல்லை. எனில், அதைச் செய்தது யார்? ஏன் செய்தார்கள்? இந்த வட்ட அமைப்புகளுக்கு மேல் மர அமைப்புகள் ஏதேனும் இருந்திருக்கக்கூடுமா?
பொதுவாக இதற்கான பதில், இந்தச் சுண்ணாம்பு புற்றூசிகளான ஸ்டாலக்மைட் வளைய வட்டங்கள் ஏதோ சடங்காக இருக்க வேண்டும் என்பதே. எனில், நியாண்டர்தல்களில் நாம் இன்று மதம் என்று சொல்லும் அம்சம் நிச்சயமாக இருந்திருக்கிறது.
இன்றைய மானுடம், தான் நினைப்பதைக் காட்டிலும் நியாண்டர்தல்களிடமிருந்து அதிகமாகவே பெற்றுக்கொண்டிருக்கிறது.
எலும்புகளைக் கூர்தீட்டி கருவிகளாகப் பயன்படுத்துவது நியாண்டர்தல்களிடமிருந்து நம் தொல்-மூதாதைகள் கற்றுக்கொண்ட ஒரு பாடமாக இருக்கலாம். ஆபரணங்கள் அணிவதும் அவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட மற்றொரு விஷயமாக இருக்கக்கூடும். அச்சமுதாயங்களில், கழுகின் கால்நகங்களை குழும முதல்வர்கள் ஆபரணங்களாக அணிந்திருக்கின்றனர்.
ஆனால், நியாண்டர்தல்கள் பெரிதும் இருந்தது ஐரோப்பாவில். அவர்கள் இருப்பு, ஆசியாவில் கூடிப்போனால் வடக்கு இராக் வரை இருந்திருக்கக்கூடும் என்றுதான் கணிக்கப்பட்டது. அப்படியானால், ஆசிய மானுடத்துடன் அவர்களுக்கு என்ன உறவு இருந்திருக்க முடியும்? ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட மூலக்கூறு மரபணுவியல் ஆராய்ச்சிகள் என்ன காட்டுகின்றனவென்றால், நியாண்டர்தல் மரபணுப் பங்களிப்பு, கிழக்கு ஆசியர்களின் ஜீனோமில் ஐரோப்பியர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
இதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?
பொதுவாக, நியாண்டர்தல் மரபணுப் பங்களிப்பு மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கிறதென்றும், ஐரோப்பிய மக்கள் குழுக்களில் இயற்கைத் தேர்வு அவற்றை வேகமாக அகற்றிவிட்டதென்றும், ஆசிய மக்கள் குழுக்களில் இயற்கைத் தேர்வு மெதுவாக நடைபெற்றதால் அது தேங்கி தங்கிவிட்டதே இதற்கான காரணம் எனவும் முதலில் கூறப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆசிய-ஐரோப்பிய மரபணு மாற்றங்களைக் கணினியில் ‘ஸிமுலேட்’ (simulate) செய்தபோது, அது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. மாறாக, ஆசியர்களுடன் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் இரண்டாம் முறை கலந்ததாகக் காட்டும் ஸிமுலேஷன்கள், கிடைத்திருக்கும் தரவுகளுக்கு ஏற்ற முடிவுகளை அளித்தன. பரிணாமவியலாளர் கார்ல் ஸிம்மர் இது குறித்துக் கூறுகிறார் -
“வழக்கமாகக் கூறப்படுவது என்னவென்றால், நியாண்டர்தல்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாமலாகிவிட்டனர். 40,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்களிடமிருந்து மரபணு ரீதியாக ஆசியர்கள் எவ்வித மாற்றமும் அடையவில்லை. அப்படி இருக்கும்போது, ஆசியர்களுடன் இரண்டாம் முறை நியாண்டர்தல்கள் எப்படிக் கலந்திருக்க முடியும்? உண்மையில், கடைசி நியாண்டர்தல்கள் காணாமல் கரைந்து மறைந்த நிகழ்வு ஆசியாவில் நடந்திருக்கலாம். (இத்தனை காலம் இது ஐரோப்பாவில் நிகழ்ந்தது எனக் கருதப்பட்டது). ஆசியாவில் நியாண்டர்தல்களின் தொல்-எச்சங்கள் நாம் கண்டுபிடிக்கக் காத்துக்கொண்டிருக்கலாம்”.
நியாண்டர்தல்களின் மரபணுப் பங்களிப்பில் பெரும்பாலானவை நமக்கு ஊறுவிளைவிப்பவையாகவே கருதப்படுகின்றன. சர்க்கரை நோய் (type 2 diabetes), அடிக்கடி மனத்தளர்ச்சி (depression) போன்றவை தொடர்புடைய மரபணுக்களெல்லாம், நியாண்டர்தல்கள் நம்மில் விட்டுச் சென்றவை.
நன்றி: sciencenews.org
நல்ல விஷயங்களும் நியாண்டர்தல்கள் மரபணுக்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தை தாய்ப்பாலை உண்டு செரிக்க வழிசெய்யும் கேலக்டோஸ் உட்கொள்வதற்கான (galactose metabolism) முக்கிய மரபணுக்களில் சில, நமக்கு நியாண்டர்தல்களிடமிருந்து வந்திருக்கலாம். நோய்த் தடுப்பு ஆற்றலில் தொடர்புடைய மரபணுக்களில் முதன்மையான சில, நியாண்டர்தல்களும் நம் தொல்-மூதாதைகளும் கொண்ட காதலிலிருந்து நம்மை வந்தடைந்திருக்கின்றன. காலம் செல்லச் செல்ல, நம்மிலிருந்து நியாண்டர்தல் மரபணுக்கள் நீக்கப்பட்டபடியே இருக்கின்றன. இயற்கைத் தேர்வில், அவை மனித இனத்துக்குப் பெரும்பாலும் தேவையற்றவையாகவே கருதப்படுகின்றன.
எதுவானாலும், மானுடம் என்பது ஆப்பிரிக்காவில் உருவாகி உலகம் முழுக்கத் தனிமையில் விரிவடையவில்லை. நம்மையொத்த பிற தொல்-பேரினக் குரங்கினங்களுடன் ஒட்டி உறவாடி, அவர்களின் மரபணுக்களை உட்கொண்டே இன்று நாம் இருக்கும் இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.
குகையில் வளர்ந்த கனல்
நம் மரபணுக்களில் மட்டுமல்ல, நம் மதங்களிலும்கூட நியாண்டர்தல்களின் பங்களிப்பு இருக்கலாம். நம் பழமையான சடங்குகளில் சில, நியாண்டர்தல்களின் குகைச் சடங்குகளிலிருந்து பெற்றவையாக இருக்கலாம். மானுடர்கள் தங்கள் மதத்தின் அடிப்படை விதைகளில் சிலவற்றை நியாண்டர்தல்களிடமிருந்து பெற்றிருக்கக்கூடுமா? நாம் மிகவும் ஊகிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மக்நமாரா. ஆனால், நிச்சயமாக நம் ‘ஷமானிய சடங்குகள் நியாண்டர்தல்களிடமிருந்து பெறப்பட்டவை’ என்கிறார் அவர். கரடிகளை மையமாகக் கொண்ட சடங்கு நிச்சயமாக நியாண்டர்தல்களிடமிருந்தது என்றும், அச்சடங்கு பின்னர் ஷமானிய சடங்குகளில் இடம்பெற்றது என்றும் கருதுகிறார்.
பிரியன் ஹைடன், மிக சுவாரசியமான ஒரு தொடர்பை சுட்டிக் காட்டுகிறார் -
சில தொல் பழங்கதைகளில், கரடி அதன் வானுலகத் தந்தையால் மானுடத்தின் துயரங்களைப் புரிந்துகொள்ள பூமிக்கு அனுப்பப்படுகிறது. அப்படி வரும் கரடி, தன்னையே மானுடத்தின் துயரைத் துடைக்க தியாகம் செய்கிறது. மானுடர்கள் இணைந்து கரடியின் சதையை உண்டு அதன் உதிரத்தைப் பருகுகின்றனர். அது மீண்டும் உயிர்த்தெழுகிறது.
இது, நியாண்டர்தல்கள் மறைந்த பிறகு, பின்னாட்களில் தொல்-மானுடக் குழுக்களில் புழங்கிவந்த தொன்மக் கதை. இக்கதையை உருவாக்கிய கரடி ஆராதனையின் வேர்களை, நாம் சர்வ நிச்சயமாக நியாண்டர்தல்களிடமிருந்து பெற்றோம் எனக் கருதுகின்றனர் ஹைடனும் மக்நமாராவும்.
ஹரப்பா பண்பாட்டில் கரடி (சுட்டமண் வடிவம்)
குகைகளின் ஆழங்களில் சென்று நியாண்டர்தல்கள் அச்சடங்குகளை செய்ய வேண்டிய அவசியம் என்ன? பழங் கற்கால மானுடர்கள், குகைகளைப் பெரும் தாய் தெய்வத்தின் கருவறை என்றே கருதினார்கள். அந்தச் சித்திரத்தை அவர்கள் நியாண்டர்தல்களிடமிருந்து பெற்றிருப்பார்களா? இன்றைக்கும் நம் கோவில்களின் மையத்தை கருவறை என்றே சொல்கிறோம். சம்பிரதாயமான கோவில்களில் கருவறை மிகக்குறைந்த ஒளியுடன் சிறு நெருப்பு ஒளிரும் இருண்ட குகை போன்றே வைக்கப்பட்டுள்ளது. குகையினுள் ஆன்மிக அனுபவம் / மாற்று பிரக்ஞை அனுபவம் பெறும் முதல் மானுடக் கிளையாக நியாண்டர்தல்கள்தான் இருந்தார்களா? நம் கர்ப்பக்கிரகங்களின் மூலவிதையை நாம் நம் தொல்-கற்கால மூதாதைகளிடமிருந்தும், அவர்கள் நியாண்டர்தல்களிடமிருந்தும் பெற்றிருப்பார்களா?
பேராசிரியர் மைக்கேல் பெர்சிங்கர், உளவியல்-நரம்பியல் ஆராய்ச்சியாளர். பூமியின் சில இடங்களிலிருக்கும் புவிசார் காந்தப்புலங்கள் சில ‘ஆன்மிக’ அனுபவங்களை உருவாக்கக்கூடும் எனக் கருதுகிறார். குகைகள் அப்படிப்பட்ட புவிசார்-தனித்தன்மை கொண்ட இடங்களாக இருந்திருக்கக்கூடுமா? வரலாற்றுக் காலகட்டங்களில் டெல்பி ஆலயத்தின் பெண் பூசகர், அந்த ஆலயத்தில் அமைந்த ஒரு குகைப் பகுதியில் சென்று அமர்ந்து தெய்வ ஆவேசம் பெற்று வருங்காலம் உரைப்பாள். இப்பகுதியில், புவியடி வாயுக்கள் ஒருவித ஆவேச உணர்வை அவளுக்கு அளித்திருக்கலாம் என்கின்றனர் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். நியாண்டர்தல்கள் குகைகளின் ஆழங்களில் சென்றபோது இத்தகைய அனுபவங்களை அடைந்திருக்கலாம். அத்துடன் அந்த அனுபவங்களை மீண்டும் மீண்டும் அடைய சடங்குகளை உருவாக்கியிருக்கலாம்.
மற்றொரு விஷயமும் இருக்கிறது.
ஷனிதார் குகை, நியாண்டர்தல் அடக்கங்களில் தூவப்பட்டதாகக் கருதப்பட்ட மலர்களில் எஃபெட்ரா (Ephedra) எனும் பெயர் கொண்ட தாவரத்தின் மலர் மகரந்தங்களும் இருந்தன. அவை நிச்சயமாக ஒரு சடங்காகத் தூவப்பட்ட மலர்களில் ஒன்றெனில், தாவரங்களிலிருந்து கிடைக்கும் அக–அனுபவங்கள், நியாண்டர்தல் சடங்குகளில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். நியாண்டர்தல்கள் தங்கள் உடல் நலம் பேண தாவரங்களை உண்டனர் – கசப்பான தாவரங்களைக்கூட மருந்தென உண்டனர் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர். மூலிகைகளைப் பயன்படுத்தும் ஷமானிய பூசகர், பொதுவாக சமூகக் குழுக்களின் வைத்தியராகவும் இருப்பது பண்டைய மானுடப் பண்பாடுகளில் பொதுவான ஒரு அம்சம்தான். அதன் வேர்களும் நியாண்டர்தல்களிடமிருந்து நமக்கு வந்திருக்கலாம். இந்தியாவில் எஃபெட்ரா செடி ‘சோமம்’ என அழைக்கப்படுகிறது.
இதையும் சிந்தித்துப் பார்க்கலாம்.
நியாண்டர்தல்களின் கரடிச் சடங்குகள் நம்மை தொல் - கற்காலச் சடங்குகள் மூலம் வந்தடைந்தன. ஒருவேளை, சில நியாண்டர்தல் ஐதீகங்களும் நம்மை வந்து சேர்ந்திருக்கலாம். சப்தரிஷி மண்டலம் என நாம் சொல்லும் விண்மீன் கூட்டத்தை, ஐரோப்பாவில் ‘பெரும் கரடி’ (ursa major) எனச் சொல்கிறார்கள். இதற்காகச் சொல்லப்படும் கிரேக்க புராணக்கதை, மிகவும் பின்னாட்களில் உருவானது. ப்ரியன் ஹைடன், நியாண்டர்தல் கரடிச் சடங்குகளுக்கும், இந்த விண்மீன் குழு பெரும் கரடி என அழைக்கப்படுவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கக்கூடும் என ஊகிக்கிறார்.
ஷமானிய தொடர்ச்சி, ரிக் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் சுட்டப்படுகிறது. விண்மீன்கள் கரடி என அழைக்கப்படுகின்றன. பின்னாட்களில் இந்தப் பெயர் ரிஷிகள் என ஆகின்றன. வட வானில் இருக்கும் விண்மீன்களை ‘ரிக்ஷா’ என அழைக்கிறது ரிக் வேதம் (1.24.10). ரிக்ஷா பின்னாட்களில் ரிஷி என மாற்றப்பட்டது என இந்தியவியலாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, இந்தியவியலாளர் மைக்கேல் விட்ஸல், ரிக்ஷா என்பது ரிஷி என்றானதன் பின்னால் மெசபடோமிய தாக்கம் இருக்கலாம் என்கிறார். இத்தனைக்கும் அவர் கரடிச் சடங்குகளுக்கும் சில வேத கோட்பாடுகளுக்குமான ஆழமான தொடர்பினை பேசவே செய்கிறார். உண்மையில் இது வெறும் பெயர் மாற்றம் என்பதைவிட, ஷமானிய - ரிஷி தொடர்புகளைக் கூறும் ஒரு மாற்றமாக இருக்கலாம். கரடிச் சடங்குகளிலிருந்து ஷமானிகளும் ஷமானிகளின் நீட்சியாகவே ரிஷிகளும் பரிணமித்ததைக் காட்டும் ஒரு தரவாகவே இது இருக்கக்கூடும்.
ராமாயணத்தில் ஜாம்பவான் வருகிறார். ராமாயணம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதுதான். ஜாம்பவானின் செயல்பாடு, முக்கியமாக அனுமனுக்கு அவர் ஆற்றலை நினைவூட்டுவதும், பின்னர் போரில் சில முக்கிய ஆலோசனைகள் சொல்வதுதாம். ஆனால், இந்தியா முழுக்க ஒரு செயலில் சிறந்தவர், ஆழமான அறிவுடையவர் என்பதைக் காட்ட ஜாம்பவான் என்கிற பெயர் பயன்படுத்தப்படுகிறது. கரடிச் சடங்குகள் கொண்ட குலத்தலைவராக ஜாம்பவான் இருந்திருக்கக்கூடுமா? ஒரு தொலைநினைவு இதிகாசம் ஒன்றில் எஞ்சி இருக்கிறதா? நியாண்டர்தல் மானுடக் கலப்பிலிருந்து எழுந்த ஒரு நாட்டார் கதை இதிகாசத்தில் இடம்பெற்றதுதாம் ஜாம்பவதி – கண்ணன் திருமணமா? இந்திய மரபில் வரும் கரடி குலப் பெயர்களில், நாவல் மரப் பெயர் தொடர்பு இருப்பதும், இந்தியாவே நாவலந்தீவு என அழைக்கப்படுவதும் தற்செயலான விஷயங்கள்தானா? இவை எல்லாம் சில முன்யூகங்கள் அன்றி வேறல்ல.
ஜாம்பவான், ஜாம்பவதி - கண்ணன், ஜாம்பவான் குகை (குஜராத்)
ஆனால், நிச்சயமாக ஒரு விஷயத்தை அறிவியல் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. இனத்தூய்மை சாதித் தூய்மை எல்லாம் விடுங்கள். நம் குழந்தைகள் தாய்ப்பாலை தடையின்றிக் குடிப்பதில்கூட, பிற பேரினக்குரங்குகளுடன் கலந்த நம் தொல்-மூதாதையினரின் உயிரினத் தடைகள் கடந்த காதல் பெற்றுத்தந்த மரபணுக்கள் செயல்படுகின்றன.
காலம்தோறும் நம் பார்வையில் நியாண்டர்தல்கள் - கட்டுரையாளர்களின் தொகுப்பு
மேலதிக விவரங்களுக்கு -
RS Solecki, Shanidar IV, A Neanderthal Flower Burial in Northern Iraq, Science, 28 Nov 1975: Vol. 190, Issue 4217, pp. 880-881
Ian Tattersall, The Last Neanderthal: The Rise, Success, and Mysterious Extinction of Our Closest Human Relatives,Westview, 1999
Brian Hayden, The cultural capacities of Neandertals: a review and re-evaluation, Journal of Human Evolution, Vol 24 issue 2, February 1993, pp.113-146
Brian Hayden, Shamans, Sorcerers, and Saints: A Prehistory of Religion, Smithsonian, 2003
Brian Hayden, Neanderthal Social Structure?, Oxford Journal of archaeology, 31(1), 1-26, 2012
Marie Soressi et al, Neandertals made the first specialized bone tools in Europe, PNAS, vol. 110 no. 35, 14186–14190, doi: 10.1073/pnas.1302730110
Davorka Radovčić et al, Evidence for Neandertal Jewelry: Modified White-Tailed Eagle Claws at Krapina, PLoS One. 2015 Mar 11;10(3):e0119802. doi: 10.1371/journal.pone.0119802. eCollection 2015.
Joaquín Rodríguez-Vidal et al, A rock engraving made by Neanderthals in Gibraltar, PNAS, vol. 111 no. 37, 13301–13306, doi: 10.1073/pnas.1411529111
Colin Barras, Neanderthal dental tartar reveals evidence of medicine, New Scientist, 18-July-2012
Carl Zimmer, A New Theory on How Neanderthal DNA Spread in Asia, New York Times, 19-Feb-2015
Eugene E Harris, Meeting and mating with Neanderthals: good and bad genes, Oxford University Press blog: http://blog.oup.com/2015/04/neanderthal-genes-positive-negative-natural-selection/ , Apr-25-2015
Elisa Guerra-Doce (2015) Psychoactive Substances in Prehistoric Times: http://dx.doi.org/10.1371/journal.pone.0119802
Jacques Jaubert et al, Early Neanderthal constructions deep in Bruniquel Cave in southwestern France, Nature 534,111–114,(02 June 2016),doi:10.1038/nature18291
René Guénon, The Wild Boar and the Bear in Symbols of Sacred Science (ed. Samuel D. Fohr) Gallimard, 1977 also see Witzel, The Origins of the World's Mythologies (OUP, 2012, p.400)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.