1933, மார்ச் 31. நாஸிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். ஜெர்மானியர்கள், யூதக் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, பெர்லின் நகரில் நாஸி இயக்கத்தவர்கள், யூதக் கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். அடி உதைகள் கடைகளுடன் நிற்கவில்லை. கடைகள் வைத்திருந்த யூதர்களும் அடிக்கப்பட்டனர். தெருக்களில் இழுத்து பரிகசிக்கப்பட்டனர். இதைப்பார்த்து, குழுமியிருந்த பெரும்பாலான ஜெர்மானியர் நகைத்தனர். அப்போது அங்கே வந்த ஒரு நோஞ்சான் மனிதர், அந்த நாஸிகளைக் கடுமையாகக் கண்டித்தார். அவர்கள் செய்வது இழிவான விஷயம் என்றார். யூதர்களுக்காகப் பரிந்து பேசும் அந்த நோஞ்சான் மனிதரை அடிக்க ஆரம்பித்தார்கள் நாஸிகள். அவர் மிக மோசமாகக் காயம்பட்டிருப்பார். ஆனால், அதற்குள் கூட்டத்தில் ஒரு ஆள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
நாஸிகளால் அடித்து நொறுக்கப்படும் யூதக் கடைகள்
‘‘நிறுத்துங்கள்! இவர் புகழ்பெற்ற திறமையான விஞ்ஞானி. இயற்பியலாளர்’’ என நாஸிகளை நிறுத்தி, அடிபட்ட மனிதர் எழுந்திருக்க உதவி செய்தார். ‘‘அப்படி என்ன பெரிய ஆள் இவர்?’’ எனக் கேட்டனர் நாஸிகள். ‘‘இவரா… இவர்தான் எர்வின் ஷ்ட்ரோடிஞ்சர்’’ என்றார், அவர்களைத் தடுத்து நிறுத்திய மனிதர். நடுத்தெருவில் சக மானுடத்துக்காக அப்படி நாஸிகளுடன் சண்டை போட்டவர் எர்வின் ஷ்ட்ரோடிஞ்சர். பெரிய பலசாலி கிடையாது. ஆனால், மனஉறுதியும் மானுட மதிப்பீடுகளும் கொண்டவர். 1933, டிசம்பரில் அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சி ஷ்ட்ரோடிஞ்சரை உலுக்கிவிட்டது. அவர் தன் மனைவியுடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். இங்கிலாந்தில் ஷ்ட்ரோடிஞ்சருக்கு சில பிரச்னைகள் இருந்தன. மனிதர் இயற்பியலாளரும், வேதாந்தியும் மட்டுமல்ல; ஒரு முழு நேரக் காதலரும்கூட. ஆக்ஸ்ஃபோர்டின் இறுக்கமான சூழ்நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவில் அவர் இரு மடங்கு ஊதியம் கொடுத்து அழைக்கப்பட்டார் (10,000 டாலர்கள் – அன்று. ஐன்ஸ்டைனின் ஊதியம் 15,000 டாலர்கள்). ஆனால் அவர் மறுத்துவிட்டார். அமெரிக்க வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணம். அவரது காதல் வாழ்க்கை, பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மேலதிகாரிகளைக் கொஞ்சம் சங்கடப்படுத்தவே செய்ததால், அவர்களும் முழு மனத்துடன் அவரை அழைக்கவில்லை. அவருடைய காதல்கள் அவர்களைச் சங்கடப்படுத்தின. ஒரு பலவீனமான கட்டத்தில். ஜெர்மனி அழைத்தபோது அங்கே செல்ல ஷ்ட்ரோடிஞ்சர் விரும்பினார். ஹிட்லரின் பாராட்டைக்கூட ஏற்றார். ஆனால், பின்னாள்களில் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
எர்வின் ஷ்ட்ரோடிஞ்சர், இளம் வயது தொடங்கியே வேதாந்தியும்கூட. சரியாகச் சொன்னால் அத்வைதி.
‘நாம் காணும் அனைத்து வேறுபாடுகளும் ஒரே பெரும் பிரபஞ்ச ஒருமையின் வெவ்வேறு தோற்றங்களே’ என இளைஞராக எழுதியவர்’. ஒரு பெரும் இருப்பின் ஒரு சிறு பகுதியல்ல உங்கள் வாழ்வு. மாறாக, உங்கள் வாழ்வே அப்பெரும் இருப்பு. ஒற்றைப் பார்வையில் அறியமுடியாதவாறு இந்த உண்மை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே, தெளிவாகவும் எளிமையாகவும் அந்தணர் மறையில் ‘தத்வமஸி’ எனக் கூறப்படுகிறது. நீயே அது. இந்த உண்மையே, ‘நானே கிழக்கும் மேற்கும். நானே மேலும் கீழும். நானே இந்த உலகம் அனைத்தும்’ எனவும் கூறப்படுகிறது’ – இது,ஷ்ட்ரோடிஞ்சர் 1924-ல்.
1926–ல், ஷ்ட்ரோடிஞ்சர் அலை இயக்கம் குறித்த சில முக்கியக் கணித உருவாக்கங்களை முன்வைக்கிறார். நாஸிகளால் தெருக்களில் தாக்கப்பட்ட அதே ஆண்டில்தான், இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்பட்டது.
பின்னர், ‘ஒரு எளிய உயிரியலாளனாக உயிரியலை ஆராய்தல் குறித்து’ 1943-ல் அவர் தொடர்உரை ஆற்றினார். அவை ஒரு சிறிய நூலாக வெளிவந்தது.
ஷ்ட்ரோடிஞ்சரின் ‘உயிர் என்றால் என்ன?' (What is life?) எனும் இந்நூலின் முக்கியத்துவம், நான்கு விஷயங்களில் உள்ளது.
முதலாவதாக, வேறுபட்ட பல அறிதல் புலங்களைத் தத்துவ ரீதியில் ஒருங்கிணைத்து, உண்மையை அறியும் முயற்சியாக மானுட அறிதலின் வரலாற்றில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தேடல் இங்கு தத்துவத் தேடல் அல்ல. அறிவியல் தேடல்.
இரண்டாவதாக, மரபணுவின் பௌதீக - இயற்கை அடிப்படையில் ஒரு மூலக்கூறாகத்தான் இருக்க வேண்டும் என, மரபணு என்பது என்ன என்ற தேடலை ஒரு மூலக்கூறின் தேடலாக மாற்றியதும் இந்த நூல்தான். (இது அறிவியல் சமுதாயத்தின் பொது மனப்பாங்கினை மாற்றியது. ஆனால், மரபணு மூலக்கூறாகத்தான் இருக்க வேண்டும் எனும் முடிவினை சுயமாகவே மாக்ஸ் டெல்பர்க் எனும் அறிஞர் கண்டறிந்திருந்தார். அதன் அடிப்படையில், அதன் இயற்கையினை அறியும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார்).
மூன்றாவதாக, நாஸி ஜெர்மனியிலிருந்து அகதியாக வந்து அயர்லாந்தில் டூப்ளினில் வாழ்ந்த ஷ்ட்ரோடிஞ்சர், நாஸி ஜெர்மனியில் வாழ்ந்த மூவரணி ஒன்றின் முக்கியமான ஆராய்ச்சிகளை இந்த நூல் மூலம் கவனப்படுத்தினார். மாக்ஸ் டெல்பர்க் (Max Delbrück), சோவியத் கமிசார்களால் வேட்டையாடப்பட்டு பெர்லினில் ஆராய்ச்சிகளைச் செய்துவந்த நிகோலாய் ரெஸோவெஸ்கி (Nikolay Timofeev-Ressovsky) மற்றும் கார்ல் ஸிம்மர் (Karl Günter Zimmer) ஆகியோருடைய ஆராய்ச்சிகளே அவை. இவர்களில், டெல்பர்க்கும் ஸிம்மரும் இயற்பியலாளர்கள்.
அன்று மரபணுவியலாளர்களுக்கு அரசியலால் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தலைதப்பியும், பிரபலமின்றியும் வாழ்ந்த இந்த மூவரணி, ஆராய்ச்சிகளில் சில முக்கியச் சாதனைகளை எட்டியிருந்தது. ‘மரபணு பிறழ்ச்சியும் மரபணுவின் வடிவமைப்பும் குறித்து’ (On the nature of gene mutation and gene structure) எனும் தலைப்பில் இவர்கள் எழுதியிருந்த ஆராய்ச்சித்தாள் மூலக்கூறு மரபணுவியலில் ஒரு மைல் கல்லாகப் பின்னாள்களில் உருவெடுத்தது. அதற்கு வழிவகுக்கும் கவனத்தை ஷ்ட்ரோடிஞ்சர் ஏற்படுத்தினார்.
அப்படி இந்த மூவரணி கண்டறிந்தவைதான் என்ன?
ஒரு உயிரணுவை – செல்லை எடுத்துக்கொள்வோம். அதனுள் சதா மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், அதிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் மரபணுவோ பெரும் மாற்றங்கள் இல்லாமல், ஏறக்குறைய மாறிலியாகவே இருக்கிறது. இப்படி மாறும் சூழலில், பெருமளவு மாறாத்தன்மை கொண்டதாக மரபணு இருப்பதன் அடிப்படையில், அதன் மூலக்கூறு எத்தகைய தன்மை கொண்டது என்பது குறித்தும், அதன் வடிவமைப்பு குறித்தும் சில முக்கியக் கணிப்புகளை இம் மூவர் குழு முன்வைத்திருந்தது.
ஒரு செல்லுக்குள் நடக்கும் உயிர்-வேதி மாற்றங்களால் பாதிப்படையாமல் இருக்கும் மரபணு – பொருள் பௌதீகமான ஒன்று – அணுக்களால் ஆன அமைப்பு என்றால், ஆற்றல்மிகு கதிரியக்கத்தின் மூலம் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அவர்கள் கணித்தனர். ஆற்றல்மிக்க கதிரியக்கத்தால் மரபணு பிறழ்ச்சிக்கு (mutation) ஏற்படுகிறது எனும் ஆராய்ச்சி உண்மையே இக்கணிப்பு சரியான திசையிலேயே செல்கிறது என்பதற்கான வலுவான ஆதாரம்.
நிகோலாய் ரெஸோவெஸ்கி, கார்ல் ஸிம்மர், மாக் ஸ்டெல்பர்க்
எனினும், இம்முயற்சிகள் குறித்த அறிவு, அறிவுலகத்துக்குப் பெருமளவில் எட்டவில்லை. ஏறக்குறைய, பத்து வருடங்களாக ‘கிடப்பில் போடப்பட்டிருந்த’ இந்த ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை உலகுக்கு எடுத்துக்கூறியது ஷ்ட்ரோடிஞ்சரின் ‘உயிர் என்றால் என்ன?’தான்.
1946-ல் மாக் ஸ்டெல்பர்க், அமெரிக்காவின் கால்டெக்கின் ஆராய்ச்சி மையத்தில் முக்கியப் பொறுப்புக்கு வர முடிந்தது, ஒருவிதத்தில் ஷ்ட்ரோடிஞ்சரின் இந்த நூலினால்தான். துரதிர்ஷ்டவசமாக ரெஸோவெஸ்கிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. சோவியத் மார்க்ஸிஸ்டுகள் அவரை நாஸி எனக் குற்றம் சாட்டினர். ஆனால், அங்கும் அவரது வாழ்வு தப்பியதற்கான ஒரு காரணம், ஷ்ட்ரோடிஞ்சரின் நூலால் அவர் அடைந்திருந்த சர்வதேச மதிப்பேயாகும்.
டெல்பர்க் – ரிஸோவெஸ்கி – ஸிம்மர் குழுவின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், அவர்கள் மரபணுவின் பௌதிக - இயற்கை குறித்து முன்வைத்த கணிப்புகளை ஷ்ட்ரோடிஞ்சர், ‘மரபணுவின் வடிவமைப்புக்கான ஒரே சாத்தியக்கூறு’ எனக் கருதினார்.
ஆனால், இந்த மூலக்கூறு என்னவாக இருக்கக்கூடும்? அன்றைய பெரும் பிரச்னை, மரபணு என்பது புரதமா அல்லது நியூக்ளிக் அமிலமா? என்பதே. இங்கு ஒரு பாதை காட்டுவதில் ஷ்ட்ரோடிஞ்சரின் தத்துவ நிலைப்பாடு ஒரு முக்கியப் பங்கு வகித்தது. இதையே இந்நூலின் நான்காவது முக்கியப் பங்களிப்பாகக் கூறலாம்.
ஷ்ட்ரோடிஞ்சர் உரை நிகழ்த்தியபோது கிடைத்த ஆராய்ச்சித் தரவுகளின் அடிப்படையில் மரபணு மூலக்கூறு என்பது நியூக்ளிக் அமிலமா அல்லது புரதமா என்பதில் சரியான முடிவு எடுக்கப் போதுமானவை இல்லை. ஒரு மூலக்கூறு தன் வடிவமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் சில எல்லைகளைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். இந்த வடிவமைப்பையும் இயக்கத்தையும் ஒருமை என வைத்துக்கொள்வோம். இந்த ஒருமையிலிருந்து பன்மையை அது உருவாக்க வேண்டும்.
ஷ்ட்ரோடிஞ்சர் கூறுகிறார் -
‘...அத்தகையதோர் அமைப்பு மிகுந்த எண்ணிக்கையில் அணுக்களைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் கச்சிதமாக அமைக்கப்பெற்றிருந்தால், அதுவே போதுமானது. உதாரணமாக, மோர்ஸ் தந்தி முறையினை எடுத்துக்கொள்ளுங்கள். ‘.’ மற்றும் ‘-’ ஆகிய இரண்டும், பல குழுவாக இணைந்து எத்தனை பன்மையை உருவாக்குகின்றன’.
அதுபோன்ற ஓர் அமைப்பு மற்றும் இயக்க முறை மரபணுவிலும் இருக்கக்கூடும் என்பதே ஷ்ட்ரோடிஞ்சரின் முன் யூகம். அட்டகாசமான ஒரு முன்னுணர்தல் இது. இன்று நாம் அறிந்த டிஎன்ஏ வடிவமைப்பினை எதிர்பார்க்கும் முதல் கட்டியம் என இவ்வார்த்தைகளை நாம் சொல்லலாம். டிஎன்ஏ வடிவமைப்பினைக் கண்டறிந்த பிரான்ஸிஸ் கிரிக், பின்னாள்களில் இவ்வாறு கூறினார் – ‘எனது ஆர்வத்தினை ஷ்ட்ரோடிஞ்சரின் ‘உயிர் என்றால் என்ன?’ நூலே தூண்டியது. அதனால் கிளர்ச்சியுற்றே, அதன் அடிப்படையிலேயே நான் (மரபணுவின்) மூலக்கூறு தேடலில் ஈடுபட்டேன்’.
பிரான்ஸிஸ் க்ரிக்
ஷ்ட்ரோடிஞ்சரின் ‘உயிர் என்றால் என்ன?’ ஏமாற்றும் எளிமையுடன் தொடங்குகிறது. ‘கணித அறிதல் முறைகளால் முழுமையாக அறியமுடியாத ஒரு நிகழ்வினை’ அறிதல் குறித்த முயற்சியினை ஒரு ‘எளிய இயற்பியலாளனாக’ தாம் தொடங்குவதாக அவர் சொல்கிறார். முதல் காலடி; முக்கியக் காலடி. ஒருவிதத்தில், இன்றளவும் ஷ்ட்ரோடிஞ்சரின் இவ்வுரைகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. ஏனெனில், அனைத்து தொழில்நுட்ப வெற்றிகளுக்கும் அப்பாலும் உயிர் என்றால் என்ன என்கிற ஆதாரக் கேள்வியை, மூலக்கூறு உயிரியல் விளிம்புகளில் தொட்டவாறு உள்ளதே தவிர, மைய நெருப்பினுள் பிரவேசிக்கவில்லை.
இனிவரும் காலங்களிலும் நம் அடிப்படையான உயிரை நாம் அறிய, மாறுபட்டவையாக, தொடர்பில்லாதவையாக, ‘எதிர் எதிர் திசைகளில் செல்லும் இரு புகைவண்டிகளாகத்’ தோன்றும் அறிதல் புலங்கள்கூட தம்முள் பாலங்களை உருவாக்கலாம். ‘அனைத்து தோற்ற பேதங்களும் மாயை; அத்தோற்றங்களை உருவாக்கும் மூல வஸ்து ஒன்றே’ என்பது ஒரு பிரபஞ்ச உண்மையாக இருக்கலாம். தொடர்பில்லாவையாகத் தோன்றும் அறிதல்களின் அடிப்படை ஒருமையை (தோற்ற மாயைகளுக்கு அப்பால்) கண்டடைவதன் மூலம் மானுட ஞானம் முன் நகர்கிறது. காலங்கள், கலாசாரங்கள் கடந்து ஷ்ட்ரோடிஞ்சர் இயற்பியலாளனாக முன்வைக்கும் காலடியுடன் காலடியை இணைப்பது, அந்த இரண்டற்ற ஒருமையின் காதல்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.