நம் கண் காண நடக்கும் படுகொலைகள்…

நம் பொதுவெளியில், நாம் அன்பையும் அனுகம்பத்தையும் பரப்பும் ஒரு சூழலை உருவாக்கவேண்டி உள்ளது. ‘வைஷ்ணவ ஜனதோ…’வும் வள்ளலாரும் நம் பொதுவெளிகளில் மென்மையாகக் கேட்டபடி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நியாயம் இங்கே இருக்கிறது.
Published on
Updated on
7 min read

இரு நாட்களுக்கு முன்னர், சென்னையில் ரயில் நிலையத்தில் பலர் கண் முன்னே ஒரு இளம் பெண் கொல்லப்பட்டார். அவர் கணினிப் பொறியியலாளர். உடனடியாகவே சமூக வலைத்தளங்களில் மீம்கள் பரவ ஆரம்பித்துவிட்டன. நம் சமுதாயப் பொறுப்பின்மை அதிகமாகிவிட்டது. சமுதாயத்தில் சுயநலம் அதிகரித்துவிட்டது இத்யாதி… இத்யாதி…

ஒரு மார்க்ஸிஸ்ட் இதனை வேறுவிதமாகப் பார்த்திருப்பார். முதலாளித்துவ சமுதாயத்தில், பல அடுக்குகள் கொண்ட சமுதாயத்தில் வாழும்போது தம்முடைய மானுட சாராம்சத்திலிருந்து ஒரு மனிதன் அந்நியப்பட்டுவிடுகிறார் என காரல் மார்க்ஸ் கருதினார். மார்க்ஸியம் இதை அந்நியப்படுதல் எனச் சொல்கிறது. ஒரு சக மனிதன் தன் கண் முன்னால் படுகொலை செய்யப்படும்போது  அல்லது கொடுமைப்படுத்தப்படும்போது அதைத் தட்டிக் கேட்காமல், அதில் தலையிடாமல் இருப்பது இவ்வாறு அந்நியப்படுதலின் விளைவு என காரல் மார்க்ஸ் சொல்லியிருக்கக்கூடும்.

1964 மார்ச் மாதம் 13-ம் தேதி, கிட்டி ஜினோவீஸ் (Kitty Genovese) என்கிற இளம்பெண் அவளது அபார்ட்மென்ட்டில் கொல்லப்பட்டாள். அவள் உதவிக்காகக் கூக்குரல் எழுப்பியும் எவரும் அவளுக்கு உதவவில்லை. நியூயார்க் டைம்ஸ் உட்பட பல நாளேடுகள், 37 அல்லது 38 பேர்கள் அவளது தாக்குதலுக்கோ அல்லது அவளது உதவிக்கான கூக்குரலுக்கோ சாட்சிகள் என்றும், ஆனால் அவர்கள் எவருமே அவளுக்கு உதவிக்கு வரவில்லை என்றும் எழுதின. ஆனால், ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் 2016-ல் அதே நியூயார்க் டைம்ஸ் 38 சாட்சிகள் வாளாவிருந்தனர் என்பது மிகைப்படுத்துதல் எனக் கூறியது.

எதுவானாலும், கிட்டியின் கொலை அமெரிக்க சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சக மனிதர் கொல்லப்படும்போது ஏதும் செய்யாமல் இருக்கும் மனநிலை ஏன் நிலவுகிறது?

ஜான் டார்லே (John Darley) மற்றும் பிப் லடானே (Bibb Latané) எனும் இரு சமூக உளவியலாளர்கள், இச்செயலின்மையின் உளவியல் காரணங்களை ஆராய முடிவு செய்தார்கள். நம் மதிப்பீடுகளின் வீழ்ச்சிதான் இதற்குக் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணிகள் இருக்கலாமா?

இதனை அறிய, அவர்கள் ஒரு பரிசோதனைச் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

ஒரு பரிசோதனையாளர், நகர வாழ்வினால் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி செய்துவருவதாக கல்லூரி மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். மாணவர்கள் தனிப்பட்ட சொந்த பிரச்னைகளை பிறர் முன் விவரிக்கவும் விவாதிக்கவும் தயங்குவார்கள் என்பதால், அவர்கள் தங்கள் பெயர்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமின்றி தனி அறைகளில் வைக்கப்படுவார்கள் எனவும் அவர் மாணவர்களிடம் தனித்தனியாக அறிவித்தார்.

மாணவர்கள் தங்களிடமுள்ள மைக்ரோபோன்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு உரையாடல் நடத்தமுடியும். புறத்தலையீடு இந்த உரையாடலை பாதிக்கும் என்பதால், பரிசோதனையாளர் இந்த உரையாடல்களில் பங்கு பெறவோ கவனிக்கவோ முடியாது என்றும் பரிசோதனையில் பங்குபெறும் மாணவர்களுக்கு கூறப்பட்டது. பரிசோதனை நடத்தப்பட்டபோது, பங்குபெறும் மாணவருக்குத் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உரையாடுவதுபோல் தோன்றும்; ஆனால், உண்மையில் எந்த ஒரு சமயத்திலும் ‘ஒரு மாணவர்’தான் அனைவருடனும் உரையாடிக்கொண்டிருப்பார். ‘மற்ற மாணவர்கள்' என பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மாணவர்கள் உணர்வது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள்தான்.

பரிசோதனையின் தொடக்கத்திலேயே உரையாடலைத் தொடங்கும் ‘மாணவர்’ நம் பரிசோதனையாளர்தான். அவர் முதலில் நியூயார்க் நகரத்தின் வாழ்க்கைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் மன-அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகுந்த தயக்கத்துடனும் நாணத்துடனும் கூறுவார். தேர்வுகளுக்காகக் கடினமாகப் படிக்கவேண்டி வரும்போது தனக்கு வலிப்பு நோயும் வருவதுண்டு எனவும் கூறுவார். பின்னர் (ஏற்கெனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட) ‘மற்ற மாணவர்கள்' குரல்கள் ஒவ்வொருவராக தங்கள் பங்குக்குச் சிலவற்றை கூறுவார்கள்.

அதாவது, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் கேட்பது ஒரு உண்மையான குரலையும், பிற பதிவு செய்யப்பட்ட குரல்களையும்தான். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் தாம் சக அறைகளில் உள்ள மாணவர்களிடம் உரையாடுவதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

உண்மையான பரிசோதனை இப்போதுதான் ஆரம்பிக்கும். முதல் மாணவர் (அதாவது, உண்மையான பரிசோதனையாளரின்) முறை வருகையில், இப்போது அவரது குரல் கஷ்டமாகவும் வார்த்தைகள் குழறியபடியும் ஒலிக்கும் -  

‘எனக்கு... அ… அஹ்... வலிப்பு வர்றதுபோல இருக்கு... யாராவது உத… உதவி செஞ்சா… ப்ளீஸ் எனக்கு உதவி... (குரல் வெகுவாக இறங்கித் தடுமாறுகிறது. பிறகு மேலும் ஏறுகிறது) நான் சாகப்போ....றேன்... உதவ முடிஞ்சா... ப்ளீஸ், நான் செத்துட்டு இருக்கேன்... உத... உதவி! (சில முனங்கல்கள் பின் அமைதி).

இப்போதுதான் உண்மைப் பரிசோதனையின் மையக்கட்டம் வருகிறது. உண்மையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நம் மாணவர், தன் அறையை விட்டு வெளியேறிச் சென்று ‘வலிப்பால் அவதிப்படும் சக மாணவருக்கு' (என அவர் நினைக்கும் பரிசோதனையாளருக்கு) உதவுவாரா?

இந்தப் பரிசோதனையை ‘பல மாணவர்கள்’ பங்கேற்பதுபோலவும் வடிவமைத்தார்கள். ஒருவர் மட்டுமே பரிசோதனையாளருடன் (‘சக மாணவன்’) பங்கேற்பதுபோலவும் வடிவமைத்தனர்.

ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டவருடன் இருப்பதுபோல ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையில், அபய ஒலியைக் கேட்ட மாணவர்களில் ஏறத்தாழ அனைவருமே (98 சதவீதம்) வலிப்பால் பாதிக்கப்பட்டவருக்காக உதவ தங்கள் அறையை விட்டு வெளிவந்தனர். ஆனால், தாங்கள் மொத்தமாக நான்கு பேர் இருந்து உரையாடுவதாக மாணவர்கள் நினைகும்படி உருவாக்கப்பட்ட சூழ்நிலையில், 31 சதவீதத்தினரே உதவ முன்வந்தனர். மூன்று பேர் என நினைத்தவர்களில் 62 சதவீதத்தினர்.

அதாவது, ஒரு நபர் பாதிப்புக்கு உள்ளாகும்போது, அவருடன் அதிக ஆட்கள் இருக்கும்பட்சத்தில், பாதிப்பிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு, நிற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு மாறுபடுகிறது. ஒரு பொது இடத்தில் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். அடுத்த 45 விநாடிகளில் அவர் காப்பாற்றப்படுவாரா இல்லையா என்பதற்கான சாத்தியக்கூறு, அவருடன் ஒரே ஒரு நபர் நிற்கும்போது 50 சதவீதம் என்றால், அதே இடத்தில் ஐந்து ஆட்கள் நின்றுகொண்டிருந்தால் 0 சதவீதம். இந்த சமன்பாட்டு முரண்நகை அதீதமாக இருக்கலாம். ஆனால், இதில் ஒரு உண்மையும் இருக்கிறது.

டார்லேயும் லடானேயும் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் – பொதுவாக, சக மனிதனுக்குப் பொதுஇடத்தில் ஒரு பாதிப்பு ஏற்படும்போது, ஒரு துரும்பைக்கூட அசைத்துப்போடாமல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், அதனாலேயே மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என நாம் பிறரை மதிப்பிட்டுவிடலாகாது. இந்தப் பரிசோதனையில் உதவ முன்வராதவர்கள், பின்னர் பரிசோதனையின் பொறுப்பாளர்களிடம், பாதிக்கப்பட்டவர் நன்றாக இருக்கிறாரா? சரியான நேரத்தில் அவரை காப்பாற்றிவிட்டார்களா என கரிசனத்துடன் விசாரித்தனர். அவ்வாறு விசாரிக்கும்போது அவர்கள் போலி அக்கறை காட்டவில்லை. நடுக்கத்துடனும் உண்மையான ஆதங்கத்துடனும் அவர்கள் விசாரித்தனர்.

டார்லே மற்றும் லடானேயின் கூற்றுப்படி, உதவ முன்வந்தவர்களைவிட இவர்களே உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆக, அவர்கள் உதவக்கூடாது எனும் முடிவுடன் செயல்படவில்லை; மாறாக, முடிவெடுக்கமுடியாத அசெளகரிய நிலையில் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவரைச் சுற்றி நிற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உதவியின் அளவையும், அந்த உதவி கிடைக்கும் வேகத்தையும் நிர்ணயிக்கிறது. ஆனால், உதவியை அது மட்டுமே நிர்ணயிப்பதில்லை. ஒரு பொதுஇடத்தில் நடைபெறும் அசம்பாவிதத்தின்போது அதைப் பார்க்கும் ஒரு தனிநபரின் எதிர்வினை, சூழ்ந்திருக்கும் நபர்களின் நடத்தைகளாலும் பாதிக்கப்படுகிறது.

  • நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனின் பயணிகள் காத்திருக்கும் அறையில், இரு பெண்கள் ‘ப்ரிஸ்பீ' – தட்டையான வட்டைத் தூக்கி எறிந்து பிடிக்கும் விளையாட்டு - விளையாடுகின்றனர். தவறுதலாக அது மற்றொரு பெண் மீது சென்று விழுகிறது. அந்தப்பெண் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிரித்தபடியே அவளும் அந்த விளையாட்டில் ஈடுபடுகிறாள். அந்த அறையில் இருந்தவர்களில் 86 சதவீதத்தினரும் அந்த விளையாட்டில் சிரித்தவாறே பங்குபெறுகின்றனர் அல்லது விளையாடுபவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

  • நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனின் பயணிகள் காத்திருக்கும் அறையில் இரு பெண்கள் ‘ப்ரிஸ்பீ' விளையாடுகின்றனர். தவறுதலாக அது மற்றொரு பெண் மீது சென்று விழுகிறது. அந்தப்பெண்ணோ அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக எரிந்துவிழுகிறாள். இப்படி பொதுஇடத்தில் ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறீர்களே, கண்ணில் பட்டால் என்ன ஆகும் என கேட்கிறாள். ‘ப்ரிஸ்பீ'யை உதைத்துத் தள்ளுகிறாள். இப்போது அந்த அறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பிரயாணிகள் வரை வந்து, அந்த சிறுமிகளைக் கண்டித்து விளையாட்டை நிறுத்தும்படி கூறுகின்றனர்.

இதுவும் டார்லே-லடானே குழுவினரால் வடிவமைத்து அரங்கேற்றப்பட்ட மற்றொரு சமூக உளவியல் பரிசோதனைதான். விளையாடும் பெண்களும், அந்த மற்றொரு பெண்ணும் பரிசோதனையாளர்களால் அனுப்பப்பட்டவர்கள். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது, காத்திருந்த பயணிகளின் நடத்தை.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஜான் டார்லே வடிவமைத்த மற்றொரு பரிசோதனை. பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களில் சிலர், தனியாகத் தனி அறைகளில் அமர்ந்து சில படங்களை வரைய வேண்டும். வேறு சிலரோ, ஜோடியாக அமர்ந்து வரைய வேண்டும். அவ்வாறு ஜோடியாக அமர்ந்து வரைபவர்களில் சிலர், ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்தபடி அமர்ந்து வரைய வேண்டும். மற்றவர்களோ முதுகுக்கு முதுகாக அமர்ந்து வரைய வேண்டும். இவ்வாறு வரைந்துகொண்டிருக்கும்போது திடீரென அடுத்த அறையில் ஏதோ ‘தட தட'வென விழுந்த ஒலி கேட்பதுடன், ‘ஐயோ அம்மா என் கால் போச்சே!' என ஒரு ஓலமும் கேட்கும்.

தனியாக அமர்ந்திருந்தவர்களில் 90 சதவீதத்தினர், ஒலி கேட்டதும் உதவிட எழுந்தனர். இது நாம் ஏற்கெனவே பார்த்த பரிசோதனை முடிவுகளுடன் ஒத்துப்போகிறது. ஆனால், அடுத்த பகுதிக்கு வருவோம். ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தவர்களில் 80 சதவீதத்தினரும், முதுகுக்கு முதுகாக அமர்ந்திருந்தவர்களில் 20 சதவீதத்தினரும் உதவிட எழுந்தனர். தனியாக இருப்பதும், ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அல்லது முகம் பார்க்காமல் இணைந்திருப்பதும் ஏன் உதவுதலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?

விழுகிற ஒலி கேட்டவுடனேயே அடுத்தவர் முகம் காட்டும் சமிக்ஞைகள், இருவராக இருப்பவரது நடத்தையைத் தூண்டுகிறது. ஆனால், வெறும் ஒலி மட்டுமே கேட்க, அடுத்தவர் முகம் தெரியாமல் இன்னொருவரும் இருக்கிறார் என்பது மட்டுமே அறியப்பட்டிருக்கையில், உதவ எழும் எதிர்வினையை அது தாமதப்படுத்துகிறது.

ஒரு அறைக்குள் மூவர் இருக்கின்றனர். அந்த அறைக்குள் ஒரு திறப்பின் வழியாக சிறிதளவு புகை வர ஆரம்பிக்கிறது. அங்கு இருக்கிறவர்களில் இருவர் சில நொடிகள் அந்தப் புகையை பார்த்தபின் தன் தோள்களைக் குலுக்கி ‘இது ஒன்றுமில்லை' என்பதுபோல் நடந்துகொள்கின்றனர். ஒரு அறைக்குள் ஒருவர் மட்டும் இருக்கிறார். அந்த அறைக்குள் ஒரு திறப்பின் வழியாக சிறிதளவு புகை வர ஆரம்பிக்கிறது.

‘மூவர் இருக்கும் அறை' பரிசோதனைகளில், புகை செலுத்தப்பட்டு ஆறு நிமிடங்கள் வரை (அதுதான் பரிசோதனையின் கால அளவும்கூட) எவரும் புகை குறித்து புகார் செய்யவில்லை. ஆனால், ஒருவர் மட்டும் இருக்கும்படியாக நடத்தப்பட்ட பரிசோதனைகளிலோ, இரண்டு நிமிடங்களில் 75 சதவீதத்தினர் புகை குறித்து புகார் செய்துவிட்டனர்.

டார்லே மற்றும் லடானேயால் வடிவமைக்கப்பட்ட இன்னொரு பரிசோதனை இது.

நாம் தனி மனிதனாக முடிவெடுத்து செயல்படுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால், நம் நடத்தை உண்மையில் உடன் இருப்போரின் நடத்தை மற்றும் அறிதல்களால் தாக்கம் அடைகிறது.  இந்த நடத்தை நிகழ்வை டார்லே மற்றும் லடானே பன்மைத்துவ அறியாமை (pluralistic ignorance) என அழைக்கின்றனர். ஒருவரின் தனித்துவ வெளிப்பாட்டினை தடை செய்யும் பொறுப்புணர்வு விகிதப்படுதலும் சரி, பன்மைத்துவ அறியாமையும் சரி, ஆபத்தில் இருப்பவருக்கு உதவுவதை தடுக்கும்விதத்தில் செயல்படும் காரணிகளாக அமைகின்றன.

இந்த உளவியல் பரிசோதனைகள் காட்டும் முக்கிய உண்மைகள், ஆபத்தில் இருக்கும் ஒரு மானுட உயிர் காப்பாற்றப்படுவதைக் குறித்ததாகும். ஆபத்தில் இருப்பவரை அவரைச் சூழ்ந்திருப்போர் காப்பாற்றாமல் வேடிக்கை பார்ப்பது, சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சி மறத்துவிட்டதால் என்கிற எதிர்மறை கருத்தாக்கம் தவறானது; மேம்போக்கான மனச்சித்திரத்தை உருவாக்குவது. உண்மை, அதிக சிக்கலும் பன்முகத்தன்மையும் வாய்ந்தது என்பதை டார்லே மற்றும் லடானேயின் பரிசோதனைகள் காட்டுகின்றன.

படுகொலைபோல ஒரு அசாதாரண சூழல் மனத்தில் ஏற்படுத்தும் பெரும் அதிர்ச்சியும், பொறுப்புணர்ச்சியின் விகிதாச்சாரப்படுதலும், சுற்றி இருப்போரின் நடத்தை விளைவிக்கும் பன்மைத்துவ அறியாமையுமாக இணைந்து உருவாக்கும் ஒரு உளவியல் வலையில் தனிமனித அகம் சிக்கி, சில கணங்களேனும் உறைந்து நிற்கிறது. உயிராபத்தில் இருப்பவருக்கு அந்தச் சில கணங்களே மிகவும் முக்கியமானவையாக அமையும்போது, அந்த உறைந்த கணங்கள் மரணத்தை விளைவிப்பவையாகக்கூட மாறிவிடுகின்றன.

இந்த வலையில் அகப்படாமல் இருக்க, பொதுப்பண்பாட்டில் பிறர்-வலி உணர்தலை உருவாக்க வேண்டும். ஒரு அனுகம்ப (empathy) சூழலை உருவாக்க வேண்டும். சமயத்தன்மை கொண்டவனென்பவர் பிறர் வலியை தன்வலியாக உணர்பவன் என்பதை அனைத்து ஆன்மிகக் குரல்களும் கூறுகின்றன.

டார்லேயும் லடானேயும் பரிசோதனைகள் மூலம் அறிந்த இந்த உறைநிலைக்கான வலையை சமய நெறிகள் இயல்பாகவே உணர்ந்துள்ளன. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுவதை’ ஒரு ஆன்மிக மதிப்பீடாக அவை வைத்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலில் சொல்லப்பட்ட ஒரு கதை இன்று உலகம் முழுக்க பிரபலமடைந்துள்ளது. ‘நல்ல சமாரியன்’ கதை என தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் கதை, இந்த விஷயத்தின் சாராம்சத்தை பேசுகிறது. உன் அண்டை மனிதனை உன்னைப்போலவே அன்பு செய்வாயாக என்பது விதி. யூத விவிலியத்தின் லேவியராகமம் (19:18) இதைக் கூறுகிறது. இதற்கான விவாதத்தில் ஒரு சட்ட அறிஞர் கேட்கிறார். ‘உன் அண்டை மனிதன் என்பவன் யார்?’ அவன் உன் பக்கத்து வீட்டுக்காரனா? அவன் உன் உறவினனா? உன் மதத்தவனா? உன் சாதிக்காரனா? யார்? இதற்கான பதிலாகச் சொல்லப்பட்டதுதான் இக்கதை – உலகின் மிகச்சிறந்த போதனை கதை என ஐஸாக் அஸிமாவ் இக்கதையைப் புகழ்ந்துரைக்கிறார்.

தனிப்பாதை ஒன்றில் கள்வர்களால் தாக்கப்பட்டு விழுந்துகிடக்கும் மனிதன். அவனைத் தாண்டிச் செல்கின்றனர் பலர். ஒரு மத குரு அவனைக் கண்டும் காணாமல் செல்கிறார். அங்கு வந்த உயர் குலத்தோரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, சமாரியன் அங்கே வருகிறான். அவனைக் கண்டு அவனைத் தூக்கி நீர் அளிக்கிறான். காயங்களுக்கு மருந்து போடுகிறான். இப்போது கேள்வி கேட்ட சட்ட வல்லுனரிடம், கதை சொன்னவர் கேட்கிறார் - ‘காயம்பட்டுக் கிடந்தவனின் அணுக்கத்தவன் யார்?’ அந்தச் சமாரியனே என்கிறார் அந்தச் சட்ட வல்லுனர். (லூக்கா 10:31-7).

அஸிமாவ் இங்கு ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார். இக்கதை ஏசு கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்காலகட்ட சமுதாயத்தில், சமாரியர்கள் பிற யூதர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள். ஆனால், அப்படி ஒரு சமாரியனையே ஏசு இங்கு வழிபோக்கனின் அணுக்கத்தவனாக யூத சட்ட வல்லுனரைச் சொல்லவைக்கிறார். இக்கதையை, ‘நல்ல சமாரியன்’ எனச் சொல்லும்போது, இதிலிருக்கும் அந்த நுண்ணிய செய்தி மறக்கடிக்கப்பட்டுவிடுகிறது என்கிறார் அஸிமாவ். அத்துடன், இக்கதையில் எவ்விடத்திலும் சமாரியன் என்று மட்டுமே சொல்லப்படுகிறது. ‘நல்ல சமாரியன்’ எனச் சொல்லப்படவில்லை என்கிறார். பின்னர், அஸிமாவ் ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் -

“நாளை உங்கள் உயிரைக் காப்பாற்ற, உங்களைப் போலவே நீங்கள் அன்பு காட்ட வேண்டிய அந்த அயலான் யார்?”

மிக மோசமான வன்முறையை நாம் நம் பொதுவெளிகளில் பரப்பியபடியே இருந்திருக்கிறோம். ‘வொய் திஸ் கொல வெறி…’ வெட்டுவேன் அடிப்பேன் என்பது போன்ற ‘வீர’ ரௌடித்தனமும் நம் பொதுவெளி எங்கும் தாண்டவமாடுகின்றன. வன்முறைக்கு உறையும் அதிர்ச்சியைத் தாண்டி, அதற்கு சகஜமாக எவர் செத்தால் என்ன, அது சகஜம் என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒருவர் கொல்லப்படும்போது கொல்லப்பட்டவர், கொலையாளி இவர்களின் மதத்தையும் சாதியையும் வைத்து தங்கள் எதிர்வினைகளை வடிவமைக்கும் அறிவுஜீவிகளும் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.  

நம் பொதுவெளியில், நாம் அன்பையும் அனுகம்பத்தையும் பரப்பும் ஒரு சூழலை உருவாக்கவேண்டி உள்ளது. ‘வைஷ்ணவ ஜனதோ…’வும் வள்ளலாரும் நம் பொதுவெளிகளில் மென்மையாகக் கேட்டபடி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நியாயம் இங்கே இருக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் தேவைதான். ஆனால், அவற்றைக் காட்டிலும் ஆற்றலும் திறமையும் வாய்ந்த மாற்றாக அமைபவை  அன்பின் கண்கள். அவை நமக்கு அமையும்போது, டார்லே-லடானே கண்டறிந்த ‘விகிதப்படும் பொறுப்புணர்வும் பன்மைத்துவ அறியாமையும்’ நம் மீது விரிக்கும் வலையிலிருந்து நம்மை விடுவித்து, அந்த முக்கிய சில கணங்களில் செயலாற்ற வைக்கக்கூடும்.

ஸ்ரீ கந்த குரு கவசம் சொல்கிறது - ‘அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com