மிர்சியா எலியட் (Mircea Eliade), சமய ஆராய்ச்சியாளர். சமய அனுபவங்கள் குறித்தும், அவை மானுட வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகின்றன, அவை மானுட வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கின்றன என்பன போன்ற விஷயங்களையும் ஆராய்ந்தவர். நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள ஒரு விஷயம், திடீரென்று ஒரு அனுபவ வெளிப்பாட்டில் இறைத்தன்மை கொண்டதாக மாறுகிறது. புனிதத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதை அவர் ‘ஹியிரோபனி’ (Hierophany) எனும் பதத்தால் குறிப்பிடுகிறார்.
ஒரு நதி தீர்த்தமாவதும், வெண்பனி மலை இறைவாசஸ்தலமாவதும், ஒரு ஒலி புனிதக் குறியீடாவதும் ‘ஹியிரோபனி’ எனலாம். புனித வெளிப்பாடு என இதைக் குறிப்பிடலாம். இப்புனித வெளிப்பாடுகள், அடிப்படையில் ‘மறையுணர்வு அனுபவங்கள்’ (Mystic Experiences). இவை மானுட மதங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றன.
ஆபிரகாம் மாஸ்லோவ்
ஆபிரகாம் மாஸ்லோவ், உளவியலாளர். 1930-களின் இறுதியில் அவர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். பொதுவாக, நோயுற்ற மானுட மனங்களை உளவியல் துறை ஆராய்ச்சி செய்கிறது. அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்குகிறது. மாறாக, நல்ல மன ஆரோக்கியம் கொண்டவர்களின் மனங்களை ஆராய்ச்சி செய்தால் என்னவென்று அவர் கருதினார். தன்னால் முடிந்தவரை, மிகச்சிறந்த ஆரோக்கியமான மன வாழ்க்கை வாழ்கிறவர்கள், கனிந்த வாழ்க்கை வாழ்பவர்கள் என்று தான் கருதியவர்களை அவர் ஆராய்ந்தார். அவர்கள் பல்வேறு தரப்பினர், பல்வேறு சூழல்களில் வாழ்ந்த மக்கள். அவர்களிடம், பல தனிப்பட்ட சிறப்பான குணங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் அனைவரையும் இணைத்த ஒரு விஷயம் இருந்தது.
அவர்கள், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு அனுபவத்தைப் பெற்றிருந்தனர். “பெரும் மகோன்னதம். பெரும் மகிழ்ச்சி. ஆனந்தம். பேரானந்த உணர்வு. அனைத்து அச்சங்களும் அனைத்து ஐயங்களும் அனைத்து இறுக்கங்களும் துளியும் மீதமில்லாமல் அகன்றுவிட்ட முழுமையான தூய ஆனந்தம். அனைத்து வேறுபாடுகளும் வேற்றுமைகளும் இல்லாதாகி அனைத்தும் தன்னுடன் இணைந்து நிற்கும் உணர்வு” என அவர் கூறுகிறார். இவற்றை, உச்ச அனுபவங்கள் (Peak Experiences) என அவர் வகைப்படுத்தினார்.
தியானம் செய்யும்போதோ அல்லது இறை வழிபாட்டில் ஈடுபடும்போதோ என்று அல்ல; எந்தத் தருணத்திலும் அவர்கள் இதை உணர்ந்திருக்கக்கூடும். ஒரு இல்லத்தலைவி கூறினார்: ‘‘கழுவ வேண்டிய பாத்திரங்கள் நிரம்பி இருக்கின்றன. கணவனும் குழந்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டனர். ஜன்னல் அருகே பாத்திரங்களைக் கழுவ நின்றபோது திடீரென இவ்வுணர்வு என்னை நிரப்பியது”. அந்தத் தருணம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒளிகொண்ட ஒன்றாக மாற்றியது.
இத்தகைய உச்ச அனுபவங்களின் மிகவும் திரண்ட வலிமையான ஒரு வடிவமே, மறையுணர்வு அனுபவங்கள். இந்த அனுபவங்களால் ஆட்கொள்ளப்படும் தனி மனிதர்கள், பின்னர் வரலாற்றின் போக்கையும் பண்பாட்டின் பாதையையும் தீர்மானிக்கும் அமைப்புகளை உருவாக்க முடிந்திருக்கிறது. இவற்றிலிருந்தே, மதம் மட்டுமல்ல; மானுட சமுதாயமும் பரிணாம வளர்ச்சி அடைகிறது.
மறையுணர்வு அனுபவமும், அந்த அனுபவத் தேடலும் மனிதர்களுக்கே உரியது என நாம் கருதி வருகிறோம். கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்த தொல்மானுட கிளை இனத்தை, ஹோமோஹேபிலிஸ் (Homohabilis) என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோல, மானுட பரிணாமத்தின் ஒரு காலகட்டத்தில் - குறிப்பாக நவீன காலகட்டத்துக்கு முன்னர் - உலகின் அனைத்துத் தன்மைகளிலும் ஒரு புனிதத்துவத்தை ஏற்றிப்பார்க்கும் மானுடத்தை, ஹோமோரிலிஜியோஸஸ் (Homoreligiosus) என்று மிர்ஸியா எலியட் குறிப்பிடுகிறார். இது, சமயத்தன்மை கொண்ட தனி மனிதர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மானுட சமுதாயமும் மதத்தை எப்படி உணர்கிறது என்பதையும் குறிக்கும் சொல். இன்றைய சமயவியலாளர்களான கேரன் ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்கள், தொல் கற்காலம் தொடங்கி மானுட இருப்பில் சமயம் ஒரு முக்கியப் பங்கை வகித்தது என்று காட்ட இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆதி மானுடத்தின் மறையுணர்வு அனுபவங்களை உருவாக்கியதில், மிக முக்கியப் பங்கு இயற்கையின் பேரிருப்புக்கு உண்டு. விண்மீன்கள் நிறைந்த வான், வானில் மனிதர்கள் கண்ட விண்மீன் சுழற்சிகள், கடலின் பேரலைகள், எரிமலைச் சீற்றங்கள், பேரிடியுடன் பொழியும் பெருமழை – இவை அனைத்தும் ஒரு பேரிருப்பினை மனிதருக்கு ஏற்படுத்தின. மானுடக் குழுக்கள் அனைத்திலும் இவை சமய உணர்வுகளை உருவாக்கின. இவை அனைத்து மக்களிலும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சிலரில், நாம் சமய உணர்வு எனக் கருதும் உணர்வை இவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தன்னைக் கடந்த பேரிருப்பு ஒன்றுடன் தன்னை இணைக்கும் அல்லது இழக்கும் உணர்வு. இப்பேரிருப்பை, விண்ணில் வாழும் ஒரு தெய்வமாகவோ அல்லது எங்கும் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஒன்றாகவோ கருதியது மானுடம். இயற்கையின் மகோன்னதத்தின் மூலம் கிடைத்த உச்ச அனுபவம், அந்தப் பேரிருப்புடனான கண நேர உறவாக, திரை மறைந்து கிடந்த தரிசனமாக மானுடம் உணர்ந்திருக்கும்.
அந்தத் தரிசன அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெற சடங்குகள் உருவாக்கப்பட்டன. அத்துடன், கூட்டு நனவிலியிலிருந்து எழும் புராணங்கள்; அகக்குறியீடுகள்; பின்னர் இறையியல், நம்பிக்கைகள்; அமைப்பு ரீதியிலான மதம். ஆனால், அனைத்துக்கும் அடிப்படையில் ஆதி மானுடம் கண்டடைந்த அதே உச்ச மறையுணர்வு அனுபவம். எந்த மறையுணர்வு அனுபவம் ஆதி மனிதனைக் குகை ஓவியங்களை உருவாக்கத் தூண்டியதோ; எந்த மறையுணர்வு அனுபவம் ஆதி மனிதனைத் தொல் சடங்குகளை உருவாக்கி விண் பார்த்து ஓலமிட்டு அழவைத்ததோ, அதே மறையுணர்வுதான் மானுடத்தின் மிகப்பெரிய தனிப்பெரும் சாதனையாகக் கருதப்படும் அறிவியலையும் இயக்கியது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு, அறிவியலின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆபிரகாம் மாஸ்லொவ், அறிவியல் குறித்துப் பேசும்போது, அது சமய உணர்விலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துகொள்வதால், பெரும் மதிப்பீட்டுப் பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று கூறினார். இதற்கான சிறந்த உதாரணமாக அவர் கூறியது, நாஸி ஜெர்மனியில் மனிதர்கள் மீது அறிவியலாளர்கள் செய்த கொடூரமான பரிசோதனைகள். குறிப்பாக, (இந்திய வம்சாவளியினரான) ஜிப்ஸி குழந்தைகள் மீது மானுடத்தன்மை சிறிதும் அற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. இத்தகைய காலகட்டத்தில்தான், மானுடத்தின் மிகச்சிறந்த அறிவியலாளராக இருந்த ஐன்ஸ்டைன், அமைதி குறித்தும், மானுட சமத்துவம் குறித்தும் பேசினார். அத்துடன், தம் அறிவியல் தேடலுக்கு அடிப்படையாக, மானுட மதங்கள் கடந்த பெரும் சமய உணர்வு குறித்தும் பேசினார்:
நாம் அனுபவிப்பதிலேயே மிக அழகிய விஷயம் மறைத்தன்மை உணர்வாகும். அதுவே, உண்மையான கலைக்கும் அனைத்து அறிவியலுக்கும் மூலாதாரம். இதை அறிந்திடாத எவரும் அதிசயிக்க இயலாது. சொல்லொணாத பிரமிப்பில் ஆழ்ந்திட முடியாது. அத்தகையவர்கள் வாழ்ந்தும் இறந்தவரே. அவர்கள் அணைந்துவிட்ட தீபம். நாம் அணுகிடவும் முடியாத ஒரு பேருண்மை, தன்னைத்தானே பேரறிவாக வெளிப்படுத்துகிறது. அதன் பேரொளி கொண்ட அழகில், தூலமாகத் தெரியும் வடிவங்களை மட்டுமே நம் சாதாரண புலனுணர்வுகள் எட்டுகின்றன. இந்த அறிவு, இந்த உணர்வு – இதுதான் உண்மையான சமய உணர்வு. இப்பொருளில், இப்பொருளில் மட்டுமே மிக மிக சமயத்தன்மை கொண்ட மனிதர்களில் ஒருவராக என்னை நான் கருதுகிறேன்.
உச்ச அனுபவங்களிலிருந்தே சமயம் பிறக்கிறது. கலைக்கும் அறிவியல் தேடலுக்கும் இதுவே ஆதாரம். ஆனால், இது மானுடத்துக்கு மட்டுமே உரிய ஒன்றா?
நீர்ச்சடங்கு
சிம்பன்ஸிகள் கருவிகள் பயன்படுத்துவதைக் கண்டறிந்தவர் ஜேன் குடால். மனிதர்களைப் பிற ‘விலங்குகளிடம் இருந்து’ பிரித்துக் காட்டுவது, கருவிகளை மானுடம் பயன்படுத்துவதுதான் என, அன்றைக்கு வரை சொல்லப்பட்டு வந்தது. ஜேன் குடாலின் கண்டுபிடிப்பு, பெரும் மாற்றத்தை இப்பார்வையில் ஏற்படுத்தியது. அவர் சிம்பன்ஸிகளில் அவதானித்த மற்றொரு விஷயம், அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை. அறிவியலாளர்களின் சிறுவட்டங்களில் பெரும் புயல் கிளப்பியதென்றாலும், அது குடாலின் பிற கண்டடைவுகளைப்போல் பெரிய அளவில் பேசப்படவில்லை.
மழை என்பது சிம்பன்ஸிகளுக்குக் கொஞ்சம் கஷ்டம் கொடுக்கும் விஷயம்தான். முடிந்தவரை, நல்ல இடமாகப் பார்த்து மழைக்கு ஒதுங்க வேண்டும். ஆனால், ஜேன் குடால் ஒரு விஷயத்தைக் கவனித்தார். சில ஆண் சிம்பன்ஸிகள், குழுவாக (அவர் பார்த்தது ஐந்து ஆண் சிம்பன்ஸிகள்) மழையில் வேண்டுமென்றே நடனமாடுவதைக் கவனித்தார். இதைப்போலவே மற்றொரு விஷயத்தையும் அவர் கவனித்தார். மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஒன்று. அதனருகே ஒரு ஆண் சிம்பன்ஸி செல்கிறது. அருகே செல்லச் செல்ல, சிம்பன்ஸியின் உடல் ரோமங்கள் மெல்ல மெல்ல மயிர்கூச்சடைந்தன. நீர்வீழ்ச்சிக்கு அருகே நிற்கும்போது, உடல் ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. சிம்பன்ஸி, மெல்ல ஒரு நடனம் போன்ற இயக்கத்தை – தாளகதி கொண்ட இயக்கமொன்றை ஆரம்பிக்கிறது. அங்கிருக்கும் சிறு சிறு கற்களை எடுத்து ஓடும் நீரில் எறிகிறது. சுமார் 10 - 15 நிமிடங்களுக்கு இந்த நடனமும் சடங்கும் நீடிக்கிறது.
இந்தச் செயல்பாடுகள், நாம் சொல்லக்கூடிய பிரமிப்பும் சொல்லொணாத வியப்பும் கொண்ட ஒரு உணர்ச்சியிலிருந்து எழுவதாக ஏன் இருக்கக்கூடாது? இந்த நீர்வீழ்ச்சி நடனச் சடங்குக்குப் பின்னர், சிம்பன்ஸி ஒரு பாறையில் அமர்ந்து அமைதியாக நீரைப் பார்க்கிறது. இந்த நீர் என்பதுதான் என்ன? போக்கும் வரவும் கொண்ட நீர். போக்கும் வரவும் தாண்டி அங்கே நீராகவே ஓடிக்கொண்டிருக்கும் நீர். கண்ணுக்குத் தெரியாத எது அந்தத் திடீரென ஏற்பட்ட பேரிடி ஓசையை, பெரும் கூச்சலுடனான சூறைக்காற்றை, நிற்காமல் பொழியும் பெருமழையை ஏற்படுத்தியது? சிம்பன்ஸிகளின் உறைவிடங்களான மரங்களை அசைத்து ஆட்டும் அந்தப் பெருமழை எங்கிருந்து வந்தது? சிம்பன்ஸிகளிடம் பேசும் மொழி இருந்ததென்றால், அது ஒரு பாகனீய இயற்கை வழிபாட்டுச் சமயமொன்றை உருவாக்கியிருக்காதா?
சங்கடமான கேள்விதான். மழையைக் கண்டு பாரதி வியந்து கிளர்ச்சி அடைந்து பாடினார். அதை ஒத்ததோர் பாடல் மொழிகளால் தொடப்படாமல், சிம்பன்ஸிகளின் மழை நடனத்திலும் உள்ளுறைந்திருக்குமா?
திக்குக்கள் எட்டுஞ் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்துவெள்ளம்
பாயுது பாயுது பாயுது …. அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று ….
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
நெருப்பு சடங்கு
2010-ல், ஆராய்ச்சியாளர்களால் மற்றொரு விஷயம் வெளிக்கொணரப்பட்டது. நீர் மட்டுமல்ல, நெருப்பும் சிம்பன்ஸிகளிடம் அதே கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. காட்டுத்தீ ஏற்படும்போது, சிம்பன்ஸிகளில் முதன்மை ஆண், அந்தத் தீயின் முன்னால் ஒரு சடங்கு நடனம் ஆடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரினக் குரங்குகளை ஆராய்ச்சி செய்யும் முனைவர் ஜில் ப்ரயுட்ஸ் (Jill Prutez), சிம்பன்ஸிகளால் தீயை மனத்தில் உருவகப்படுத்த முடியும் என்பதுடன், தீயை அவற்றால் கையாள முடிவதும், கட்டுப்படுத்த முடிவதும்கூட ஆவணப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஜில் ப்ரயுட்ஸ்
‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா’ எனப் பாரதி பாடிய உணர்ச்சிகளின் மூலவேர் நம் பரிணாம தாயாதிகளிடம் இருக்கிறதா? உலகமெங்கும் இறையை ஒளியாக வணங்குகிறோம். நெருப்பு ஏதோ ஒருவிதத்தில் புனிதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இவ்வகைச் செயல்பாடுகளின் ஆதார உணர்ச்சிகள், மானுடம் கடந்த பரிணாம சங்கிலிகளால் இணைக்கப்பட்டுள்ளன.
நிலம்
பல இடங்களில் சிம்பன்ஸிகளின் கல் எறியும் சடங்கு நடப்பதைப் பேரினக் குரங்குகளை ஆராய்ச்சி செய்வோர் கண்டிருக்கிறார்கள். இது ஒருவித கவன ஈர்ப்பு – குறிப்பாக, மற்ற பாலினத்தை ஈர்க்கச் செய்யப்படும் - நடவடிக்கை என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், அண்மையில் ஒரே மரத்துக்கு வந்து சிம்பன்ஸிகளால் மீண்டும் மீண்டும் கற்கள் எறியப்பட்டு, அவை குவிந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
ஒளிவாக வைத்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சிம்பன்ஸி நடவடிக்கைகளில், ஒரு சிம்பன்ஸி வந்து தயங்கித் தயங்கி நின்று கல்லை எடுத்து ஒரு மரத்தின் வேரில் எறிவது தெரிகிறது. பின்னர், அந்த மரத்தடியில் தேடுகையில் பல கற்கள் அவ்வாறு எறியப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.
இதையடுத்து, பல்வேறு இடங்களில் சிம்பன்ஸி நடவடிக்கைகளை அவதானிக்கும் ஆராய்ச்சியாளர்கள், மரத்தடி பொந்துகளில் இப்படிக் கற்கள் குவிந்திருப்பதைக் கண்டடைந்தனர். உலகமெங்கும் உள்ள புனித மரங்களை வழிபடும் மானுடக் குழுக்களில், அவற்றைச் சுற்றிக் காணப்படும் கற்களைப் போன்றே இவையும் காணப்படுவதை கள-ஆராய்ச்சியாளர் லாரா கேஹோ குறிப்பிடுகிறார். நிலம் சார்ந்த புனிதச் சடங்குகளின் பரிணாம உதயத்தை நாம் சிம்பன்ஸிகளில் காண்கிறோமா?
சடங்கிலிருந்து கருவிகளின் உதயம்?
நரம்பியக்க அறிவியலாளர் மெர்லின் டொனால்ட் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்: ‘மிமெஸிஸ்’ (Mimesis) – தன்னுணர்வுடன் ஒரு செயலை நினைவில் கொண்டுவந்து, திரும்பத் திரும்ப செய்வதுடன், அதனை மேலும் சீர்படுத்துவது. அதாவது, ஒரு செயலை செய்வதற்கான நரம்பியக்கங்களை மீண்டும் மீண்டும் தூண்டி, அதனை மேலும் மேலும் இலக்கை அடைய சீர்செய்வது.
பபூன்கள் எனும் பேரினக் குரங்குகள், அவ்வப்போது கற்களை எறிவதுண்டு. ஆனால், பபூன்கள் அவ்வப்போது அந்தந்தச் சூழலில் உந்தப்படும்போது அப்படிக் கற்களை எறிகின்றனவே தவிர, அவற்றைப் பயன்படுத்துவதை ஒரு கலையாக அவற்றால் வளர்த்தெடுக்க இயலவில்லை. ஏனென்றால், அதற்கு ஒரு செயலைச் செய்வதை மீண்டும் நினைவுபடுத்தும் தன்மை அவசியம். அப்படிச் செய்ய ஒரு விலங்கினால் இயலாது என்கிறார். எனவே, முழுக்க முழுக்க புறச்சூழல்களால் மட்டுமே கற்களைக் கருவியாகப் பயன்படுத்த உந்தப்படும் பேரினக் குரங்குகள், ஒரு கட்டத்தில் தேக்கமடைந்துவிடுவதாக அவர் கூறுகிறார்.
ஆனால் சிம்பன்ஸிகளின் கல்லெறிதல் சடங்கு, கருவிகளைக் (கற்கள்) கொண்ட மிமெஸிஸ் செயல்பாட்டை உருவாக்குகிறது. அதாவது, நாம் கற்களைக் கருவிகளாக்க ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து சீர்மைப்படுத்துவதை எங்கிருந்து பெற்றோம் என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் முன் ஏற்படும் பேருணர்வு, அதிலிருந்து முகிழ்க்கும் சடங்குகள், பின்னர் அதிலிருந்து கருவிகளை உருவாக்குதல்…. மானுட பரிணாமத்தின் மிக முக்கியக் கட்டத்தை ஆதியில் அடைய சடங்குச் செயல்பாடு உதவியிருப்பதை நாம் இப்போது பிரத்யட்சமாக சிம்பன்ஸிகளில் காண்கிறோமா?
எனில், நாம் பொறுத்திருக்கலாம். சில பல்லாயிரம் ஆண்டுகளில், சிம்பன்ஸிகளும் நம் மானுட அறிவியலாளர்களுடன் இணைந்து அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கலாம். பிரபஞ்சத் தேடல்களில் இணையலாம். மதத்தின் ஆதார வேட்கை என்பதை உயிரின எல்லைகளைத் தாண்டிய உயிரின் அடிப்படை இயக்கமாகக்கூட நாம் கண்டடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.