சொல்லாயோ கோத்தும்பி!

உதாரணமாக, வீட்டு ஈயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையை வெட்டிய, பிறகு அதன் பிற உடல் பாகங்களைப் பத்திரமாக வைத்தால், அதனால் கலவியில் ஈடுபட இயலும்.படம் 4அப்படி தலை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஈக்கள், எட்டு மணி நேரத்தில் ஐந்து தடவை கலவியில் ஈடுபட்டது, பரிசோதனைச் சாலைச் சூழலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாகச் செயல்பாடுகளில் பாதிப்புகள் உள்ளன.
Published on
Updated on
7 min read

அண்மையில் வெளியான ஒரு ஆராய்ச்சித்தாள், சுவாரசியத்தையும் சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது. பூச்சிகள் 'பிரக்ஞை’ (consciousness) குறித்து நமக்கு என்ன கற்பித்துத் தர முடியும்? இக்கேள்வியை எழுப்பியிருப்பவர்கள், ஆண்ட்ரூ பாரன் (Andrew B. Barron) என்கிற உயிரியலாளரும், கோலின் க்ளெய்ன் (Colin Klien) என்கிற தத்துவவியலாளரும். இருவரும் ஆஸ்திரேலியாக்காரர்கள். இவர்களின் ஆராய்ச்சித்தாள் பயன்படுத்தும் தரவுகளும், அதன்மூலம் எழுப்பும் ஆதாரக் கருத்தும் முக்கியமானவை. 'பிரக்ஞை’ குறித்த நம்முடைய அடிப்படையான கருத்துகளை அசையவைப்பவை.

பிரக்ஞையின் கேந்திரம்

பிரக்ஞையை நாம் பொதுவாக மூளையுடன் தொடர்புபடுத்துகிறோம். தமிழில் அதை தன்னுணர்வு எனலாம். தன்னுணர்வு என்பது அகநிலைகளை தன்னை மையப்படுத்தி உணரும் தன்மை என்று சொல்லலாம். பசித்தல் என்பது ஒரு உயிரியல் விழைவு. அதை எல்லா உயிர்களும் உணரும். ஆனால், ‘எனக்குப் பசிக்கிறது’ என உணர்வது தன்னுணர்வு. இது புறஉலகிலிருந்து தன்னை தனியாகப் பிரித்தறிவது. மூளை, புறஉலகை அகவயப்படுத்தி அதை ஒரு கோலமாகத் தீட்டும்போதே ‘தான்’ என்பதை மையப்புள்ளியாக்கிச் செயல்படுகிறது. இதையே தன்னுணர்வின் நரம்பியல் அடிப்படை எனக் கருதுகிறார்கள். இதற்கான கருவியாகச் செயல்படுவது மூளை. இன்னும் சரியாகச் சொன்னால், தண்டுவடம் கொண்ட விலங்குகளில், மூளையின் ஒரு பகுதியான நடு-மூளையே (mid brain), தன்னுணர்வு கொண்ட அறிதலின் கேந்திரமாக இருக்கிறது. தன்னுணர்வு, பேரினக் குரங்குகளில் முழுமையாக வெளிப்படுகிறது.

மூளை இல்லாத பூச்சிகள்?

இப்போது பூச்சிகளுக்கு வருவோம். பூச்சிகள் என நாம் சொல்லும்போது, சிலந்திகூட எட்டுக்கால் பூச்சிதான். ஆனால், விலங்கியலின் மொழியில், பூச்சிகள் ஆறுகாலிகள் (Hexapoda) என அழைக்கப்படுகின்றன. அவை ஒட்டுக்காலிகளும் (Arthropods) கூட. ஆக, விலங்கியல் வரையறையில் சிலந்திப் பூச்சி இல்லை. நம் பூமியின் மிகச்சிறந்த பரிணாம வெற்றியினம் என்பதை பூச்சிகளுக்கே சொல்ல முடியும். சிருஷ்டிகர்த்தர் என ஒருவர் இருந்தால், அவர் நிச்சயமாகப் பூச்சிகளையே தேர்ந்தெடுத்த இனமாகக் கருதியிருப்பார். பல்கிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என அவர் மானுடர்களைப் பார்த்து சொல்லியிருப்பதைக் காட்டிலும், பூச்சிகளைப் பார்த்தே சொல்லியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். பரிணாமவியலாளர் ஹால்டேன் சொன்னார், ‘ஆண்டவர் ஒருவர் இருப்பாரென்றால், அவருக்கு வண்டினங்கள் மீது மிகவும் பாசமான கரிசனம் இருந்திருக்க வேண்டும்’.

பூச்சிகளுக்கு நடுமூளை, முன்மூளை போன்ற பிரிவினைகள், பூச்சிகளின் நியூரோனிய அமைப்பில் கிடையாது. கார்ல் லினேயஸ், பூச்சியினங்களுக்கு மூளையே கிடையாது என்று கூறினார். ஏனெனில், ஒரு பூச்சியின் தலையை நீங்கள் வெட்டிய பிறகும் அதன் உயிரியக்கங்கள் நீடிக்கமுடியும். உதாரணமாக, வீட்டு ஈயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையை வெட்டிய, பிறகு அதன் பிற உடல் பாகங்களைப் பத்திரமாக வைத்தால், அதனால் கலவியில் ஈடுபட இயலும்.

அப்படி தலை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஈக்கள், எட்டு மணி நேரத்தில் ஐந்து தடவை கலவியில் ஈடுபட்டது, பரிசோதனைச் சாலைச் சூழலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாகச் செயல்பாடுகளில் பாதிப்புகள் உள்ளன. பூச்சிகளைப் பொறுத்தவரையில், மூளை எனச் சொல்லப்படுவது சிறிதே சிறப்புத்தன்மை கொண்ட நியூரானிய செல்களின் கூட்டு–காங்க்லியான் (Ganglion) என்பார்கள். அவ்வளவுதான். ஆனால், தொடர்ந்து பரிசோதனைகளில் தெரியவரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்தச் சின்ன அமைப்பும்கூட மிகவும் அடிப்படையான நுண்ணியத்தன்மை உடைய அகச்செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

தேனீக்களின் ‘உணர்ச்சிகள்’?

2011-ல், தேனீக்களைக் கொண்டு ஒரு பரிசோதனை நடைபெற்றது. தேனீக்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒன்றில் இருந்த தேனீக்கள் மிகவும் வேகமாகக் குலுக்கப்பட்டன. மற்றவை அப்படி ஒரு கலவரமான சூழலுக்கு ஆட்படுத்தப்படவில்லை. இப்போது இவற்றுக்கு இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு கலவை அளிக்கப்பட்டது. இக்கலவையில், ஆக்டனோன் என்கிற வேதிப்பொருளும், ஹெக்ஸனால் என்கிற வேதிப்பொருளும் இருந்தன. ஆக்டனோன் இருக்கும் பொருட்கள் தேனீக்களைக் கவர்கின்றவை. ஹெக்ஸனால் என்கிற பொருள், தேனீக்களால் கசப்பு நிறைந்த ஒன்றாக விலக்கிவைக்கப்படுபவை. நம் இரு தேனீ குழுக்களுக்கும், இந்த இரண்டும் இணைந்த கலவை முன்வைக்கப்பட்டது. வேகமாகக் குலுக்கப்பட்டு கலவரச் சூழலுக்கு ஆளாகாத தேனீக்களுக்கு, இந்தக் கலவையில் ஆக்டனோனை முதன்மையாக உணர்ந்தன. அவற்றின் பசியுணர்வை அதிகரிப்பதாக அமைந்தது. கலவரச் சூழலுக்கு ஆளான தேனீக்களோ, இந்த கலவையைக் கண்டு ஒதுங்கின. அக்கலவையில் இருந்த ஹெக்ஸனாலால் உணரப்பட்டு, அந்தக் கலவையை அவை விலக்கின. இப்பரிசோதனை, முதுகுவடம் இல்லாத விலங்குகளில் எப்படி உணர்ச்சிகள் செயல்படுகின்றன எனக் காட்டுவதாக அமைந்தன. நம் அன்றாட மொழியில் சொல்வதாக இருந்தால், எப்படி வன்முறையான சூழலில் வாழும் ஒருவர் எதிர்மறையான விஷயங்களை அந்தச் சூழலில் இருந்து பெறுவாரோ அதேபோல இங்கே நிகழ்ந்திருக்கிறது.

கூட்டு உயிரி அல்லது அதி-உயிரி

பொதுவாக, பூச்சி இனங்களில் மிக நெடுங்காலமாக மற்றொரு நிகழ்வு அவதானிக்கப்பட்டு வருகிறது. கூட்டு மனம் என்பதுதான் அது. ஒரு தேனீ கூடு என்பது ஒரு மகா உயிரி. அதில் உள்ள தனித்தனி பூச்சிகளெல்லாம், அந்த மகா உயிரியின் அல்லது அதி-உயிரியின் பாகங்கள். இது குறித்து பல உயிரியியலாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். தேனீக்கள், எறும்புகள், கரையான்கள் போன்ற சமூக விலங்குகளை ஆராய்ந்த அனைவரும், அச்சமூகங்களை அதி-உயிரிகளாகக் கண்டிருக்கிறார்கள். எறும்புகளை ஆராய்ச்சி செய்த வில்லியம் மார்ட்டன் வீலர், எறும்பு சமூகங்களில் தனிப்பட்ட எறும்புகளின் செய்கைகளைத் தாண்டி முகிழ்த்தெழும் தன்மைகள் (emergent properties) உருவாவதைக் கண்டார். தனிப்பட்ட எறும்புகளுக்கு இல்லாத குணங்கள், ஒருங்கிணைந்த எறும்புக்கூடுக்கு உண்டு. ஒரு தனிப்பட்ட தேனீயின் நினைவாற்றல் என்பதே ஆறு தினங்களுக்கு இருக்குமென்றால், ஒரு தேன் கூடு என்கிற மகா உயிரியின் நினைவாற்றல், ஒரு சராசரி தேனீயின் வாழ்நாட்களைவிடவும் இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

வில்லியம் மார்ட்டன் வீலர்

இப்போது தனிப்பட்ட பூச்சிகளுக்குத் தன்னுணர்வு உண்டு என நாம் கண்டறியும்போது, இந்தக் கூட்டு உயிரினத்தின் தன்னுணர்வு என்பது எப்படிப்பட்டதாகவும், எத்தனை தன்னுணர்வு சார்ந்த இயக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பது வியக்கவைக்கும் ஒரு விஷயமாகும். தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு என்ன என்பதன் அடிப்படை உயிரியியல் செயல்பாட்டை நாம் பூச்சிகளின் தன்னுணர்வுக்கும், அதைத்தாண்டி அவற்றிலிருந்து உருவாகும் கூட்டு அதி-உயிரிகளுக்குமான உறவுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

பூச்சியியலாளர் (entomologist) E.O.வில்ஸன், சமூகத்தன்மை கொண்ட பூச்சிகளின் அடிப்படை இயக்கவியலுக்கும், தண்டுவடம் கொண்ட விலங்குகளின் சமூகப் பரிமாணத்தின் இயக்கவியலுக்கும் சில அடிப்படை ஒற்றுமைகள் இருப்பதை அவதானித்தார். இதிலிருந்து, சமூக-உயிரியல் (sociobiology) என்கிற புதிய இணை-அறிவியல் துறை ஒன்றை வில்ஸன் உருவாக்கினார். அவர் கூறினார் -

பரிணாம உறவில், பூச்சியினங்களும் தண்டுவடம் கொண்ட விலங்குகளும் வெகுதூரமாக இருப்பவை. இந்த இரு விலங்கினக் குழுக்களின் தனித்தன்மை கொண்ட தகவல் தொடர்பும் சரி, கூட்டுத் தகவல் தொடர்பும் சரி, வித்தியாசமானவை. ஆனால், இந்த இரு விலங்கினக் குழுக்களின் சமூக நடத்தையின் பரிமாண வளர்ச்சியின் பல முக்கிய அம்சங்களில் ஒருமை இருக்கிறது. இதுவே, சமூக உயிரியல் ஓர் உயிரியல் அறிவுப்புலமாகச் செயல்படுவதற்கான அடிப்படையாக இருக்கும்.

E.O. வில்ஸன்

ஏற்கெனவே, கணினித் துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்து அல்காரிதம்களை உருவாக்குவோர், எறும்புகளின் கூட்டு இயக்கத்தின் அடிப்படையில் அல்காரிதம்களை உருவாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எறும்புகள் உணவை எப்படித் தேடுகின்றன? தனித்தனி எறும்புகள், அவை கண்டடையும் உணவுக்கும், எறும்புக் கூட்டுக்குமாக தம் உடலிலிருந்து சுரக்கும் பெரமோன்களைக் கொண்டு வழித்தடங்களை உருவாக்குகின்றன. இப்படிப் பல பெரமோன் வழிகளிலிருந்து மிகவும் எளிதான வழியை எறும்புக் கூடு கண்டடைகிறது. பெரமோன்கள், நேரமாக நேரமாக வீரியமிழப்பவை. எனவே, மிக அண்மையில் கண்டடைந்த வழியே அடுத்தடுத்து பயன்படுத்தப்படுகிறது.

இப்போது எழுப்பப்பட்டிருக்கும் விஷயமோ இன்னும் ஆழமானது; இன்னும் அடிப்படையானது. நம்முடைய சமுதாய கூட்டமைப்பு மட்டுமல்ல நம்முடைய தனிப்பட்ட தன்னுணர்விலும்கூட பூச்சிகள் பரிணாம ரகசிய அறைகளைத் திறக்க உதவக்கூடும். என்னதான் பரிணாமம் எனும் பெரும் விருட்சத்தில், நாமும் பூச்சிகளும் மிகவும் தூரமான கிளைகள் எனத் தோன்றினாலும், நம்முள்ளே ஓடும் தொடர்பு இழைகள், நாம் நினைப்பதைக் காட்டிலும் அணுக்கமாகவே நம்மைப் பூச்சிகளுடன் பிணைக்கின்றன.

இலக்கியங்களிலும் தத்துவ மரபிலும்

பூச்சியினங்களுக்கும், நம்மில் விரிவாக விகசித்து நிற்கும் தன்னுணர்வின் அறிவு இயக்கங்களுக்கும், ஒரு ஆழமான உருவகத் தொடர்பை மானுட இனம் உணர்ந்திருக்கிறது.

பிரான்ஸிஸ் பேகன் (1561-1626), நவீன அறிவியலின் தத்துவ பிதாமகர். நல்லறிதலுக்குத் தேனீயின் செயல்பாட்டை உருவகமாக்கினார். புற உலகிலிருந்து பெறப்படும் தரவுகளை மட்டுமேயோ அல்லது அக வயமான சிந்தனைகளை மட்டுமேயோ சார்ந்திராமல், தேனீக்களைப்போல புற உலகிலிருந்து பெறப்படுவதை உள்வாங்கி, தனித்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றிடும் தன்மை கொண்ட தேனீக்களைப் போன்றவர்களே நல்ல தத்துவ அறிஞர்கள் என்றார் அவர். (சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பேகன் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார் - இயற்கையை சித்திரவதை செய்து அவளிடமிருந்து மானுடம் அறிவை அடைய வேண்டுமென்று. ஆனால், அது தத்துவவாதியாக அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் எழுதியது. பொதுவாக, அப்போது மேற்கத்திய மனநிலையில் இயற்கை எவ்வாறு காணப்பட்டது என்பதைக் காட்டுகிறது என்னும் விதத்திலேயே அது முக்கியமானது).

வில்லியம் பிளேக் (1757-1827), தம் பாடல் ஒன்றில் (The Fly) ஈ ஒன்றின் கோடைக்கால துடிப்பான இயக்கத்துடன், மானுட வாழ்வின் மேம்போக்கான ஆனந்தங்களை ஒப்பிட்டார். அப்பூச்சியின் இருப்பைக் குறித்தே அறியாத ஒரு அலட்சிய கையசைவு, அப்பூச்சியின் அனைத்து துள்ளல் சிறகடிப்புகளையும் நசுக்கி அழித்துவிடலாம். அதைப்போலத்தான், மானுடனின் அனைத்து ஆனந்தங்களையும் மானுடனின் இருப்பைக் குறித்துகூட அறியாத அல்லது அறிய அவசியப்படாத ஒரு நிகழ்வு ஒழித்துவிடலாம். ஆனால், வாழ்வென்பது அறிவுத்தேடலாக இருந்தால், இருப்பும் இறப்பும் ஒரு பிரச்னையே அல்ல. இங்கும், ஈயின் சிறகடிப்பும், கோடைக்கால விளையாட்டும் மானுட வாழ்க்கையின் வேடிக்கை விநோதங்களின் உருவகமானது.

பாரத மரபில் அடிப்படையான ஞானத்தை அடைவதென்பது தேனறிவு-முறை: 'மது வித்யா’ என அழைக்கப்படுகிறது. ரிக் வேதம், தேனீயால் இந்திரன் புகழப்பட்டதாகவும், அவன் தேன்–அறிவை அடைந்ததாகவும் கூறுகிறது. (ரிக்: 1.119.9) சாந்தோக்ய உபநிடதம், வேத மந்திரங்களை தேனீக்களாக உருவகிக்கின்றன. ‘தத் த்வம் அஸி’ (நீயே அதுவாக இருக்கிறாய்) எனும் மகா வாக்கியத்தை விளக்கும்போது, ‘பல மலர்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகளைச் சேகரித்து, அவற்றை ஒரே சாறாகச் செய்து தேனீக்கள் தேனைத் தயாரிக்கின்றன’ என்பது சொல்லப்படுகிறது. மலர்களிலிருந்து எடுக்கப்படும் சாறு நம்மைச் சுற்றி இருக்கும் புற பிரபஞ்சத்திலிருந்து நாம் பெறும் அறிதல். அது நம்மில் தேனாக – ஒருமையை நோக்கிய ஞானமாக - மாறுகிறது. அனைத்தின் இனிமையாகவும் இருப்பது எதுவோ, அது நம்மில் உருவாகிறது. இங்கும் தேனீயின் செயல்பாடு (பூக்களிலிருந்து பெற்ற சாறுகளை தேனாக மாற்றுவது) நாம் ஞானமடைவதற்கான உருவகமாகிறது.

சங்க காலத்தில், அக-அறிதலுக்கும் புற யதார்த்தத்துக்குமான மோதலினை பேசுமிடத்தில், காமம் செப்பாது கண்டது மொழிய, 'கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி’ அழைக்கப்பட்டது. மாணிக்கவாசகரும் அரசவண்டை (கோத்தும்பி) அழைக்கிறார். சிற்றின்பம் எனும் சிறிய அளவு தேனை உண்ணாமல், ஆனந்தத் தேனே வடிவாகி நடனமாடும் சிவத்தை அடைந்திடச் சொல்கிறார். இங்கும், மானுடராகிய நம் உருவகமாக தேனருந்தும் கோத்தும்பி அவர் கூறுகிறார்.

பரிணாம அறிவியல் சொல்லும் உண்மையோ, இந்த உருவகத் தொடர்புகளைக் காட்டிலும் இன்னும் விசித்திரமானது.

காம்பிரியன் - பிரக்ஞையின் பெரும் வெடிப்பு?

பூமியில் விலங்கினங்களின் பரிணாம வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுவது காம்பிரியன் காலகட்டம் (Cambrian period). இன்றைக்கு சற்றேறக்குறைய 54 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய 5.5 கோடி ஆண்டுகளுக்கொப்ப நடந்த பரிணாம நிகழ்ச்சிகளே காம்பிரியன் கால நிகழ்ச்சிகள். இன்றைக்கு பரிணாமம், பொதுவாக நிகழும் வேகத்தைக் காட்டிலும், காம்பிரியன் காலகட்டத்தில் ஐந்து மடங்கு அதிக வேகத்துடன் உயிர்களின் பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்தன என்கின்றனர் அறிவியலாளர்கள். இன்றைக்கு நாம் காணும் விலங்கினங்களின் உடல் தோற்ற அமைப்புகளெல்லாம் இக்காலகட்டத்தில் பரிணமித்தவையே. எப்படி பிரபஞ்சம் தோன்றியதை பெரும் வெடிப்பு என இயற்பியலாளர்கள் கூறுகிறார்களோ, அப்படியே காம்பிரியன் நிகழ்வுகளை உயிரின பரிணாமத்தின் பெரும் வெடிப்பு என உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

கணிதவியலாளர் ரோஜர் பென்ரோஸும், தன்னுணர்வு குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்பும் (Stuart Hameroff), சர்ச்சைக்குரிய அறிவியல் ஊகம் ஒன்றை முன்வைக்கின்றனர். உயிரினங்களினுள் ஒரு க்வாண்டம் தன்மையாக தன்னுணர்வு உள்ளுறைந்திருந்தது. அதற்கான அடிப்படை உறுப்புகள் உருவாகி வந்தன. ஒரு கட்டத்தில், தன்னுணர்வின் வெளிப்பாடு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உந்தியது – அதுவே காம்பிரிய பெரும் வெடிப்பு நிகழ புறக்காரணிகளும் இருந்தன என்றாலும், உயிரின பரிணாமத்தின் முக்கிய உந்து சக்தியாக காம்பிரியன் நிகழ்வுகளில் இருந்தது தன்னுணர்வு வெளிப்பாடு. அறிவியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலைப்பாடு இது. ரிச்சர்ட் டாவ்கின்ஸ் போன்றவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். பொதுவாக, இந்த நிலைப்பாட்டை மையமான அறிவியலாளர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆனால், அறிவியலாளர்களில் ஒரு சாரார் இதை ஒத்த ஒரு கருத்தை தொடர்ந்து சொல்லி வந்திருக்கின்றனர்.

பென்ரோஸ் & ஹமரோஃப்

உதாரணமாக, உள்ளுறை-இசைவு உறவு (endo-symbiosis) எனும் பரிணாம இயக்கத்தைக் கண்டுபிடித்தவர் லின் மர்குலிஸ். அதாவது, நம் செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியா போன்ற அமைப்புகள், உண்மையில் மாற்று உயிரினங்கள். அவை, நம் செல்களுடன் ஒரு பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துகின்றன. இச்செயல்பாடு ஒரு முக்கியப் பரிணாம இயக்கம் என்பதை முன்வைத்தவர். அவர் இதைக் கூறியபோதும் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். ஆனால், பின்னாட்களில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. லின் மர்குலிஸும், அவரது மகனும் பரிணாமவியலாளருமான டோரியன் சாகனும் ஒரு விஷயத்தைச் சொல்கின்றனர். அதாவது, நம் தன்னுணர்வில் ஒரு மிகக்குறைந்த பின்ன அளவிலாவது தன்னுணர்வு, நம் மூத்த பரிணாம மூதாதையரான சிறு உயிரினங்களில் இருந்தது என ஏற்றுக்கொண்டு, அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிணாமத்தை நோக்கினால், உயிரினங்களின் பரிணாமத்தை இன்னும் முழுமையாக விளக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும் என்கின்றனர். இன்று ஆண்ட்ரூ பாரனும், கோலின் க்ளெயினும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் சொல்கின்றனர்: “…எனவே, அக-அனுபவங்களின் தொடக்க வேர்கள் காம்பிரியன் காலத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என நாங்கள் முன்வைக்கிறோம்”.

இது உண்மை எனில், பூமியில் பூச்சிகள் உருவான நிகழ்வில், தன்னுணர்வின் பரிணாம வளர்ச்சியும் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியிருக்க வேண்டும். நம் தன்னுணர்வின் சிறகடிப்பில் ஒரு பட்டாம்பூச்சித்தன்மையோ அல்லது ஒரு தும்பியின் படபடப்போ இருப்பதாக நாம் உணர்வது வெறும் கவித்துவம் மட்டுமல்ல போலும் – அதில் ஒரு பரிணாம உண்மையும் அடங்கியிருக்கக்கூடும்.

மேலதிக விவரங்களுக்கு -

  • Andrew B.Barron & Collin Klein, What insects can tell us about the origins of consciousness: http://www.pnas.org/content/early/2016/04/13/1520084113.abstract

  • Bateson M, Desire S, Gartside SE, Wright GA. Agitated Honeybees Exhibit Pessimistic Cognitive Biases. Current Biology. 2011;21(12):1070-1073. url: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3158593/

  • Kevin Kelly, Out of Control: The New Biology of Machines, Social Systems and the Economic World, Basic Books, 1994

  • E.O.Wilson, Sociobiology: The New Synthesis, Harvard University Press, 1975

  • சாந்தோக்ய உபநிடதம், (விளக்கியவர், சுவாமி ஆசுதோஷானந்தர்), ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், 2013. குறிப்பாக: பக்.526-9

  • Stuart Hameroff, Did Consciousness Cause the Cambrian Evolutionary Explosion?, Toward a Science of Consciousness II: The 1996 Tucson Discussions and Debates: MIT Press, 1998 pp. 421-37: url:http://www.quantumconsciousness.org/sites/default/files/Did%20Consciousness%20Cause%20the%20Cambrian%20Evolutionary%20Explosion.pdf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com