அமெரிக்காவில், உளவியலின் பிதாமகர்களில் முதன்மையானவர் வில்லியம் ஜேம்ஸ் (1842-1910). பிரக்ஞை அல்லது தன்னுணர்வு (consciousness) என்பது என்ன? இக்கேள்வியை நவீன மேற்கத்திய அறிவுலகில் மிகவும் தீவிரமாக எழுப்பி விவாதித்தவர் இவர். இந்திய தத்துவ தாக்கம் ஜேம்ஸிடம் நன்றாகவே இருந்தது. அன்றைய நியூட்டானிய அறிவியலின் சில அடிப்படைகளை ஜேம்ஸ் கேள்விக்குள்ளாக்கினார். புறப்பொருள் என்கிற பருப்பொருள் உலகமும், அக-அறிதல் என்கிற பிரக்ஞையும் கோடு கிழிக்கப்பட்டு இரண்டாக இருக்கின்றன என்கிற தீர்மானமான அறிவியல் பார்வையை அவர் சந்தேகித்தார். இக்கேள்விகளை அவர் 1904-ம் ஆண்டு தாம் எழுதிய இரு கட்டுரைகளில் முன்வைத்தார்.
க்வாண்டம் இயற்பியல் உருவான பிறகு இதே கேள்வி மீண்டும் எழுந்தது. க்வாண்டம் இயற்பியலின் முதன்மை சிற்பிகளில் ஒருவர் நெய்ல்ஸ் போர். இயற்பியலாளரான நெய்ல்ஸ் போர், அவருக்கு நாற்பதாண்டுகள் முந்தைய உளவியலாளரான வில்லியம் ஜேம்ஸை வாசித்திருந்தார். ‘மிகச்சிறந்த அற்புதமான சிந்தனை’ என அவர் ஜேம்ஸை கருதினார். அறிபவன், அறியப்படும் பொருள், அறிதல் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதபடிக்கு இணைந்திருக்கும் ஒரு பிரபஞ்சத்தை, க்வாண்டம் இயற்பியல் காட்ட முற்பட்டிருந்தது. ஐன்ஸ்டைன் போன்ற சிறந்த இயற்பியலாளர்களுக்கே இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகத்தான் இருந்தது.
நெய்ல்ஸ் போர் ஒரு முக்கியமான இயற்பியலாளர். ஐரோப்பிய - ஆசிய தத்துவ மரபுகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். நல்ல கால்பந்து விளையாட்டாளரும்கூட. ஆசிய தத்துவ மரபுகளில், போர்க்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக, தாவோ கோட்பாட்டில். உண்மை என்பது இரு நேரெதிர் இயற்கைகளை இயைவுபடுத்திய ஒன்றாக இருக்க முடியும் என நெய்ல்ஸ் போர் கருதினார். இந்த இயைவுத்தன்மை (complementarity) என்பதை பிரபஞ்சத்தில் அனைத்து தளங்களிலும் வெளிப்படும் ஒரு அடிப்படை உண்மையாக அவர் கருதினார்.
நாம் அனைவரும் அறிந்த அணு வடிவம் ஒன்று இருக்கிறது. மிகவும் பிரபலமானது அது. ஏறக்குறைய, சூரியக் குடும்பத்தைப் போன்று அது இருக்கும். ரூதர்போர்ட் மாடல் என்று பெயர். நடுவில் ஒரு அணுக்கருவைச் சுற்றி, எதிர்மின்னணுத் துகள்களான எலக்ட்ரான்கள் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், எர்வின் ஷ்ட்ரோடிஞ்சர் எனும் இயற்பியலாளர், இந்த எலக்ட்ரான்கள் உண்மையில் நிகழ்தகவு அலைகள் என தம் சமன்பாடுகள் மூலம் காட்டினார். இந்த இரண்டு நேரெதிர் துருவங்களில் அணு காட்டப்படும்போது என்ன செய்வது என ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. அப்போதுதான் நெய்ல்ஸ் போரின் பங்களிப்பு முக்கியமான ஒரு பார்வை மாற்றத்தை அளித்தது. க்வாண்டம் இயற்பியலின் மற்றொரு முதன்மை சிற்பியான வெர்னர் ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போரின் பங்களிப்பை இப்படி விவரிக்கிறார்: “துகள்களாகவும் அலைகளாகவும் இருக்கும் இந்த இரு பார்வைகளையும் போர் ஒன்றுக்கொன்று முரணாக இல்லாமல், அடிப்படையில் இருக்கும் ஒரே உண்மையின் இசைவுகொண்ட இரு விவரிப்புகளாக அவர் பார்த்தார். இவ்விவரிப்புகள் தம் அளவில் பாதி உண்மை மட்டுமே கொண்டவை”.
நெய்ல்ஸ் போர் இந்த இசைவு விளக்கத்தை முன்வைத்த பின்னர் சீனாவுக்குச் சென்றிருந்தார். தாவோ கோட்பாடுகள் அவரை எப்போதுமே கவர்ந்தவை. அவர் டானிஷ் அரசரால் கௌரவிக்கப்பட்டபோது, நெய்ல்ஸ் போர் வடிவமைத்து அணிந்த சின்னத்தில் தாவோ இலச்சினை இருந்தது. அத்துடன் ‘Contraria sunt complementa' - ‘எதிரெதிர்கள் இசைவுத்தன்மை கொண்டவை’ என்னும் வாசகமும் இருந்தது.
க்வாண்டம் இயற்பியலிலிருந்து தாம் பெற்ற இப்பார்வையை, இயற்பியலில்லாத அறிவியல் துறைகளின் கேள்விகளுக்கு நெய்ல்ஸ் போர் நீட்டுவித்தார். கேள்விகளை உருவாக்குவதிலும் தத்துவம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. தாம் கேள்விகளை உபநிடதங்களிலிருந்து பெறுவதாக நெய்ல்ஸ் போர் கூறினார். இதுகுறித்து, அவரது முக்கிய மாணவர்களில் ஒருவரும், இந்நூற்றாண்டின் முக்கிய இயற்பியலாளர்களில் ஒருவருமான ஜான் ஆர்க்கிபால்ட் வீலர் (1911- 2008) விளக்குகிறார்:
என் ஆசிரியரான நெய்ல்ஸ் போர், உபநிடதங்களை ஆழ்ந்து படித்தார். அவற்றிலிருந்து விடைகளை அவர் தேடவில்லை. கேள்விகளை உருவாக்கிக்கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். என்றாவது ஒருநாள், எவராவது இந்தியாவின் ஆழமான தத்துவ ஞானம், கிரேக்கம் மூலமாக நம்மை வந்தடைந்து, நம் தற்போதைய தத்துவவியலை வந்தடைந்தது என்பதைக் கண்டறிவார்கள் என நம்புகிறேன்.
நெய்ல்ஸ் போர் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று, இதே இசைவுப்பார்வையை உயிர் எனும் நிகழ்வை அறிந்துகொள்ள பயன்படுத்த முடியுமா என்பதே. கோபன்ஹேகனில் நிகழ்த்திய ஒரு உரையில் அவர் இக்கேள்வியை முன்வைத்தார். ஆகஸ்ட் 15, 1932-ல், ‘ஒளியும் உயிரும்’ எனும் தலைப்பில் அவர் நிகழ்த்திய இந்த உரை மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாக உயிரியியலின் வரலாற்றில் மாறியது.
உயிர் என்றால் என்ன என்கிற கேள்விக்கான ஆராய்ச்சியில், நாம் அணுக்கள் அளவுக்குச் சென்று நுணுகி ஆராயும்போது, அங்கே உயிரற்ற பருப்பொருட்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. இப்பிரச்னையில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இயற்பியல் ஆராய்ச்சியின் தன்மையும் உயிரியல் ஆராய்ச்சியின் தன்மையும் ஒன்றைப்போல மற்றது இல்லை. ஏனெனில், நாம் ஆராய்ந்தறிய முற்படும் உயிரினை உயிருடன் வைத்திருக்க வேண்டியதென்பதே நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு விஷயமாகிவிடுகிறது. இயற்பியலில் இந்தப் பிரச்னை இல்லை. ஆக, நாம் ஒரு விலங்கின் உறுப்பு ஒன்றின் உயிர் செயல்பாட்டை அதன் அணு அளவினில் அறிய, அதனை கொன்றே ஆக வேண்டும். (இதன் விளைவாக), உயிர்களின் மீது நாம் நடத்தும் ஆராய்ச்சிகள் அனைத்துமே ஒருவித நிச்சயமற்ற தன்மையைக் கொண்டே இருக்கின்றன. (மாறாக), நாம் ஆராயும் உயிருக்கு அளிக்கும் மிகக் குறைந்த சுதந்தரமும் அவ்வுயிர் தன் அறுதி ரகசியத்தை நம் அறிதலில் இருந்து மறைக்கப் போதுமானதாகிவிடுகிறது.
ஆக, பிரச்னை இதுதான். ஒரு உயிரை ஒரு உயிராகவே வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்தால், அதை உடைத்து உடைத்துப் பார்க்க முடியாது. உடைத்து உடைத்துப் பார்ப்பீர்களென்றால், அது உயிராக இருக்காது. எனவே என்ன செய்வது? ஒரு உயிரை அணுக்களின் கூட்டுத் திரட்சியாகப் பார்த்தால், அதில் உயிர் என்பது இருக்காது. அதை ஒரு உயிராக வைத்தே பார்க்க வேண்டுமென்றால், அதை உடைத்து உள்ளே பார்க்க முடியாது. க்வாண்டம் இயற்பியலின் சில அடிப்படைப் பார்வைகளை இப்போது உயிர் எனும் தன்மையை அறிந்துகொள்ள நெய்ல்ஸ் போர் முன்வைத்தார்:
...ஒரு உயிரை ஒன்று நீங்கள் உயிராக காண வேண்டும் அல்லது மூலக்கூறுகளின் தொகுப்பாகக் காண வேண்டும்... ஒன்று மூலக்கூறுகள் எங்கிருக்கின்றன என்பது குறித்த தரவுகளை நீங்கள் அவதானிக்கலாம். அல்லது அந்த உயிர் எவ்வாறு எத்தன்மையுடன் (தன் சூழலில்) வினையாற்றுகிறது என்பதனை நீங்கள் அறியலாம். இந்த இரண்டு பார்வைக்கும் அப்பால், அணு இயற்பியலில் (அலை, துகள் இருமைக்கு அப்பால்) காணப்படுவதுபோல அடிப்படை உண்மை ஒன்று இருக்கக்கூடும்.
நெய்ல்ஸ் போர் ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார். இயற்பியலின் முறையை – அதாவது உடைத்துப் பார்ப்பதை - மட்டுமே உயிரியல் தன் முறையாக முன்வைத்தது. ஆனால், இயற்பியலின் ஒரு பார்வையை உயிரியல் ஆராய்ச்சி தனதாக்கிக்கொள்ள வேண்டுமென்று நெய்ல்ஸ் போர் கருதினார்.
‘‘…எவ்வாறு இயற்பியலில் க்வாண்டத்தின் இருப்பு என்பது ஒரு அடிப்படை சத்தியமாக அறியப்படுகிறதோ அதுபோல உயிரும் இருப்பும் இயந்திர இயற்பியல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை சத்தியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதுவே உயிரியலின் தொடக்கப்புள்ளி”.
நெய்ல்ஸ் போரின் இந்த உரை, இன்று அறிவியலின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான தாவலாகக் கருதப்படுகிறது. க்வாண்டம் இயற்பியலிலிருந்து கிடைத்த பார்வை மாற்றத்தை, இயற்பியலுக்கு வெளியே பயன்படுத்திய முதல் முயற்சியாக இது கருதப்படுகிறது. இதன் விளைவுகள், உயிரியலில் சுவாரசியமானவை. இறுதியில் பகுத்து ஆராயக்கூடிய மூலக்கூறு உயிரியியலின் பிதாமகர்களின் உந்துதலாகவும் இந்த உரை அமைந்தது.
அதைத்தாண்டி, எதிர்களுக்கிடையில் இருக்கும் இசைவுத்தன்மையை, நெய்ல்ஸ் போர் ஒரு அடிப்படை சத்தியமாக உணர்ந்திருந்தார் என்பதே இதில் இருக்கும் அதி முக்கிய விஷயம். இதை அறிவியலின் பிற புலங்கள் அறிந்துகொள்ள இன்னும் சில பத்தாண்டுகள் காத்திருக்கவேண்டி இருந்தது.
ஒரு கட்டத்தில், இந்த இசைவுக் கோட்பாடு கல்வி முதல் பல புலங்களில் முக்கியப் பங்களிக்கும் என்பதை உணர்ந்த ஒரு இயற்பியலாளர் இந்தியாவைச் சார்ந்தவர். தவுலத்சிங் கோத்தாரி (1906- 1993), சிறந்த இயற்பியலாளர் மட்டுமல்ல, கல்வியாளரும்கூட. நேருவின் இறுதி ஆண்டில் தொடங்கி, லால்பகதூர் சாஸ்திரி காலம்வரை (1964-66), இந்தியக் கல்வி கமிஷனின் தலைவராக விளங்கியவர். நெய்ல்ஸ் போரின் நூற்றாண்டில் அவருக்காக சர்வதேச இயற்பியலாளர்கள் நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பினைக் கொண்டுவந்தபோது அதில் கோத்தாரியின் கட்டுரை (‘இசைவுக் கோட்பாடும் கிழக்கத்திய தத்துவமும்’, The Complementarity Principle and Eastern Philosophy) இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையில் கோத்தாரி இவ்வாறு எழுதியிருந்தார்:
இசைவுக் கோட்பாடு ... நவீன இயற்பியலின் மிக முக்கியமானதும், புரட்சிகரமானதுமான ஒரு கோட்பாடு. ஒன்றோடொன்று முழுமையாக வேறுபடும் நிலைப்பாடுகள்கூட ஒன்றுக்கொன்று முரணாகவும் எதிராகவும் இருக்க வேண்டியதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள அது உதவும். ஆழமான புரிந்துணர்வின் அடிப்படையில், அவை ஒன்றுக்கொன்று இசைவானதாகவும் ஒன்றுக்கு மற்றொன்று ஒளி ஊட்டுவதாகவும் அமையும்: ஒரு பெரும் சத்தியத்தின் இரு வேறுபட்ட தன்மைகள் மட்டுமே அவை என்பதைப் புரிந்துணர அவை உதவும். இதன்மூலம் மிகவும் பன்மை வளத்துடன் இருக்கும் மானுட அனுபவத் திரளை ஒரு அடிப்படை இசைவுடன் நாம் உணரமுடியும். மானுடர் படும் துயரங்களுக்குப் புதிய சமூக ஒழுக்கத் தீர்வுகளை அடைய இது பயன்படும். முரண்களுக்கு இடையிலான இந்த இசைவுக் கோட்பாடு என்றாவது ஒருநாள் ஒவ்வொருவரின் கல்வியிலும் ஒருங்கிணைந்த பகுதியாகி அன்றாட பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் ஒரு கோட்பாடாக மாற வேண்டும் என நெய்ல்ஸ் போர் மிகவும் விரும்பினார்.
மூளையிலாளர் ஸ்காட் கெஸ்லோ (Scott Keslo) மற்றும் நரம்பு- மருந்தியலாளர் (Neuropharmacologist) டேவிட் எங்க்ஸ்ட்ராம் (David A. Engstrom) மூளையின், நரம்பு மண்டலத்தின் நியூரானிய இயக்கவியலுக்கு இன்று இசைவுக் கோட்பாட்டை பொருத்திப் பார்க்கின்றனர். மானுட மூளையின் தன்னியல்பிலேயே இந்த இயைவுக் கோட்பாடு இருக்கிறதென அவர்கள் கருதுகின்றனர். நெய்ல்ஸ் போரின் இசைவுக் கோட்பாடு, க்வாண்டம் இயற்பியல் தொடங்கி மூளையின் செயலியக்கம் வரை ஒரு அடிப்படை இயக்கமாக இயற்கையில் நடனமாடுகிறது. நவீன இயற்பியலின் பார்வை உயிரியலுக்கு அளித்த ஒரு முக்கியப் பார்வைத் தாவலாக நாம் இதை கருதலாம்.
பின்குறிப்பு
இந்தியாவுக்கு நெய்ல்ஸ் போர் வந்திருந்தபோது, இந்தியாவில் அவரை மிகவும் வியக்கவைத்த விஷயங்களாக அவர் இரண்டைக் குறிப்பிட்டார். ஒன்று, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் (Tata Institute of Fundamental Research); மற்றொன்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் (1923-2008) அவர்களுடன் இயங்கும் மாணவர்களைக் கொண்ட ஒரு சிறு ஆராய்ச்சிக் குழு.
நெய்ல்ஸ் போரின் இந்தப் பதிலால் கவரப்பட்ட ஜவகர்லால் நேரு, அல்லாடி ராமகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க விரும்பினார். சி.சுப்ரமணியம் அவர்கள் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்தார். அல்லாடி ராமகிருஷ்ணனிடம், இந்தியாவின் முதல் பிரதமர் அவருக்கு தாம் ஏதாவது செய்ய இயலுமா? எனக் கேட்டார். கணிதத் துறையில் முன்னணி ஆராய்ச்சிகளைச் செய்வதற்கென்றே ஒரு பிரத்யேக மையம் ஒன்று வேண்டுமென்று கேட்டார் ராமகிருஷ்ணன். அல்லாடி ராமகிருஷ்ணனின் விருப்பத்தை சி.சுப்ரமணியம் அவர்களின் முயற்சிகளும், நெய்ல்ஸ் போரின் பரிந்துரையும் நிறைவேற்றின.
இன்று, சென்னையில் இருக்கும் கணித அறிவியல் மையம் (Institute of Mathematical Sciences) உருவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.