பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

13. ஆழ்ந்து யோசி

நாம் என்பதே நமது மூளைதான். நமது திறன்கள், ஊக்கம், ஆற்றல் எல்லாவற்றின் பிறப்பிடம், ஊற்றுக்கண் மூளைதான்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 5:42 am

செ.சு.மலரடியான்

- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Story image


உங்களிடம் இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த உங்கள் உடலின் பகுதி எது என்று மைக் டைசன், முகமது அலி போன்ற குத்துச் சண்டை வீரர்களிடம்  கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?

முட்டியை மடக்கி எதிராளியைக் குத்து விடும் புஜங்கள் என்று அவர்கள் சொல்லலாம்.

பி சூசிலா, வாணி ஜெயராம், சங்கர் மகாதேவன் போன்ற பாடகர்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால்?

அவர்களின் ஆற்ரல் வாய்ந்த உடல் உறுப்பு  'தொண்டை’ என்று சொல்லலாம்.

Story image

100 மீட்டர் பந்தயத்தில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வாங்கிய உசைன் போல்ட், நமது திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், சென்னையைச் சேர்ந்த அகஸ்டின் யேசுதாஸ் போன்றவர்கள் அந்தக் கேள்விக்கு பதிலாக  வெற்றிக் கோட்டை வேகமாகச் சென்றடைய உதவும் அவர்களுடைய 'கால்கள்’ என்று சொல்லலாம்.

Story image

இப்படியே திறமையுள்ள எவரைக் கேட்டாலும் அவர்கள் அவர்கள் திறமை வெளிப்படுத்தப்படும் ஒரு உடல் உறுப்பைச் சொல்லலாம்.

அதே கேள்வியை உங்களிடமும் கேட்டால்? கேட்டாயிற்று.  உங்களிடம் இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதி எது?

உங்கள் பதில் என்ன?

.

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. மேலே பார்த்த சாதனையாளர்களானாலும் சரி.. எல்லோரும் சொல்லவேண்டிய பதில், எல்லோருக்கும் ஒத்துவரும் சரியான பதில்.. ஒரே பதில்….

மூளை என்பதுதான்.

பிறகு!

எழுத்தாளர் சிறப்பாக எழுதக் காரணம் அவரது கைவிரல்கள் என்பதா?  ஒளிப்பதிவாளர் சிறப்பாக படம் பிடிக்கக் காரணம் அவரது கைகள் என்பதா?  சமையல்காரரின் திறன் இருப்பது உப்புக் காரம் சரியாகப் போடும் அவரது விரல்களில் என்று சொல்வதா?

ஏற்கனவே கண், காது, மூக்கு நா, உடல் என்ற ஐம்புலன்களுக்கும் சொன்னதுதான் இங்கேயும். அவை எல்லாம் வெளி உறுப்புகள். அல்லது உள் உறுப்புகள். வெறும் கருவிகள். அவர்களின் எஜமான், அவர்களை ஆட்டி வைப்பவன் தலையில் இருக்கிறான். அவன் பெயர் மூளை.

*

பிரபல மருத்துவமனையில் போகிற போக்கில் பத்தோடு ஒன்றாக  பிரச்சனை கேன்சர் என்று சொன்னார்கள். பதறியடித்துக்கொண்டு தெரிந்தவர் மூலம் வேறு ஒரு மருத்துவரைப் பார்க்க, அவர் வேறு எந்த இடையூரையும் அனுமதிக்காமல் நிதானமாக ஆராய்ந்தார். சுமார்  நாற்பது நிமிட ஆய்வுக்குப் பின், நிதானமாக, ஆனால் உறுதியாக அது கேன்சர் இல்லை என்றும், அதன் பெயர் சார்காய்டோசிஸ் (Sarcoidosis) என்று சொல்லி மருந்து கொடுத்திருக்கிறார் என்று முன்பு பார்த்தோம். அந்த சிகிச்சை பெற்ற  நபர் இப்போது மன நிம்மதியும் உடல்நலமும் பெற்று இயங்கி வருகிறார்.

அந்த மருத்துவர் செய்தது ’கவனித்தல்’ என்றும் சொன்னோம்.  வல்லவர் ஆவதற்கு  தேவைப்படும் அப்படிப் பட்ட 'ஆப்சர்வேஷன்’ பற்றி மிக விரிவாகவே பல உதாரணங்களுடன் பார்த்தோம். 

இப்போது நாம் நகர்வது அடுத்த கட்டதிற்கு. கவனித்தலுக்குப் பின் என்ன? அது எங்கே நடக்கிறது என்பதைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.

அந்த இடம் எது என்பதை ஏற்கனவே சொல்லியாவிட்டது. மூளைதான் அந்த இடம். தொடரின் அறிமுகத்திலேயே சொல்லியாகிவிட்டது. மூளையும் மனதும் பல 'ஃபீச்சர்ஸ்’ கொண்ட ஸ்மார்ட் செல்போன் போல என்று. அவை இல்லாதவர் இல்லை. அதனால் எல்லோரும் வல்லவராக முடியும். பயன்படுத்துவதில்தான் வேறுபடுகிறோம், வைத்திருப்பதில், கொண்டிருப்பதில அல்ல என்று.

ஆக, இப்போதைக்கு.. மூளை. எல்லோரிடமும் இருக்கும்  பிரைன் பற்றி.

Story image

ஐன்ஸ்டைன் போன்றவர்களே பத்து சதவிகிதத்திற்கும் குறைவான அளவுதான் மூளையைப் பயன்படுத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப்பற்றி பேசவும் செய்திருக்கிறேன். எல்லாம் தப்பாம்!  கற்பனையாம். அப்படியெல்லாம் இல்லை என்று சில ஆராய்ச்சிகள் அலசல்கள் இருக்கின்றன. இணையத்தில் பார்த்தால் தெரியவரும். 

அதேபோல மூளையின் திறன் என்ன, நினைவாற்றல் அளவு என்ன என்றெல்லாமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்ஸ் கொண்டது என்கிறார்கள். (பில்லியன் என்றால் 100 கோடி- பெருக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்). ஒவ்வொரு நியூரானும் ஆயிரம் 'கனெக்‌ஷன்ஸ்’ செய்யக்கூடியது என்றும் 100 'டிரில்லியன் டேட்டா பாயிண்ட்ஸ்’ அல்லது 100 'டெரா பைட்’ தகவல்களை தக்க வைத்துக்கொள்ளக்கூடியது என்று அனுமானிக்கிறார்க்கள்.

இவையெல்லாம் கொஞ்சம் டெக்னிக்கலான விஷயங்கள். தவிர, இந்த கணக்குகள் எல்லாம் முடிவான முடிவல்ல. ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஆனால் ஓரளவுக்கு உறுதியாகச் சொல்லப்படுவது,  உடலின் சிறு பகுதியாக இருக்கும் மூளை, அதாவது உடல் எடையில் ஐம்பதில் ஒரு பகுதிதான் மூளை, உடல் எடையில் 2%  மட்டுமே இருக்கும் இந்த ஒரு உறுப்பு அது  செயல்பட  எடுத்துக்கொள்ளும்  பிராணவாயு மற்றும் எரிசக்தியின் செலவு, உடலின் மொத்த செலவில் இருபது சதவிகிதமாம். அவ்வளவு வேலை நடக்கிறது அங்கே!

மொத்தத்தில் மூளை மிகவும் திறன் கொண்டதொரு பகுதி. எது போனாலும், செயல் இழந்தாலும் ஓரளவேனும் பிழைத்துக்கொள்ளும் மனிதன் ,   மூளைக்குப் போகும் ரத்தம் நின்றுபோனால், இறந்துவிடுகிறான். மூளையின் செல்கள் பிராணவாயு இல்லாமல் சிறிது நேரம் இருந்துவிட்டால் போயிற்று.

ஆக, நாம் என்பதே நமது மூளைதான். நமது திறன்கள், ஊக்கம், ஆற்றல் எல்லாவற்றின் பிறப்பிடம், ஊற்றுக்கண் மூளைதான்.

ஐம்புலன்களும் அவற்றுக்கு கிடைக்கும் அத்தனை தகவல்களையும்,அங்கே கொண்டுபோய்ச் சேர்க்கின்றன.

பாட்டு கற்றுக்கொள்வது, விளையாட்டு கற்றுக்கொள்வது, எழுத, பேச, தொழில் வியாபாரம் செய்ய, சமையல் செய்ய, விவசாயம் செய்ய, மருத்துவம் பார்க்க என்று எல்லா வேலைகளுக்கும் தேவைப்படும் அறிவு வைக்கப்பட்டிருக்கும்  இடம் அதுதான். நினைவாற்றல் அங்கேதான். அலசுதல் ஆராய்தல், சிந்தித்தல் புதியன உருவாக்கல் எல்லாம் அங்கே தான் நடைபெறுகின்றன.

ஆக, ஒருவரின் திறன் இருப்பிடம் அவரது பிற உறுப்புகள் அல்ல.

சற்று மேலே பார்த்த மருத்துவர், அவரது கண்களும், காதுகளும், விரல்களும் அவருக்குச் சேகரித்துத் தந்த தகவல்களை எங்கே வைத்து ஆராய்ந்தார்? எங்கே வைத்து கூட்டிக் கழித்துப் பார்த்தார்? எங்கிருக்கும் ஏற்கனவே பெற்ற அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்?

கைகடிகாரம் பழுது பார்ப்பவர் கண்ணில் பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு நுணுகிப் பார்ப்பது போல அந்த மருத்துவர் அவருக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்தது புறக் கண்ணால் மட்டுமல்ல. அவரது மனக்கண்ணாலும் தான்.

Story image

சரியான பிர்ச்சனையை கண்டறிந்த அந்த மருத்துவர், தனக்கு கிடைத்த தகவல்களை இரும்பு பட்டறை கொல்லன் சம்மட்டியால் அடிப்பது போல குறி தவறாமல் ஓங்கி அடித்தது எங்கே வைத்து?

Story image

அவரது மனதிற்குள், மூளையில் வைத்துதான்.

மூளை என்பது பெரிய சோதனைக் கூடம். அங்கே பல ஆராய்ய்சிகள் செய்ய முடியும். அது ஒரு பெரிய நூலகம். அங்கே பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அப்சர்வேஷன் சரியாக இருந்தால் எல்லோருக்கும் தகவல்கள் கிடைக்கும். ஆனால் கிடைத்த தகவலை என்ன செய்கிறோம் என்பதில்தான்  வல்லவர்கள் வேறுபடுகிறார்கள்.

அதைத்தான்  ஐன்ஸ்டைன் வேறுவிதமாகச் சொன்னார். அதுதான் இந்த அத்தியாயத்தின் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆமாம், அதன் பொருள் என்ன?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.