லீ சிங்கப்பூர்ப் பிரதமராகப் பதவியேற்று ஒரு வருடமாகிவிட்டது. மக்கள் மனங்களில் இவரல்லவோ தலைவர் என்னும் எண்ணம் வேரூன்றத் தொடங்கியது. இந்த வளர்ச்சியும், புகழும் பலர் மனங்களில் பொறாமையைத் தூண்டியது. காலை இழுக்கும் வேலைகளில் இறங்கினார்கள், சிலர் நேரடியாக, சிலர் மறைமுகமாக.
முதல் கத்தியை எறிந்தவர் ஓங் எங் குவான். ஆமாம், நகரசபைத் தேர்தலில் PAP கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தவுடன் யாருக்கு முதல் பதவி, மேயர் பதவி கொடுத்துப் பெருமைப்பட்டாரோ, அந்தச் செல்லத் தொண்டன். லீ வளர்த்த அந்த கடா அவர் மார்பில் பாய்ந்தது.
ஓங் எங் குவான் கட்சிக்குள் கலகக் கொடி தூக்கினார், லீயையும், கட்சித் தலைமையையும் கடுமையாக விமரிசித்தார். கட்சிக் கட்டுப்பாட்டைக் குலைக்கும் இந்தக் கான்சர் நோயை வேரோடு பிடுங்க லீ முடிவெடுத்தார். ஓங் கட்சியில் பிளவு ஏற்படுத்துவார், கட்சி பலவீனமாகிவிடும், வருங்காலத்தில் ஆட்சியைப் பிடிப்பது கேள்விக்குறியாகிவிடும் என்று லீயின் நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். லீ மறுத்தார். அவரைப் பொறுத்தவரை, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. ஓங், அவர் நெருங்கிய சகாக்கள் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாகக் கட்சியிலிருந்து நீக்கம் செய்தார்.
ஓங் தாக்குதல் இப்போது அசெம்பிளியில். லீ பிரிட்டீஷ் ஆட்சியின் கைக்கூலியாகச் செயல்படுவதாகப் பழி சுமத்தினார். அசெம்பிளி நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக முடியாது என்னும் காரணம் தந்த தைரியம். லீ விட்டார் சவால் ‘அசெம்பிளிக்கு வெளியே வந்து இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.’ ஓங் பதில் மெளனம்.
அடுத்த சில மாதங்கள் ஓடின. இந்த முரட்டுக் குதிரைக்குக் கடிவாளம் போடும் வழிகளை லீ தேடிக்கொண்டிருந்தார். ஓங் பேசத் தொடங்கினால் உணர்ச்சி வசப்படுவார். அந்த வேகத்தில், வார்த்தைகள் அவரைமீறி வரும். அவை, அவருக்கே அவர் பறிக்கும் குழி. அப்படியொரு குழி.....

அசெம்பிளி கூட்டம். லீ தன் மச்சான், க்வா ஸூன் சுவான் (Kee Soon Chuan) என்பவரை வருமானத் துறை உதவிக் கமிஷனராக நியமித்திருந்தார். ஊழல் குற்றசாட்டுக்களில் சந்தேகப்பட்டவர்களை உள்ளே தள்ளும் அதிகாரம் கொண்ட சக்திபீடம். லீ தன் உறவினருக்கு இந்தப் பதவி கொடுத்தது அதிகார துஷ்பிரயோகம் என்று ஓங் கண்டன அம்பு வீசினார். இந்தக் குற்றச்சாட்டை அசெம்பிளிக்கு வெளியே சொல்லத் துணிச்சல் இருக்கிறதா என்று லீயின் பதில் கணை. ஓங் பதில் சொல்லவில்லை. சபையை அவமதித்ததாக அவர்மீது அவைத் தலைவர் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார்.
‘என்னைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் அசெம்பிளிக்கு அதிகாரம் கிடையாது. ஒரு குற்றச்சாட்டல்ல, முதலமைச்சர் மீதும், அவர் கட்சிமீதும் இதோ இன்னும் பல குற்றச்சாட்டுக்கள்.’
ஓங் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். கோபாவேசம். தன்னை மறந்தார், நிலை இழந்தார். ‘என் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பழைய தொகுதியிலேயே இடைத்தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்டுகிறேன். லீயும் முதலமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, அவர் தொகுதியில் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாரா?’
லீ, தன்மீது சாட்டப்பட்ட குற்றங்களை விசாரிக்க ஒரு கமிஷன் நியமித்தார். அவர்கள் குற்றங்களை நிரூபித்தால், பதவி விலகுவதாக உறுதிமொழி கூறினார். ஓங் தன் அசெம்பிளி பதவியை ராஜிநாமா செய்தார்.
மூன்றே மாதங்கள். கமிஷனின் முடிவு வெளியானது, குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அபாண்டம். தன் எதிரி பொய்யர் என்று பொதுமக்கள் முன்னால் நிரூபித்துவிட்டோம், இனி அவர் எதிர்காலம், இறந்த காலம்தான் என்று லீ நினைத்தார். இடைத் தேர்தல் நடந்தது. லீ PAP சார்பில் பலமான வாக்காளரை நிறுத்தினார். தீவிரப் பிரச்சாரம் செய்தார். விசித்திரமான மக்கள். ஓங் 7,747 வோட்டுக்கள் வாங்கி மாபெரும் வெற்றி கண்டார். PAP வேட்பாளருக்கு 2,820 வாக்குகள். லீ எதிர்பார்த்தேயிராத மாபெரும் தோல்வி. ஆனால், விழுவது எழுவதற்கே என்பது கொள்கை. அவர் சொன்னார், ‘மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்துவது இன்னும் முக்கியமாகிறது.’
ஒருவகையில், இந்தத் தோல்வி மாறுவேடம் போட்டு வந்த வரம். ஓங் சீன மொழியில் கேட்பவர் மனங்களை வசியம் செய்யும் வசீகரப் பேச்சாளர். அவரை நெருங்கும் திறமைகூட யாருக்கும் இல்லை. அந்த வெற்றிடத்தை நிறைக்க லீ முடிவு செய்தார். சீன மொழிக்குப் பல வட்டார வடிவங்கள் உண்டு. அவற்றுள், ஹோக்கியென் (Hokkien) வடிவம்தான் சிங்கப்பூரில் பெரும்பான்மையான சீனர்கள் பயன்படுத்திய பேச்சு வடிவம். இதை வசப்படுத்தவேண்டும்.
லீ எதையுமே மேலெழுந்தவாரியாகச் செய்பவரல்ல. மூச்சடக்கி, ஆழ்கடலில் முத்தெடுப்பவர். அவர் சொன்னார், ‘இது வெறுமே, ஓங்கைத் தோற்கடிக்கும் முயற்சியல்ல, (அரசியலின்) வாழ்வா, சாவா பிரச்சனை.’ இரண்டு ஆசிரியர்களை அமர்த்திக்கொண்டார். கன்னி முயற்சி. பொதுக்கூட்டம். வார்த்தைகள் வரவில்லை. வந்தவற்றிலும், சொல், பொருள் இலக்கணைப் பிழைகள். முன்வரிசையில் இருந்த சிறுவர் சிறுமிகளே கைகொட்டிச் சிரித்தார்கள். இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் முடியுமா? லீ தன் கடும் உழைப்பை, பயிற்சியை இருமடங்காக்கினார். அவசரம், மிக அவசரம், ரகசியம், பரம ரகசியம் என மேசையில் குவிந்த ஃபைல்களைப் பைசல் செய்யவேண்டும். அவற்றுக்கு நடுவே ஹோக்கியென் பயிற்சி. சூப்பர்மேன் வேலைதான். மூன்றே மாதங்களில், தங்கு தடையின்றி, சரளமாக, சுவாரஸ்யமாக ஹோக்கியெனில் பேசுவதில் வல்லுநராகிவிட்டார்.
கட்சி நீக்கம், ஹோக்கியென் பேச்சு ஆகியவற்றால் லீ ஓங்கை வென்றுவிட்டார். ஆனால், அவர் முன்னால் இன்னும் இரண்டு பெரும் சவால்கள். ஒன்று கம்யூனிஸ்ட்கள், இரண்டு துங்கு.
லீ என்னதான் திட்டம் போட்டாலும், பகீரதப் பிரயத்தனம் செய்தாலும்,
பொருளாதார வளர்ச்சி சிங்கப்பூரோடு கண்ணாமூச்சி ஆடியது. புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. கம்யூனிஸம் தலைதூக்க அற்புதமான சூழ்நிலை. யூனியன் தலைவர்கள் லீயை ரகசியமாகச் சந்தித்தார்கள். தங்கள் இயக்கத்தைத் தடை செய்யாமல் செயல்பட விட்டால், லீ ஆட்சிக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். வாக்குறுதி தர லீ மறுத்துவிட்டார். இதற்குப் பல காரணங்கள் – தனிப்பட்ட முறையில் அவருக்குக் கம்யூனிஸ்ட்கள் மீது நம்பிக்கையில்லை. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர்கள் தடையாக இருப்பார்கள் என்று நினைத்தார். துங்குவுக்குக் கம்யூனிஸ்ட்கள் மேல் ஜென்மப் பகை இருப்பதும் அவருக்குத் தெரியும். தான் இணைய நினைக்கும் மலாயத் தலைவர் துங்கு மனதில் தன்னைப்பற்றிய எந்தச் சிறு சந்தேகமும் ஏற்படுத்த லீ தயாராக இல்லை.
ஆனால், துங்கு மனதில் சந்தேக விதை விழுந்துவிட்டது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல் லீ இரட்டை ஆட்டம் போடுவதாக நினைத்தார். இடதுசாரிகளை எதிர்ப்பதாகச் சொல்கிறார், ஆனால், தன் PAP கட்சியில் அவர்களை வைத்துக்கொண்டிருக்கிறார். துங்குவுக்கு இன்னொரு பயமும் இருந்தது. பெரும்பான்மையான சீனர்கள் கொண்ட சிங்கப்பூரை மலாயாவுடன் இணைத்தால், மண்ணின் மைந்தர்களான மலாய்களின் முக்கியத்துவம் போய்விடும், இரு இனத்தினருக்குமிடையே கலவரங்கள் எழும், அத்தோடு லீ அரவணப்பில் கம்யூனிஸ்ட்களும் மலாயாவில் பலம் பெறுவார்கள் என்று அச்சம்.
துங்குவைத் திருப்திப்படுத்த, லீயும் பிரிட்டீஷ் அரசும் ஒரு வழி கண்டுபிடித்தார்கள். மலாயாவோடு, சிங்கப்பூர் மட்டுமல்லாது, பிரிட்டீஷ் காலனிகளாக இருந்த புரூனே (Brunei), சாராவாக் (Sarawak), வடக்கு போர்னியோ (North Borneo) ஆகிய பகுதிகளை இணைத்து ஐக்கிய மலேசியக் குடியரசு (Federation of Malaysia) என அமைக்கவேண்டும். இந்த ஆலோசனை அறிக்கையை லீ தயார் செய்தார்.
துங்கு சிங்கப்பூருக்கு வந்திருந்தார். பத்திரிகையாளர் சங்கத்தில் சந்திப்பு. அப்போது லீக்குக் கிடைத்தது ஆனந்த அதிர்ச்சி. துங்கு பேசினார், ‘என்றாவது ஒரு நாள், இங்கிலாந்து, சிங்கப்பூர், வடக்கு போர்னியோ, புரூனே, சாராவாக் ஆகிய மக்களோடு மலாயா நல்லுறவோடு இருக்கும். எப்போது, எப்படி இது நிகழும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஆனால், இது தடுக்கமுடியாதது. இந்தப் பகுதிகளுக்குள் அரசியல், பொருளாதார ஒத்துழைப்பைக் கொண்டுவர நாம் திட்டமிடவேண்டும்.’
லீ நிம்மதிப் பெருமூச்சு விட்டார். சிங்கப்பூர் மலாயாவுடன் இணைவதற்கு இடையூறாக இருந்த ஒரு தடை விலகிவிட்டது. அவர் கனவு நிறைவேறும் காலம் கைக்கு எட்டும் தூரத்தில்.
ஆனால், லீயின் கட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இணைப்புக்கு ஆயிரம் நிபந்தனைகள் போட்டார்கள். அப்போது சிங்கப்பூரில் ஆறு பெரிய தொழிற்சங்கங்கள் இருந்தன. இவை Big Six என்று அழைக்கப்பட்டன. இவற்றின் தலைவர்கள் இரு முக்கிய கோரிக்கைகள் வைத்தார்கள் – பெயரளவில் இல்லாமல், உண்மையான அதிகாரமுள்ள சுயாட்சி சிங்கப்பூரில் அமையவேண்டும்: பிரிட்டீஷாரால் அமைக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு கவுன்சிலைக் கலைக்கவேண்டும். இவற்றைச் செய்தால், சிங்கப்பூர் எப்போதும் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும், அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பது இந்த இடதுசாரிகள் கணக்கு.
இந்தக் காலகட்டத்தில் (1961), சிங்கப்பூரின் ஆன்ஸன் (Anson) என்னும் தொகுதியின் PAP மக்கள் பிரதிநிதி திடீர் மரணமடைந்தார். இடைத்தேர்தல். இங்கே வாங்கும் வாக்குகள்தாம், தன் மக்கள் ஆதரவுக்குச் சாட்சியாகும், துங்குவிடமும், பிரிட்டீஷ் அரசிடமும் ஆணித்தரமாகப் பேசி மலாயாக் குடியரசை உருவாக்கும் பலமான அடித்தளம் உருவாக்கும் என்று லீ நம்பினார். எப்படியாவது அமோக வெற்றி காணவேண்டும்.

PAP வேட்பாளர் தொழிற்சங்கத் தலைவராக இருக்க வேண்டும். அதே சமயம், கம்யூனிஸத் தாக்கம் இல்லாதவராக, துங்குவுக்கு ஏற்றவராக, லீ சொல் கேட்பவராக இருக்கவேண்டும். கிடைத்தார் அப்படி ஒருவர். முகமது பின் அவாங் (Mahmud bin Awang) என்னும் மலாய் இனத் தலைவர். அவருக்கு எதிராக, ஒர்க்கர்ஸ் பார்ட்டி (Workers’ Party), முன்னாள் முதலமைச்சர் டேவிட் மார்ஷலைக் களமிறக்கியது.
வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னால், கம்யூனிஸ்ட்கள் போட்டார்கள் ஒரு வெடிகுண்டு. ஆறு PAP அசெம்பிளி அங்கத்தினர்கள் கட்சித் தலைமைக்கு பகிரங்கக் கடிதம் எழுதினார்கள். Big Six என்னும் ஆறு தொழிற்சங்கங்களுக்கும் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டும்: அத்தனை அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: உள்நாட்டுப் பாதுகாப்பு கவுன்சிலைக் கலைக்கவேண்டும். இது வெறும் கடிதமல்ல, லீக்கு எதிராகத் தூக்கிய போர்க்கொடி, அவர் ஆதரவைத் தகர்க்கும் சதி.
அடிபட்ட சிங்கம் வெறியோடு எழுந்தது. கட்சியின் மூன்று அரசியல் செயலாளர்களையும் லீ கட்சியிலிருந்து வெளியேற்றினார். ஆறு அசெம்பிளி அங்கத்தினர்களும், தங்கள் சுயநலத்துக்காகக் கட்சியை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக அறிக்கை விட்டார். கம்யூனிஸ்ட்கள் இப்போது லீயை நேருக்கு நேர் மோதினார்கள். அவர் பிரிட்டீஷ் ஏகாதிபதியத்தின் கையாள், துங்குவுக்குச் சிங்கப்பூரை விலை பேசுகிறார் என்று அபாண்டப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டார்கள்.
பரபரப்பான தேர்தல் முடிந்தது. சிறிய அளவு வாக்கு வித்தியாசத்திலாவது ஜெயித்துவிடுவோம் என்று லீ நினைத்தார். ஏமாற்றம். 546 வாக்குகள் அதிகம் பெற்று மார்ஷல் வெற்றி கண்டார். மதமதப்பில் முழங்கினார், ‘(லீ அவர்களே), உங்கள் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுங்கள். ஓய்வில் இருக்கும்போது பணிவையும், மனித நேயத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அபாடிச் செய்வீர்களேயானால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உங்கள் திறமை, சுயநலமின்றி, நேர்மையோடு மக்களுக்குப் பயன்படும்.’ லீ சுயநலக்காரர், திமிர் பிடித்தவர், மனிதநேயமற்றவர் என்னும் வஞ்சப் புகழ்ச்சி இது!
கட்சிக்குள் எழும் எதிர்ப்பு, தேர்தல் தோல்வி ஆகியவற்றை லீயால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் தன்மீது நம்பிக்கையை மறுபடியும் மலரச் செய்யமுடியும். இதற்கும் மேலாக, அவருக்கே ஒரு தன்னம்பிக்கை டானிக் தேவைப்பட்டது. அந்த டானிக்…….
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்! மதியம் 1 மணிக்குள் 60% வாக்குப்பதிவு!

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

