.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }பி
ப்ரவரி 10, 1952. லீ, சூ தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. சீனக் காலெண்டர்படி 1952, ‘டிராகன் வருடம்.’* டிராகன் என்பது வெளவாலுக்கு இருப்பதைப்போன்ற இறக்கைகளுடன், நெருப்பைக் கக்கும் ராட்சசப் பல்லியாகவோ, முட்கள் நிறைந்த வாலையுடைய பாம்பாகவோ சித்தரிக்கப்படும் ஒருவித விலங்கு. சீனக் கலாச்சாரப்படி, டிராகன் நல்ல சகுனம், அதிர்ஷ்டத்தின் அடையாளம். அதிலும், பிப்ரவரி 10, 1952. டிராகன் புதுவருடத்தின் முதல் பெளர்ணமி. வருடத்திலேயே மிக அதிர்ஷ்டமான நாள். மகன் பிறந்த வேளை. அதிர்ஷ்டம் லீயைத் தேடிவரத் தொடங்கியது.
| *எல்லாக் கலாச்சாரங்களிலும் வருடங்களுக்குப் பெயர்கள் உண்டு. உதாரணமாக, தமிழ் வருடங்கள், பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி என்னும் பெயர்கள் கொண்ட அறுபது. சீன வருடங்கள் முப்பது. இவை விலங்குகள் பெயர் கொண்டவை – எலி, எருது, புலி, முயல், பாம்பு, டிராகன்.... |
ஒரு நாள் மதியம். அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைச் சீருடை ஊழியர்கள் யூனியன் (Postal & Telecommunications Unifomed Staff Union) நிர்வாகிகள் நான்கு பேர் லீயைச் சந்திக்க வந்தார்கள்.. சம்பள உயர்வுக்காகப் பல மாதங்களாக அரசாங்கத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு செவி சாய்க்கவில்லை, அவர்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தவும் மறுத்துவிட்டது. அண்மையில், அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு ஜெயித்த லீ தங்களுக்கும் நல்வழி காட்டுவார் என்னும் நம்பிக்கை. அவர்களால், மிகக் குறைவான ஃபீஸ் மட்டுமே தரமுடியும். லீ தயங்கவில்லை. தொழிலாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதுதான் அவர் குறிக்கோள், பணம் அல்ல. ஒத்துக்கொண்டார். அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைச் சீருடை ஊழியர்கள் யூனியனுக்கு இப்போது வக்கீல் லீ.
லீ வழிகாட்டலில் யூனியன் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தது. சிங்கப்பூரில் இருக்கும் அத்தனை அஞ்சல், தொலை தொடர்பு அலுவலகங்கள் முன்பும் மறியல் செய்யவேண்டும், ஒரு தொழிலாளியும் அலுவலத்துக்குள் நுழையக்கூடாது என்பது திட்டம். வேலை நிறுத்தம் என்றாலே அடிதடி, வன்முறை என்று தொழிலாளிகளும், பொதுமக்களும் நினைத்துக்கொண்டிருந்த காலம். போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் மாலை. ஊழியர்கள் பொதுக்கூட்டம். லீ பேசினார்.

லீ வியூகத்தை விளக்கினார். அவர்கள் நடத்தப்போவது, ‘நீ பெரியவனா, நாங்கள் பெரியவர்களா?’ என்று அரசாங்கத்தோடு ஊழியர்கள் நடத்தும் புஜபல வன்முறைப் போராட்டமல்ல. உரிமைகளுக்காக நடத்தும் அறப்போர். அரசாங்கம் வன்முறையைத் தூண்டிவிடலாம். அப்போதும், பொறுமையோடு அமைதி காக்கவேண்டியது அவர்கள் கடமை. இந்த மறியலின் குறிக்கோள், அரசின் கவனத்தையும், பொதுமக்களின் ஆதரவையும் பெற்று, சம்பள உயர்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மட்டுமே.
மே 13. மறியல் தொடங்கியது. வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்த்த அரசாங்கம், ஏராளமான போலீஸ்காரர்களை அஞ்சல், தொலைத் தொடர்பு அலுவலகங்கள் முன்னால் குவித்தது. ஆனால், ஊழியர்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கம் இறங்கிவந்தது. யூனியனோடு பேச்சு வார்த்தைகள் தொடங்கியது.
சட்டத்தை மீறாமல் அகிம்சை வழியில் போராடி, உரிமைகளைப் பெறவேண்டுமா? வழி காட்டுவார் லீ என்று அவர் புகழ் நாடெங்கும் பரவியது. ஏராளமான தொழிற்சங்கங்கள் லீயைத் தங்கள் சட்ட ஆலோசகராக அமர்த்திக்கொண்டன. என்றேனும் அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் பின்னால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிற்பார்கள். பலமான அடித்தளம் வேறென்ன வேண்டும்?
ஓடின ஏழு மாதங்கள். சிங்கப்பூர்த் துறைமுகத்தில் நேவல் பேஸ் லேபர் யூனியன் (Naval Base Labour Union) என்னும் தொழிலாளர் கப்பல்படைத் தளத் தொழிலாளிகள் அமைப்பு இருந்தது. 10,000 பேர் கொண்ட பலமான அமைப்பு. பெரும்பாலான உறுப்பினர்கள் இந்தியர்கள். பல மாதங்களாகச் சம்பள உயர்வு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வழக்கம்போல், காதுகளை மூடிக்கொண்டிருந்தது.
டிசம்பர் 29, 1952. பொறுமை இழந்த தொழிலாளிகள் திடீரென, முன் அறிவிப்பில்லாமல் வேலை நிறுத்தம் செய்தார்கள். ரிப்பேர் வேலைகள் அத்தனையும் நின்றன. இரண்டு பிரிட்டீஷ் போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் பழுதுபார்ப்புக்குக் காத்திருந்தன. அரசு உயர் அதிகாரிகள் யூனியனோடு பேசினார்கள். பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன, முறிந்தன.
இரு தரப்பும், நடுவரிடம் முடிவெடுக்கும் பொறுப்பைத் தரச் சம்மதித்தன. நடுவர் முன்னால், தங்கள் சார்பாக வாதாடும்படி யூனியன் லீ உதவியைக் கேட்டது. எடுத்துக்கொண்டார் பொறுப்பை. இங்கிலாந்து பிற நாடுகளில் இதைப்போன்ற பணிகளுக்கு என்ன ஊதியம் கொடுக்கிறது என்று ஒப்புவமைப் பட்டியல் போட்டார். வாதாடினார். நடுவர் ஊதிய உயர்வு தரவேண்டுமென்று தீர்ப்புச் சொன்னார். ஆனால் இந்த உயர்வு, தொழிலாளிகளின் எதிர்பார்ப்புகளைவிட மிகக் குறைவு.
தொழிலாளிகளுக்கு ஏமாற்றம். நடுவரின் முடிவை ஏற்க வேண்டாம், மறுபடி வேலை நிறுத்தம் தொடங்குவோம் என்றார்கள். லீ மறுத்துவிட்டார். ‘நடுவரின் தீர்ப்பை ஏற்போம் என்று வாக்குக் கொடுத்துவிட்டோம். முடிவு நமக்குச் சாதகமாக இல்லை என்பதற்காகக் கொடுத்த வாக்கைப் பின் வாங்குவது நேர்மையில்லை என்று பிடிவாதமாக இருந்தார்.’ லீ திறமைசாலி மட்டுமல்ல, நேர்மையான மனிதர் என்பது உலகத்துக்குத் தெரிந்தது.
ஆசிரியர்கள் சங்கம், நகரச் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் சங்கம், என யூனியன்களின் சட்ட ஆலோசகர் என்றாலே, லீதான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. வருமானம் குறைவுதான். ஆனால், தொழிலாளர்கள் அவரைத் தெய்வமாக மதித்தார்கள். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு வேதம். கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், இந்த மதிப்பும், மரியாதையும் கிடைக்குமா?
ஜுலை 1952. சிங்கப்பூர் யூனியன்கள் அனைவரும் கை கோத்தார்கள். ஜாயிண்ட் கவுன்சில் ஆஃப் ஆக்ஷன் (Joint Council of Action) என்னும் ஒருங்கிணைப்பை உருவாக்கினார்கள். மொத்தம் 14,000 அங்கத்தினர்கள். இவர்களுக்கு ஆலோசகர் லீ. எல்லாத் தொழிலாளிகளுக்கும், இந்தக் கவுன்சில் ஊதிய உயர்வு கேட்டது. அரசாங்கம் மறுத்தது. பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. லீ தொழிலாளர் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தார். அரசு சம்மதிக்காவிட்டால், வேலை நிறுத்தம் தொடங்கும், ஆட்சியே ஸ்தம்பித்துவிடும் என்று கொஞ்சம் மிரட்டல். யுக்தி பலித்தது. தொழிலாளிகளுக்குச் சம்பள உயர்வு கிடைத்தது. இன்னொரு வைரக்கல் லீ மகுடத்தில்.
லீ ஆதரவு வட்டம் பெருகிக்கொண்டிருந்தது. யூனியன்கள் மட்டுமல்ல, அரசு எந்திரங்களால் உரிமை மறுக்கப்பட்டவர்கள், நீதி கிடைக்காதவர்கள் அனைவருக்கும் புது நம்பிக்கை - தங்களுக்காக வாதாட ஒரு நல்லவர், நேர்மையானவர், பணத்தைவிட மக்கள் நலனே முக்கியம் என்று நினைப்பவர், இங்கிலாந்தில் படித்த அபாரத் திறமைசாலி, குறைந்த கட்டணத்துக்கு, ஏன், சில சமயங்களில் பணம் வாங்காமலே வழக்காடத் தயாராக இருக்கிறார். ஏழை, பாழைகள், அடித்தள மக்கள் நம்பிக்கை ஒளியானார் லீ.
செப்டம்பர் 1952. மலாயாவின் உட்டுஸான் மெலாயு (Utusan Melayu) நாளிதழின் ஆசிரியரும், உரிமையாளருமான யூசுப் இஷாக் (Yusof Ishak). மலாய் உரிமைகளுகாகப் போராடும் பத்திரிகை, பிரிட்டீஷ் அரசு எதிர்ப்புப் பத்திரிகை. அதன் முதன்மை உதவி ஆசிரியர் ஸமாது இஸ்மாயில் (Samad Ismail). ஒரு கம்யூனிஸ்ட் நண்பர் இந்தோனேஷியாவுக்குத் தப்பி ஓட உதவி செய்தார். ஆகவே, ஸமாதும் கம்யூனிஸ்ட் என்று அரசு முடிவு செய்தது. கைது செய்தார்கள் பல மாதங்களாகச் சிறையில். அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ‘ஸமாது சார்பாக லீ வாதாட முடியுமா?’ – யூசுப் இஷாக் வேண்டுகோள்.
இதுவரை லீ வாதாடிய வழக்குகள் தொழிலாளர் பிரச்சனைகள். இந்த வழக்கு வித்தியாசமான வழக்கு, அரசியல் வழக்கு, தன்னைப் புதிய தளத்துக்கு அழைத்துப்போகும் வழக்கு என்பதை லீ உணர்ந்தார். ஸமாது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஒத்துக்கொண்டார்.
லீ காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தார். ஸமாது மீது சாத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விவரங்கள் சேகரித்தார். சிங்கப்பூருக்கு அருகில் இருந்த செயிண்ட் ஜான்ஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸமாதை லீ சந்திக்க அரசு அனுமதி கொடுத்தது. போனார். பேசினார்.
ஸமாது, தன் சக கைதிகள் தேவன் நாயர், ஜேம்ஸ் புதுச்சேரி ஆகியோரை லீக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஏனோ, முதல் பார்வையிலேயே லீக்கு இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் நம்பக்கூடியவர்கள் அல்ல’ என்று தோன்றியது.
வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. லீ தோன்றினார். இருபது நிமிடங்கள் மட்டுமே வாதாட அனுமதி. ஸமாது ஒரு கம்யூனிஸ்ட்டைத் தப்பி ஓட உதவியது உண்மை. ஆனல், அவர் நண்பனுக்காகச் செய்த உதவி. கம்யூனிசத்துக்கும், இந்தச் செயலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்தார். நீதிபதி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. தன் முயற்சிகள் வீண் என்று லீ நினைத்தார்.
நடந்தது ஆச்சரியம். ஸமாது விடுதலை செய்யப்பட்டார். வழக்கில் வெற்றி, அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி. சட்டரீதியில் அரசாங்கத்தை அடிபணியவைக்க லீயால் முடியும் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்த வெற்றி.
தேவன் நாயர், சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கத் தலைவர். ஸமாது விடுதலை, ஆசிரியர்கள் சங்கத்திடம் நம்பிக்கையை உண்டாக்கியது. தேவன் நாயருக்காக வாதாட லீயின் உதவி கேட்டார்கள். தனிமனித வெறுப்பால், மறுக்க நினைத்தார். ஆனால், தொழில் தர்மம் அவர் கைகளைக் கட்டியது. ‘எனக்கு தேவன் நாயரைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், வழக்கறிஞராக அவருக்கு நியாயம் கேட்கவேண்டியது என் கடமை.’ வழக்கை ஏற்றார்.
தொழிலாளர்கள், அரசியல் களம், இவற்றைத் தொடர்ந்து லீ சட்ட அறிவைத் தேடி வந்தவர்கள் மாணவர்கள். 18-லிருந்து 55 வயதுக்கு உட்பட்ட எந்த ஆண்மகனையும் அரசாங்கம் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கலாம். யாருக்கும் மறுக்கும் உரிமை கிடையாது என்னும் அரசு ஆணை இருந்தது. 450 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்தச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்தச் சிறுவர்களுக்கு எதிராகக் காவல்துறை வன்முறையைக் களம் இறக்கியது. 41 சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 26 பேர் ஆறுமாதச் சிறைத் தண்டனை பெற்றார்கள். இவர்களுக்காக வாதாடத்தான் லீக்கு அழைப்பு.
சிங்கப்பூர்க் கல்விமுறையை ஆழமாக ஆராயும் வாய்ப்பு லீக்குக் கிடைத்தது. ஆங்கிலேயர் அல்லாதவர்கள், குறிப்பாகச் சீனர்கள் கல்வி பெறும் வசதியே இல்லை என்பதை உணர்ந்தார். ஆரம்பப் பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் ஆகிய போதனா மொழிகள் இருந்தன. நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டும்தான்.
போதிய ஆங்கில அறிவு இல்லாத சீன மாணவர்கள் சீனப் பள்ளிகளுக்குப் போனார்கள். இவை தனியாரால் நடத்தப்பட்டன. இங்கே, வசதிகள், ஆசிரியர்கள் தரம் ஆகியவை கீழ்நிலையில், ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லவே இல்லை. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் அத்தியாவசியம், ஆகவே, சீன மொழி மாணவர்களின் எதிர்காலம் கும்மிருட்டாக இருந்தது. வாழ்க்கையில் குறிக்கோளும், நம்பிக்கையும் இல்லாதவர்கள் மனம் சாத்தானின் தொழிற்சாலை. ஆகவே, இவர்களில் பலர் சமூக விரோதிகளானார்கள். மற்றும் பலர் கம்யூனிஸ்ட் அங்கத்தினர்களாக மாறி, தங்கள் சமுதாயக் கோபத்தைப் போராட்டங்களில் காட்டினார்கள்.
லீ மாணவர் தலைவர்களை, நூற்றுக்கணக்கான மாணவர்களை சந்தித்தார். அவர்களுக்காக வாதாட, இங்கிலாந்திலிருந்து ஒரு பிரபல வழக்கறிஞரை அழைத்துவந்தார். லீ இத்தனை முயற்சிகள் எடுத்தபோதும், கேஸ் தோற்றது. ஆனால், மாணவர் உலகம், சிங்கப்பூர்க் கல்விமுறையின் சீர்கேடுகள், இளைய தலைமுறையின் ஆதங்கங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றை லீ ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த மாணவர் தொடர்பு உதவியது. மாணவர்களிடையே அரசு எதிர்ப்பு குமுறிக்கொண்டிருப்பதை லீ கணித்தார். கல்விமுறையைச் சீரமைக்க முயற்சிகள் எடுக்கவேண்டும், குறிப்பாக ஆங்கிலம் அறியாத இளைஞர்களுக்கு வழி காட்டவேண்டும்.
சட்ட ஆலோசனைகளையும் தாண்டி, தங்கள் நன்மைக்கு ஆலோசனை சொல்பவராக, வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாணவர்கள் லீயை நினைத்தார்கள். அவர் வீட்டில் எப்போதும் திருவிழாக் கூட்டமாக இளைஞர்கள். சிலர் நள்ளிரவில்கூட வந்தார்கள். லீ வீட்டுக் கதவு இந்த ரசிகர்களுக்காக எப்போதும் திறந்தே இருந்தது. ஒரே ஒரு விஷயத்தில் லீ தெளிவாக இருந்தார் – தன் அரசியல் ஆசைகளைவிட, மாணவர்களின் வருங்காலம் முக்கியம். தான் தொடங்க நினைக்கும் அரசியல் கட்சியில் மாணவர் பலத்தைப் பகடைக்காய் ஆக்கக்கூடாது. அதே சமயம், சீன மாணவர்களுக்குச் செய்த உதவியால், அந்தப் பெற்றோர்களின் ஆதரவு லீ பக்கம்.
தொழிலாளர்கள், சீன மக்கள் ஆகியோரின் பக்க பலம் இருக்கிறது என்று தெரிந்த லீ புதிய கட்சி தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கினார். கெங் ஸ்வீ (Keng Swee), சின் சை (Chin Chye), ராஜரத்தினம், கென்னி (Kenny), லீ ஆகிய ஐந்து பேர் அடிக்கடி சந்தித்தார்கள், கலந்தாலோசனைகள் நடத்தினார்கள். மலாய் அடித்தட்ட மக்களோடு தொடர்பு கொண்ட ஊடகங்கள் தங்கள் வளர்ச்சிக்கு பலமாக இருக்கும் என்று நம்பினார்கள். அதனால், ஸமாது கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி, மலாய் – சிங்கப்பூரை விடுதலை நாடுகளாக்க வேண்டும். அதே சமயம், கம்யூனிஸ்ட்களிடமிருந்தும் விலகி நிற்கவேண்டும் என்பது அடிப்படைக் கொள்கை நிலைப்பாடு. கட்சியின் அடிப்படைக் கொள்கை ஜனநாயக சோஷியலிஸம்.
இந்தக் கூட்டத்துக்குத் தேவன் நாயரையும் அழைக்கவேண்டும் என்று ஆலோசனை வந்தது. லீக்கு விருப்பமில்லை. தனிமனித வெறுப்பு என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை, தொடங்கும் புதிய கட்சியில், அரசியல் அனுபவம் கொண்ட தேவன் நாயர் தனக்குப் போட்டியாக இருப்பார் என்று லீ பயந்தார் என்கிறார்கள். உண்மைக் காரணம் லீக்கு மட்டுமே தெரியும். தயக்கம் காட்டினார். ஆனால், நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கினார். இப்போது, குழுவில் ஏழு பேர். கூட்டங்களும் வாரம் ஒரு முறையானது.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் சாமர்த்தியசாலிகள். இங்கிலாந்தில் படித்த லீ போன்றவர்கள் தங்களுக்கு எதிராக அணி திரளத் தொடங்குவது அவர்களை விழிக்கவைத்தது. பயம் வந்தது. சிங்கப்பூரின் அரசியல் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்று ஆலோசனை கூற, ஸர் ஜார்ஜ் ரென்டெல் (Sir George Rendel) என்னும் நிபுணரை நியமித்தார்கள்.
ரென்டெல் பரிந்துரையின்படி, ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வந்தன – இதுவரை மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. சிங்கப்பூரில் பிறந்து 21 வயது தாண்டிய அனைவருக்கும் இப்போது வாக்குரிமை. 34 அங்கத்தினர்கள் கொண்ட சட்டசபை அமைக்கப்பட்டது. இதில் 25 அங்கத்தினர்கள், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்: ஆறு பேர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார்கள்: மூன்று பேர் அரசு அதிகாரிகள். இந்த 25 பேரிலிருந்து, ஒன்பது பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படும். இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் தேர்தலில் ஜெயித்துவந்த மக்கள் பிரதிநிதிகள். இவர்கள் யாரென்று, பெரும்பான்மை இடங்களைப் பிடித்த கட்சி தீர்மானிக்கும். மீதி மூன்று அமைச்சர்கள் அரசு அதிகாரிகள். சட்ட மாற்றங்கள் 1955 முதல் நிலுவைக்கு வரும். தேர்தல்கள் ஏபரல் 1955 – இல் நடக்கும் என அரசு அறிவித்தது.
லீ போன்ற விடுதலை விரும்பிகள் அனைவருக்கும் இது இனிப்புச் சேதி. முழு விடுதலைக்கு இது முதற்படி என்று குதூகலித்தார்கள். தேவன் நாயர், ஸமாது இருவரும் தேர்தலில் பங்கெடுப்பதை எதிர்த்தார்கள். லீயும் மற்ற நான்கு நண்பர்களும், தேர்தலுக்கு நின்று தங்கள் பலத்தை நாட்டுக்குக் காட்டத் துடித்தார்கள். அதற்குள், கட்சி தொடங்கவேண்டும்.
நவம்பர் 21, 1954. மக்கள் செயல் கட்சி என்னும் அர்த்தம் கொண்ட பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி (Peoples Action Party) பிறந்தது. தலைவர் லீ.

கட்சியின் லட்சியம், ‘முன்னேற்றத்தின் பயன்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கும் நேர்மையும், நியாயமுமான சமுதாயத்தை உருவாக்குவது.’ இந்த இலக்கை எட்டுவதற்காகக் கட்சி கீழ்க்கண்ட பாதைகளில் பயணிக்கும்:
நேர்மை
கட்சி தூய்மையானதாக, ஊழலற்றதாக, ஒளிவுமறைவு அற்றதாக, நேர்மையோடு நாட்டை வழி நடத்தும்.
இன சமத்துவம்
சிங்கப்பூர், அனைத்துச் சிங்கப்பூரியர்களுக்கும் சமமாகச் சொந்தமானது. இனம், மொழி, மதம் என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் அத்தனைக் குடிமக்களுக்கும், நியாயமும், நீதியும் கிடைக்கும்,
திறமைத் தலைமை
எல்லாக் குடிமகன்களும் முன்னேறச் சம வாய்ப்புகள் தரப்படவேண்டும். ஒவ்வொரு திறமைசாலியின் சிறப்பான பணியும் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும்.
தற்சார்பு
மக்கள் நல அரசு என்ற பெயரில், மக்கள் அரசாங்கத்தின் இலவசங்களை நம்பி வாழ்வதைத் தடுப்போம்.

இந்தக் கொள்கைகளின் அடிப்படையில், PAP கட்சி நம்பகத்தன்மை, காரியவாதம், ஒற்றுமை, தொலைநோக்கு, தீர்க்க முடிவெடுத்தல், கருணை, விழுந்தால் எழுதல் போன்ற பண்புகளோடு செயல்படும்.
கட்சிக்கொடியும், சின்னமும் கொள்கையைச் சுருக்கமாக விளக்கின:
பின்னணி வெள்ளை நிறம். கட்சியின் தூய்மையும், நேர்மையையும் காட்டும் அடையாளம்: நீல வட்டம், எல்லா இனத்தவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதைக் காட்டும் சின்னம்: சிகப்பு நிற மின்னல் வெட்டு, இந்தக் கட்சி செயல்வீரர்கள் என்பதை அறிவிக்கும்.
கொடி தயார், கொள்கை தயார், கோஷம் தயார். அடுத்து என்ன? கோட்டையைப் பிடிக்கவேண்டியதுதான்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! போட்டியின்றித் தேர்வாகும் சுநேத்ரா பவார்?

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்! மதியம் 1 மணிக்குள் 60% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

