‘நிறைய தண்ணீர் குடியுங்கள். நிறைய என்றால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இதில் சிரமமே இருந்தாலும் குடியுங்கள். சிறுநீர் வருகிறபோதெல்லாம் தவிர்க்காமல் கழித்துவிட்டு வாருங்கள். சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. அது சிறுநீரகத் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் சிறுநீரை வெளியேற்றுவதும் மிகவும் அவசியம். பள்ளிக்கூடத்துப் பசங்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது’ என்பதுமாதிரி ஒரு நிலைத் தகவலை தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்தார் தோழர் நல்லினா.
நல்லினா ஒரு மருத்துவர், இரண்டு பள்ளிக்கூடத்துப் பசங்களின் தாய், என்கிற வகையில் மேற்காணும் கருத்து இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டு லிட்டர் தண்ணீரேனும் குடிக்க வேண்டும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று (18.10.2015) திண்ணை இணைய இதழில் மருத்துவர் ஜான்சன் எழுதுகிறார்.