புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

22. மருத்துவ உலகின் மனசாட்சி - 2

சிறுவயதில் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடுவோம். அதற்கேற்றவாறு சட்டி, பானை, அடுப்பெல்லாம் வைத்து விளையாடுவோம்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2016, 6:30 pm

நாகூர் ரூமி

ஒரு டாக்டர் தவறு செய்யும்போது, குற்றவாளிகளில் அவர்தான் முதலாமவர்
- சர் ஆர்தர் கோனல் டாய்ல்

நோயறிதலில் நடக்கும் தவறுகள்

சிறுவயதில் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடுவோம். அதற்கேற்றவாறு சட்டி, பானை, அடுப்பெல்லாம் வைத்து விளையாடுவோம். எல்லாமே குழந்தைகளைப் போலவே குட்டி குட்டியாக இருக்கும். அதே மாதிரி நமது ரத்தத்திலும் குட்டித் தட்டுகள் உண்டு. நம் ரத்தத்தில் உள்ள அநேக சமாசாரங்களில் ப்ளேட்லெட் என்பதும் ஒன்று. ப்ளேட் என்றால் தட்டு அல்லவா? தட்டு மாதிரி இருப்பதால் அவற்றுக்கு அந்தப் பெயரோ என்னவோ. ப்ளேட்லெட்டுகள் குட்டி ரத்தத்தட்டுகள். தட்டணுக்கள் என்றும் அவை சொல்லப்படுகின்றன. சரி, அவற்றைப் பற்றி இங்கு ஏன் பேசுகிறேன்? உங்களுக்காகத்தான், ஐமீன், நமக்காகத்தான்.

இந்தக் குறுந்தட்டுகள் ரத்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தால் அது ‘நார்மல்’ என்று சொல்லப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதரின் ரத்தத்தில் இத்தனை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டும் என்று ஒரு அலோபதி கணக்கு உண்டு. அதை வைத்துத்தான் நாம் ஆரோக்கியமானவரா இல்லையா என்பதை அது முடிவு செய்யும்! நம்மை நோயாளியாக்கும் கணக்கு என்றுகூட அதைச் சொல்லலாம்.

எத்தனை ப்ளேட்லெட்டுகள் இருந்தால் நாம் ஆரோக்கியமானவர் என்ற கணக்குக்குள் போவதற்கு முன், இந்தச் சராசரிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். நமக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும், எவ்வளவு ரத்தம் இருக்க வேண்டும், ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும், ரத்தத்துக்குள் இருக்கும் சமாசாரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும், நாடித்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், புரோட்டின், விட்டமின், கால்சியம், கார்போஹைட்ரேட், அயன் போன்ற சத்துகளெல்லாம் உணவில் எந்த அளவில் இருக்க வேண்டும் – இப்படி சராசரிக் கணக்கு நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் வியாபிக்கிறது. எது சராசரி அளவு, எது அளவு மீறல், எது சராசரியைவிடக் குறைவு என்றெல்லாம் கணக்குகள் உள்ளன. ஒரு சின்ன அட்டவணை தருகிறேன் பாருங்கள்.

நார்மல் பற்றிய அட்டவணை
உடல் உஷ்ணம்
98.6 F / 37C
ரத்த அழுத்தம்
120/80
சர்க்கரை (சாப்பிடாமல்)
70 - 100 mg/dl
சர்க்கரை (சாப்பிட்டு 2 மணி கழித்து)
140-க்கும் கீழே
ஹீமோக்ளோபின்
12-16
வெள்ளை அணுக்கள்
4500 - 10,000 (ஒரு மைக்ரோ லிட்டருக்கு)
சிவப்பு அணுக்கள்
4.7 – 6.1 மில்லியன் (ஒரு மைக்ரோலிட்டருக்கு)
 
இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு என்றெல்லாம் போகும்போது, இந்த அட்டவணையில் மாற்றங்களும் இருக்கும்! இந்தக் கணக்கு சரியில்லை, நாகூர் ரூமி என்ற முட்டாள் தவறான அட்டவணையைக் கொடுத்திருக்கிறார். உதாரணமாக, நார்மலாக இருக்க வேண்டிய சர்க்கரை 70 - 100 அல்ல, 70 - 99தான் என்று யாராவது ஒரு அட்டவணை ‘எக்ஸ்பர்ட்’ இந்த அட்டவணைக்கு மறுப்புகூட தெரிவிக்கலாம்!

எது எப்படியோ, ஒரு அட்டவணைப்படி மனிதனால் வாழமுடியுமா? அது சாத்தியம்தானா?

120/80-ல் ரத்த அழுத்தத்தை வைத்துக்கொண்டு ஒருவர் ஒலிம்பிக்ஸில் ஓடிவர முடியுமா? காதல் வசப்படும்போது, காதலியோடு கண்ணால் பேசும்போது, கட்டியணைக்கும்போது – இந்த மாதிரியான எசகுபிசகான சூழ்நிலைகளிலெல்லாம் 120/80-ல் நம் ரத்த அழுத்தத்தை வைத்திருக்க முடியுமா?! அப்படி வைத்திருப்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்தால், காதலிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படாதா?! ஒரு பெண் குழந்தையை ஒருவன் பாலியல் வன்முறை செய்வதைப் பார்க்க நேர்ந்தாலோ, அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டாலோ ரௌத்ரம் பழகியவர்களின் தார்மிகமான கோப நிலையில் 120/80 எங்கே போகும்? கடன் கொடுத்தவன் கண்ணில் படாமல் அவனது ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு நாம் ஓடி ஒளியும்போது, நமக்கும் ரத்த அழுத்தம் அப்படியே இருக்குமா? கபாலி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக, மலேசியாவில் அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை விட்டானே ஒரு ரசிக முட்டாள், அவனது ரத்த அழுத்தம் குதிக்கும்போது எந்த நிலையில் இருந்திருக்கும்?
இவ்வளவு வேண்டாம். எல்லாவற்றுக்கும் நானே பதில் சொல்லிவிடுகிறேன். நாம் சாப்பிடும்போது, பட்டினி கிடக்கும்போது, தூங்கும்போது, கவலைப்படும்போது, சிந்தனை செய்யும்போது, தியானம் செய்யும்போது -- இப்படி வாழ்வின் பல நிலைகளிலும் நமக்குப் பலவிதமான ரத்த அழுத்தம் இருக்கும். காந்திக்குக்கூட 200/140தான் பெரும்பாலும் இருந்ததாகவும், அதுவே அவருக்கு நார்மலாக இருந்ததையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.
மாற்றமே அடையாத ஒரு யந்திரமாக மனிதன் இருக்கும் பட்சத்தில்தான் இந்தச் சராசரிகள் சாத்தியம். மனிதன் மனிதனாக இருக்கும்வரை இந்தச் சராசரிக் கணக்குக்குள் வரவே முடியாது.

சரி, இந்தச் சராசரிக் கணக்கை யார், எப்போது, எப்படிக் கண்டுபிடித்தார்கள்? யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் உடல் உஷ்ணம் ஏன் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டும் என்று ஒரு டாக்டரிடம் கேட்டுப்பாருங்கள். அவராலும் விளக்க முடியாது. அவருக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது.
உடலில் பிரச்னை இல்லாதபோது எந்த டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டுமோ அந்த ஹீட்டில் உடல் இருக்கும். அது 98.6-ஆக இருக்கலாம் அல்லது வேறு எதாவதாகக்கூட இருக்கலாம். ஆனால், உடலில் சளி போன்ற கழிவுகள் அதிகமாகத் தேங்கிவிடும்போது, அந்தக் கழிவுகளை உஷ்ணமாக மாற்றி உடலில் இருந்து நீக்கும் இயற்கையான வைத்தியத்துக்குப் பெயர்தான் காய்ச்சல்! அப்போது உடலின் உஷ்ணநிலை இயல்பான உஷ்ணநிலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். மாத்திரை மருந்து சாப்பிட்டு உஷ்ணத்தை நாம் குறைப்போமானால், கழிவுகள் வெளியேறாமல் வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும்.

ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் கணக்கைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்தில் 1,50,000-லிருந்து 4,50,000 வரை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டுமாம்! பொதுவாக, ஏதாவது ஜுரம், குறிப்பாக வைரல் ஃபீவர், வரும்போது ப்ளேட்லெட்டுகளின் அளவு கணிசமாகக் குறையும் என்று சொல்லப்படுகிறது. (இதுவும் அஞ்சுவதற்குரிய விஷயமே இல்லை என்பதை பின்னால் பார்க்கலாம்). ஆனால் ப்ளேட்லெட்டுகளை கணக்கிட்டு, ‘உங்களுக்கு 1.5 லட்சம்தான் இருக்கிறது. ஆனால் 2 லட்சம் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, ஆள் வசதியான ஆளாக இருந்தால், அவருக்கு ‘சலைன் ட்ரிப்’ ஏற்றி, ஐ.சி.யு.வில் படுக்கவைத்து 25,000-லிருந்து 30,000 வரை பிடுங்கிய பிறகுதான் வெளியே விடுவார்கள்’ என்கிறார் ஒரு டாக்டர் (பக்கம் 13).
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பலருக்கு மஞ்சள் காமாலை வருவது சாதாரணமானதுதான். ஆனால், பல மருத்துவமனைகளில் அதையே காரணம் காட்டி, உங்கள் குழந்தைக்கு 10 mg ’பிலிரூபின்’ உள்ளது. ஒரு ‘பிலிரூபி’னுக்கு மேல் இருந்தால் அது கெடுதியாகும் என்று சொல்லி, தெளிவாக ‘பிரின்ட்’ செய்யப்பட்ட ‘ரிப்போர்ட்’டை காட்டுவார்கள். ஆனால், அந்தக் கணக்கு வளர்ந்தவர்களுக்குரியது. குழந்தைகளுக்கு 14 முதல் 16 வரை ‘பிலிரூபின்’ என்ற ஒரு சமாசாரம் உடலில் இருக்கலாம். அதற்கு மேல் போனால்தான் பிரச்னை (என்று சொல்லப்படுகிறது). ஆனால், வளர்ந்தவர்களுக்கான அறிக்கையைக் காண்பித்து குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார் அதே டாக்டர் (அதே பக்கம்). நமது ரத்தத்தில் உள்ள வயசான சிவப்பணுக்களை உடலை விட்டு நீக்கும்போது உருவாகக்கூடிய ஒன்றுதான் ‘பிலிரூபின்’. உடலுக்குள் கணந்தோறும் லட்சக்கணக்கான சமாசாரங்கள் உருவாகும். அவற்றின் பெயர்களையும் அளவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஆனால் புரியாத, ‘விஞ்ஞானப்பூர்வமான’ பெயர்களைச் சொன்னால்தானே நம்மை பயமுறுத்த முடியும்?

தேவையற்ற பரிசோதனைகள்
உங்களுக்கு மலேரியா வந்துவிட்டது என்று ‘லேப் ரிப்போர்ட்’டை வைத்து டாக்டர் சொல்லுவார். அதற்கான மருந்து மாத்திரைகளையும் கொடுப்பார். ஆனால், நோயாளியாக்கப்பட்டவருக்கு எந்தக் குணமும் ஏற்படாது. அதன்பிறகு அவருக்கு இன்னொரு ‘டெஸ்ட்’ எடுக்கப்படும். அதன் விளைவாக, அவருக்கு வந்தது ‘மலேரியா’ அல்ல, ‘டைஃபாய்டு’ என்று சொல்வார்கள்! கேட்கின்ற கமிஷனை கொடுத்துவிட்டால், டாக்டர்கள் விரும்புகின்ற அறிக்கைகள் கிடைக்கும் என்கிறார் சட்டீஸ்கர் நகரின் ஷாஹித் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர் ஜனா!
 
‘ஒன்று அல்லது இரண்டு லேப் ரிபோர்ட்டுகள் மட்டுமே வைத்திருக்கும் நோயாளிகள் மிகக்குறைவானவர்களே. நான் அன்றாடம் பார்க்கும் பலரிடத்தில், ஒவ்வொருவரும் தேவையில்லாத பல அறிக்கைகளைக் கொத்துக்கொத்தாக வைத்திருக்கின்றனர்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சீனியர் சர்ஜனான டாக்டர் அர்ஜுன் ராஜகோபாலன்.
 
ஒரு ஜுரம் வந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆய்வுக்கூடப் பரிசோதனை செய்தால், அது என்ன ஜுரம் என்று தெரியாது. ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அது டைஃபாய்டு என்றோ, டெங்கு என்றோ தெரியும் (இதுபற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்). ஆனால், ஜுரம் வந்தவருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ‘டெஸ்ட்’ எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் ஒரு பெருநகர நோய்க்குறி வல்லுநர். இவர்கள் நோய்க்குறி வல்லுநர்கள் மட்டுமல்ல. பரிசோதிக்காமலே நோய்க்குறிகளை வாஷ் பேசினிலோ சிங்க்-கிலோ எறிந்துவிடும் குறி-எறி வல்லுனர்களாகவும் உள்ளனர் (பக்கம் 14)!
ஒரு பெண் குழந்தை உண்டானால், அவளுக்குத் தேவையே இல்லாமல் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கைக்கான ‘ஹீமோக்ரம் டெஸ்ட்’, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை ஒழுங்காக இயங்குகிறதா என்று அறியும் டெஸ்ட்டுகளெல்லாம் எடுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் ஒரு கைனகாலஜிஸ்ட் (பக்கம் 15).
மனச்சிதைவு கொண்டவர்களைக்கூட மனநல மருத்துவர்கள் விட்டுவைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு தலைவலி வரத்தான் செய்யும். அது அவர்களைப் பொருத்தவரை சாதாரணமானதே. ஆனால், அதற்குக்கூட எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார், கொல்கத்தாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான டாக்டர் சுமித் தாஸ்.
 
தேவையற்ற அறுவை சிகிச்சைகளும் மருந்துகளும்
ஒரு படத்தில் கார்த்திக் நடித்திருப்பார். அதில் வீட்டு வாடகை கேட்க வரும் வீட்டுக்காரர், அறையில் இருக்கும் ஒரு கட்டிலில் உட்காருவார். உடனே கட்டில் விழுந்து உடைந்துவிடும். அதைப்பார்க்கும் நாயகன், ‘சார் இது கட்டில் இல்லை, கட்டில் மாதிரி’ என்று சொல்வார். அதைப்போல இப்போதெல்லாம் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மாதிரிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஹெர்னியா’ (குடலிறக்கம்) இல்லாத ஒருவருக்கு, ஆய்வுக்கூட பரிசோதனை அறிக்கைகளின்படி ‘ஹெர்னியா’ என்று சொல்லி, அவருக்கு ‘அனஸ்தீஸியா’வும் கொடுத்து, சில தையல்களை மட்டும் போட்டுவிட்டு, ‘ஹெர்னியா ஆபரேஷன்’ செய்த மாதிரி காண்பித்து, அதற்குரிய ‘பில்’லை வாங்கிவிடுகிறார்கள் என்கிறார் ஒரு டாக்டர் (பக்கம் 16).
இன்னொருவருக்கு முதுகுத்தண்டில் ஒரு தட்டு நழுவிவிட்டது என்று சொல்லி, ஆபரேஷன் செய்த மாதிரி காண்பித்து, ஆபரேஷனுக்கான முழு சார்ஜையும் வாங்கிகொண்டார்கள் ஒரு பெருநகரில் (பக்கம் 17).
ஒவ்வொரு நாளும் வயதான இரண்டு அல்லது மூன்று பேரை நான் பார்க்கிறேன். அவர்களின் பிரச்னையெல்லாம் அவர்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி தேவைப்படுவதுதான். ஆனால், அவர்களுக்கு அநியாயமாக ‘காடராட்க் ஆபரேஷன்’ செய்யப்பட்டு 40,000 ரூபாய்கள் வரை பெறப்படுகிறது என்று குமுறுகிறார் ஒரு கண் மருத்துவர் (பக்கம் 17).
எங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் லேசர் சிகிச்சை பற்றி சொல்லித் தரப்படுவதில்லை. ஆனால், நாங்கள் அதை நோயாளிகளை வைத்து பரிசோதித்துக் கற்றுக்கொள்கிறோம். தவறுகள் நடக்கும்தான். ஒரு லேசர் யந்திரத்தை வாங்கிவிட்டால், போட்ட முதலை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான் அங்கே வேலை செய்கிறது. அவசியமே இல்லாவிட்டாலும், நோயாளிகளை யந்திரத்துக்குள் அனுப்புவது நடக்கத்தான் செய்கிறது என்கிறார் இன்னொருவர் (பக்கம் 26).
ஒரு நாலு வயதுப் பெண் குழந்தைக்கு கண்கள் அடிக்கடி சிவந்துபோயின. அக்குழந்தையின் அம்மா, மகளை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஸ்டீராய்டு சொட்டுகளை போடச் சொன்னார். ஒரு ஆண்டு ஆகியும் அதே சொட்டுகள்தான் பலமுறை பயன்படுத்தப்பட்டன. ஆனால், நீண்ட காலத்துக்கு ஸ்டீராய்டு சொட்டுகள் கொடுத்தால், கண்களில் ‘காடராக்ட்’ ஏற்பட வாய்ப்புண்டு.

அந்தச் சின்னப்பெண்ணை என்னிடம் அழைத்து வந்தார்கள். கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்று. அந்த நான்கு வயதுக் குழந்தைக்கு நான் ‘காடராக்ட்’ அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது என்கிறார் ஒரு கண் மருத்துவர் (பக்கம் 27).

பணத்தின் பின்னால்
ஒரு ஆட்டோவில் ஏறி இந்த மருத்துவமனைக்குப் போ என்று சொன்னால், அவன் வேறு ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறான். ஏன்? அந்த மருத்துவமனை அவனுக்கு ஏற்கெனவே அதற்கான ‘டிப்ஸ்’ கொடுத்துள்ளது என்கிறார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த கைனகாலஜிஸ்ட் டாக்டர் சுபாஷ் பாட்டில்.

ஒரு பல்லை எக்ஸ்ரே எடுத்தால் போதும் என்ற நிலையில், ஏன் பத்து பற்களுக்கு எக்ஸ்ரே எடுக்கிறார்கள்? அப்போதுதான் 50 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார் ஒரு டாக்டர்! (பக்கம் 27).
‘விருப்பமில்லாமல் போருக்குத் தள்ளப்பட்ட ஒரு ராணுவ வீரன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டே முன்னேறுவதுபோல, தனியார் மருத்துவத் துறைக்குள் நுழையும் ஒவ்வொரு டாக்டரும், தன் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த சர்ஜன் டாக்டர் சஞ்சய் நக்ரால்.
 
ஒரு சாதாரண சலைன் பாட்டிலைத் திருடும் டாக்டர்கள்கூட இருக்கிறார்கள் என்கிறார் இன்னொருவர் (பக்கம் 28)! ஆனால், குழந்தைக்குத் தாய்ப்பால் தேவையில்லை, கொடுக்க வேண்டாம், தான் எழுதிக்கொடுக்கும் பால் ‘பாக்கட்’டையே பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் டாக்டர்கள் இருப்பது வணிகமயமாக்கட்ட சேவையின் உச்சகட்டம் என்று சொல்லலாம் (பக்கம் 30)!

உங்களுக்கு கேன்சர் உடல் முழுவதும் பரவிவிட்டது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட ஒரு நோயாளி, தனியார் மருத்துவமனையை அணுகுகிறார். அங்கே இனிக்க இனிக்க அவரிடம் பேசி, அவருக்கு தேவையில்லாத, நிச்சயம் பலன்கொடுக்காத ஒரு ஆபரேஷனை செய்து பணம் மட்டும் சம்பாதிக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் டெல்லி AIIMS-ல் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் எல்.ஆர். மர்மு.
இன்னும் உள்ளது…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.