புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

23. மருத்துவ உலகின் மனசாட்சி - 3

அமெரிக்கன் பீன்ஸ் அரை கிலோ வாங்கி வந்து,

News image
Updated On :29 ஆகஸ்ட் 2016, 6:34 am

நாகூர் ரூமி

ஒரு சோப்பு வாங்க வேண்டுமென்றால், நமக்குப் பிடித்த சோப்பையே நாம் வாங்குவோம். எதை வாங்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்வோம். ஆனால், மருந்து விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது. நம்முடைய பணத்தில் நாம் எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்கிறார்.

காசு, பணம், துட்டு, மணி மணி
Dissenting Diagnosis என்ற நூலில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தைத்தான் மேலே கொடுத்துள்ளேன். ஆனால் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! நமக்கான பொறுப்பை ஒரு மருத்துவர் எடுத்துக்கொள்ளும்போது அவர் எவ்வளவு பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும்! ஆனால், இந்த உலகில் பொறுப்புணர்வும் மனிதாபிமானமும் உள்ள மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதைத்தான் அந்த நூல் காட்டுகிறது. டாக்டர்களெல்லாம் மருந்துக் கம்பெனிகளின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்று டெல்லியைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் கொசைன் சொல்வது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது (பக்கம்35).
 
ஒரு மாநாட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி ஒரு மருந்துக் கம்பெனி என்னை வெளிநாட்டுக்கு அழைத்தது. ஆனால் நான் செல்லவில்லை. அவர்கள் தரும் மருந்துகள் எதையும் நான் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்கவில்லை என்று தெரிந்ததும் என்னிடம் வருவதை அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுசித்ரா (பக்கம் 37).

தங்கள் மருத்துவமனைகளின் வருமானத்தைப் பெருக்க உதவும் டாக்டர்களை மட்டுமே கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றன. அங்கே ஒரு நோயாளியிடம் 1,50,000 ரூபாய் வசூலிக்கப்பட்டால், அதில் 15,000 மட்டுமே டாக்டருக்குக் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார் புனேயைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் குப்தா (பக்கம்53).

ஒரு பெரிய மருத்துவமனையில் நிகழ்ந்த மாரடைப்பு சிகிச்சையில் ஒரு நோயாளி இறந்துபோனார். ‘மருத்துவத் துறையில இதெல்லாம் சகஜமப்பா’ என்பதுபோல எளிமையான அந்த சிகிச்சைக்காக, 16 லட்ச ரூபாய் ‘பில்’ இறந்தவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது! ஆனால், நோயாளியின் உறவினர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே, ‘ரமணா’ படத்தில் வரும் காட்சிபோல, அந்த மருத்துவமனை அந்த நோயாளியின் உடலைக் கொடுக்காமல் மறைத்துவிட்டது! கடைசியில், ஒரு டி.எஸ்.பி. நண்பர் வந்து சோதனை செய்யவேண்டி இருந்தது என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர் (பக்கம் 54).
 
‘மும்பையில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் எனக்கொரு எளிமையான ஆன்ஜியோப்ளாஸ்டி செய்யப்பட்டது. காலையில் 10 மணிக்கு சேர்க்கப்பட்ட எனக்கு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது. நாலு லட்ச ரூபாய் ‘பில்’ கட்டச் சொல்லி சொன்னார்கள். அதுவும் நான்கு மணி நேரத்தில். செக், ட்ராஃப்ட் எதுவும் வாங்கமாட்டார்களாம். ரொக்கப்பணம் மட்டும்தான்! எப்படியோ சமாளித்து பணத்தை நான் கட்டினேன். எல்லோராலும் இப்படிச் செய்ய முடியுமா என்ன’ என்று அங்கலாய்க்கிறார், டாக்டர் ராஜேந்த்ர மலோஸ் (பக்கம் 58).

‘இங்கே இருக்கும் டாக்டர்களில் 90 சதவீதம் பேர் அலோபதி டாக்டர்களே அல்ல. எல்லோருமே ஹோமியோபதி அல்லது ஆயுர்வேத டாக்டர்கள்தான். ஆனால், அலோபதி டாக்டர்களாக அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் தொடர்பும் செல்வாக்கும் உள்ளது. என்னை எப்படியாவது இந்தத் துறையிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

‘நான் ஒரு நோயாளியிடம் 40 ரூபாய்கள் மட்டுமே வாங்குகிறேன். ஒரு நாளைக்கு 150 நோயாளிகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்த டாக்டர்களோடு எனக்குப் பிரச்னைதான். தேவையில்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எழுதிக்கொடுத்த சீட்டுகளைக் கொண்டு வந்து நோயாளிகள் என்னிடம் காட்டுவார்கள். நான் அவற்றையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போங்கள், உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனவே, என்னால் அந்த டாக்டர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 முதல் 30,000 வரை இழப்பு ஏற்படுகிறது. அதனால்தான் அவர்கள் என்னைத் தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அச்சமூட்டும் நிஜம் இதுதான். ஆனால் நான் விடப்போவதில்லை. என்னைப்போல இன்னொரு டாக்டர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவர் அடங்கிப் போய்விடலாம். ஆனால் அவரை நான் குறைசொல்லமாட்டேன்’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர் (பக்கம் 63).
‘என் க்ளினிக்குக்கு ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். அக்குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சும்மா வயிற்றில் காற்று இருந்தது. அவ்வளவுதான். எந்த மருந்தும் அதற்குத் தேவையில்லை என்று நான் சொன்னேன். அன்று மாலை எனக்கு வேறொரு டாக்டரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் ஒரு குழந்தையை அனுப்புவதாகவும், அது ரொம்ப சீரியஸான நிலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் நான் பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிய அதே குழந்தைதான் அது!
‘அந்தக் குழந்தைக்குக் குடல்கள் திருகிக்கொண்டு இருந்ததாக ஸ்கேன் அறிக்கை சொன்னது. ஆனால், உண்மையில் அக்குழந்தைக்கு அப்படி எதுவும் இல்லை. அது சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு நாள் குழந்தையை என் க்ளினிக்கில் சேர்த்துவைத்து மறுநாள் வீட்டுக்கு அனுப்பினேன். குழந்தைக்குப் பெற்றோரே அவர்கள் இஷ்டத்துக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்’ என்று கூறுகிறார் மஹாராஷ்ட்ரா டாக்டர் ராஜீவ் தமன்கர் (பக்கம் 66).

நார்மல் டெலிவரியா? அப்படீன்னா?
மகப்பேறு மருத்துவர்கள் பலருக்கு ‘நார்மல் டெலிவரி’ என்றால் என்னவென்றே தெரியவில்லை! ‘நார்மல் டெலிவரி’ என்றவுடன் பயந்து, அவர்கள் ‘அப்நார்மலாக’ ஆகிவிடுகிறார்கள்! உடனே ‘சிசேரியன் செய்ய வேண்டும்’ என்று சொல்லி தப்பித்துவிடுகிறர்கள். அவர்களைப் பொறுத்தவரை, வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்படுதான் ‘நார்மல்’!
ஒரு பெண், குழந்தை உண்டாவது சந்தோஷமான இயற்கையான நிகழ்வுதானே? ஒரு நோய் வந்தால்தானே டாக்டரைப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், குழந்தை உண்டாவது ஆரோக்கியமான நிகழ்வுதானே? அதற்கு ஏன் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ஹீலர் உமர், ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள்! இந்த நியாயமான கேள்வி நமக்கு எப்போதாவது உரைத்திருக்கிறதா?
 

Story image


ஹீலர் உமர்
இல்லை, குழந்தை வளர்ச்சிக்கான மருந்து மாத்திரைகள், ஊசிகள் கொடுப்பார்களல்லவா? அப்போதுதானே குழந்தை கொழுகொழுவென வளரும் என்று நாம் சொல்லலாம். ஆனால் நம் கொழுகொழு முன்னோர்களெல்லாம் கைனகாலஜிஸ்ட்டுகளின் தொடர்ந்த கவனிப்பில் உருவானவர்களா? கைனகாலஜிஸ்ட் சமுதாயம் உருவாவதற்கு முன்னர் உருவான குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவில்லையா? வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்களெல்லாம் அப்படிப் பிறந்தவர்களா என்ன?
குழந்தை உண்டாவது எப்படி இயற்கையானதோ, அதேபோல குழந்தை வளர்வதும், பிறப்பதும் இயற்கையானதுதான். இன்றைக்கு ஹீலர்களின் புண்ணியத்தால் நூற்றுக்கணக்கான நார்மல் டெலிவரிகள் நடந்தேறியுள்ளன. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட பல தாய்மார்கள் உருவாகியுள்ளனர். ‘அப்பா’ என்ற சமீபத்தைய திரைப்படத்தில்கூட இவ்விஷயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்துகொண்டுள்ளது. இதற்கு வேண்டிய தெளிவும் தைரியமும் இன்னும் நம்மிடம் வரவில்லை. குழந்தைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது, மறுபிறப்பைப் போன்றது என்று சொல்லி அச்சமூட்டவும், அச்சப்படவுமே நாம் விரும்புகிறோம். ஒனக்கென்ன, நீ ஆம்பள, ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவ, எங்களுக்கல்லவா அந்தக் கஷ்டம் தெரியும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் ‘நார்மல் டெலிவரி’, அதுவும் ‘ஹோம் டெலிவரி’ செய்துகொண்ட பெண்களிடம் பேசிப்பார்த்தால் உண்மை தெரியும். ஏனெனில், மருத்துவமனைகளில் உண்மை சொல்லப்படுவதே இல்லை. பணம் நிறைய பிடுங்குவதற்கான அச்சமூட்டும் செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன.


எனக்குத் தெரிந்த ஹீலர் நண்பர் ஒருவரின் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தை வெளியில் வந்து பாதியில் நின்றுகொண்டிருந்தபோது அந்தத் தாய்க்கு மயக்கம் வந்து நினைவிழந்தார். என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். ஒன்றுமே செய்யவில்லை, குழந்தையை வெளியே தள்ளும் அளவு அவருக்கு சக்தி இல்லாததால், அதுவரை அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தேவையான சக்தியைத் திரட்டிக்கொண்டிருந்தது அவரது உடல். ஒரு கால் மணி நேரம் கழித்து அவருக்கு மீண்டும் நினைவு வந்தது. பிறகு குழந்தையும் நல்லபடியாகப் பிறந்தது என்று வெகு சாதாரணமாகக் கூறினார்.


அதே சூழ்நிலை மருத்துவமனையில் ஏற்பட்டிருந்தால் பிரச்னை பெரிதாக்கப்பட்டு, வாழ்வா சாவா என்று சொல்லப்பட்டு, ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாத்தினோம் என்று சொல்லி நிறைய பணம் பிடுங்கப்பட்டிருக்கும். இயற்கையான விஷயங்களுக்கு இயற்கையே பொறுப்பேற்றுக்கொள்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டி உள்ளது. எனினும், இக்காலத்தில் ‘நார்மல் டெலிவரி’ செய்ய விரும்பும் பெண்கள் மிக அரிதாகவே இருக்கின்றனர்.
‘கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒரு எம்.டி. டாக்டர் என்னிடம் பேசினார். அவர் ஒரு பணக்கார தனியார் மருத்துவமனையில் படித்து எம்.டி. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு அனுபவமும் கிடையாது. ஒரு பணக்காரப் பெண், அவர் வேலை பார்த்த பெரிய மருத்துவமனைக்கு வந்து கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் செய்து அனுப்பியிருக்கிறார். ஆனால், சில வாரங்கள் கழித்து, உதிரப்போக்கு அதிகமாக இருக்கிறது, வயிற்று வலியும் உள்ளது என்று அவர் திரும்பி வந்திருக்கிறார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது கர்ப்பப் பைக்குள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது தெரிய வந்தது. சரியாக ‘அபார்ஷன்’ செய்யப்படவில்லை.


‘இது நடப்பதுதான் என்று சொல்லி, செய்ய வேண்டியதைச் செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்தப் புது எம்.டி. மருத்துவர், அந்தப் பெண்ணுக்கு ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் நிறைய கொடுத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்! மேலும் மேலும் ஆன்ட்டிபயாடிக்ஸ்!


‘கடைசியில் ‘செப்டிக்’ ஆகி, ஜுரம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு எல்லாம் அபாயகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. கர்ப்பப்பையை நீக்கிவிட வேண்டும் என்ற நிலை வந்த பிறகுதான், அந்த எம்.டி.யிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
‘கொஞ்சம் முன்னாடியே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு, ‘இப்போதுதான் சொல்கிறேனல்லவா?’ என்று பதில் வந்தது! அனுபவம் இல்லை என்பதோடு, திமிரும் சேர்ந்துகொண்டிருந்தது.


‘நாங்களெல்லாம் ஒரு பிரச்னை வந்தால் உடனே எங்களது சீனியர்களை கலந்து ஆலோசிப்போம். இப்போதெல்லாம் சீனியாரிட்டிக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது’ என்று தன் அனுபவத்தை விவரிக்கிறார் ஒரு பெரு நகர மகப்பேறு மருத்துவர் (பக்கம் 71).


சுமந்தா முகர்ஜிக்கு நடந்தது என்ன?
அவர் பெயர் சுமந்தா முகர்ஜி. இருபது வயது இளைஞர். எலக்ரிகல் இன்ஜினீயரிங் மாணவர். தன் ‘பைக்’கில் ட்யூஷன் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கொல்கத்தா நகரப் பேருந்து ஒன்று இடித்துக் காயமடைந்தார். அங்கு நின்றுகொண்டிருந்த சில மனிதநேயமுள்ள மக்கள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 65,000 ரூபாய்க்கு மெடிகல் பாலிஸியும் சுமந்தா வைத்திருந்தார். உணர்வோடு இருந்த அவர், அந்த பாலிஸியையும் எடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். சிகிச்சையைத் தொடங்கும்படியும், பணம் எப்படியும் கிடைத்துவிடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஆரம்பகட்டமாக 15,000 ரூபாய் கொடுத்தால்தான் சிகிச்சை செய்யமுடியும் என்று மருத்துவமனை அதிகாரிகள் சொல்லினர். கூடச் சென்றவர்கள் சேர்ந்து 2000 ரூபாய் திரட்டிக் கொடுத்துள்ளனர். ஆனாலும், நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளாமல், கொடுத்துக்கொண்டிருந்த சிகிச்சையையும் நிறுத்தினர். வேறு வழியில்லாமல், சுமந்தாவை ஏழெட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்துபோனார்.

எமர்ஜென்ஸி ட்ரீட்மென்ட் கொடுக்க மறுத்த அந்த மருத்துவமனை மீது ‘நேஷனல் கன்ஸியூமர் டிஸ்பியூட்ஸ் ரெட்ரஸல் கமிஷன்’ மூலமாக சுமந்தாவின் தந்தை ஒரு வழக்கு தொடர்ந்தார். சுமந்தாவின் குடும்பத்துக்கு அந்த மருத்துவமனை பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது (பக்கம் 94).

எத்தனை லட்சம் வந்தாலும், சுமந்தாவின் உயிர் போனது போனதுதானே? எனினும், நஷ்ட ஈட்டிலிருந்து தப்பிப்பதற்காகவாவது இனிமேல் அந்த மாதிரி மருத்துவமனைகள் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளலாம்.

தேகமா வேகமா?
இது நடந்தது மும்பையில். அங்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மிக வேகமாக அறுவை சிகிச்சை செய்வதற்குப் பெயர்போனவர். மனித உடலை வேகவேகமாக அறுத்து, வேலையை முடிப்பதில் அவர் நிபுணர். வாயு வேகம், மனோ வேகம் மாதிரி அவருக்குக் கத்தி வேகம்.

ஒரு நோயாளிக்குக் கிட்னியில் கல் இருந்தது. அதற்கான அறுவை சிகிச்சையை அவர் செய்யவேண்டி இருந்தது. தோலைக் கிழித்து உள்ளே சென்று கிட்னியில் இருந்த கல்லை நீக்கிவிட்டு, கத்தியை வெளியில் எடுத்து மீண்டும் தோலைத் தைப்பதற்கும் சேர்த்து பத்து நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அவர் சங்கல்பம் செய்துகொண்டார்! மனித உயிருக்கு செய்யப்படும் அவமரியாதைகளின் உச்சம் என்று அதைச் சொல்ல வேண்டும். யார் உடலை வைத்து யார் விளையாடுவது?

ஆபரேஷனும் தொடங்கியது. விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கிட்னியோடு தொடர்புகொண்ட ஒரு முக்கியமான தமனியை அவர் அறுத்துவிட்டார். அது இல்லாமல் கிட்னி வேலை செய்யாதுபோலும். தப்பு செய்துவிட்டோமே என்று தெரிந்ததும், வேறு வழியின்றி கிட்னியில் இருந்த கல்லோடு சேர்த்து கிட்னியையும் அவர் நீக்கிவிட்டார்!
அதுமட்டுமின்றி, தான் செய்த குற்றத்தை மறைத்து, அந்தக் கல்லினால் கிட்னி பாழாகி இருந்ததாகவும், கிட்னியை எடுத்திருக்காவிட்டால் நோயாளி இறந்திருப்பார் என்றும் அவரது உறவினர்களிடம் மனசாட்சியே இல்லாமல் பொய்களை அள்ளிவிட்டார். நோயாளியின் உயிரைக் காப்பாற்றியதற்காக நோயாளியின் உறவினர்கள் அவரை பெரிதும் பாராட்டினார்கள்!
 

Story image


அமெரிக்கன் பீன்ஸ் அரை கிலோ வாங்கி வந்து, அதிலுள்ள விதைகளையெல்லாம் எடுத்துவிட்டு, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொண்டு, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து காஸ் அடுப்பில் ‘சிம்’மில் வைத்து சூடு பண்ணி, மிக்ஸியில் போட்டுக் கூழ் மாதிரி அரைத்து, அது ஆறியவுடன் அப்படியே குடித்துவிட வேண்டும். முழுதும் குடிக்க முடியாவிட்டால் முடிந்த அளவு குடிக்கலாம். குடித்து முடித்த இரண்டு மணி நேரத்துக்குள் மூன்று லிட்டர் தண்ணீரை விட்டு விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் காலையில் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் டீ, காபி என்று வேறெதுவும் சாப்பிடக்கூடாது. மூன்று மணி நேரம் கழித்து, பசி எடுத்தால், வழக்கம்போல சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த இடைவெளியில் சிறுநீர் வந்தால், அதை ஒரு கோப்பையில் பிடித்துப் பார்த்தால், அதில் சிறுநீரகக் கற்கள் வெளியில் வந்திருப்பது தெரியும். சிலருக்குக் கொஞ்சம் வலியோ சிறுநீர் வெளிவரும் பாதையில் சிறு புண்களோ ஏற்படலாம். ஆனால், இரண்டு நாள் கழித்து நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால், நிச்சயமாக எல்லா சிறுநீரகக் கற்களும் வெளியேற்றப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.
 
ஹீலர் பாஸ்கர்
இப்படியெல்லாம் எளிமையான வழிகள் இருக்கும்போது, பணத்தையும் கொடுத்து பிணமாக வேண்டிய அவசியம் நமக்கென்ன இருக்கிறது?
தவறான அறுவை சிகிச்சைகள், வேண்டுமென்றே பணம் பிடுங்குதல், சிகிச்சை செய்யாததால் ஏற்பட்ட இறப்புகள் என மருத்துவ உலகம் செய்துகொண்டிருக்கும் எல்லா அயோக்கியத்தனங்களையும் ஆதாரத்துடன் அந்த நூல் எடுத்துக் காட்டியுள்ளது. மருத்துவ உலகின் மனசாட்சியாக செயல்பட்டுள்ளது அந்த நூல் என்றே சொல்லலாம். அதிலிருந்து கொஞ்சம் மட்டும் இதுவரை நாம் பார்த்தோம்.

கிருமிகளால் நோய்களும் மரணமும் உண்டாகின்றன என்று மருத்துவ உலகம் கூப்பாடு போட்டுக்கொண்டுள்ளது. உண்மையான நோய்க் கிருமிகள் மேலே சொன்ன மாதிரியான மருத்துவமனைகளும், மருந்துகளும், அவற்றை சிபாரிசு செய்யும் மருத்துவர்களும்தான். நோயை உண்டாக்குவதாகச் சொல்லப்படும் கிருமிகள் உண்மையில் நோயை உண்டாக்குவதே இல்லை! கிருமிகள்தான் உண்மையில் நமது நோய்களை குணப்படுத்துகின்றன! கிருமிகளைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை.
எப்படி என்று பார்க்கத்தானே போகிறோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.