‘பாட்’களும் இணைய உரையாடல்களும்!

இணையம் உலாவுவதற்கும் தகவல்களைத் தேடுவதற்குமான இடம் மட்டும்தானா? அது உரையாடலுக்கான வெளியும் கூட! உண்மையில்
Updated on
5 min read


இணையம் உலாவுவதற்கும் தகவல்களைத் தேடுவதற்குமான இடம் மட்டும்தானா? அது உரையாடலுக்கான வெளியும் கூட! உண்மையில் உரையாடல் தன்மைதான் இணையத்தின் ஆதார இயல்புகளில் பிரதானமானது. ஏனெனில் இணையம் ஒளிபரப்புத் தன்மை கொண்டது அல்ல; அது பங்கேற்பைச் சாத்தியமாக்கும் ஜனநாயகத் தன்மை கொண்டது. அதனால்தான் ஆரம்ப காலத்தில் இருந்தே இணையம், உரையாடல் நிகழும் இடமாக இருக்கிறது.

இணைய வரலாற்றை திரும்பிப் பார்த்தால் அந்தக் கால தகவல் பலகைகளும்

(மெசேஜ் போர்ட்) விவாதக் குழுக்களும் இதற்கான மேடையாக விளங்கியதைப் பார்க்கலாம். இந்த விவாதக் குழுக்களில் யூஸ்நெட் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. பலரும் அறிந்திராத விவாதக் குழுவாகவும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களுக்கான இடமாகவும் இருந்திருக்கிறது. 1990-களின் இறுதியில் பிரபலமான அரட்டை அறைகளும் இந்த உரையாடல் தன்மையின் இன்னொரு வடிவம்தான். இன்றைய ஃபேஸ்புக்குகளுக்கும் வாட்ஸ் அஃப்களுக்கும் இவைதான் முன்னோடிகள்.

தொடரும் உரையாடல்

இணையம் தொழில்நுட்ப நோக்கில் பல பாய்ச்சல்களைக் கண்டு வரும் நிலையில் அதன் உரையாடல் தன்மையும் மாறாமல் தொடர்கிறது. இன்றைய தேதியில் இணையத்தில் உரையாடலுக்கான இடங்களாக ரெட்டிட் தளத்தையும், குவோரா தளத்தையும் சொல்லலாம். ரெட்டிட் திரட்டி வகையைச் சேர்ந்தது என்றால் குவோரா கேள்வி-பதில் தளம். இவை பளிச்சென மின்னும் உதாரணங்கள் மட்டுமே.

இணையவெளி இன்னும் பலவிதங்களில் உரையாடல்களைச் சாத்தியமாக்கி வருகிறது. குறும்பதிவுச் சேவையான ட்விட்டரில் ஹாஷ்டேக் வடிவில் இவற்றை அடையாளம் காணலாம். குறிப்பிட்ட தலைப்பிலான கருத்துகளை ஒற்றைச் சரடில் ஆன குறும்பதிவுகளாகப் பின் தொடர ஹாஷ்டேகுகள் வழிகாட்டுகின்றன. # எனும் குறியீட்டுடன் தோன்றும் இந்த விவாத வழிகாட்டிகளை நீங்கள் பல இடங்களில் எதிர்கொண்டிருக்கலாம். பலமுறை பயன்படுத்தவும் செய்திருக்கலாம். வலைப்பதிவுகளுக்கான பின்னூட்ட வசதியும் இதன் இன்னொரு பிரபலமான வடிவம் தான்.

இவை எப்போதுமே ஆரோக்கியமானதாக இருப்பதாக சொல்ல முடியாது. வெற்று வம்புகளாக தரம் தாழ்வதுண்டு. துவேஷத்தின் வெளிப்பாடாக, தாக்குதல்களுக்கான வாய்ப்பாக மாறுவதும் நடக்கிறது. அதற்காக உரையாடல் மேடையைக் குறை சொல்ல முடியாது. பங்கேற்பாளரின் பொறுப்பு அது.

இணைய உரையாடல்கள் இன்னொரு சுவாரசியமான வழியிலும் நிகழ்கிறது. அது ‘பாட்’கள் நடத்தும் விவாத யுத்தம். பெரும்பாலும் ட்விட்டர்தான் இதற்கான பொருத்தமான களமாக இருக்கிறது.

ட்விட்டர் பாட்கள்

ட்விட்டரும் ஃபேஸ்புக் போல சமூக வலைப்பின்னல் ரகத்தைச் சேர்ந்த சேவை. ஆனால், ஃபேஸ்புக்கை விட ட்விட்டர் உரையாடல் தன்மை அதிகம் கொண்டிருக்கிறது. அதன் குறும்பதிவுகள் பல ரகங்கள் என்றாலும் அவை பெரும்பாலும் கருத்துப் பரிமாற்றத்துக்கான வாகனமாக அமைகின்றன. 140 எழுத்துகள் (characters) எனும் வரம்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வியாக்கியானத்துக்கு அதிக இடம் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும். ட்விட்டரின் இன்னொரு தனித்தன்மை, அதன் குறும்பதிவுகளைத் தானியங்கிமயமாக்கலாம். அதாவது குறும்பதிவுகளை மனிதர்கள்தான் வெளியிட வேண்டும் என்றில்லை; அந்தப் பொறுப்பை கண்ணை மூடிக்கொண்டு ஒரு மென்பொருளிடம் விட்டுவிடலாம். அதாவது குறிப்பிட்ட நோக்கிலான குறும்பதிவுகளை சீரான இடைவெளியில் பகிர்ந்து கொள்ளும் கட்டளையை நிறைவேற்றும் வகையிலான மென்பொருள்களை உருவாக்கலாம். அவற்றின் வசம் நம்முடைய ட்விட்டர் கணக்கை ஒப்படைத்துவிடலாம்.

இவைதான் இணைய மொழியில் பொதுவாக ‘பாட்’கள் என்று குறிப்பிடப்படுகின்றன. பாட்களில் பல ரகங்கள் உண்டு. குறும்பதிவுகளைத் தட்டிவிடும் பாட்கள் ட்விட்டர்பாட்கள் என்று சொல்லப்படுகின்றன. தமிழில் குறும்பதிவியந்திரங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

பாட்களால் சுயமாகச் சிந்திக்க முடியாது என்பதாலும், அவை பகிரும் குறும்பதிவுகள் செயற்கையானவை என்பதாலும் இவை பெரும்பாலும் இளக்காரமாக பார்க்கப்படுகின்றன. அதிலும் ஒரு ட்விட்டர் கணக்கின் பின்னே இருப்பது மனிதர் அல்ல; பாட் என தெரியவந்தால் அதன் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிடும். பாட்களால் இயக்கப்படும் ட்விட்டர் கணக்குகள் விளம்பர நோக்கில் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. ஸ்பேம் மெயில்கள் போல இவை குப்பைக் குறும்பதிவுகளாகவும் கருதப்படுகின்றன.

பாட்கள் பலவகை

எல்லா பாட்களையும் இப்படி நிராகரித்துவிட முடியாது. புதுமையான முறையில் பயன்படுத்தப்படும் பாட்களும் இருக்கின்றன; சுவாரஸ்யமான பாட்களும் நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு டியர் அசிஸ்டெண்ட் (@DearAssistant ) எனும் ட்விட்டர்பாட், அதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாட் என்பதால் இதனால் சுயமாகப் பதில் அளிக்க முடியாது. கேள்விகளுக்கு ஏற்ப, நவீன தேடியந்திரமான வால்பிராம் ஆல்பாவில் இருந்து பதில்களை இது உருவித் தருகிறது.

இன்னொரு பாட் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விக்கிபீடியா பக்கங்களில் எப்போதெல்லாம், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருந்து திருத்தங்கள் செய்யப்படுகின்றனவோ அந்த மாற்றங்களை எல்லாம் குறும்பதிவாக வெளியிடுகிறது. பாட்களின் பயன்பாட்டுத் தன்மைக்கு இது சரியான உதாரணம். விக்கிபீடியா பக்கங்களில் மாற்றங்களைக் கண்காணிப்பது அவசியமானது. ஆனால், மனிதர்கள் இதைச் செய்வது சாத்தியமில்லை. அதோடு விக்கிபீடியா பக்கங்களை நாம் நாள் முழுவதும் கண்காணித்துக்கொண்டிருப்பது நேரத்தை விரயமாக்கும். மாறாக, இதற்காக என்றே ஒரு புரோகிராமை எழுதி மாற்றங்களைக் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வைக்கலாம். அந்த மாற்றங்களை குறும்பதிவாக எழுதவும் வைக்கலாம்.

இன்னொரு ட்விட்டர்பாட், ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளுக்கும் அகராதியில் உள்ள வார்த்தைகளை எல்லாம் மிகவும் பொறுப்பாக நிமிடத்துக்கு ஒரு முறை குறும்பதிவாக வெளியிடுகிறது.

குறிக்கோளும் உண்டு

இப்படி நிறைய சுவாரசியமான உதாரணங்களைப் பட்டியலிடலாம். விஷயம் என்ன என்றால், இந்த பாட்களை சுவாரசியத்துக்காக மட்டும் அல்லாமல் தெளிவான ஒரு நோக்கத்துக்காகவும் பயன்படுத்தலாம். அதாவது, ஒரு பொருள் சார்ந்த விவாதத்தை சீராக மேற்கொள்ளவும் பாட்களை உருவாக்கலாம். இப்படி விவாதம் செய்யும் பாட்களுக்கான சமீபத்திய உதாரணமாக, டிராப் தி ஐ பாட் அமைந்துள்ளது. பாட்களின் அருமையை உணர்த்தக்கூடிய அருமையான பாட் இதைவிட வேறில்லை என்றும் சொல்லலாம்.

டிராப் தி ஐ பாட் அப்படி என்ன செய்கிறது என்றால், மானிட நோக்கில் செயல்பட்டு, மனிதர்கள் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் அதைப் பொறுப்புடன் திருத்துகிறது. தவறு என்று இங்குக் குறிப்பிடுவது ஒரு சின்ன திருத்தம்தான். ஆனால் மனிதநேய நோக்கில் மிகவும் முக்கியமானது. அது ஒரு வார்த்தைப் பயன்பாடு தொடர்பானது.

பல்வேறு காரணங்களினால் மக்கள் தங்கள் தாய் நாட்டில் இருந்து வெளியேறி வேறு ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதுண்டு. முறையான ஆவணங்கள் இல்லாமல் அழையா விருந்தாளிகளாக வருவதால் இவர்கள் அந்நாடுகளில் குடியேற அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அல்லவே, அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச்செல்ல; பெரும்பாலும் வாழ்க்கைச் சூழலால் விரட்டப்பட்டுப் பிழைப்பைத் தேடி வேறு நாட்டில் தஞ்சம் அடைய நிர்பந்திக்கபட்டவர்கள் ஆயிற்றே. எனவே இவர்கள் எப்படியாவது அதிகாரிகள் கண்களின் மண்ணைத்தூவி அனுமதி பெறாமலே தங்கி விடுவது உண்டு. கண்டுபிடிக்கப்படாத வரை பிரச்சனையில்ல.

இப்படிக் குடியேறியவர்களின் பிரச்னை தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கம்தான் இவர்களை எப்படிக் குறிப்பிடுவது என்பது. பொதுவாகச் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் (illegal immigrant) என்று குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், இது தவறு எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. மனிதர்கள் எப்படிச் சட்ட விரோதமானவர்களாக ஆக முடியும் எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்குப் பதிலாக மனிதர்களின் செயல்கள் சட்டவிரோதமாக இருக்கலாமே தவிர அவர்கள் ஒருபோதும் சட்ட விரோதமானவர்களாக இருக்க முடியாது என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்லப்படுகிறது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனும் பதம் மனிதர்களை இழிவுபடுத்துவதாகும் என்ற கருத்தும் ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது.

எனவே இத்தகைய மனிதர்களைக் குறிப்பிடும்போது இந்தப் பதத்துக்குப் பதிலாக ஆவணமில்லாமல் குடியேறியவர்கள் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏபி போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த மாற்றத்தை பழக்கத்துக்குக் கொண்டு வந்துவிட்டன. இது நிச்சயம் அழகியல் சார்ந்ததல்ல. மனிதர்களை நோக்கும் விதம் தொடர்பான மனநிலையை உணர்த்துவது. எனவேதான் இந்த மாற்றத்தை வலியுறுத்தி சட்டவிரோத குடியேறிகள் என்று பயன்படுத்துவதை கைவிட மனிதநேய ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

வாதம் செய்யும் பாட்

இந்தக் கருத்தை பலவிதங்களில் வலியுறுத்தலாம். இந்த நியாயங்களை விளக்கி ஆழமான கட்டுரைகளை எழுதலாம். இதற்காக என்றே இணையத்தளம் அமைக்கலாம். தங்களை அறியாமல் இந்தப் பதத்தை பயன்படுத்துபவர்களிடம் அதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ளலாம். இதைத்தான் டிராப் தி  ஐ பாட் (Drop the I' Bot ) செய்கிறது.

அமெரிக்கப் பத்திரிகையாளர்களான பாட்ரிக் ஹோகன் மற்றும் ஜோர்கே ரிவாஸ் உருவாக்கியுள்ள இந்த பாட், ட்விட்டரில் எப்போதெல்லாம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம், மக்களில் சட்டவிரோதமானவர்கள் இல்லை. ஆவணமில்லாமல் குடியேறியவர்கள் என்று பயன்படுத்துங்கள் என அவர்களுக்குக் குறும்பதிவு மூலம் ஆலோசனை சொல்கிறது. இது வெறும் பரிந்துரை மட்டும் அல்ல; இதனால் விவாதங்களும் ஏற்படுகின்றன. இந்தப் பதில்களைப் பெறுபவர்கள் இதற்கு எதிர்வினை செய்கின்றனர். நான் உங்களை கேட்கவில்லை என்பதில் துவங்கி ஒரு பாட்-டிடம் இருந்து ஆலோசனை தேவையில்லை என்பதுவரை பலவிதமான பதிலடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பதம் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பாக ஒரு விவாதம் நிகழ்த்தப்படுவதுதான் முக்கியம். அந்த வகையில் இந்த பாட் தனது பணியைக் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பதம் தவறாகப் பயன்படுத்தப்படும் இடங்களை எல்லாம் கண்டறிந்து அதை திருத்திக்கொண்டே இருக்கிறது.

மேலும் உதாரணங்கள்

இந்தப் போக்குக்கு இன்னொரு அழகிய உதாரணமும் இருக்கிறது. புருஸ் ஜென்னராக இருந்து இப்போது கேட்லின் ஜென்னராக மாறியிருக்கும் அமெரிக்க முன்னாள் தடகள வீரரின் செயல், அவர் உணரும் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்துக்கொள்ளும் சுதந்தரமாகப் பார்க்கப்படுகிறது. கேட்லின் இதை அறிவித்தது மீடியாவில் பெரும் கவனத்தை ஈர்த்தார். கேட்லின் மாறிய பிறகும்கூட அவரை ஆணாக சிலர் குறிப்பிடுவதுண்டு. இது அறியாமையால் நிகழலாம். அப்படி நிகழும்போதெல்லாம் @she_not_he என்னும் பாட் கேட்லின் தொடர்பான பாலினக் குறிப்பை அவன் அல்ல அவள் என்று மாற்றுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பருவநிலை மாற்றம் தொடர்புடைய குறும்பதிவுகள் வெளியாகும் போதெல்லாம், அது தொடர்பான அறிவியல் விளக்கங்களை அளிக்கும் குறும்பதிவுகளை வெளியிடும் ஒரு பாட் உருவாக்கப்பட்டது. இதேபோல அமெரிக்காவில் கருப்பினத்தவர் உரிமைக்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்டே வோக் பாட் (@StayWokeBot),  இணையத்தில் கருப்பினத்தவர் தொடர்பாக சார்பு நிலை கொண்ட கருத்துகள் வெளியாகும் இடங்களில் எல்லாம் கருப்பினத்தவர் சார்பிலான நியாயத்தை வலியுறுத்தும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்த பாட்கள், மாற்றத்தை விரும்பும் மனிதர்கள் மற்றும் கொள்கைப் பற்று கொண்டவர்கள் தாங்கள் நம்பும் நிலைப்பாடு தொடர்பான நியாயத்தை முன்வைத்து புரிதலுக்கு வித்திடும் உரையாடலை முன்னெடுக்கின்றன. எனவே இவற்றை இயந்திர கணக்குகள் என அலட்சியம் செய்வதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com