கிரீஸ் கடன் நெருக்கடியைத் தீர்க்க முயன்றவர்!

லண்டனைச் சேர்ந்த தாம் ஃபீனே (Thom Feeney) எனும் வாலிபர் இணைய நாயகனாகி இருக்கிறார். ஒரு நாட்டைக் கடன் சுமையில் இருந்து
Updated on
4 min read

லண்டனைச் சேர்ந்த தாம் ஃபீனே (Thom Feeney) எனும் வாலிபர் இணைய நாயகனாகி இருக்கிறார். ஒரு நாட்டைக் கடன் சுமையில் இருந்து மீட்க முயன்றவர் என இணைய வரலாறு அவரை குறித்து வைத்துள்ளது. இணையம் மூலம் நிதி திரட்டும் கிரவுட்ஃபண்டிங் கோட்பாட்டைப் புதிய எல்லைக்குக் கொண்டு சென்றவர் என்று வருங்காலத்தில் அவர் கொண்டாடப்படலாம்.

ஃபீனே செய்ய முயன்றது நிச்சயம் வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஐரோப்பிய தேசத்தலைவர்களும், சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் முயற்சி செய்தும் தீர்க்க முடியாத, சிக்கலாக இருக்கும் கிரீஸ் நாட்டின் கடன் நெருக்கடியை ஒருவர் மீட்க முயற்சி செய்திருக்கிறார் என்றால் அது என்ன சாதாரண விஷயமா? இல்லை சாமனியர்கள் நினைத்துப் பார்க்க்கூடிய விஷயம்தானா?

தனிமனித முயற்சி

ஒரு தேசத்தின் பிரச்னையை ஒரு வாலிபரால் எப்படித் தீர்க்க முடியும் என்று சந்தேகம் எழலாம். அதிலும், ஐரோப்பிய தேசத்தலைவர்களும், சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் முயற்சி செய்தும் தீர்க்க முடியாத கிரீஸ் நாட்டின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண ஒரு தனி மனிதர் முயன்றதுதான் ஆச்சரியம்.

ஃபீனே, கிரீஸ் நாட்டைக் கடன் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற நிதி திரட்டியது எப்படி என்று பார்க்கலாம். 

தேசமே திவாலாகும் அளவுக்கு கிரீஸ் கடன் நெருக்கடியில் சிக்கிய நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நிதியமும் அந்நாட்டை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியதையும் பார்த்து உலகம் திகைத்துப்போனது. அந்நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இரு தரப்பினரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக நின்றதால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிவில்லாமல் நீண்டன. சாதாரண மக்களுக்கு, அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து பிரச்னையைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்களே தவிர தீர்வு காணும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற கோபம் ஏற்பட்டது.

வாலிபர் ஃபீனேவும் இப்படிதான் ஆவேசப்பட்டார். ஆனால், அவர் நம்மால் என்ன செய்துவிட முடியும் என பிரச்னையை விட்டுவிடவில்லை. தானே காரியத்தில் இறங்கவும் செய்தார். அதாவது கிரீஸ் பட்ட கடனை நிதி திரட்டி அடைத்து அந்நாட்டை மீட்க முயன்றார்.

கிரவுட்ஃபண்டிங் மகத்துவம்

தனி ஒருவரால் என்ன செய்துவிட முடியும்? எப்படி அவரால் கிரீசைக் காப்பாற்றும் அளவுக்கு நிதி திரட்ட முடியும்?

ஃபீனே தனிமனிதராக இந்த முயற்சியில் இறங்கவில்லை. இணையத்தின் ஆற்றலை நம்பி காரியத்தில் இறங்கினார். அவர் பிரபல கிரவுட்ஃபண்டிங் இணையத்தளமான இண்டிகோகோவில் கிரீஸ் நாட்டுக்கு நிதி உதவி அளிக்கும் பக்கத்தை தொடங்கினார். நிதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து நிதி திரட்ட முயன்றார்.

புதிய திட்டங்களுக்கோ, புதுமையான யோசனைகளுக்கோ இணையம் மூலம் பலரிடம் இருந்து நிதி திரட்டுவது கிரவுட்ஃபண்டிங் எனக் குறிப்பிடப்படுகிறது. கிக்ஸ்டார்ட்டர் மற்றும் இண்டிகோகோ ஆகிய தளங்கள் இந்தப் பிரிவில் பிரபலமாக உள்ளன.

இளம் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் பின்னே அலைந்து கொண்டிருக்காமல், எதிர்கால வாடிக்கையாளர்களே எங்கள் முதலீட்டாளர்கள் எனும் நம்பிக்கையில், இந்தத் தளங்களில் தங்கள் கொள்கைகளைக் கடை விரித்து நிதி திரட்ட முயல்கிறார்கள். பலர் இதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த கிரவுட்ஃபண்டிங் முறையை, கிரீஸுக்குப் பயன்படுத்த நினைத்தார் ஃபீனே.

கிரீஸ் சர்வதேச நிதியத்துக்கு 1.6 பில்லியன் யூரோ கடனை உடனடியாக அடைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. உள்நாட்டுப் பொருளாதாரம் நொடித்துப் போயிருக்கும் நிலையில், கையில் போதிய நிதியும் இல்லாமல் தவிக்கிறது கிரீஸ். கடனை அடைக்கவும் வழி தெரியவில்லை. இன்னொரு பக்கம், சர்வதேச நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும் கந்துவட்டிக்காரர்கள் போல அந்நாட்டை நெருக்கி வருகின்றன.

இதைத் தீர்க்க, பேச்சுவார்த்தை, போராட்டம், பொது வாக்கெடுப்பு என ஐரோப்பாவே பரபரப்பாக இருக்க, உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்பு என்னவோ குறைவாகவே இருக்கிறது.

கிரீஸ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்குப் புரியாமல் இருக்கிறது. ஆனால் லண்டன் வாலிபர், ஃபீனே இந்தப் பிரச்சனை எளிதாக தீர்க்க கூடியது என்று எண்ணினார். இண்டிகோகோ இணையத்தளத்தில் கிரீஸ் நாட்டுக்கு நிதி திரட்டும் ஒரு பக்கத்தை அமைத்தார். கிரீக் பெயில் அவுட் ஃபண்ட் எனும் பெயரிலான அந்தப் பக்கத்தை அவர் உருவாக்கியதன் பின்னே உள்ள நோக்கம் எளிமையானது. கிரீஸ் கடன் பட்டுள்ள தொகை மலைப்பாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த ஐரோப்பியர்களும் மனது வைத்து தலைக்கு 3 யூரோ கொடுக்க முன்வந்தால் போதும் கடனை தொகை சேர்ந்துவிடும் என்பதுதான் அவரது நம்பிக்கை.

கிரீஸ் பிரச்னை விவகாரம் அலுப்பைத் தருகிறது. ஐரோப்பிய அமைச்சர்கள் கிரீஸ் மக்களைக் காப்பாற்றுவதா வேண்டாமா என தங்களுக்குள் முண்டா தட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனையை மக்களாகிய நாமே தீர்த்தால் என்ன என்று கேட்கிறார் ஃபீனே. ஐரோப்பாவில் இருக்கும் 503 மில்லியன் மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து நிதி அளித்தால் கிரீசைக் காப்பாற்றிவிடலாம் என இந்த நிதி கோரிக்கைப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஊர் கூடி நிதி அளித்தால்!

ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்ப 3, 6, 10 மற்றும் 25 யூரோ வழங்கினால் போதுமே என்றும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். இதற்காக நிதி உதவி அளிக்க முன்வரும் ஒவ்வொருவருக்கும் நன்றிப் பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். (கிரீஸ் பிரதமர் கையெழுத்திட்ட நன்றி அட்டை போன்றவை).

கிரவுட்ஃபண்டிங் முயற்சி இதுவரை பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு வாலிபர் இதற்காக முயல்வது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, இணைய உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதெல்லாம் நடக்கிற கதையா என்றும், இந்த முயற்சி விளையாட்டுத்தனமான விளம்பரம் தேடும் செயலா போன்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை. ஆனால்  ஃபீனே தனது முயற்சி மலிவான ஜோக் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கிரீஸ் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அரசியல் தலைவர்களின் அர்த்தமில்லா கூச்சல் குழப்பங்களால் வெறுத்துப்போய் இந்த முயற்சியில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய மக்கள் நினைத்தால் இதைத் தீர்த்துவிட முடியாதா என யோசித்துப் பார்த்தேன், பேச்சைக் குறைத்து செயலைக் காட்டினாலே போதும். ஒவ்வொரு முறையும் கிரீஸ் சிக்கலுக்கான தீர்வு தோல்வி அடையும்போது, மிகவும் கவலை அடைந்தேன். இதைப் பற்றி சாப்பாட்டு மேஜையில் அமைந்து யோசித்துக்கொண்டிருந்தபோது கிரவுட்ஃப்ண்டிங் மூலம் கிரீசை மீட்கும் எண்ணம் உதயமானதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படியே கிரீஸ் கடன் தீர்வுப் பக்கத்தை ஆரம்பித்து நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார்.

மக்கள் ஆதரவு

இந்த நிதி பக்கம் பரவலாக கவனத்தை ஈர்த்திருப்பதுடன் ஒரு கட்டத்தில் 1.5 மில்லியன் யுரோ அளவு நிதியும் திரட்டியுள்ளது. சும்மாயில்லை ஆறு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை நிதி அளித்துள்ளனர். அது மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கானோர் அந்தப் பக்கத்தை முற்றுகையிட்டதால் சில நேரங்களில் அது முடங்கும் நிலையும் உண்டானது.

இதனிடையே எண்டர்பிரனர்.காம் எனும் இதழ், இந்த யோசனை எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என விரிவாக அலசி ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டது. அதில் கருத்து தெரிவித்துள்ள கிரவுட்ஃபண்டிங் வல்லுநர்கள், தேவையான நிதி திரட்டப்பட்டால் அதை கிரீஸ் அரசுக்கு அளிப்பதில் எந்த நடைமுறைச் சிக்கலும் இருக்காது என கூறியிருந்தது இந்த முயற்சிக்கான அங்கீகாரமாக அமைந்தது.

எல்லாம் அமர்க்களமாக ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிரீஸ் கடனை அடைக்கும் அளவுக்கு நிதி திரட்ட முடியவில்லை. கிரீஸ் கடனை அடைக்க நிதி திரட்டும் கோரிக்கைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் தேவையான தொகை கிடைக்காததால் கிரவுட்ஃபண்டிங் தள விதிகளின்படி திட்டம் கைவிடப்பட்டு, இதுவரை திரட்டப்பட்ட நிதி உரியவர்களிடம் திரும்பி அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்தும் ஃபீனேவின் செயல் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது. அவர், கிரவுட்ஃபண்டிங் முயற்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார் என பாராட்டப்படுகிறார்.  இனி அரசியல் தலைவர்களின் செயல்களால் வெறுத்துப்போய் நிற்கும்போது, விமரிசனம் செய்வதுடன் நிற்க வேண்டியதில்லை, நாமும் காரியத்தில் இறங்கிப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கை அளித்துள்ளார் ஃபீனே.

தோல்வி தந்த பாடம்

நிற்க. ஃபீனே வெறும் கவன ஈர்ப்புக்காக இந்தச் செயலில் ஈடுபடவில்லை. மிக இயல்பாக தனக்குத் தோன்றிய எண்ணத்தை அதிகம் யோசிக்காமல் செயல்படுத்திப் பார்த்தேன். இந்த முயற்சியும் அதன் தோல்வியும் தனக்கு சில பாடங்களைக் கற்றுக்கொடுத்திருப்பதாகவும்  பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதன் அடையாளம்தான், அவர் நிதி திரட்டலில் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

புதிதாக இன்னொரு நிதி திரட்டும் கோரிக்கைப் பக்கத்தை இண்டிகோகோ தளத்தில் அமைத்திருக்கிறார். இந்தக் கோரிக்கை கிரீஸ் மக்களுக்கானது. பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இலக்கான அந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை ஓரளவு சமாளிக்க உதவும் வகையில் கிரீஸ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான பயிற்சி அளிப்பதற்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார். இதற்காக அவர் அமைத்துள்ள பக்கத்தில் தனது நோக்கத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஊர் கூடி தேர் இழுக்கும் ஆற்றலை அது அழகாக விளக்குகிறது.

கிரீஸ் நிதி கோரிக்கைப் பக்கம்: https://www.indiegogo.com/projects/greek-bailout-fund#/story

தாம் ஃபீனே டிவிட்டர் பக்கம்: https://twitter.com/thomfeeney

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com