ஜியோசிட்டிஸ் தொடர்பான கேள்வியை இரண்டு விதமாகக் கேட்கலாம். ஜியோசிட்டிஸை நினைவில் இருக்கிறதா என்று கேட்கலாம். இந்தப் பெயரை கேட்டதுமே அந்தக் கால இணைய நினைவுகளில் மூழ்கிவிடக்கூடியவர்களுக்கான கேள்வி இது.
ஜியோசிட்டிஸ் என்றொரு சேவை இருந்தது தெரியுமா? இந்தப் பெயரைக் கேட்டதுமே புரியாமல் விழிக்கக் கூடியவர்களிடம் இப்படித்தான் கேட்க வேண்டும். ஸ்மார்ட்போன் தலைமுறையினர் ஜியோசிட்டிசை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அறிந்து கொள்ள வேண்டும்!
ஏனெனில், ஜியோசிட்டிஸ் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது என்பதால் அல்ல; இணையத்தின் ஆரம்ப காலத்தில் அது கோலோச்சியது வேறு விஷயம். செல்வாக்கின் உச்சியில் இருந்த காலத்தில் அது இணையத்தில் அதிகம் விஜயம் செய்யப்பட்ட இணையத்தளங்களில் மூன்றாவது இடத்தில் இருந்ததை பாஸ்ட்கோடிசைன் கட்டுரை நினைவுபடுத்துகிறது. அப்போது முதல் இரண்டு இடத்தில் இருந்த தளங்கள் என்ன தெரியுமா? ஏ.ஓ.எல்லும், யாஹூவும்!
பேஸ்புக்கும், கூகுளும் தோன்றியிராத காலம் அது என்பது மட்டும் அல்ல, வலைப்பதிவு கருத்தாக்கமும், சமூக வலைப்பின்னல் சேவையும் அறிமுகமாயிராத காலம் அது.
இணையத்தின் ஆதிகாலம் என்றும் சொல்லலாம். அதனால்தான் ஜியோசிட்டிஸ் செய்த சாதனையை இப்போது நினைத்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் வரலாறு
இன்று ஜியோசிட்டிஸ் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வது சுலபம். கூகுளில் இந்தப் பெயரை டைப் செய்தால், ஜியோசிட்டிஸ், ஒரு வெப் ஹோஸ்டிங் சேவை எனும் விக்கிபீடியா தகவல் பளிச்சிடுவதைப் பார்க்கலாம். 1994-ல் தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு யாஹுவுக்கு விற்கப்பட்டு, இன்னும் சில ஆண்டுகள் கழித்து அந்நிறுவனத்தாலேயே மூடுவிழா நடத்தப்பட்ட சேவை என்று அதன் வரலாற்றைக் சுருக்கமாக முடித்துக்கொள்ளலாம். ஒரு காலாவதியான இணையச் சேவைக்கு இன்னும் ஏன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று கூட கேட்கலாம்? இணையத்தில் மறக்கப்பட்ட எத்தனையோ தளங்களில் இதுவும் ஒன்றுதானே என நினைக்கலாம்.
உண்மைதான். அதைவிட முக்கியமான விஷயம், இது போன்ற சேவைக்கு இனியும் அவசியம் இல்லை என்பதுதான்! ஜியோசிட்டிஸ், இணையத்தில் அவரவர் சொந்தமாக இணையப் பக்கங்களை உருவாக்கி கொள்ள வழி செய்தது. அந்தக் காலத்தில் இது பெரிய விஷயம். இன்று கருத்துக்களை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் வலைப்பதிவுகளும், சமூக வலைப்பின்னல் சேவைகளும் இருக்கின்றன. அதோடு இணையத்தளங்களே பழசாகி விடுமோ என்று கேட்கக்கூடிய அளவுக்கு ஸ்மார்ட்போன் செயலிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
அப்படியிருக்க, இணையத்தில் சின்ன சின்னதாக இணையத்தளங்களை அமைத்துக்கொள்ள வாய்ப்பளித்தது என்ன பெரிய விஷயமா? அதிலும் அந்தச் சேவையே மறக்கப்பட்டு, அதில் உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் எல்லாம் காணாமல் போய்விட்ட நிலையில் ஜியோசிட்டிஸ் புராணம் தேவைதானா?
இவற்றுக்கான பதிலை பார்ப்பதற்கு முன்னர் கேமரூன் அஸ்கினுக்கும் அவரது சகாவான அந்தோனி ஹியூக்சிக்கும் ஒரு சபாஷ் போடவேண்டும். ஏனெனில் இந்த இருவரும்தான் ஜியோசிட்டிஸ் நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றனர். ஜியோசிட்டிஸ் இணையப் பக்கங்களை அகழ்வாராய்ச்சி மூலம் தோண்டி எடுத்து அவற்றுக்கு என அருமையான அருங்காட்சித் தளத்தையும் உருவாக்கி உள்ளனர். கேமரூன்ஸ் வேர்ல்ட் எனும் அந்தத் தளம், ஜியோசிட்டிஸ் கால இணையத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
வலையின் தொடக்கம்
இந்தத் தளத்தை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன்னர் ஜியோசிட்டிசின் வரலாற்றை இன்னும் விரிவாகத் திரும்பிப் பார்க்கலாம். பலரும் ஆரம்ப காலத்தில் பயனாளிகள் சொந்தமாக இணையத்தளங்களை அமைத்துக்கொள்ள உதவிய ஒரு தளம் என்று மட்டுமே ஜியோசிட்டிசை அறிந்துள்ளார்கள். ஆனால் அதன்பின்னே இன்னும் சுவாரசியமான வரலாறு உள்ளது.
1994-ல் இந்தத் தளம் உதயமானது. அப்போது இதன் பெயர் பெவர்லி ஹில்ஸ் இண்டெர்நெட். இணையத்தின் வெகுஜன வடிவமான வைய விரிவு வலை (World Wide Web) அறிமுகமாகி சில ஆண்டுகள் மட்டுமே அப்போது ஆகியிருந்தது என்பதை நினைவில் கொள்க. (தகவலுக்காக: இண்டெர்நெட் எனப்படும் இணையம் 1969-ல் உதயமானாலும், பல ஆண்டுகள் பலகலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் மட்டுமே அறியப்பட்ட, பயன்படுத்தப்ட்ட வலைப்பின்னலாக இருந்தது. 1989-ல் டிம் பெர்னர்ஸ் லீ, ஹைபர் லிங் எனப்படும் இணைப்புகள் மற்றும் இணையப் பக்கங்களை எளிதாக அணுகக் கூடிய பிரவுசர் ஆகிய அம்சங்களோடு வைய விரிவு வலையை அறிமுகம் செய்தபிறகே இணையம் எல்லோருக்கும் சாத்தியமானது). ஆக, 1990-களின் ஆரம்பக் கட்டத்தில் இணையம் என்பதே ஒரு புதுமையாக இருந்தது. வெகு சிலரே இணையத்தைக் கேள்விபட்டிருந்தனர். அவர்களிலும்கூட பலர் இணையத்தை முழுவதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். பிரவுசர், வெப்பேஜஸ், எச்டிஎம்.எல் என இணையம் தொடர்பான எல்லாமே புரியாத புதிராக இருந்தது. இணையத்தளங்களை தேடி எடுத்து பட்டியல் போட்டு காட்டக்கூடிய வழிகாட்டிச் சேவையான யாஹூவே அப்போது பிள்ளைப் பருவத்தில் இருந்தது என்பதையும் நினைவில் கொள்க.
இணைய முன்னோடி
இந்தக் காலகட்டத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தையும், அது பின்னாளில் எடுக்ககூடிய விஸ்வரூப வளர்ச்சியையும் புரிந்து கொண்ட முன்னோடிகளில் ஒருவராக வேவிட் பானெட் (David Bohnett ) இருந்தார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற போனெட் வர்த்தக நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் சாப்ட்வேர் துறையில் அடியெடுத்து வைத்திருந்தார். அந்த வேலையையும் உதறித் தள்ளிவிட்டு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஒற்றைப் படுக்கையறை வீட்டில் வசித்தபடி நகரங்களை சுற்றிப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தார். 1994 அக்டோபர் மாதம் நியூயார்க் நகருக்கான விமானப் பயணத்தின்போதுதான் அவர் முதல்முறையாக வைய விரிவு வலை பற்றி பத்திரிகை கட்டுரை மூலம் தெரிந்து கொண்டார். முதல்முறையாக வலை பற்றி அறிந்து கொண்டவர்களின் மனது எந்த அளவு குதூகலம் அடைந்திருக்குமோ அதே நிலையைத்தான் பானெட்டும் அப்போது அனுபவித்தார். இதுதான் எனது துறை என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டவர், முதல் வேலையாக ஒரு பிசி வாங்கி வலை பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று மனத்துக்குள் குறித்து வைத்துக்கொண்டார்.
ஆரம்ப கால வலை
இது பற்றி எல்.ஏ.வீக்லியின் பழைய கட்டுரை ஒன்றில் (http://www.laweekly.com/arts/out-on-the-web-2131370) பானெட் கூறியிருக்கும் கருத்துகள் முக்கியமானவை. ‘எப்போதுமே நான் கம்ப்யூட்டர், மோடம்கள், தகவல் பலகைகள் அமைப்பால் ஈர்க்கப்பட்டேன். வலையை மிகப்பெரிய விஷயமாகப் பார்த்தேன். உலகில் உள்ள மக்கள் பலவகையான வழிகளில் தொடர்பு கொள்ளும் இடமாக பார்த்தேன். எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் அணுகும் வசதி மற்றும் இணைக்கப்பட்ட தன்மை கொண்ட வெளியாக வலை இருக்கும் என நினைத்தேன். இந்த இணைக்கும் தன்மை மற்றும் தொடர்பு கொள்ளும் ஆற்றலை வைத்துக்கொண்டு ஏதாவது ஒன்றை உருவாக்கி, அதை வைய விரிவு வகைக்குப் பொருத்துவோம் என்று நினைத்தேன்’ என்கிறார் பானெட்.
இப்படி அவர் உருவாக்கியது தான் பெவர்லி ஹில்ஸ் இண்டெர்நெட். கையில் இருந்த சேமிப்பை எல்லாம் திரட்டி இந்தத் தளத்தை அமைத்திருந்தார். பெவர்லி ஹில்ஸ் ஹாலிவுட்டின் இருப்பிடமாகும். அதனால் மனிதர் ஹாலிவுட்டை நோக்கியபடி ஒரு வெப் கேமராவைப் பொருத்தி அந்தக் காட்சிகளை இணையத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இணையம் என்றால் என்ன என்பதையும், அதன் சாத்தியங்களையும் இதுபோன்ற ஆரம்பகால இணைய சாகசங்களே உணர்த்தின என்பதையும் மறந்துவிடக்கூடாது.
பானெட் இணையத்தை பார்த்து வியக்க வைத்ததுடன் நின்றுவிடவில்லை. அதில் பங்கேற்கவும் வழி செய்தார். தனது தளத்தில் இணையவாசிகள் தங்களுக்கான இணையப் பக்கங்களை அமைத்துக்கொள்ள வழி செய்தார். சொந்த இணையத்தளம் அமைத்துக்கொள்வது என்பதெல்லாம் அப்போது பலரும் நினைத்து பார்த்திராத காலம் என்பதையும் இங்கு நினைவுபடுத்தியாகவேண்டும். வர்த்தக நிறுவனங்களும், அமைப்புகள் போன்றவையே இணையத்தளங்களை அமைக்க தொடங்கியிருந்தன. இணையத்தளம் அமைக்க கணிசமான பணம் தேவைப்பட்டதுடன், எச்.டி.எம்.எல் அறிவு மற்றும் கோடிங் திறன் வேண்டும் போன்ற தொழில்நுட்பத் தகுதிகளும் பயனாளிகளிடம் மிரட்சியை ஏற்படுத்தியிருந்த காலம். எனவே தனிநபர் இணையத்தளம் என்பது மிகப்பெரிய ஆடம்பரமாக கருதப்பட்டு வந்தது.
இது என் இணையம்
இந்த மாயையை பானெட் தகர்த்துக்காட்டினார். ஆர்வம் உள்ள யாரும் சொந்தமாக தங்களுக்கென இணையத்தளம் உருவாக்கி கொள்ள அவர் வாய்ப்பும் இடமும் அளித்தார். தனது இணையத்தளத்தில் பலவேறு பெயர்களில் சுற்றுப்புறங்களை உருவாக்கி, அதில் ஒவொருவரும் தங்களுக்கான தளங்களை அமைத்துக்கொள்ள வழி செய்தார். உதாரணத்துக்கு ஹாலிவுட் எனும் பெயரிலான பகுதியில் பொழுதுபோக்குத் தளங்களை அமைக்கலாம். சிலிக்கான் வேலி பகுதியில் கம்ப்யூட்டர் தொடர்பான தளங்களை அமைக்கலாம். பின்னர் நகரங்கள் பெயரிலும் இவற்றை விரிவுபடுத்தினார். இலவசமாக இந்தச் சேவையை வழங்கினார் என்பதுதான் இன்னும் முக்கியமானது. எனவே இணையத்தின் அற்புதத்தை உணரத் தொடங்கியவர்களில் பலரும் அதில் தாங்களும் பங்கேற்க விரும்பி, சொந்த இணையத்தளத்தை உருவாக்கி கொண்டனர். தங்கள் இணையத்தளத்தை இமெயில் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு பெருமைபட்டுக்கொண்டனர். இணையத்தில் தங்களுக்கென ஓர் அடையாளம் இருப்பதை நினைத்து மகிழ்ந்தனர். இணையத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வழி கிடைத்திருப்பதை நினைத்து துள்ளிக் குதிக்கவும் செய்தனர். 1996-ல் இந்தச் சேவையின் பெயரை ஜியோசிட்டிஸ் என்று மாற்றினார். அடுத்த ஆண்டே ஜியோசிட்டிஸ் ஒரு மில்லியன் பயனாளிகள் எனும் மைல்கல்லைத் தொட்டு இணையத்தில் அதிகம் நாடப்படும் இணையத்தளங்களில் ஒன்றானது. அடுத்த ஆண்டே அது பொதுப் பங்குகளை வெளியிட்டு டாட்காம் நிறுவனங்களில் ஒன்றானதும், அதற்கு அடுத்த ஆண்டே அப்போது இணைய சாம்ராஜ்யமாக உருவாகிக் கொண்டிருந்த யாஹுவிடம் விற்கப்பட்டதும் அடுத்தடுத்து நிகழந்தன. பத்தாண்டுகள் கழித்து யாஹு ஜியோசிட்டிசை மூடிவிட்டது.
சமூக வலைக்கு முன்!
ஆரம்பகால இணைய வெற்றிக்கதைகளில் ஒன்றான ஜியோசிட்டிஸ், பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டாலும் இணைய வரலாற்றில் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. பிளாகர் சேவை உதயமாகி யார் வேண்டுமானாலும் வலைப்பதிவு உருவாக்கிக் கொள்ளலாம் எனும் நிலை உருவானபோதே ஜியோசிட்டிஸ் போன்ற முன்னோடி சேவைக்கான முக்கியத்துவம் குறைந்து விட்ட்து. அதன்பிறகு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள் (முதலில் மைஸ்பேஸ் இருந்தது) பரவலாகத் தொடங்கியபோது இலவச இணையத்தள தாங்கிச் சேவைக்கான தேவை இல்லாமல் போனது. ஆனால் இந்தக் காரணத்தினாலேயே ஜியோசிட்டிசை என்றென்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
வலைப்பதிவுகளும், சமூக வலைப்பின்னல் சேவைகளும் அறிமுகமாகாத காலகட்டத்தில் இந்த இரண்டின் ஆதார அம்சங்களை இணையவாசிகளுக்கு அளித்தது ஜியோசிட்டிஸ் தான். உண்மையில் அதுதான் சமூக வலைப்பின்னல் சேவைகளின் ஆரம்பம் என்றும் சொல்லலாம். இணையவாசிகள் தங்களுக்கான வெளியை உருவாக்கிக் கொள்ள வழி செய்து, அவர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொள்வதையும் கருத்துக்களைப் பகிர்வதையும் சாத்தியமாக்கி இணையப் பரப்பில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வைத்தது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, இணையத்தில் யார் வேண்டுமானாலும் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்ள வழி செய்து, அதன் ஆதார அம்சமான ஜனநாயகத் தன்மையை உணர்த்தியது. இணையம் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஒரு போதும் இருக்காது, அது எல்லோருக்குமானது என்பதை புரிய வைத்து, இது எங்கள் இணையம் எனச் சாமானியர்கள் சொந்தம் கொண்டாட வைத்தது.
இணைய ஜனநாயகம்
இத்தனை அருமையான ஜியோசிட்டிசை அப்படியே மறந்துவிடலாமா, என்ன?
அதனால்தான் கேமரூன்ஸ் வேர்ல்ட் இணையத்தளம் அமைக்கப்பட்டு, ஜியோசிட்டிஸ் சேவையில் பதிவு செய்யப்பட்டிருந்த தளங்களில் பல தளங்களின் முகப்பு பக்கங்கள் இணையபுதை மணலில் இருந்து மீட்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் வரிசையாக பழைய ஜியோசிட்டிஸ் தளங்களைக் காணலாம். வடிவமைப்பிலோ, உள்ளடக்கத்திலோ அவை கவரும் என்று சொல்வதற்கில்லை. உண்மையில் பல தளங்கள் சிறியவர்களின் நோட்டுப்புத்தகம்போல தான் இருக்கின்றன. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களுடன், பளபளக்கும் எழுத்துகளுடன் அறிவிப்புகள் பளிச்சிடுவதைப் பார்க்கலாம். அதன் உள்ளடக்கத்திலும் சில பொது அம்சங்களைப் பார்க்கலாம்; இது என்னுடைய இடம், இங்கு வருகை தந்ததற்கு நன்றி, இந்தத் தளத்தில் உலகை அறிந்து கொள்ளலாம், இது என் இதயம், அன்பான இணைய மனிதர்களே உங்கள் வருகைக்கு நன்றி... போன்ற வாசகங்களைக் காணலாம். இவற்றோடு முகப்புப் பக்கத்தில் பட்டாம் பூச்சி பறப்பது, மலர்கள் உதிர்வது போன்ற காட்சிகளையும் காணலாம். மவுசை நகர்த்தும்போது கர்சர் வைத்த இடங்களில் எல்லாம் மலர்கள் தோன்றுவது உள்ளிட்ட சாகசங்களையும் பார்க்கலாம்.
இன்றைய வடிவமைப்பு சித்தாந்தத்தின்படி பார்த்தால் இவை எல்லாமே பழைய சங்கதியாக தோன்றலாம். ஆனால் இந்த அப்பாவித்தனம்தான் இணையம் அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கேமரூன்ஸ் வேர்ல்டை உருவாக்கியுள்ள கேமரூன் அஸ்கின் சுட்டிக்காட்டியுள்ளது போல இந்தத் தளங்கள் ஒவ்வொன்றும் இணையத்தின் தனிப்பட்ட மூளைகள். பயனாளிகள் தங்களுக்கென அமைத்துக்கொண்ட தனிப்பட்ட வெளிகள். இணையத்தின் உள்ளடக்கத்தில் பெரும்பாலானவை பிராண்ட்கள் சார்ந்ததாக, வர்த்தகமயமானதாக மாறியிருக்கும் நிலையில் இந்தத் தனிப்பட்ட தன்மை மிகவும் பிரத்யேகமானது.
அவசியம் இந்த இணைப்பைப் பாருங்கள். கேமரூன்ஸ் வேர்ல்ட்: http://www.cameronsworld.net/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.