பகுதி 23: சோதனை மேல் சோதனை!
வட துருவப் பகுதியில் வசிக்கும் எஸ்கிமோ மக்களை ஆராய, 1903-ம் வருடம் அங்கே சென்று,


வட துருவப் பகுதியில் வசிக்கும் எஸ்கிமோ மக்களை ஆராய, 1903-ம் வருடம் அங்கே சென்று, ஐந்து வருடங்கள் ஆய்வு செய்தார் வில்ஜாமுர் ஸ்டெபன்சன் (Vilhjalmur Stefansson). ஸ்டெபன்சன் திரும்பி வந்து தன் அனுபவங்களைச் சொன்னபோது யாரும் அதை நம்பவில்லை. அங்கு தங்கிய ஐந்து வருடமும் தான் வெறும் மீன் மற்றும் நீரை உட்கொண்டே வாழ்ந்தேன். மீனை மட்டுமே உண்ட தனக்கும், எஸ்கிமோக்களுக்கும் ஸ்கர்வி வரவே இல்லை. அந்த ஐந்து வருடங்களில், தான் அடைந்த உடல்நலமும், ஆரோக்கியமும் தன் ஆயுளில் வேறு எந்தக் காலகட்டத்திலும் அடைந்ததில்லை என்று எழுதினார் ஸ்டெபன்சன்.
இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் எழுதியதால் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த அன்றைய விஞ்ஞானிகள் முடிவெடுத்தார்கள். 1928-ம் ஆண்டு ஸ்டெபன்சன் ஒரு ஆண்டு முழுக்க இறைச்சியும், நீரும் மட்டுமே உண்ணும் சோதனைக்கு உட்பட முன்வந்தார். அன்று இறைச்சி மட்டுமே உண்டால் வைட்டமின் சி குறைபாடு வந்து இறந்துவிட வாய்ப்புண்டு என நம்பப்பட்டது.
மருத்துவமனையில் ஸ்டெபன்சனும் அவரது நண்பரும் நுழையும்போது அவருடைய நண்பர்கள் பலர் அங்கே வந்து ‘இந்த விஷப்பரிட்சையில் இறங்கவேண்டாம்’ என வலியுறுத்தினார்கள். ஆனால், ஸ்டெபன்சன் அசரவில்லை. பரிசோதனைக் காலமான ஒரு வருடமும் எந்தச் சிக்கலுமின்றி கழிந்தது. அந்த ஒரு வருடமும் இறைச்சி மற்றும் நீரை மட்டும் உண்ட இருவரும் மிக ஆரோக்கியமாகவே இருந்தார்கள். நடுவே ஒரே ஒருமுறை ‘கொழுப்பில்லாத இறைச்சியை உண்டால் என்ன ஆகும்’ என்பதைச் சோதிக்க ஸ்டெபன்சனுக்கு ஆய்வாளர்களின் வற்புறுத்தலால் கொழுப்பில்லாத இறைச்சி வழங்கப்பட்டது. அதனால் ஸ்டெபன்சனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எஸ்கிமோக்கள் கொழுப்புள்ள இறைச்சியையே உண்பார்கள் என்ற ஸ்டெபன்சன், அதன்பின் கொழுப்பு நிரம்பிய இறைச்சியையே சாப்பிட்டார். அதனால் அவருடைய உடல் உபாதை மாயமாக மறைந்தது.
இந்த ஆய்வை முன்வைத்து பல கட்டுரைகள் மருத்துவ இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. ஸ்டெபன்சன் அதன்பின் ஆயுள் முழுக்க இதே டயட்டைப் பின்பற்றி நோய்நொடியின்றி வாழ்ந்து தன் 82-வது வயதில் மரணமடைந்தார். அவர் ‘Not by bread alone’ என்று ஒரு நூலை எழுதினார். ‘பஞ்சம் வந்து இறைச்சி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எஸ்கிமோக்கள் காய்கனிகளை உண்பார்கள். அவர்களைப் போன்ற ஆரோக்கியமான மனிதர்களை நான் பார்த்தது இல்லை.’ என்று தன் நூலில் அவர் எழுதியுள்ளார்.

சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஜார்ஜ் மான் எனும் மருத்துவர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். மசாயி எனும் கென்ய பழங்குடியினரைக் கண்டார். மசாயிகள், மாடுகளை வளர்ப்பவர்கள். மசாயி போர்வீரன், தினமும் மூன்று முதல் ஐந்து லிட்டர் பாலைக் குடிப்பான். மாடுகளைக் கொல்லும் காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 கிலோ முதல் 4 கிலோ மாட்டிறைச்சி உண்ணப்படும். மசாயிகள் காய்கனிகள், பழங்கள் எதையுமே அதிகம் உண்ணமாட்டார்கள். அவை மாடுகளுக்கு மட்டுமே ஏற்ற உணவு என அவர்கள் கருதினார்கள் என்கிறார் ஜார்ஜ் மான். கென்யாவில் இருக்கும் சம்புரு எனும் இன்னொரு பழங்குடியை ஆராய்ந்த ஜெரால்டு ஷேபர் எனும் மருத்துவர், சம்புருக்கள் மசாயியை மிஞ்சும் வண்ணம் தினமும் இரண்டு முதல் ஏழு லிட்டர் பாலையும் அரை கிலோ வெண்ணெயையும் உண்பதாகக் கூறுகிறார். சம்புருக்களும், மசாயிகளும் மிக ஒல்லியாக, ஆரோக்கியமாக இருக்கும் பழங்குடியினர்.
இந்த ஆய்வுகள் எல்லாமே மருத்துவ ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்டும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளை நடத்தியவர்களும் புகழ் பெற்ற மருத்துவர்கள். இருந்தும் இன்றைய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இவை எதுவுமே சொல்லிக்கொடுக்கப்படுவது கிடையாது. அவர்கள் படிப்பதெல்லாம் கொலஸ்டிராலால் இதயத்துக்கு ஆபத்து என்கிற 1970களின் பழுதடைந்த அறிவியல் கோட்பாட்டையே.
*
கொலஸ்டிராலால் உடல் பருமன் அடையும், மாரடைப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தலுக்கு வேட்டு வைக்கும் வகையில் எஸ்கிமோக்கள், மசாயிகள் போன்றோரது உணவுமுறையைப் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தபிறகு உடனே நிலைமை மாறவில்லை. அமெரிக்க உணவுமுறையை நிர்ணயிக்கும் பொறுப்பில் இருந்தவர்களுக்கு ஆப்பிரிக்கா, வடதுருவம் போன்ற பகுதிகளில் இருந்து வந்த இத்தகைய ஆய்வுகளை என்ன செய்வது என்கிற குழப்பமே ஏற்பட்டது. அதனால் அதை ஒழித்துக்கட்டும் வேலைகள் நடந்தன.
அவர்கள் காடுகளில் நீண்ட தூரம் ஓடியாடி வேட்டையாடுகிறார்கள் என்று சொல்லி ஆய்வுகளை ஒதுக்கினார்கள். நகர்ப்புறங்களில் அதைவிட அதிகமணிநேரம் உழைக்கும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கும் வியாதிகள் வருவது சுட்டிக்காட்டப்பட்டது. உடனே அதற்குக் காரணம், மது, சிகரெட் என்றார்கள். மது, சிகரெட் பழக்கம் இல்லாத தொழிலாளரும் வியாதியால் பாதிப்படைவதைச் சுட்டிக்காட்டியபோது, இதற்குக் காரணம் பழங்குடியினரின் மரபணுக்கள் என்றார்கள்.
மரபணுக் கோட்பாட்டை நிரூபிக்க விஞ்ஞானிகள் சிலர் ஆப்பிரிக்க காடுகளுக்குச் சென்று மசாயிகளை ஆராய்ந்தார்கள். நகர்ப்புறங்களில் வாழும் மசாயிகளை ஆராய்ந்தபோது அவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரியவந்தது. ஏனெனில் நகர்ப்புற மசாயிகள், நகர்ப்புற உணவுகளையே (ரொட்டி, சாண்ட்விச், பர்கர்) சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் காடுகளில் இயற்கையான உணவை உண்டு (இறைச்சி, பால்) வாழ்ந்த மசாயிகள் ஆரோக்கியமாக இருந்தார்கள். இதற்கு எந்தச் சரியான விளக்கமும் இதுவரை உணவியல் துறை விஞ்ஞானிகளால் கொடுக்கப்படவில்லை. காட்டுவாசி உதாரணமெல்லாம் நகர்ப்புற மக்களுக்குப் பொருந்தாது என்பது போன்ற நம்பிக்கையையே கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே பிரான்சு, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளில் நகர்ப்புற மக்கள் அதிக அளவில் கொழுப்புணவை உண்டும் ஆரோக்கியமாகவே உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்தன. இதனால் அமெரிக்க உணவியல் நிபுணர்கள் குழம்பிப் போனார்கள். குறிப்பாக பிரெஞ்சுக்காரர்கள் மாட்டிறைச்சி, முட்டை, பேகன் எனப்படும் பன்றி வயிற்றுக்கறி, ஃபோயி கிராஸ் எனப்படும் வாத்து ஈரல், ஏராளமான சீஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துவந்தார்கள். இவர்களுக்கு எல்லாம் ஏன் மாரடைப்பு வரவில்லை என்பதை விளக்கமுடியாமல் திணறிய உணவியல் நிபுணர்கள், ‘பிரெஞ்சு மக்கள் ஒயின் குடிக்கிறார்கள். ஒயின் குடிப்பது இதயத்துக்கு நல்லது’ என்று சொல்லி சமாளித்தார்கள். உடனே உலகெங்கும் ஒயின் குடிப்பது நல்லது என்பது போல செய்தி பரவி, குடிக்காமல் இருந்த பலரும் ஒயினைக் குடிக்க ஆரம்பித்த கொடுமையும் நடந்தது.
அதன்பின் ஸ்விட்சர்லாந்து, நார்வே, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் மக்கள் கொழுப்புணவை உண்டும் மாரடைப்பு விகிதம் அமெரிக்காவை விட குறைவாக இருந்த ஆய்வுகளும் தொடர்ந்து வெளிவந்தன. உணவியல் நிபுணர்களும் சளைக்காமல் ‘நார்வேயில் மீன் சாப்பிடுகிறார்கள், கிரேக்கத்தில் ஆலிவ் ஆயில் சாப்பிடுகிறார்கள். இதனால்தான் அங்கே மாரடைப்பு குறைவு’ என்றெல்லாம் சொல்லி உலகெங்கும் மீன் மாத்திரை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றின் விற்பனை பரவ வழிவகுத்தார்கள்.
*
உடல்பருமனுடன் அமெரிக்காவில் புற்றுநோய் விகிதமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. 1970களில் 1 லட்சம் பேரில் 400 பேருக்குப் புற்றுநோய் இருந்தது. அதில் 200 பேர் மரணமடைகிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறின. புற்றுநோய் வந்தவர்களில் சரிபாதி பேர் பிழைப்பதில்லை எனும் நிலையில் புற்றுநோய் ஏன் வருகிறது, அதற்கான தீர்வு என்ன என்பதைச் சொல்ல முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பினார்கள். சிகரெட்டால் புற்றுநோய் வரும் என்பதை ஒப்புக்கொள்ள அவர்களுக்கு 1964-ம் ஆண்டு தான் மனம் வந்தது. அதற்குள் பல லட்சம் பேர் சிகரெட் பிடித்து உயிரை விட்டிருந்தார்கள். இதன்பின், அதிகரிக்கும் புற்றுநோய்க்கும் இறைச்சிதான் காரணமாக இருக்கும் என்ற கருத்தாக்கம் விஞ்ஞானிகளிடையே இருந்தது. இதைப் பரப்பியவர், கியோ கோரி.
கியோ கோரி 1976-ல் ஜப்பான் சென்றார். அங்கே புற்றுநோய் விகிதம் மிகக் குறைவாக உள்ளதைக் கண்டார். அதன்பின் அமெரிக்காவில் குடியேறி வாழும் ஜப்பானியர்களையும் கவனித்தார். அமெரிக்கர்களுக்குச் சமமான அளவில் அவர்களுக்கும் புற்றுநோய் இருந்தது. இதை அவர் அமெரிக்க அரசின் செனட்டர் (எம்.பி) ஜார்ஜ் மெக்கவர்னிடம் சொன்னார். மெக்கவர்ன்-னின் கமிட்டி அப்போதுதான் ‘கொழுப்பால் மாரடைப்பு வரும்’ என்றொரு அறிக்கையைத் தாக்கல் செய்ய இருந்தது. காரணம், கொழுப்பு நல்லதா, கெட்டதா என்கிற பெரிய சர்ச்சை அன்றைய அமெரிக்க விஞ்ஞானிகளிடையே இருந்தது. இதைத் தீர்க்க அமெரிக்க அரசின் ஒரு கமிட்டி, செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் அமைக்கப்பட்டது. மெக்கவர்ன், குறைகொழுப்பு, சைவ டயட்டைப் பின்பற்றியவர். இரு தரப்பு விஞ்ஞானிகளிடமும் கருத்து கேட்டு, ‘இறைச்சி, முட்டை, கொழுப்பு ஆகியவை உடலுக்குக் கெடுதல். கொழுப்பு குறைவான உணவே உடலுக்கு நல்லது’ எனப் பரிந்துரைத்தார். காவல்துறை ஒருவனைக் கைது செய்தால் அவன் மேல் ஸ்டேஷனில் நிலுவையில் இருக்கும் எல்லா வழக்குகளையும் சுமத்துவதுபோல ‘புற்றுநோய்க்கும் இறைச்சியே காரணம்’ என அறிக்கையில் எழுதி தாக்கல் செய்துவிட்டார் மெக்கவர்ன்.
அந்த அறிக்கை மேல் விவாதம் நடந்தது. ‘இதற்கு என்ன ஆதாரம்?’ என ஒரு விஞ்ஞானி வினவ, ‘ஆதாரத்தைத் தேடுவதற்கான நேரம் இல்லை. மக்களுக்கு நாம் ஒரு பரிந்துரையைச் செய்யவேண்டும். ஏனெனில் உடல் பருமனும், புற்றுநோயும் மக்களைப் பிடித்து வாட்டி வருகின்றன. அதனால் மக்கள், கொழுப்பு குறைந்த உணவை உண்ணவேண்டும் எனப் பரிந்துரை செய்வோம். அது உண்மையா, பொய்யா என்பதைப் பரிசோதனை மூலம் சாவகாசமாகப் கண்டுபிடிக்கலாம்’ என்றார் மெக்கவர்ன்.
மெக்கவர்ன்-னின் அறிக்கையே அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான டயட் அறிவுரையாக ஏற்கப்பட்டது. (இணைப்பு: http://zerodisease.com/archive/Dietary_Goals_For_The_United_States.pdf) அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகள் அதையே அதிகாரபூர்வமான டயட்டாக அறிவித்தன. அமெரிக்க புற்றுநோய் மையம், அமெரிக்க சுகாதார மையம் போன்றவை, கொழுப்பால் புற்றுநோய் உண்டாகும் என மக்களை எச்சரித்தன. அமெரிக்காவே சொல்கிறது என்பதால் உலகநாடுகளும் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுன.
ஆனால், இப்படிப் புற்றுநோய் வரும் என்று சொன்னால் மட்டும் போதாது அல்லவா? அதை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமே? இதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1987-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு வெளியானது. இது 10 ஆண்டுகளாக, 90,000 செவிலியர்களைக் கொண்டு அவர்களது உணவை ஆராய்ந்து நிகழ்த்தப்பட்ட ஆய்வாகும். ‘செவிலியர்கள் எந்தளவுக்கு அதிகமாக கொழுப்பை உண்கிறார்களோ அந்தளவுக்கு குறைவான விகிதத்திலேயே அவர்களுக்கு மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு உண்டாகிறது’ என்று ஆய்வின் முடிவு வெளியானது.
ஆய்வின் முடிவு தலைகீழாக வந்தவுடன் அதிர்ச்சியடைந்த அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தலைவர் பீட்டர் க்ரீன்வால்ட், எலிகளை வைத்து மிகக் குறைந்த காலகட்டத்தில் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தினார். கொழுப்புணவை உண்பதால் எலிகளுக்குப் புற்றுநோய் ஏற்படும் என்று நிருபித்தார். ஆனால் இந்த ஆய்வில் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது கனோலா, வனஸ்பதி போன்ற ரீஃபைண்ட் ஆயில் வகைக் கொழுப்பாகும். இப்படி ஒரு மோசடியான ஆய்வை நடத்திவிட்டு, மருத்துவ இதழ்களில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வைக் கடுமையாக விமரிசித்து கட்டுரை எழுதினார்.
நிறைவுற்ற கொழுப்பால் புற்றுநோய் உண்டாகும் என்கிற அமெரிக்க அரசின் அறிவுரையைப் பல ஆய்வுகள் கேள்வி கேட்டன. ‘ஒரு பிரச்னையை முடிக்க அதன் தலையில் கல்லைத் தூக்கிப் போடு அல்லது கமிட்டியைத் தூக்கிப் போடு’ என்பார்கள். அதேபோல ‘இதை எல்லாம் ஆராய்கிறோம். கமிட்டி அமைக்கிறோம். தேசிய புற்றுநோய் சங்க விஞ்ஞானிகளே இதை ஆராய்வார்கள்’ எனச் சொல்லி அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் தப்பித்துக் கொண்டது. இத்தகைய ஆய்வுகளை முடிக்க ஏழெட்டு ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில் உடனுக்குடன் எதையும் நிரூபிக்க முடியாமல் தாமதமானது. ஆனால், அமெரிக்க புற்றுநோய் நிறுவனம், கொழுப்புணவால் புற்றுநோய் வரும் என்கிற பிரசாரத்தை மட்டும் தொடர்ந்து செய்து வந்தது.
1977-ல், ‘கொழுப்பால் மாரடைப்பும் புற்றுநோயும் வரும்’ என்கிற அறிக்கையைப் பரிந்துரை செய்தபோது புற்றுநோய்க்கும், நிறைவுற்ற கொழுப்புக்கும் இடையே உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஓர் ஆய்வும் அமெரிக்க அரசிடம் இல்லை. 2011-ல், தேசிய புற்றுநோய் சங்க உணவியல் துறை இயக்குநரான ஆர்தர் ஷாட்ஸ்கினுக்குப் புற்றுநோய் வந்தது. ‘நெய்/வெண்ணெய் சாப்பிடவேண்டாம். வனஸ்பதி, கனோலா சாப்பிடுங்கள்’ என்று மக்களுக்குச் சொன்ன அறிவுரையை அவரும் பின்பற்றியவர். புகை, மது என எப்பழக்கமும் இன்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்த ஷாட்ஸ்கினுக்குப் புற்றுநோய் வந்தபோது மருத்துவ உலகமே அதிர்ச்சியடைந்தது. இதற்குப் பிறகுதான் அமெரிக்க புற்றுநோய் சங்கம் ‘சர்க்கரை, மாவுச்சத்து போன்றவை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம்’ என்று சொல்லத் தொடங்கியுள்ளது.
பிறகு, ஆர்தர் ஷாட்ஸ்கின் உடல்நலம் காரணமாகப் பதவி விலகினார். அவர் கடைசியாக அளித்த பேட்டியில், ‘அமெரிக்க புற்றுநோய் சங்கத்தில் பலரும் இப்போது மாவுச்சத்தும், சர்க்கரையும்தான் புற்றுநோய்க்கு காரணம் என்கிறார்கள். ஆனால் எனக்கு இன்னமும் அதில் நம்பிக்கை வரவில்லை’ என்றார். ஆயுள் முழுக்க நம்பிய கொள்கையைக் கடைசிகாலத்தில் கைவிடுவது பலருக்கும் சாத்தியமில்லை.
அதன்பின் 2012-ல், புற்றுநோய் சங்க உணவியல் துறையின் புதிய இயக்குநராகப் பதவியேற்ற ராபர்ட் ஹூவர் ‘புற்றுநோய்க்கும் கொழுப்புக்கும் இடையே உள்ள தொடர்பை எங்களால் நிரூபிக்க முடியவில்லை’ என ஒப்புக்கொண்டார். அதன்பின் அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு ‘புற்றுநோய்க்கும் கொழுப்புணவுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது’ என்பதாக மாறியது. ஆனால் முதலில் பரிந்துரை செய்த 1977ம் வருடம் முதல் நிலைப்பாடு மாறிய 2012-ம் வருடம் வரை உலகெங்கும் பலகோடி மக்கள் இந்த முட்டாள்த்தனமான, அறிவியல் ஆதாரமற்ற பரிந்துரையை நம்பி தம் வாழ்க்கையை பறிகொடுத்துள்ளார்கள். 1977-ல் ஒரு அரசியல்வாதி செய்த தவறு உலகெங்கும் பலகோடி மக்களைப் பலிவாங்கிய கொடுமையை என்னவென்று சொல்வது?
ஆனால், ஆர்தர் ஷாட்ஸ்கின்-னைப் போல தனது பரிந்துரையைத் தானே பின்பற்றும் தவறை விஞ்ஞானிகள் சிலர் செய்யவில்லை. அதில் முக்கியமானவர், ஆன்சல் கீஸ்.

ஆன்சல் கீஸைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் பார்த்துள்ளோம். குறைந்தகொழுப்பு டயட்டுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கீஸ். இரண்டாம் உலகப்போர் சமயம் அமெரிக்க வீரர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்துடன் உணவுப்பொருள்கள் தயாரிக்கும் கமிட்டியின் தலைவராக இருந்தார். அவர் வடிவமைத்த உணவு ரேஷன், வீரர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவற்றை கே ரேஷன் என அவரது பெயரின் முதல் எழுத்தால் அழைத்தார்கள். இதனால் கீஸின் புகழ் நாடெங்கும் பரவியது. இந்தச் சூழலில் ‘மாரடைப்புக்கு காரணம் கொழுப்பே’ என்ற ஏழுநாடுகளின் ஆய்வு ஒன்றை கீஸ் உருவாக்கினார். 22 நாடுகளை வைத்து செய்யப்பட்ட அந்த ஆய்வில் மாரடைப்புக்கும் கொழுப்புக்கும் எத்தொடர்பும் கிடைக்கவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி அந்த 22 நாடுகளில் இருந்து வெறும் 7 நாடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, கொழுப்பால் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லி ஆய்வைப் பதிப்பித்தார் கீஸ்.
இத்தனை பெரிய விஞ்ஞானி சொல்லிவிட்டாரே என டைம் பத்திரிக்கை ‘மிஸ்டர் கொலஸ்டிரால்’ என அவருக்கு அடைமொழி கொடுத்து, அவரது புகைப்படத்தை அட்டையில் வைத்து ‘கொலஸ்டிரால் ஆபத்து’ என கவர்ஸ்டோரி வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் கீஸுக்கு எதிராகப் பல விஞ்ஞானிகள் வாதாடினார்கள். ஆனால் கீஸ் பிடிவாதகாரர். ஒருவர் தன்னை எதிர்ப்பது தெரிந்தால் அதைத் தனிப்பட்ட முறையிலான தாக்குதலாக எடுத்துக்கொள்வார். அவரைப் பொறுத்தவரை அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், அவரது ஆய்வைத் தவறு என்று கூறுவதும் ஒன்றே. கீஸின் ஆய்வு தவறானது என்று பின்னாளைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அன்று கீஸிடம் யாரும் ஒரு கேள்விகூட எழுப்பவில்லை.
தேசிய அளவில் கீஸுக்கு இருந்த நற்பெயர், பிரபலம் ஆகியவை பிற விஞ்ஞானிகளுக்கு இல்லை. பல மருத்துவ அமைப்புகளின் தலைவராக கீஸ் இருந்தார். அவரை எதிர்த்தவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனத் திட்டி அறிக்கை வெளியிட்டார். இதனால் அவர்களுக்கான நிதியுதவிகள், ஆய்வு செய்தற்கான உதவித்தொகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டன. கீஸ் சொன்னதை ஆதரித்து வெளியிடும் ஆய்வறிக்கைகளுக்கே நிதியுதவி கிடைக்கும் என்கிற நிலை உருவானது. இப்படி ஒரு தனிமனிதரின் ஈகோ மற்றும் முரட்டுப்பிடிவாதம் ஆகியவை அறிவியல் துறையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டது. பலருடைய உடல்நலம் கெடவும், தவறான மருத்துவப் பரிந்துரைகள் பரவவும் கீஸ், செனட்டர் மெக்கவர்ன் போன்ற இருவருடைய தவறான முடிவுகளும், ஈகோவுமே காரணமாக இருந்தன.
ஆனால், கொலஸ்டிரால் மோசம் என ஊருக்கே உபதேசம் செய்த கீஸ், கடைசிவரை தினமும் மாட்டிறைச்சியையும், பன்றிக்கொழுப்பையும், முட்டையையும் உண்டுவந்தார். 1904-ல் பிறந்த கீஸ், தன் இளம்வயதில் காலை உணவாக முட்டை, பேகனை (பன்றிவயிற்றுக்கறி) சாப்பிட்டவர். இந்த உணவுப் பழக்கத்தை அவரால் கடைசிவரை கைவிடமுடியவில்லை. ஆனால் நகைமுரணாக கொலஸ்டிரால் ஆபத்து என கீஸின் கட்டுரையைப் பதிப்பித்த டைம் இதழ், அட்டைப் படத்தில் முட்டை மற்றும் பேகன் படத்தை வைத்து அக்கட்டுரையை வெளியிட்டது. அதுவே கீஸின் விருப்ப உணவாக கடைசிவரை இருந்தது. அதாவது எந்த உணவை மக்களைச் சாப்பிடவேண்டாம் என்றாரோ அதையே கடைசிவரை கீஸ் உண்டுவந்தார். சீரியல், ஓட்ஸ் போன்ற ‘ஆரோக்கிய உணவுகளை’ அவர் மக்களுக்குப் பரிந்துரைத்தபோதும் கடைசிவரை அவர் அதைத் தொடவே இல்லை.
பேட்டி ஒன்றில், ‘நீங்கள் ஏன் சீரியலையும் பாலையும் காலை உணவாக எடுப்பதில்லை’ என கீஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு கீஸ் ‘அந்தக் கூழை குடிப்பதா? எனக்கு குமட்டிக்கொண்டு வரும்’ என்றார். இப்படி ஆரோக்கிய உணவைக் கடைசிவரை உண்டுவந்த கீஸ், அதன் பலனாக உடல்பருமனின்றி ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து தன் 101-வது வயதில் மரணமடைந்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...