தி.ஜா.வின் எழுத்து எல்லாவற்றிலும் உணர்வுகளின் உன்மத்த நிலையைக் காண முடிகிறது. அதிலும் பெண்கள் என்றால் உச்சத்துக்குப் போகிறார். இது தஞ்சைக் காவிரியின் சிறப்புக் குணமோ எனத் தோன்றுகிறது. செம்பருத்தியில் ஒரு இடம்:
‘நானாயிருந்தால்… அவள் காலில் கிடப்பேன்… அவள் கால் கட்டை விரலை எடுத்துக் கண் இமை மீது தேய்த்துக் கொள்ளுவேன். உள்ளங்கால் இரண்டையும் உச்சந்தலையில் வைத்து அழுத்தி, இரண்டு கன்னங்களிலும் பதிய வைத்துப் பொத்திக் கொள்வேன்…’
***
செம்பருத்தியின் இருண்மை, அதில் வரும் மூன்று பெண்களின் வன்மமும் வன்முறையும் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதே சமயம் ஒரு மகா உத்தமியான ஒரு பெண்ணும் அந்த நாவலில் வருகிறாள். பெரிய அண்ணனின் வைப்பாட்டியாக வரும் பொட்டுக் கட்டின தாசி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண். கிட்டத்தட்ட ஒரு காவிய நாயகியைப் போல் அவளை உருவாக்கியிருக்கிறார் தி.ஜா. அவளைப் பற்றி பெரிய அண்ணன் சட்டநாதனிடம் சொல்கிறார். ‘அவ என்ன சாதாரண பொம்பளையா? வாயைத் தொறந்து ஒரு வெசவு வெசதுண்டா? கொடூரமா ஒரு வார்த்தை பேசினதுண்டா? அவ தம்பீங்கள்ளாம் எத்தனையோ ஏமாத்திருக்கானுக! ரொம்ப நாள் தவம் பண்ணின ஆளுங்களுக்குத்தான் அந்த மாதிரி எல்லாத்தையும் ஜெயிச்சு, அமெரிக்கையா நிக்க முடியும். ஒரு நாளைக்கு ஏதோ சந்தேகமா கேட்டுப்ட்டேன். ‘இந்த இடத்தைத் தவிர எனக்கு மனசாலே கூட எதையும் நினைக்க முடியாது’ என்று அதுக்கும் கோபப்படாமத்தான் சொன்னா! எப்படிக் கோபப்படாம சொன்னான்னுதான் எனக்கு அப்பறம் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருந்தது…எத்தனைதான் சொல்றது?’
I Saw The Devil என்ற கொரியப் படத்தைப் பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டேன். அதில் வரும் கொலைகாரன் ஏன் உச்சபட்ச வன்முறையின் குறியீடாக இருக்கிறான் என்றால், அவனைத் தண்டிக்க வேண்டும் என்று நினைக்கும் போலீஸ் அதிகாரியால் அவனை கடைசி வரை தண்டிக்கவே முடியவில்லை. கையையே வெட்டினாலும் கூட சிரித்துக் கொண்டே நிற்கிறான். வலி அறியாதவன் நான் என்கிறான். என்னைக் கொன்றால் கூட நீ என்னை வெல்ல முடியாது என்கிறான். ஏனென்றால் அதற்குள் அந்தக் கொலைகாரன் போலீஸ்காரனின் எல்லா உறவினர்களையும் கொன்று விடுகிறான். ‘என்னை வெல்ல உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உன் காதலியை நான் கொன்று விட்டேன் என்று தெரிந்ததுமே என்னை நீ கொன்றிருக்க வேண்டும். ஆனால் நீ என்னைத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்தாய். அது மட்டும் முடியவே முடியாது. இப்போது நீ என்னைக் கொன்றால் கூட நான் தான் ஜெயித்தவன்’ என்று கடைசியில் அந்தப் போலீஸ்காரனிடம் சொல்கிறான்.
அந்தக் கொலைகாரனை விட வன்முறை அதிகம் கொண்டவளாய்த் தெரிகிறாள் செம்பருத்தியின் பெரிய அண்ணி. தன் குடும்பத்தையே தாங்கிய மைத்துனன் சட்டநாதனையும், மற்ற உறவுகள் எல்லோரையும் பாடாய்ப் படுத்தி விட்டு கடைசியில் எதுவுமே சாப்பிடாமல் சாகப் பார்க்கிறாள். தான் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அல்ல; மேலும் மேலும் தன் சுற்றத்தாரை சித்ரவதை செய்வதற்காக அப்படிச் செய்கிறாள். அப்போது அவளிடம் சட்டநாதனின் மனைவி புவனா சொல்கிறாள்:
‘கிடைக்க முடியாத ஒரு ஆமடையான் கிடைச்சாங்க உங்களுக்கு. கிடைக்கக் கூடாத இடத்திலெ சம்பந்தம் கிடைச்சுது. இதெல்லாம் நரக வேதனையா இருந்துதாக்கும் உங்களுக்கு? அண்ணன் உங்களுக்கு என்ன அப்படி அநியாயம் பண்ணிட்டாங்க, ஒரு ஜன்மாயுசு முழுக்க அவரைப் புண்ணா அடிக்கிறதுக்கு? ஹும்? அவங்களோட சந்தோஷமா இருக்கக் கொடுத்து வைக்கலெ. இப்பவும் நேரமாயிடலெ. ஆனா சாமிக்கு முன்னாலெ பிசாசு எப்படி நிக்க முடியும்? அந்த மாதிரி இங்கெ இருக்கப் பிடிக்கலெ. பட்டினி கிடந்தாவது செத்து ஒழியணும்னு எண்ணம் போலிருக்கு. இதைப் பிராயச்சித்தம்னு எப்படி நினைக்க முடியும்? வயித்தெரிச்சல் கொட்றதிலெ இதுவும் ஒரு தினுசுன்னு தோணுது. வேற என்ன? சோத்துக்கும் மருந்துக்கும் நாள் கணக்கா மன்றாடுறோம் இப்படி நின்னுகிட்டு. கேக்கல. ரத்னமா ஒரு புருஷன் கிடைச்சாரு. அது உனக்கு சரகாத் தோணுச்சு. அவரை சரகாத்தான் விரலெ வச்சு சுக்கு சுக்காப் பொடி பண்ணினே. இனிமே என்ன? செத்து என்ன, சாகாட்டி என்ன? நான் இனிமே இங்கே உபசாரம் பண்ணிக்கிட்டு நிக்க மாட்டேன். போறப்ப ஒண்ணு மட்டும் சொல்றேன். பெரியண்ணனைக் கூப்பிட்டு அவர் காலை எடுத்துக் கண்ணிலெ ஒத்திக்கிட்டு இருபத்தஞ்சு வருஷப் பேயாட்டத்துக்கு நீ மன்னிப்புக் கேட்டுக்காம போனே! உன் உசிரு இந்த உடம்பை விட்டு இன்னும் ஒரு இடத்துலெ போய் இப்படித்தான் அல்லாடிக்கிட்டுக் கிடக்கும். சாகறதுக்கு முன்னாலெ அதையாவது செய்யி!’
இவ்வளவு சொல்லியும் பெரிய அண்ணி மசியவில்லை. மருந்தும் சாப்பாடும் உட்கொள்ள மாட்டேன் என்று மறுத்து, அடாவடி செய்து, எல்லோரையும் வதை செய்துதான் சாகிறாள்.
சின்ன அண்ணியும் சட்டநாதன் தன் சரீர இச்சைக்கு மசியவில்லை என்று தெரிந்ததும் அவனை மிகக் கேவலமாக உதாசீனப்படுத்துகிறாள். நன்றியில்லாமல், துளிக்கூட அன்பில்லாமல் பழசையெல்லாம் ஒரே நொடியில் தூக்கி எறிந்து விடுகிறாள்.
செம்பருத்தியின் இன்னொரு விசேஷமான அம்சம், சட்டநாதனுக்கும் அவனுடைய பெரிய அண்ணனுக்குமான உறவு. ராம லக்ஷ்மணர்களை நினைவுபடுத்தக் கூடிய அத்தருணங்கள் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத அபூர்வம்.
***
தி.ஜா.வின் நாவல்களில் ஆக முக்கியமான ஒரு நாவல் ‘மரப்பசு’. ‘அம்மா வந்தாள்’ காதலின் உச்சம் என்றால் ’மரப்பசு’ காதல் மறுப்பின் உச்சம். அன்னவாசல் கிராமத்தில் தலை மொட்டையடிக்கப்பட்டு, நார்மடிப் புடவையோடு மூலையில் சுருண்டு கிடக்கும் இருபது வயது கூட நிரம்பாத ஒரு விதவையை அவளுடைய எதிர்வீட்டில் இருக்கும் சிறுமி அம்மணி பார்க்கிறாள். அந்தக் காட்சியே அவளுடைய மொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் ஒன்றாக அமைகிறது.

பிறகு அம்மணி பெரியவள் ஆனதும், அதே வீட்டைச் சேர்ந்த பையனைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் அம்மாவிடம், ‘என் புருஷனும் செத்துப் போய் விட்டால் நானும் அப்படித்தானே தலைமயிரையெல்லாம் அவன் ஆத்மா கையிலே கொடுத்துட்டு காமிரா உள்ளிலே மயக்கம் போட்டுக் கிடக்கணும் புளிப்பானைக்கும் ஊறுகா ஜாடிக்கும் நடுவிலே?’ என்று ஆவேசத்துடன் கேட்கிறாள்.
‘மகான்ரீ அவர்! குடும்பமே தெய்வாம்சம். பராசக்தி கடாட்சம் பொங்கற குடும்பம், ஜாக்கிரதை, நாக்கு இத்துப் போயிடும்!’
‘ஆமா, தெரியறது. வீட்டிலேதான் ஒரு பராசக்தியை மழுங்க சிரைச்சு வச்சிருக்கே?’
இதுதான் நாவல் நெடுகிலும் - அம்மணியின் நாற்பது வயது வரை - அவளைத் துரத்திக் கொண்டு வரும் காட்சி. திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்கிறாள். அதேபோல் ஆண் பெண் உறவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்கிறாள். எல்லோரையும் தொடப் போகிறேன். தழுவப் போகிறேன். யாரையும் தொடாமல், பற்றாமல் பேசப் போவதில்லை. பள்ளியில் வாத்தியாரிடம் அடிபட்டு மயக்கம் போட்டு விழுந்த சக மாணவனைத் தொடுகிறாள். ‘அம்மணி சண்முகநாதனை வைத்துக் கொண்டிருக்கிறாள்.’ ‘அம்மணி சண்முகநாதனின் வைப்பாட்டி.’ ‘தலைவலியா, அம்மணி தடவித் தீர்ப்பாள்.’ இப்படியாக பள்ளியின் சுவர்களில் தாரில் எழுத வைக்கிறார் பையனை அடித்த வாத்தியார். இங்கேதான் நாம் பார்க்கும் பெண்பிள்ளைகளுக்கும் அம்மணிக்குமான வித்தியாசத்தைக் காட்டுகிறார் தி.ஜா. அம்மணி வெகு துணிச்சலாக பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் செய்து, வாத்தியாரின் வேலையே போவதற்குக் காரணமாக இருக்கிறாள்.
கல்லூரியில் நுழையும்போது கோபாலி என்ற மாபெரும் சங்கீதக் கலைஞரை சந்திக்கிறாள். கோபாலி தியாகராஜரையும் ஸ்ரீராமனையும் வழிபடுபவராக இருந்தாலும் ஒரு சௌந்தர்ய உபாசகர். அழகான பெண்களைக் கண்டால் விட மாட்டார். அம்மணியை சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைக்கிறார். ஆரம்பத்திலேயே கோபாலியின் மீது அவளுக்கு சந்தேகம் வருகிறாது. ‘குழந்தை குழந்தை என்று வாய் அரற்றுகிறது. கை குழந்தையை அணைக்கிறதாகப் படவில்லையே…’ சில நாட்களிலேயே அதுவும் தீர்மானமாகி விடுகிறது. நீ என் பிராம்மண தாசியா ஆயிடு என்கிறார் கோபாலி. எப்படி? ‘பட்ணத்திலே ஜார்ஜ் டவுன்லெ பெரிய செட்டிமார் வீடுகள் என போய் ‘செட்டியார்வாள் இருக்காளான்னு கேட்டா, அவர் சம்சாரம் வந்து ‘கூத்தியா ஊட்டுக்குப் போயிருக்காங்களே’ன்னு சந்தோஷமா சொல்லுவாளாம். அந்த மாதிரி குஞ்சாளியும் சொல்லிட்டுப் போறா கௌரவமா.’ குஞ்சாளி கோபாலியின் மனைவி.
ஆனாலும் அவரிடம் தெளிவாகச் சொல்லி விடுகிறாள் அம்மணி. நான் உங்களுக்கு தாசியாக இருந்தாலும் நான் உங்கள் உடைமை அல்ல – ‘மாதா கோயிலுக்குக் கோடி ரூபாய் எழுதி வைத்தாலும் நான் மட்டும்தான் போவேன் என்று சொல்ல முடியாது அல்லவா, அப்படி’ - அப்போது அவள் வயது 20. கோபாலியின் வயது 47. கோபாலிக்கு அப்போது 22 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
சிறுவயது அனுபவங்களால் முழு நாஸ்திகவாதியாகவும் ஆகி விடுகிறாள் அம்மணி. ‘நான் தொழுதது இல்லை. பள்ளிக்கூடத்தோடு போய் விட்டது. யாரைத் தொழுகிறது, எதைத் தொழுகிறது என்று காலேஜில் சேரிக்கு என்னோடு வந்து சமத்துவம் சகோதரத்துவம் பேசும் தோழர்கள் சொல்லுவார்கள். ஏழைதான் கடவுள். மக்கள்தான் கடவுள். பதினைந்து வயதில் விநாயகர் அகவல், சௌந்தர்ய லஹரி, திருப்பாவை, ஊமையைப் பேச வைத்த காஞ்சி பஞ்சசதி என்னும் மாட்டு வாகன, எலி வாகன, மயில் வாகன, கருட வாகன, சிங்க வாகன, தாமரை வாகனக் கடவுள்களையெல்லாம் ஏழைகளுக்கு முன்னால், மக்களுக்கு முன்னால், அவர்கள் பசிக்கு முன்னால் சொக்கப்பனையாக அடுக்கிக் கொளுத்தி விட்டேன். அவர்கள் இருந்த இடங்களில் இப்போது கட்டைக்கரியும் புகையுமாக நெடி வீசுகிறது.’
கோபாலிக்கு அம்மணியின் மீது அன்பு அதிகம். ஆனால் அவளுடைய உடல் தேவையைத் தீர்க்க அவருக்கு வயதில்லை. அதனால் அம்மணிக்குத் தூக்கம் வருவதில்லை. இரவுகளில் குளிக்கிறாள். கோபம் வருகிறது. வித்வான்கள் யாரும் சுருதி சேர்த்து விட்டு வாசிக்க மறந்து போவதில்லை. ஆனால் இங்கே வேடிக்கையாக இருக்கிறது. உடம்பின் இச்சை தாங்க முடியாமல் ஒருநாள் வெயிலில் போய் மணிக்கணக்கில் படுத்துக் கிடக்கிறாள். அப்போது கோபாலியின் உறவுக்காரப் பையன் 18 வயது பட்டாபியோடு உறவு கொள்கிறாள். 18 வயதாக இருந்தாலும் அவள் உடலுக்கும் மனதுக்கும் சமமானவனாக இருக்கிறான் அவன். அவன் அவளை உண்மையாக நேசிக்கிறான். திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறான். அவனைப் பற்றி அம்மணி நினைக்கிறாள்: ‘அவன் நாக்கில் இல்லை நான். அவன் கையில் செய்கிற வேலையில் இருந்தேன். காலால் ஓடுகிற ஓட்டத்தில் இருந்தேன். அவன் பண்ணுகிற சமையலின் ருசியில் இருந்தேன். சுந்தரம் மாதிரி நலுக்கு மினுக்கு ஆசாமிகளிடம் அவன் காட்டுகிற மௌன முரட்டுத்தனத்தில் இருந்தேன். இன்ஃபுளூன்ஸா வந்து கிடந்தால், என்னமோ நான் சாகக் கிடக்கிற மாதிரி என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவன் மாட்டுமுழி நிறைய கிலேசத்தைச் சுமந்து எங்கோ சூன்யத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கிற வெறிப்பில் இருந்தேன். அவன் வாங்கிக் கொண்டு வருகின்ற பூவில் இருந்தேன். என் புடவைகளை மடித்து வைக்கிற கரிசனத்திலும் நறுவிசிலும் இருந்தேன்.’
அப்படிப்பட்ட பட்டாபியிடமும் கூட திருமணம் வேண்டாம் என்றே சொல்கிறாள் அம்மணி. ‘கலியாணம் நாகரிகம் பெற்றதாகச் சொல்லிக் கொள்பவர்களின் மௌட்யம் – இல்லாவிட்டால் சூழ்ச்சி – இல்லாவிட்டால் தவறு – இல்லாவிட்டால் கழுத்துப் பட்டி – இல்லாவிட்டால் தடுமாற்றம் – இல்லாவிட்டால் போதை – இல்லாவிட்டால் தன்னையே சாட்டையால் ரத்தவிளாராக அடித்துக் கொள்ளும் கல்லுளிமங்கத்தனம் – இல்லாவிட்டால் அவர்களே தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுகிற கடவுள் என்ற இயற்கைக்குத் துரோகம் – இல்லாவிட்டால் துடைநடுங்கித்தனம்…’ இப்படி போய்க்கொண்டே இருக்கிறது அம்மணியின் வாதம்.
மணமாகாத பெண் என்பதால் எல்லா ஆண்களுமே அவளைத் துருவித் துருவிப் பார்க்கிறார்கள். ‘பிறந்த மேனிக்குப் பார்க்கிற வெறி. ஆனால் வெவ்வேறு வடிவம். புகையும் வடிவம். குமைகிற வடிவம். கொழுந்து விட்டு எரிகிற வடிவம். எப்பொழுது எப்பொழுது என்று பரக்கிற வடிவம். எத்தனை காலமானாலும் காத்திருக்கிறேன் என்று பொறுமையே வடிவான வடிவம்.’ கல்லூரிப் படிப்போடு நாட்டியமும் கற்றுக் கொண்டு பிரபல நாட்டியக்காரியாகவும் ஆகிறாள் அம்மணி.
கோபாலிக்கு அவளுடைய வாழ்க்கை முறையில் இஷ்டமில்லாவிட்டாலும் ஒன்றும் கேட்பதில்லை. எப்போதாவது சீண்டிப் பார்ப்பதோடு சரி. அப்போது அம்மணி நினைக்கிறாள். அதற்கு (கோபாலியை எப்போதும் அவள் அது இது என்றே பிரியத்துடன் நினைக்கிறாள்) என்ன புரிந்துவிடப் போகிறது? இந்த உலகத்தில் அத்தனை ஆண்களுக்கும் ஒரு கணமாவது மனைவியைப் போல இருந்து விட வேண்டும் என்று எனக்கு ஆசை என்று சொன்னால் அதற்கு என்ன புரிந்து விடப் போகிறது? நான் அதை வாயை விட்டுச் சொன்னால், பதில் என்று ஏதோ கிண்டலாகச் சொல்லப் போகிறது. கிண்டல் பண்ணுகிறவர்கள், புரியாததால்தான் கிண்டல் செய்கிறார்கள். ‘ப்ளாரின், லட்விக், ஐவன், பீனே, கயோவானி, பர்வேனு- என்று அந்த இளைஞர்கள் பெயர்களை அடுக்கினால் அதற்குக் கோபம் வரலாம். அல்லது என்னைக் கல்லுரல் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சிரிக்கவோ, பரிதாபமோ படலாம். ஜாடைமாடையாக ஒருதடவை அப்படிச் சொல்லவும் சொல்லியிருக்கிறது. நாராயணசாமி என்று அவர்கள் கிராமத்தில் ஒரு மனிதராம். அவர் மனைவியிடம் இரவுபகல் தெரியாமல் அடைந்து கிடப்பதைப் பார்த்து, நாராயணசாமியின் வீட்டோடு கிடந்த ஒற்றைக்கண் கூனல் அத்தைக் கிழம் சொல்லிற்றாம், ‘ஏண்டிம்மா உனக்குத்தான் கொஞ்சம் கோபம் சுரணை இருக்க வாண்டாமோ? என்னன்னு நினைச்சுண்டே-தோல்னு எண்ணமா, கல்லோரல்னு எண்ணமான்னு கேட்டா, பேசாம, வயலுக்குப் போய் வேலையையாவது கவனிப்பானோல்லியோ?’ என்று கடிந்து கொண்டாளாம். என்னமோ ஊர்க்கதை சொல்வதுபோல் இதை என்னிடம் சொல்லிற்று கோபாலி… நான் நடந்ததைச் சொன்னால் உடம்பு, வியாதி என்று ஏதாவது ஆரம்பித்திருக்கும்.’
திருமணத்தை மறுதலித்து பாலியல் சுதந்திரம் பேசுபவளாக இருந்தாலும் அம்மணியின் வீட்டு அழகான பணிப்பெண்ணின் மீது அவளுடைய இரண்டு நண்பர்கள் தவறாகப் பார்த்தார்கள், அம்மணி இல்லாதபோது அவள் இல்லை என்று தெரிந்தும் போனார்கள் என்று அவளுக்குத் தெரிய வருகிறபோது அந்த நண்பர்களைத் தன் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று கண்டித்து விடுகிறாள்.
அடிக்கடி வெளிநாடு போகிறாள். வெளிநாட்டில் பணம் தீர்ந்து போனால் இரவு நேரத்தில் சாலையில் நின்று விபச்சாரம் செய்கிறாள். அதில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. (தி.ஜா. பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். அந்த அனுபவங்களெல்லாம் இந்த நாவலில் தெரிகிறது.) ஒருமுறை லண்டன் பிக்காடிலி சதுக்கத்தில் ‘இரவு ராணி’ போல் நிற்கும் போது ப்ரூஸ் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள் அம்மணி. அவன் தான் அவளுடைய வாழ்க்கை கானல் நீரைத் தேடும் அபத்த விளையாட்டு என்பதை அவளுக்கு உணர்த்துகிறான். ‘அறுநூறு ஆண்களுக்கு மேல் முத்தமிட்டிருக்கிறேன்; அதில் பாதி பேரோடாவது படுத்திருக்கிறேன் என்கிறாய். சரி, முந்நூறு பேர் கொடுக்காததை முந்நூற்றோராவது ஆள் கொடுத்து விடப் போகிறானா? அதிபோகத்தினால் உன் கன்ன எலும்புக்கு மேல் சதை தடித்திருக்கிறதே - அதுவும் பெரிய தடிப்பாக ஆகி உனக்கு நானும் ஒரு அறிவுதான் என்று ஆச்வாசப்படுத்தப் போகிறதா?’
அம்மணியும் ப்ரூஸும் நண்பர்களாகி பல ஊர்களுக்குச் செல்கிறார்கள். ஒருநாள் ப்ரூஸிடம் சொல்கிறாள். ‘கி.மு. பன்னிரண்டாயிரம் அல்லது கி.மு. இருபதினாயிரம் அல்லது கி.மு. முப்பதாயிரமாவது ஆண்டு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் மேலே இருந்தார்கள். மேலே இருந்து அன்பு செய்தார்கள். நீங்கள் அதை வாங்கிக் கொண்டீர்கள். மல்லாந்து கிடந்தீர்கள். நாங்கள்தான் மேல் என்று ஒப்புக்கொண்டு கையாலாகாமல் கிடந்தீர்கள். பிறகு ஏழெட்டு சோம்பேறிப் பெண்கள் இடம் மாற்றிக் கொண்டார்கள். விறகு வெட்டி, தீனி தேடிக்கொண்டு வருகிறவன் இதையும்தான் செய்யட்டுமே என்று சோம்பல் அடித்தார்கள். தொற்றுநோய் பரவி விட்டது. இப்போது மீண்டும் மேலே போக வேண்டும். அப்போது எல்லாம் சரியாகிவிடும். நீ வியட்நாமுக்குப் போக மாட்டாய். குண்டு விழாது. எச்சில் விழாது. (ஒரு வியட்நாம்காரி ப்ரூஸின் முகத்தில் காறி உமிழ்ந்திருப்பாள். அதனால் அவன் பித்துப் பிடித்தவன் போல் ஆகி விடுகிறான்.) இதெல்லாம் அசக்தியால் வருகிறது. எங்கள் ஊரில் பதினாயிரம் வருஷம் முன்னால் பெண்ணை சக்தி என்றார்கள். அவள் சிங்கத்தின் மீது உட்கார்ந்திருந்தாள். நீங்கள் எல்லாம் எருமையாகக் கீழே கிடந்தீர்கள். இப்போது அந்த சக்தி அசக்தியாகி விட்டாள். அவளுக்கு அடிக்கடி அந்த கி.மு. ஞாபகம் வருகிறது. அதற்காக வருஷத்தில் ஒரு ஒன்பது நாள் அவள் சிங்கத்தின் மீது இருக்கிற மாதிரி படம் போட்டு, சாப்பாடு போட்டு, பத்தாம் நாள் அன்று படத்தை அழித்து விடுகிறார்கள். பொம்மையாக இருந்தால் ஆறு குளத்தில் போட்டு விடுகிறார்கள், இன்னும் ஒரு வருஷத்திற்கு வாயைத் திறக்காதே என்று.’
கடைசியில் அவளுடைய வாழ்க்கை முறை ப்ரூஸ் கேட்ட ஒரு கேள்வியில் தோற்றுவிடுகிறது. ஏற்கனவே ஒரு ஆங்கிலேயர் அவளிடம் இதை வேறு மாதிரிக் கேட்டிருக்கிறார். ‘உடம்பெல்லாம் அழுகிச் சொட்டுகிற ஒரு மனிதனிடம் இதே மாதிரி நீங்கள் செய்வீர்களா?’ என்று அவர் கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த ஆங்கிலேயர் அப்போது சொல்கிறார். ‘நீங்கள் எல்லோரையும் அணைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னபோது வாசல் திறக்கிற மாதிரி இருந்தது; ஆனால் நல்ல உடம்புகளுக்குத்தான் அந்த உரிமை உண்டு என்று நீங்கள் டிக்கட் வைத்த பிறகு வாசல் மூடி விட்டது.’
ப்ரூஸ் கேட்ட கேள்வி இதுதான். வயதான பிறகு, தோலெல்லாம் சுருங்கிய பிறகு என்ன செய்வாய்? உன் தனிமை அப்போது உன்னைக் கொன்று விடாதா?
இதுபற்றி யோசித்துக்கொண்டு இந்தியா திரும்பும்போது அவளுடைய பணிப்பெண்ணும் தோழியுமான மரகதத்தை கோபாலி தீண்ட முயற்சித்து, அவளும் அவள் கணவனும் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதைப் பார்க்கிறாள். அவர்களோடு அம்மணியும் வெளியேறி விடுகிறாள். பட்டாபியோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறாள்.
இந்த நாவலைத் தமிழ்ச் சமூகம் நிராகரித்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி நிராகரித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். எண்பதுகளின் ஆரம்பம் அது. கோபாலி எந்தப் பெண்ணைக் கண்டாலும் அழகாக இருந்தால் படுக்க முயற்சி செய்வார். பல சமயங்களில் வெற்றியும் காண்பார். (கடவுளே நேரில் வந்து பாடுவது போன்ற சங்கீதம். எண்பது வயதான ஒரு பாட்டி அவர் காலில் விழுந்து சேவிக்கிறார். அப்பேர்ப்பட்ட சங்கீத சாம்ராட்.) அப்படி கண்ட பெண்களோடும் உறவு கொள்ள நினைக்கும் கோபாலி பற்றி யாருக்கும் – எனக்கு உட்பட – ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் அம்மணி என்ற ஒரு பெண் அதையே செய்யும் போது ஆபாசம் ஆபாசம் என்ற கூச்சல் ஏற்பட்டு விட்டது.
இந்த அம்மணியைப் போல் ஒரு அமெரிக்கப் பெண் வாழ்ந்தாள். ஒரு சமயம் ஆசிரியையாகவும் ஒரு சமயம் live show performer-ஆகவும் இன்னும் பலவிதமாகவும் வாழ்ந்திருக்கிறாள். ‘ஸீரோ டிகிரி’ என்ற என்னுடைய நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவளுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன். கேத்தி ஆக்கர் என்பது அவள் பெயர். அப்படிப்பட்ட நானே ‘மரப்பசு’வைத் தாக்கி எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது நினைத்து அவமானம் அடைகிறேன். இந்த நாவலைப் புரிந்து கொள்ள 35 ஆண்டுகள் ஆயிற்றா என்று மலைப்பாக இருக்கிறது. ஆனால் மிகவும் சௌகர்யமாக தி.ஜா. என்றால் ‘மோகமுள்’ என்றே சொல்லிப் பழகி விட்டோம். லண்டன் பிக்காடில்லி சதுக்கத்தில் வேசியாக நின்ற அம்மணி நம்முடைய ஆணாதிக்கச் சிந்தனைக்கும், சனாதன மதிப்பீடுகளுக்கும் சாட்டையடியாக இருப்பதால்.
தமிழில் பெண்ணியவாதிகள் என்று அறியப்படுகின்ற அத்தனை பேரும் – ஏன் பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் ‘மரப்பசு’. மற்றபடி இயற்கை உபாசனை மிக இயல்பாக நாவல் முழுவதிலும் விரவிக் கிடக்கிறது. அதுபற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். அதேபோல் தி.ஜா.வின் பயண நூல்கள். எழுத ஏராளமாக இருக்கிறது. ‘செம்பருத்தி’யில் ஒரு இடம் வரும்.
‘மனுஷங்க போயிட்டேதான் இருக்காங்க. அதுக்காக மத்தவங்க எல்லாரும் தாங்களும் போயிட்டாப்பலவே இருக்கிறதா?’
‘பெரிய அண்ணன் சொல்வது ஏதோ பெரிய ஞானியின் வாக்குப் போலிருந்தது. அந்த இருளில் அந்தப் பரந்த வெளியைப் பார்க்கும்போது, ஆயிரக்கணக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும் சிள்வண்டுகளையும் சுவர்க் கோழிகளையும் கேட்கும்பொழுது, அவர் சொல்வது இயற்கையின் வாக்கு, தொல்லறிவின் வாக்கு என்று அத்தனையும் சொல்வது போலிருக்கிறது. இந்தச் சாலை இப்படியே இருக்கும்; இந்த மண் இப்படியே இருக்கும்; இந்த மரங்கள் இப்படியே இருக்கும்; இந்த ஒலிகள் எழுந்துகொண்டே இருக்கும்; உயிர்கள் வரும்போது ஒலிப்பதுபோல் போகும்போதும் ஒலிக்கும்.’
எத்தனை எழுத்தாளர்கள் வந்தாலும் போனாலும் இந்த வானும் மண்ணும் இருப்பது போல் தி.ஜா.வின் எழுத்து இருந்துகொண்டே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

