சம்பத் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தேடியபோது அழியாச்சுடர் இணைய இதழில் கீழ்க்காணும் விபரங்கள் கிடைத்தன:
‘சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத் 1941-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார், டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். எனவே சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள். சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னையில் பல நிறுவனங்களில் வேலை செய்த சம்பத் கடைசியில் பெரியமேடு பகுதியில் உள்ள தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராகப் பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். ’
1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். இன்றளவும் அப்படியே அறியப்படுகிறார். இவ்வளவுக்கும் இடைவெளி, க்ரியா பதிப்பகத்தின் வெளியீடாக வருவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்பு மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார் சம்பத். இன்னொரு துயரகரமான ஆச்சரியம் என்னவென்றால், இடைவெளி என்ற அந்த சிறிய நாவல் மரணத்தைப் பற்றி விவாதிக்கிறது. மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் கூட சம்பத் பெரும்பாலும் மரணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்திருக்கிறார். இன்னொன்று, அவர் சாகும் போது அவருடைய ஒரு நூல் கூட வெளிவந்திருக்கவில்லை.
கிளாஸிக் என்ற பதத்துக்கு காலத்தைக் கடந்த கலைப் படைப்பு என்றும் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்ற படைப்பு என்றும் பொருள் கொள்ளலாம். மஹாபாரதம் அப்படிப்பட்ட ஒரு கிளாஸிக். உலகின் ஆகப் பெரிய காவியம். அதேபோல் உலகிலேயே மிகச் சிறிதாக எழுதப்பட்ட ஒரு கிளாஸிக் உண்டென்றால் அது சம்பத் எழுதிய இடைவெளி என்று தயக்கமில்லாமல் கூறலாம். சென்ற வாரக் கட்டுரையில் ஜான் ஜெனே, முகமது ஷுக்ரி, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஆகியோரை விட ஆ. மாதவன் சிறந்த எழுத்தாளர் என்று நான் கூறியதற்குக் காரணம், மூவரும் தங்களுடைய சொந்த அனுபவத்தை எழுதினார்கள்; மாதவனோ மற்றவர்களின் அனுபவத்தை எழுதினார் என்பது. ஏனென்றால், தன்னுடைய வேதனையை எழுதுவதை விட அடுத்தவரின் வேதனையை எழுதுவதே கடினம். ஆனால் அதே காரணத்தினால்தான் – அதாவது, மற்றவர்களின் அனுபவத்தை எழுதாமல் தன்னுடைய அனுபவத்தையே எழுதியதால் சம்பத் சுயசரிதைத்தன்மை கொண்ட genre-ல் எழுதிய மற்றவர்களை விடவும் சிறந்து விளங்குகிறார்.

ஏனென்றால், சம்பத் எழுதிய அனுபவம், மரணம். வேறு யாருடைய மரணமோ அல்ல; அவருடைய மரணம். தன்னுடைய மரணத்தையே அணுஅணுவாக வாழ்ந்து, அதனோடு உரையாடி, தர்க்கித்து, பிணங்கி, பயந்து, மோதி, சரணடைந்து அந்த அனுபவத்தை எல்லாம் தொகுத்து ஒரு மகத்தான கலைப்படைப்பாக உருவாக்கியிருக்கிறார் சம்பத். மரணத்துடனான அவரது உரையாடல் முடியும் தருணத்தில் - இடைவெளி நாவலின் அச்சுப் பிரதியில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் – சம்பத் மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார். அந்த வகையில் சம்பத்தின் இடைவெளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் ஆல்பெர் கம்யூவின் அந்நியனை விட உலக அளவில் பெரிதும் பேசப்படும்.
வெங்கட் சாமிநாதன் கூறுவது போல் சம்பத் இறப்பதற்குச் சற்று முன் எழுதிய மரண சாசனம்தான் இடைவெளி. அல்லது, மரணத்தைப் பற்றிய ஒரு தத்துவ விசாரணை. சம்பத் பற்றி யோசிக்கும்போது ஆதவனைப் பற்றிய நினைவையும் தடுக்க முடியவில்லை. இருவரும் தில்லியில் வளர்ந்தவர்கள். இருவருமே தென்னிந்தியாவுக்கு வந்த பின் இளமையிலேயே இறந்து போனார்கள். ஆதவன் 1987-ல், 45 வயதில் ஒரு விபத்தில் இறந்தார். இருவருக்குமான இன்னொரு ஒற்றுமை, சம்பத்தும் ஆதவனும் தில்லியில் கல்லூரியில் படிக்கும்போது இந்திரா பார்த்தசாரதியின் மாணவர்கள்.
இடைவெளியின் கதை இதுதான்: சென்னையில் உள்ள பெரியமேட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் சுமார் 35 வயது தினகரன் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவன். (சம்பத்தும் அதே இடத்தில் அதே நிறுவனத்தில் அதே வேலைதான் செய்தார்.) தினகரனுக்குப் பிடித்த எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. (சம்பத்தின் ஆதர்ச எழுத்தாளரும் அவரே.) தஸ்தயேவ்ஸ்கியைப் போலவே தினசரிகளில் வரும் கொலை வழக்குகளை ஈடுபாட்டுடன் வாசிக்கிறான் தினகரன். அவரைப் போலவே சூதாடுகிறான். (சம்பத்தும் ரேஸுக்குப் போய் மனைவி மற்றும் உறவினரின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார். பிழை திருத்தம் செய்வதற்காக க்ரியா அலுவலகத்துக்குப் போகும்போது அவருடைய சட்டைப் பாக்கெட்டில் ஏகப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் இருக்கும் என்று எழுதுகிறார் சி. மோகன்.) தினகரனின் மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெயஸ்ரீ. (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களும் இவையே.) நாவல் முழுக்கவும் சம்பத், அதாவது தினகரன், ‘அடிப்படைகள்’ குறித்து – அதாவது மரணம் குறித்து - செய்யும் தத்துவ விசாரணையை அவனைச் சுற்றியிருந்தவர்கள் எப்படி மனநோயாகப் பார்த்தார்கள் என்பதை விவரித்துக் கொண்டே போகிறார் சம்பத். அந்த விவரணைகளுக்கும் அசோகமித்திரன் சம்பத் பற்றி எழுதியுள்ள ஒரு உண்மைச் சம்பவத்துக்கும் அதிசயிக்கத்தக்க ஒற்றுமை உள்ளது.
சம்பத் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைத் தலைப்பு ‘பஸ் அடியில் விழவா?’ ஒருநாள் காலை வேளையில் சம்பத்தின் மனைவி பத்மா தன்னுடைய இரண்டு சிறு குழந்தைகளையும் (ஒரு குழந்தைக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது) அழைத்துக் கொண்டு அசோகமித்திரனின் வீட்டுக்குப் போய் அவர் காலில் விழுகிறார். அதைக் கண்டு பதறிப் போகிறார் அசோகமித்திரன். ‘எனக்குப் பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்கிறார் அந்தப் பெண். ‘அவர் (சம்பத்) ஏதாவது செய்து கொண்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.’ அந்தச் சமயத்தில்தான் அசோகமித்திரனின் மூத்த சகோதரி மயக்கம் போட்டு விழுந்து வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அசோகமித்திரன் எழுதுகிறார். ‘நிலைமை மிகவும் நெருக்கடி. நான் மயக்கம் போட்டு விழக் கூடாது. பணம் வேண்டும்.’ (அசோகமித்திரன் ஏன் உலகின் முதல்தரமான எழுத்தாளராக அறியப்பட வேண்டியவர் என்று நான் சொல்வதன் காரணம் இதுதான். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் black humour-ஆக மாற்றும் கலையில் வித்தகர்.) அன்றைய தினமே அசோகமித்திரன் எழுதி அச்சேற வேண்டிய ஒரு கட்டுரை வேறு எழுதப்படாமல் இருக்கிறது. அப்போது மருத்துவமனைக்கு வரும் சம்பத் அசோகமித்திரனை காஃபி சாப்பிட வெளியே அழைக்கிறார். தான் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதைச் சொல்கிறார் அசோகமித்திரன். ம்ஹும். சம்பத் அதைக் கேட்கத் தயாராக இல்லை. இருவரும் காஃபி ஹவுஸ் செல்கிறார்கள். (அப்போது அசோகமித்திரன் தி. நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள தாமோதர ரெட்டி தெருவில் - இப்போது தாமோதரன் தெரு - வசித்து வந்தார். அவர் வீட்டிலிருந்து கொஞ்சம் நடந்தால் இண்டியன் காஃபி ஹவுஸ் வரும்.) அந்த காஃபி ஹவுஸில் அசோகமித்திரனுக்கும் சம்பத்துக்கும் நடந்த உரையாடல்:
‘சீக்கிரம். அங்கே என் அக்கா தனியாக நினைவில்லாமல் இருக்கிறாள்.’
‘எனக்குக் கொடுங்கள்.’
‘எதை?’
‘உங்கள் மந்திர சக்தி.’
“என்ன, என்ன, என்ன?’
‘உங்கள் மந்திர சக்தி. அதோ அந்த பஸ் அடியில் விழட்டுமா?’
‘என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே? மந்திரமாவது, தந்திரமாவது. நான் ஒவ்வொரு ரூபாய்க்கும் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.’
‘அந்த பஸ் முன்னால் விழட்டுமா?’
‘நீ எது முன்னாலும் விழ வேண்டாம். என்னைப் பார்த்தால் மந்திர சக்தி இருக்கிற மாதிரியாகவா இருக்கிறது?’
இண்டியா காஃபி ஹவுஸை ஒட்டியபடி உள்ள பர்க்கிட் சாலையில் நிமிடத்துக்கு ஏழெட்டு பஸ்கள் போய்க் கொண்டிருக்கும். சம்பத் பஸ் அடியில் விழ பத்து விநாடிதான் தேவை. ‘ஆளை விடு; என் அக்கா அங்கே சாகக் கிடக்கிறாள்’ என்று சொல்லியபடி காஃபியைக் குடித்தவாறே வெளியே ஓடுகிறார் அசோகமித்திரன். ஒரு வாரம் கழித்து சம்பத்தைத் தன் தெரு அருகே பார்க்கிறார். ‘என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே போய் விட்டான்,’ என்று எழுதுகிறார் அசோகமித்திரன்.
அசோகமித்திரன் மந்திரவாதியாகிய கதை என்னவென்றால், சம்பத்தின் மிக நெருங்கிய நண்பர் ஐராவதம். இருவரும் சில கதைகளைக் கூட சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஐராவதத்திடம் சம்பத், அசோகமித்திரன் சாமியார் கதையெல்லாம் எழுதியிருக்கிறாரே; எப்படி எழுதினார் என்று கேட்க, ஐராவதம்தான் ‘ஒருவேளை அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியாகத்தான் சம்பத்துக்கும் அவர் மனைவிக்கும் அசோகமித்திரன் மந்திரவாதியாகத் தெரிந்திருக்கிறார்!
மீண்டும் இடைவெளிக்கு வருவோம். ஒருநாள் மாலையில் தனது வழக்கமான மரண ஆராய்ச்சியின் ‘களப் பணி’களில் ஒன்றாக, மெரினா கடற்கரையில் உடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு வெறும் ஜட்டியுடன் அலைகள் உடலைத் தழுவப் படுத்துக் கொண்டு மரணத்தைப் பற்றி வாய் விட்டு யோசித்துக் கொண்டிருக்கிறான் தினகரன். மரணத்தைப் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒன்றைத் தன்னால் சொல்லி விட முடியும் என்றும் நம்புகிறான். அப்போது அந்தக் கடல் மணல்கள் மனித இனத்தை விடப் பன்மடங்கு சக்தி கொண்டது என்றும், அதற்கும் தனக்கும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் சம்பந்தம் உண்டு என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உடனே எழுந்து முழங்காலைக் குத்திட்டு உட்கார்ந்து கொண்டு மணலை கோபுரம் போல் குவிக்க ஆரம்பிக்கிறான்.
மற்றொரு நாள் தினகரனின் பெரியப்பா சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் அவனைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வருகிறது. பெரியப்பாவின் அருகில் இருந்தால் மரணம் சம்பவிப்பதை நேரடியாக அனுபவம் கொண்டு விடலாம் என்று எண்ணி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள அவர் வீட்டுக்குக் கிளம்புகிறான். இடையில் புகாரி ஓட்டலில் டீ குடிக்கச் செல்கிறான். அப்போது மரணம் பற்றிய விசாரணை குறுக்கிடுகிறது. அப்படிச் சொல்வது கூட தவறு. எப்போதும் அவன் நினைவை விட்டு அகலாதபடி இருக்கும் அந்த விசாரணை, அப்போது ஒரு புதுவிதப் பாதையை எடுக்கிறது. எண்ண ஓட்டங்களும் தர்க்கங்களும் பிய்த்துக் கொண்டு போகின்றன. அதில் ஒரு பாதைதான் Probability theory. ஹென்றி ஷாரியர் எழுதிய பட்டாம்பூச்சி நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் ஒரு தீவிலிருந்து அவன் தப்பிக்கும் போது இந்த Probability theory தான் உதவுகிறது. யாருமற்ற தீவு அது. கீழே பெரும் ஆழத்தில் பாறைகளோடு கூடிய கடல். விழுந்தால் எலும்பு மிஞ்சாது. மேலேயிருந்து பாறைகளில் மோதும் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு ஒருநாள் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகுதான் அலையானது பாறையின் மீது மோதுகிறது. இடையில் உருவாகும் அலைகள் பாறையில் மோதுவதில்லை. உதாரணமாக ஏழாவது அலை மோதுகிறது என்று வைத்துக் கொண்டால், ஆறு அலைகள் பாறையில் மோதுவதில்லை. அந்த ஆறு அலைகள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு மேலிருந்து குதித்துத் தப்பி விடுகிறான் ஷாரியர்.
மரணத்துக்கும் இந்தக் கணித உண்மைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது தினகரனுக்கு. அதனால்தான் அவன் ரேஸுக்குப் போகிறான். படச் சீட்டு சூது ஆடுகிறான்.
‘மனதில் தோன்றும் இம்மாதிரியான விஷயங்கள் ஹேஷ்ய ஸ்வரூபம் கொண்டதாக உள்ளதை நிர்ணயிக்க, முக்கியமாக அர்த்த ரீதியில் அவை தங்கிவிட வேறு ஏதாவது யுக்தியைக் கையாள வேண்டும் என்று அவருக்குப் பட்டது. அதாவது ஹேஷ்யங்கள் மனதில் தோன்றி வலுவடைய, நிஜம் அல்லது பொய் என்கிற நிரூபணம் கிடைத்துக் கொண்டிருந்தால், ஹேஷ்யங்கள் தம் கதியில் தன்னில் தங்கும் என்று நினைத்தார். இதற்காக அடிக்கடி குதிரைப் பந்தயத்திற்குப் போகலாம் என்று பட்டது. ஆனால் அதற்கு ஏகப்பட்ட பணம் தேவையாக இருந்தது…
இந்த நிலையில்தான் அவர் மூர் மார்க்கெட் எதிரில் இருக்கும் ஒரு சூதாட்டக் கிடங்கைப் பார்த்தார். நின்ற படிக்கே தலைகள் குனிந்து, வரைந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய ரப்பர் துணியில் ஆறு படங்கள் வரையப்பட்டு இருந்தன. அவர் நின்ற இடத்துக்கு நேர்கோடியில் ஒட்டகப் படம். அதற்குப் பூஜை போட்டு வாழைப்பழத்தில் எரியும் ஊதுபத்தி செருகப்பட்டிருக்கும். அங்கே எப்போதும் கூட்டம் இருப்பதை அவர் கண்டிருக்கிறார். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை அங்கே கூட்டம் இருக்கும்…
‘தாட்’டின் முன் உட்கார்ந்திருப்பவன் இவ்வாறு கூவுகிறான். ‘மோசடி, ட்ரிக்ஸ் கிடையாது சார். நீங்களே வைக்கலாம். நீங்களே பிரிக்கலாம். உள்ளேயிருந்து எடுக்கும் கவர்ல என்ன இருக்குன்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. வை. இன்னும் வை… அண்ணன் வச்சா தம்பி வைக்கக் கூடாதுன்னு இல்லே. வை. யாரு வேணும்னாலும் வைக்கலாம். ஆனா ஒரு கட்டத்திலே பத்து ரூபா தான் வைக்கணும். அதுக்கு மேலே வைச்சுடாதீங்க… பத்து ரூபா லிமிட். நேர்த்துப் பாருங்கோ ஒரு சேட்டுப் பையன் பத்து பத்தா ஆறு பத்து மடிச்சு வைச்சான். அந்த மாதிரி பண்ணாதீங்கோ, நமக்குத் தாங்காது. வைச்சாச்சா… எடுக்கலாமா… ஏன் பெட்டியப் பெட்டியப் பாக்குறீங்க. பெட்டிக்குள்ளே என்ன இருக்கு… ஒரு கோழி முட்டை, ஒரு பாம்பு இருக்கு. பசிச்சுதுன்னா பாம்பு கோழி முட்டையைத் தின்னும். அவ்வளவுதான். தாட்ல போடு பணத்தை… ம்… வச்சாச்சா…’ பெட்டியைத் திறக்கிறான். பெட்டிக்குள்ளே நிறைய பழுப்பு நிறக் காகித உறைகள் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி வரிசையாய் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து தன் பக்கமாக உள்ள முதல் உறையை எடுக்கிறான். படங்களின் நடுவே மீண்டும் அந்த உறையைப் போட்டு விட்டு மீண்டும் பேசுகிறான். இப்பக் கூட பத்து ரூபா இனாம் தர்றேன். இதிலே இருக்கும் படம் என்னன்னு சொல்லிட்டா… காசு போடு… (வெறி பிடித்துக் கத்துகிறான்) காசு போடு… காசு கொடுத்தா தாசி, காசு இல்லே தாசி இல்லே… போடு, பிரிக்கப் போறேன்.’ ஒரு ஆக்ரோஷத்துடன் உறையைப் பிரிக்கிறான். மூன்று ஒட்டகப்படம் தெரிகிறது. ரப்பர் துணியில் ஒரு ஆள் நாலரை ரூபாய் போட்டிருக்கிறான். அவனுக்கு அத்துடன் 13.50 சேர்த்துத் தரப்படுகிறது. குதிரையில் கிட்டத்தட்ட பத்து ரூபாய் இருக்கிறது. புலியில் நூறு ரூபாய் சில்லரை தேறும்.
தினகரன் இப்போது மீண்டும் ஒட்டகம் வராது என நம்பி மானில் எட்டணா போடுகிறார். சிறிது நேரம் செல்கிறது உறையைப் பிரிக்க. மீண்டும் ஒட்டகமே வருகிறது. குதிரையில் எட்டணா போட்டார். மயில் வந்தது. யானையில் எட்டணா போட்டார். மீண்டும் ஒட்டகமே வந்தது.
அவருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. ‘இது என்னடா கூத்து’ என்று சொல்லிக் கொண்டார். வரும் படத்தை எப்படி நிர்ணயிப்பது? அவருக்கு ஒன்று மட்டும் பட ஆரம்பித்தது. இதில் தொடர்ந்து அவர் சரியாகச் சொன்னால், சாவு விஷயத்தைப் பற்றி எண்ணுவதில் ஒரு தொடர்ச்சியும், அந்தத் தொடர்பில் உருவாகும் இணைப்புச் சக்தியும் கண்களுக்கு, மனக் கண்களுக்கு புலப்படும் என்று அவர் நம்பினார். அன்றிலிருந்து அவர் தினமும் மாலை அங்கே போக ஆரம்பித்தார். அவர் விளையாடிய வேகத்தில் ஒரு வாரத்திற்குள் 117 ரூபாய் தோற்று விட்டார். இதனாலெல்லாம் சொல்ல முடியாத தொல்லை. அந்தப் பணம் போய் பால் கணக்கிலிருந்து குழந்தைகளின் பள்ளிக்கூடக் கட்டணம் வரை உதைத்தது. இருபது நாட்களில் மூன்று மாத சம்பளம் போயிற்று. ஆனால் ஒன்று, அந்தக் கவர்கள் பிரிக்கும் முறையில் ஒரு சித்தாந்தம் தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒருநாள் தற்செயலாக இல்லாமல், முழுமையாக, சித்தாந்த அடிப்படையில் அந்தக் கூட்டத்தை மொத்தம் பத்து தடவைகள் ஜெயித்து, அந்த உலகம் தனக்குப் பிடிபட்டு விட்டது என்கிற நிலையில் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்திலிருந்து விடுதலை அடைவது என்று தீர்மானித்துக் கொண்டார்.’
பிறகு தினகரனுக்கு அந்த இடத்தில் ராஜ உபசாரம் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருநாள் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்தின் சூட்சுமத்தைத் (Probability) தெரிந்து கொண்டு அந்த ஆளை போண்டி செய்து விடுகிறான் தினகரன். பிரபஞ்ச லயத்துக்கும் சூதுக்கும் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொண்டு அவனை வென்ற பிறகு அவன் அங்கே போவதை நிறுத்திக் கொண்டு விடுகிறான்.

இப்போது மீண்டும் நாம் மரணப் படுக்கையில் கிடக்கும் தன் பெரியப்பாவைப் பார்க்கக் கிளம்பிய தினகரன் இடையில் புகாரி ஓட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இடத்துக்கு வருவோம். தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது மீண்டும் அவனுக்குப் பிரபஞ்ச லயம் பற்றியும் மரணம் பற்றியுமான சிந்தனை வருகிறது. ஒரு நாணயத்தை எடுத்துச் சுண்டி சுற்ற வைக்கிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும்… மீண்டும்…மீண்டும்… ‘வெளி’யில் – அதாவது பிரபஞ்சத்தில் ஒரு திட்டமிட்ட லயம் இருக்கிறது. அந்தத் திட்டமிட்ட லயத்துக்கும் இந்தப் பூவா தலையாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சுண்டுகிறான். பூவா, தலையா? சுண்டுகிறான். பூவா, தலையா? அப்போது அவனிடம் வரும் சர்வர் சொல்கிறான்: ‘நீங்கள் ஒருமணி நேரமாக இந்தக் காயினை சுண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் உங்களையே பார்க்கிறார்கள்.’
வெறும் நூறு பக்கங்களே உள்ள இந்த இடைவெளி என்ற நாவலைப் படிக்க எனக்கு ஒரு வார காலம் ஆயிற்று. அதுவும் உறங்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் இத்தனை சிறிய நாவலைப் படிக்க இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டதில்லை. காரணம், ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் படித்த அத்தனை நூறு நாவல்களிலும் இடைவெளியே ஆகச் சிறந்ததாக இருந்தது. வழக்கமாக வாசிப்பதைப் போல் ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் அடுத்த வாக்கியத்தை நோக்கி நகர முடியவில்லை. படித்த வாக்கியம் அதைப் படித்த உடனேயே நம்மை ஒரு மயக்கநிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. புரிய வைப்பதற்காக மயக்க நிலை என்று சொல்கிறேனே தவிர அந்த மனநிலையை என்னால் வார்த்தையால் விளக்க முடியவில்லை. இப்படியே யோசித்து யோசித்து வாசித்து முடிக்க ஒரு வாரம் ஆகி விட்டது.
உலக இலக்கியப் பரப்பில் இதுபோல் ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன். அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பர்ரோஸ் தன்னுடைய ஹெராய்ன் அனுபவங்களை Naked Lunch என்ற நாவலில் எழுதியிருக்கிறார். ஆனால் அதை விட இடைவெளி physical and metaphysical தளங்களில் இன்னும் செறிவானது என்று சொல்லலாம். எனக்கு அப்படித் தோன்றிய உடனேயே தமிழ்ச் சூழலில் இடைவெளி பற்றிய எதிர்வினை எப்படி இருந்தது என்பதைத் தேடினேன். அதில் ஆகச் சிறந்ததாகத் தெரிந்தது, சி. மோகனின் கட்டுரை. (ஆனால் ஒரு காலத்தில் சி. மோகன் சிபாரிசு செய்ததாலேயே இந்த நாவலைப் படிக்காமல் போனேன் என்பதும் இதில் உள்ள ஒரு நகைமுரண்.) சி. மோகன் சொல்கிறார்:
‘பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்ஸை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்ஸின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

