சென்ற வாரத் தொடர்ச்சி:
இடைவெளியை மட்டும் தனியாகப் படிப்பதை விட சம்பத்தின் எல்லாக் கதைகளையும் ஒருசேரப் படித்தால்தான் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இடைவெளிக்கு முந்திய எல்லாக் கதைகளுமே அந்த நாவலின் முந்தைய அத்தியாயங்கள் என்றே கொள்ளத்தக்கன. கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள், விவாதங்கள் என்று எல்லாமே ஒரு நீண்ட நாவலின் பல்வேறு அத்தியாயங்களாகவே தெரிகின்றன. மிக முக்கியமாக, சாமியார் ஜூவுக்குப் போகிறார் என்ற சிறுகதையின் நீட்சிதான் இடைவெளி என்று கொள்ள இடமிருக்கிறது.
தில்லியில் வசிக்கும் தினகரன் தன் மனைவி பத்மாவுடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஜூவுக்குப் போகிறான். அன்றைய தினம் காலையிலிருந்தே பத்மாவுக்கு அவன் மீது தாபம். குழந்தை குமாரைத் தூங்கப் பண்ணி விட்டு தினகரனை அணுகலாம் என்று நினைத்தவளுக்கு குமார் ஜூவுக்குப் போக வேண்டும் என்று கேட்டதும் ஏமாற்றம். தினகரனைக் கவர வேண்டும் என்றே அவனுக்குப் பிடித்த ஜார்ஜெட்டை அணிந்து கொண்டு ‘தாபத்தால் சுடச் சுட முறுகிச் சிவந்த முகத்தோடு’ கிளம்புகிறாள். ஜூவில் அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றி மறைகிறது. ‘இவருக்கு இன்னொருத்தி இருந்திருக்கிறாள்.’ (அந்த இன்னொருத்தியான கல்பனா எல்லாக் கதைகளிலும் வருகிறாள்.) ‘போனால் போகட்டும். இனிமேல் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் போகிறது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள். இருந்தும் அவன் தன்னை அணைத்துக் கொண்டு நீதான் எனக்கு எல்லாம் என்று கதறினால்தான் அவள் மனசு சாந்தமடையும் போலிருந்தது.’
சம்பத் கதைகளின் இரண்டு பிரதான motifகள் மரணமும் செக்ஸும். Le petit mort என்பதற்கு சிறிய மரணம் என்று பொருள். ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ரொலான் பார்த் (Roland Barthes) தான் முதல் முதலில் பாலுறவின் உச்சத்தை ‘சிறிய மரணம்’ என்று குறிப்பிட்டார். பாலுறவுக்கும் மரணத்துக்கும் என்ன சம்பந்தம்? பாலுறவு – உடலின் துய்ப்பு – physical; மரணம் - metaphysical. உடல் மற்றும் உடலின் இல்லாமை. இது பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் George Bataille எழுதிய The Story of the Eye என்ற நாவலைப் படித்துப் பார்க்கலாம். அதன் PDF இணைப்பு:
ஜூவில் பத்மா ஆண் மயில்களைப் பார்க்கிறாள். ‘ஆண் மயிலின் தலை நிமிர்ந்த கர்வம் அவளுக்குப் பிடித்திருந்தது. ஏனோ, முன்னால் மதறாஸில் ஆனந்தில் ‘ஸ்பார்ட்டகஸ்’ படம் பார்க்கும் போது அதில் அடிமைகளைச் சாகும் வரையில் சண்டையிடச் சொல்லி வேடிக்கை பார்க்கும் ராஜ விளையாட்டுக் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒருவித லஜ்ஜையுடன் அந்தக் காட்சிகள் எப்போதும் தனக்குப் பிடித்தமான ஒன்றாகத் திகழுமே ஒழிய ஐயோ பாவம் உணர்ச்சியை எழுப்பாது என்ற தன்மையை இப்போதும் மனதிற்குள் ஒப்புக் கொண்டாள்.’
ஸ்டான்லி குப்ரிக் இயக்கி 1960-ல் வெளிவந்த ஸ்பார்ட்டகஸ் படத்தில் பத்மா குறிப்பிடும் காட்சி மனிதனின் sado-masochistic வேட்கை பற்றிய மிக முக்கியமான சமிக்ஞை. மரணத்துக்கும், கொலைக்கும், காமத்துக்குமான ஆழமான உறவை இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். (ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதையில் இது போன்ற பல காட்சிகள் உண்டு.)
அதைத் தொடர்ந்து பத்மா தனக்கும், ஆண்களை அடியோடு வெறுக்கும் தன் கல்லூரி டீச்சருக்கும் இடையே இருந்த ‘உறவைப்’ பற்றியும் நினைத்துப் பார்க்கிறாள். தினகரனுடனான உறவுக்குப் பிறகுதான் அவளுக்கு டீச்சரோடு சேர்ந்து கொண்டு ஆண்களைத் திட்டியது தவறு என்று புரிகிறது.
ஜூவில் அவ்வப்போது மனைவியைத் திரும்பிப் பார்க்கிறான் தினகரன். அவள் சிரிக்கிறாள். ‘இரு, அவ்வளவு சிரிப்பையும் இரவில் வலியாக, முனகலாக, வேர்வையின் தெப்பக் கடலாக மாற்றுகிறேன் என்று மனதில் சொல்லிக் கொள்கிறான்.’ இந்த இடத்தில் சம்பத் பற்றிய வெங்கட் சாமிநாதனின் கட்டுரை நினைவு வருகிறது. ‘1970-71 வருடங்களில் நானும் சம்பத்தும் அண்டை அயலாராக டில்லி ராமகிருஷ்ணாபுரம் நான்காம் பகுதியில் இருந்திருக்கிறோம்… அவர் வருவார். ‘நான் என்ன சொல்லட்டும் சாமிநாதன். எப்படிச் சொல்றது அதை?’ என்று ஆரம்பித்து கண்களை அகல விரித்து, தலையைச் சிலுப்பி, என்னென்னவோவெல்லாம் அங்கசேஷ்டைகள் செய்து தன் பரவசத்தை வெளிக்காட்ட முயல்வார். அவர் பரவசத்துக்குக் காரணம், முன்னிரவு அவர் பெற்ற தாம்பத்ய உறவு. ‘நான் சொல்றேன்… எனக்கென்ன தோன்றது தெரியுமா சாமிநாதன்? இதுக்கு ஈடு இணை உலகத்திலேயே வேற எதுவுமே இல்லை. எங்கேயோ வேறு உலகத்துக்குன்னா ஆளைக் கொண்டு போயிடறது?’ என்பார்.’ காமத் துய்ப்பு குறித்த இந்த ஆச்சரியமும் பரவசமும் மரணத்தைப் போலவே சம்பத்தின் ஒவ்வொரு எழுத்திலும் அடியோட்டமாக ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தில் ‘முடிவுகள்’ என்ற அற்புதமான கதை பற்றிப் பார்ப்போம். பேராசிரியர் சந்திரசேகர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்புகிறார். கும்பகோணத்தில் இருக்கும் அம்மாவைப் பார்ப்பதற்காக தில்லியிலிருந்து மெட்ராஸ் போகும் ரயிலில் பயணம். விமான டிக்கட் கிடைக்கவில்லை. கூபேயில் சகபயணியாய் வருபவர் திலீப் என்ற பிரபலமான நடிகர். ஆனால் பேராசிரியருக்குப் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சினிமாவே பார்த்ததில்லை. திலீப்பைப் பார்த்து நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இப்படி ஒரு மனிதனை திலீப்பும் கண்டதில்லை. இருவரும் சிநேகமாகி விடுகிறார்கள். அடுத்த கூபேவில் ராணுவத்தில் கேப்டனாக இருக்கும் சுரேஷ், ஸ்வப்னா என்ற தம்பதி. நால்வரும் பொழுதுபோக்காக சீட்டாடுகிறார்கள். எஞ்ஜின் பழுதாகி ரயில் ஏதோ ஒரு காட்டில் நின்று விடுகிறது. மத்தியப் பிரதேசத்தின் காடுகள் கடும் அடர்த்தியானவை. கேப்டன் வேட்டைக்கும் திலீப் அருவியில் குளிக்கவும் போய் விடுகிறார்கள். பேராசிரியர் சந்துரு வனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வருகிறாள் ஸ்வப்னா. வெகு இயல்பாக, கொஞ்சம் கூட செயற்கைத் தன்மை இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் மனதையும் தேகத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அது எப்படி நடந்தது என்பதற்கான ஒரு சமிக்ஞை பின்வரும் உரையாடலில் உள்ளதை கவனியுங்கள்:
‘உங்கள் கணவர் எங்கே?’
‘வேட்டைக்குப் போயிருக்கிறார். நாரை, காட்டுப் புறா என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னையும்தான்.’
‘உங்களை ஏன் வேட்டைப் பொருளோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?’
‘அவர்தான் சொல்கிறார் அடிக்கடி…’
‘என்ன?
‘அழகான பெண் எங்கே என்று வேட்டையாடி வேட்டையாடித்தான் தேடிப் பிடித்தாராம் என்னை.’
‘ஸ்வப்னா, நான் உங்களிடம் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’
‘தாராளமாக… எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.’
‘சீட்டாடும் போது எனக்கு உங்களை ஒருதரம் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.’
‘அது எனக்குத் தெரியும் புரொபசர்.’
‘நான் இப்போது உங்கள் கையைத் தொட்டுப் பார்க்கலாமா?’
‘இதோ’ என்று அவளது வலது கரம் அவர் பக்கம் நீண்டது. அவர் ஆசையுடன் அந்தக் கையைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டு வருட ஆரம்பித்தார்.
‘நீங்கள் ஒரு குழந்தை புரொபசர்.’ ஸ்வப்னா சிரித்தாள். அதன் பிறகான உரையாடலில் அவருக்குத் திருமணமாகவில்லை என்றும் இதுவரை அவர் இரண்டே இரண்டு பெண்களின் கைகளை மட்டுமே தொட்டிருக்கிறார் என்றும் தெரிந்து கொள்கிறாள். ஒரு பெண் கும்பகோணத்தில் கோடி வீட்டு பத்மா. இன்னொரு பெண்? ராமஸ்வாமி கோவிலில் ஒரு கந்தர்வ பெண்ணின் சிலை.
‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையா?’
‘நான் எப்போதும் எதிலும் அவநம்பிக்கை கொள்வதில்லை புரொபசர்…’
அவள் செல்லமாக, முன்னே வந்து விழுந்த அவருடைய கிராப்புச் சுருளை ஆள்காட்டி விரலால் சுற்றிக் கொண்டாள்.
‘ஆனால் ஸ்வப்னா…’
‘எஸ் புரொபசர்?’
‘நான் இதுவரை பத்மாவைக் கூட…’
‘எனக்குப் புரிந்து விட்டது புரொபசர்… நீங்கள் மேலே ஏதும் சொல்ல வேண்டாம்.’
அதன் பிறகு அவள் அவர் மடியில் படுத்து அவர் கழுத்தை வளைத்துக் கொண்டு ‘நீங்கள் ஒரு குழந்தை. வளர்ந்த குழந்தை’ என்கிறாள்.
அவள் வாயின் அமுதைத் தன் வாயில் வாங்கிக் கொண்ட பிறகு அது தொண்டையை எல்லாம் ஊடுருவிக் கொண்டு ஹிருதயத்தைத் தொட்டு தொப்புளை நோக்கி சுகமாக இறங்குவதை உணர்ந்தார். பிறகு அவர் புலம்ப ஆரம்பித்தார். தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாகிய அம்மா என்ற சப்தத்துடன் தான் அவருடைய புலம்பல் ஆரம்பித்தது. அது புலம்பல் இல்லை. கீதம். சோக கீதம். எப்போது எங்கே ஆரம்பித்ததோ. வெகுநாள் தேங்கிக் கிடந்த அணையின் நீரை அவிழ்த்து விட்டாற் போன்று பெரும் இரைச்சலுடன் தான் அது ஆரம்பமாயிற்று. கீதமாக, சோக கீதமாக அது உருவெடுக்கத் தொடங்கிய போது யுகங்கள் கழிந்திருக்க வேண்டும். ஆம். அவர் புலம்ப ஆரம்பித்தார். அம்மா. என் அம்மா. ஸ்வப்னா தாயே. அழுதார். மீண்டும் அவர் முகத்தை அவள் மார்பகத்தில் புதைத்துக் கொண்டார். அவருக்குக் கீழே ஸ்வப்னா விம்மி விம்மி பெருகிக் கொண்டிருந்தாள். காட்டாறாகப் பெருகும் அவளை ஒரேயடியாக அணைத்துத் தன் உடம்புக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்டுவிட மாட்டோமா என்ற ஆவேசத்துடன் உத்வேகத்துடன் அவளை இறுக்கினார். உலகம் மறையத் தொடங்கியது. படித்த அறிவு ஸ்தம்பித்தது. உணர்வுக் கோலம் உயிரின் ரகசிய அறைகளைத் தேடின. படார் படார் என்று கதவுகள் திறப்பது போல், எதையோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல் உள்ளுக்குள்ளே ஒரே புரட்சி. ரகளை. மண்டையிலிருந்து தீப்பொறிகள் போன்று ஏதோ வெளிப்பட்டு கண்ணுக்கு முன்னால் நீந்த ஆரம்பித்தன. கீழே லாவகமாக அசைந்து கொண்டிருந்த ஸ்வப்னாவின் உருவமும் அந்தத் தீப்பொறியில் கலந்து மறையத் தொடங்கியது. ஸ்வப்னா தன் கண்களிலிருந்து மறைவதை அவர் விரும்பவில்லை. அவளுடைய கண்களில் தன் உதடுகளை ஒத்தி எடுத்தார். அவள் அவரை நோக்கினாள். அவள் மலர்ந்து கொண்டிருந்தாள். ஓர் தாமரைப் பூவின் சிகப்பு அவள் மேல் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவர் மெள்ள சிரித்தார். உணர்ந்து விட்ட சிரிப்பு. உச்சக்கட்டத்தை நெருங்கும் தறுவாயில் மீண்டும் புலம்ப ஆரம்பித்தார். அடியே… என்னம்மா இவ்வளவு இன்பம் கூட வாழ்க்கையில் உண்டா… ஜன்ம சாபல்யமென்பது இதுதானோடி சொல்லடி… அடியே… என் தாயே சொல்லடி…
அதிகமாகப் பேசக் கூடாது. பேசினால் சாரமே போய் விடும். ஆன்புடன் ஆனால் அதட்டலுடன் வந்த அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டார்…
இப்படியே போகும் அந்தச் சம்பவத்தின் இறுதிப் பத்தி இது:
‘அவர் கரையத் தொடங்கினார். கரைந்து கொண்டிருக்கும் போதே உருவாகத் தொடங்கினார். தான் நினைத்த வெள்ளைக் கோட்டுக்கும் அப்பால் உள்ள பெரிய வெள்ளைக் கோட்டில் நின்றிருப்பதாக ஏற்பட்ட ஓர் உணர்வு கரையும் உடம்பில் இதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த உணர்வு இனித்தது. ஸ்வப்னா முனகினாள். அந்த சப்தம் இனித்தது. வாழ்க்கையே முதல் முதலாக இனிக்கத் தொடங்கியது.’
பின்வருவது இடைவெளியில் வரும் ஒரு பத்தி:
‘திடீரென்று யார் வாயைத் திறந்தாலும், சாவு அவர்கள் வாய் வழியாகப் போகுமோ என்று பயந்து, காதை நீட்டிக் கொண்டு, ஹிருதயத்தை கெட்டித்துக் கொண்டார். பயமாய் இருந்தது. எங்கேயாவது ஓடி விடலாமா என்று நினைத்தார். ஆனால் எங்கு ஓடுவது? எண்ணங்களில்தான் வாழ்வு அமைகிறதோ? ஒரு ஆண் பெண் புணரும் போது, அங்கு எண்ண அலைகள் மோதத்தானே செய்கின்றன? எல்லாமே எண்ணங்கள்தாமே? எண்ணற்ற புணருதல் எங்கே? எண்ணங்கள் எப்படி உதயமாகின்றன? ம்ருத்யூ கூட எண்ணம் தானே? நாம் காணும் உருவங்களுக்குப் பின்னால் எண்ணங்கள் இருப்பதால் சாவு கூட எண்ணம் தானே?’
எஸ். சம்பத்தின் எழுத்து ஆங்கிலத்துக்குப் போனால் அநேகமாக ஜார்ஜ் பத்தாய் (Goerges Bataille), கேத்தி ஆக்கர் போன்றவர்களின் எழுத்தை விடவும் அதிகம் கொண்டாடப்படுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவர்களின் எழுத்தில் ஒருவித இருண்மையும், நம்பிக்கையின்மையும் இருக்கும். ஆனால் சம்பத் காமத்தைக் கடவுளோடு இணைக்கிறார். இருப்பை (being) இருப்பின்மையோடு (nothingness) இணைக்கிறார். பிண்டத்தின் (body) இசைவெறியை அண்டத்தின் (universe) லயத்தோடு இணைக்கிறார்.
மீண்டும் சாமியார் ஜூவுக்குப் போன கதைக்கு வருவோம்.
தினகரனும் பத்மாவும் குழந்தைகளும் மிருகங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த போது ஜூவின் கூண்டுக்குள்ளிருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்து விடுகிறது. அதுவும் ஜூவிலேயே பிறந்து வளர்ந்த புலி அல்ல. மனிதனைக் கொல்லும் குமாயுன் புலி. பிடித்துக் கொண்டு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. புலி சுட்டுக் கொல்லப்படுகிறது.
‘ஒரு பாவமும் அறியாத புலியை மனிதன் கொன்று விட்டான். நடந்து சென்று புலியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தால் கூட அது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்திருக்காது என்று அவருக்குப் பட ஆரம்பித்தது. அவருக்கு அந்தப் புலியின் ஓட்டம், அதனுடைய முகம் எல்லாம் கண் முன்னால் நீந்த ஆரம்பித்தது. ஆம்; அது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்திருக்காது. அது வெளியே வந்த போது தனக்கு விடுதலை கிடைத்து விட்ட சந்தோஷத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தது; சுவாசித்துக் கொண்டிருந்தது. விடுதலை. கூண்டிலிருந்து விடுதலை.
வெகுநேரங் கழித்து அழித்து வாலைச் சொடுக்கினபோது தான் அதனுடைய தேடல் ஆரம்பித்தது. அதற்குப் பிறகுதான் தன் உடம்பால் தான் விடுதலை அடைந்து வந்த இடம் காடில்லை என்பதை உணர்ந்தது.
பிறகுதான் மனிதனுடைய ஆச்சர்யம், அவன் சுவாசிக்கும் காற்றாகத் தேங்கிக் கிடந்த ஆச்சர்யம், ஆச்சர்யமே என்ன என்று அறியாத அந்தப் புலியையும் தொற்றியது.
வேங்கையைக் கூண்டில் அடைத்து அதற்கு சாசுவதமான தன்னுடைய புளித்துப் போன மனிதத்தன்மையைத் தர வேண்டும் என்ற வெறி மனிதனை எப்படி எப்போது தொற்றியது?
அவனுடைய கையாலாகாத்தனம். Ah! தினகரன், What a great rediscovery. Slowly proceed with this thought.
ஆம், மனிதனுடைய கையாலாகாததனம்தான் அவனைப் புலியைக் கூண்டில் அடைக்கத் தூண்டியது…’
‘அன்று இரவு தினகரன் ஒரு கனவு காண்கிறார். மிருகங்கள் எல்லாம் மனிதனைத் தின்ன ஆரம்பிக்கின்றன. மனிதன் ஓடப் பார்க்கிறான். ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். முடிவதில்லை. எல்லோரையும் பிடித்து ஒருவர் பாக்கி இல்லாமல் விலங்கினம் துவம்சம் செய்கிறது. கடைசியாக மாமிச பர்வதம் போன்ற மனிதனிடம் விலங்குகள் வருகின்றன. அவன் ஓடவில்லை. ஒளியவில்லை. மனமுவந்து தன்னை விலங்குகளிடம் அர்ப்பணிக்கிறான். I wish the meat is good என்று ஆங்கிலத்தில் பேசுகிறான். பிறகு கனவு கலைந்து விட்டது. இதைப் பற்றி ரொம்ப நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார் தினகரன்.
பிறகு தன் டயரியில் ஒருநாள் இவ்வாறு எழுதினார். (தினகரன் எவ்வளவு இளைஞனாக இருந்தாலும் எல்லாக் கதைகளிலும் அவனை அவர் என்றே குறிப்பிடுகிறார் சம்பத்.) நான் அழகைத் தரிசித்தவனானேன். எதுவுமே வேண்டாம் என்றோ – இல்லை எது கொடுத்தாலும் அது எவ்வளவு அல்பமாக இருந்தால்கூட மனப்பூர்வமாக எது கொடுத்தாலும் போதுமென்று எவன் நினைக்கிறானோ அங்கு அவனுக்கு அழகு தபஸ் செய்ய ஆரம்பிக்கிறது. தன்னைச் சதா வருத்திக் கொண்டு ஒரு தேடல் மயமாகி தனக்குப் பிடித்தவனைச் சந்தோஷப்படுத்த ஆசை கொள்கிறது. முயற்சி செய்கிறது.’
சம்பத்தின் வாழ்வையும் எழுத்தையும் புரிந்து கொள்ள நாம் எழுபதுகளில் உலகம் முழுவதும் புத்திஜீவிகளிடமும் கலைஞர்களிடமும் பரவியிருந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸத் துயரத்துக்குச் (Angst) செல்ல வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு என்பதால் இங்கே சில குறிப்புகளை மட்டும் தந்து விட்டு மேலே செல்கிறேன். ஆத்மாநாமின் மரணமும் சம்பத் இறந்த அதே ஆண்டுதான் (1984) நிகழ்ந்தது. அப்போது ஆத்மாநாமின் வயது 33. தற்கொலை. இவ்வளவுக்கும் ஆத்மாநாமை கவிஞன் கவிஞன் என்று அவருடைய குடும்பத்தினர் போற்றிக் கொண்டாடினர். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான மோட்டார் பைக் எல்லாம் வைத்திருந்தார். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வசதியான குடும்பம் வேறு. ஆத்மாநாமை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது எது என்று புரிந்து கொண்டால், சம்பத்தின் மூளை ரத்தக் கசிவையும் புரிந்து கொண்டு விடலாம். அதற்கு இரண்டு விபரங்களைப் பார்ப்போம். ஒன்று, தனி என்ற ஒரு அற்புதமான சிறுகதை. இதுவும் இடைவெளி என்ற நாவலின் இன்னொரு அத்தியாயமாகவே கொள்ள வேண்டியது. இந்துமதி என்ற பெண். முந்தின இரவை நினைத்தபடி சோம்பலாக நிற்கிறாள் இந்துமதி. உடம்பில் ஒரு ஊமைவலி. பெரிய காயம் ஆறும் தறுவாயில் எழும் நமநமப்பும் ஒருவித சுகமும் அந்த வலியில் தெரிந்தது. இரவில் அவளைத் தூங்க விடாமல் புரட்டிப் புரட்டி சாறாகப் பிழிந்து குடித்து விடும் தீவிரத்துடன் இடித்து, முட்டி, உடம்பில் அசைக்க முடியாத வலியை ஏற்படுத்தி விட்டு, முனகல் தூக்கத்திலிருந்த அவளுக்கு டாட்டா சொல்லி விட்டு வேலைக்குப் போய் விட்ட கணவன் பிரகாஷ். இந்துமதிக்குக் குழந்தை இல்லை. அந்தக் கதையில் ஒரு இடம்: ஒரு புறா ஜன்னல் கம்பியில் உட்கார்ந்திருந்தது. ஒரு பத்துப் பதினைந்து நாட்களாகவே அது அந்த வேளையில் ஜன்னல் கம்பியில் வந்து உட்கார ஆரம்பித்திருந்தது. இந்துமதிக்கு அந்தப் புறாவை கையில் எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று ஆசை. பலவிதங்களில் தினம் அதைத் தன் பக்கத்தில் கூப்பிட்டுப் பார்த்திருந்தாள். புறா குர்ர்ர்ங் குர்ர்ர்ங் என்று சப்தமிட்டுக் கொண்டிருக்குமே தவிர பக்கத்தில் வராது… பிறகு ஒரு அட்டைப் பெட்டி நிறைய பலவித தானியங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு தினம் கொஞ்சம் தானியத்தை ஜன்னல் விளிம்பில் வைக்க ஆரம்பித்தாள். புறாவும் தானியங்களைக் கொத்தித் தின்னும். வேண்டும் என்றே இன்று அவள் ஜன்னல் விளிம்பில் தானியங்களை வைக்காமல் குளிக்கச் சென்றாள். இப்போது கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு புறாவைக் கூப்பிட்டாள். புறா தயங்கியது. இங்கும் அங்கும் தன் கழுத்தை வளைத்துப் பார்த்தது. பிறகு என்ன நினைத்துக் கொண்டதோ, பறந்து ஜன்னலுக்குக் கீழே தரையில் இறங்கியது. அவள் அதைக் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. பிறகு மெள்ள ஒரு தானியத்தை அதன் பக்கமாக விட்டெறிந்தாள். புறா பறந்து போய் மீண்டும் ஜன்னல் கம்பியில் உட்கார்ந்தது. அவள் அதைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். மீண்டும் புறா கீழே இறங்கியது. தானியத்தைக் கொத்தித் தின்றது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கமாகத் தத்தித் தத்தி வர ஆரம்பித்தது. இந்துமதியின் உடம்பு புல்லரித்தது. உருட்சியான தோளுக்குள் ஏதோ கரைவது போலிருந்தது. அவளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. புறா அவளுடைய கையிலிருந்த தானியத்தைக் கொத்திக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது. இந்துமதி அவசரப்பட்டு விட்டாள். ஆவல் தாங்க மாட்டாமல் அவள் இரண்டு விரலால் தொட்டதும் புறா அம்பு போல் மேலே எழும்பியது. ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியில் பட்டுக் கீழே விழுந்தது புறா. இந்துமதி மயக்கமானாள்.
இரண்டாவது, வெங்கட் சாமிநாதன் சொல்லும் ஒரு சம்பவம்:
‘அக்காலங்களில் டில்லியில் ஓடிக் கொண்டிருந்த இரட்டைத் தளம் கொண்ட விஜயா என்று அழைக்கப்பட்ட ட்ராலர் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம். நானும் சம்பத்தும் மேல் தளத்தில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தோம். சம்பத் முன்புற ஜன்னல் கண்ணாடி வழியாக எதையோ ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். சம்பத் வைத்த கண் எடுக்கவில்லை. என்ன கவலையோ, என்ன யோசனைகளோ என்று நான் சம்பத்தின் அந்நிலையைக் கலைக்கவில்லை. அவர் முகத்தில் கவலையும், பயமும், ஒருவித நிம்மதியின்மையும் கொஞ்சம் கொஞ்சமாக விரவிப் படர்வதாக எனக்குத் தோன்றியது.’ பஸ்ஸை விட்டு இறங்கிய பின் ‘என்ன ஆயிற்று சம்பத்?’ என்று விசாரிக்கிறார் சாமிநாதன். அதற்கு சம்பத் சொல்கிறார்:
‘நாம் போயிட்டிருந்தப்போ பஸ் ஒரு வேப்ப மரக்கிளையை உரசிண்டு போச்சு இல்லையா, அப்பத்தான்னு நினைக்கிறேன். ஒரு வேப்பங்காய், இத்துணூண்டு பச்சைப் பசேல்னு, எவ்வளவு அழகா தொட்டுத் தடவலாம் போல… அது விழுந்துடுத்து கர்டர் மேலே. விழுந்து அங்கேயும் இங்கேயுமா உருள்றது. எப்போண்ணாலும் அது கர்டரின் இடுக்கிலே விழுந்து சிக்கி நசுங்கிச் செத்துப் போயிடும். உருள்றது. அதற்கு என்ன தெரியும். உருள்றது. நமக்குன்னா பயமாயிருக்கு. சின்னக் குஞ்சு. அநாதை. ஆதரவில்லாத தனிச்சுப் போயிட்ட குழந்தை. அதுக்குத் தெரியலை. இதோ சாகப் போற கணம் வந்து ஒரு மயிரிழையில் தப்பிச்சுடுத்துன்னு நினைச்சேன். ஆனா அது திரும்பவும் உருள்றது சாவின் முனைக்கு. இப்படியே திரும்பத் திரும்ப நடந்துண்டே இருக்கு. நான் என்ன செய்ய முடியும் சாமிநாதன்? பகவானே அதைக் காப்பாத்திடுன்னு வேண்டிக்கலாம். வேண்டிண்டேனே. ‘எங்கேயாவது ரோட்டிலே உருண்டு விழும்படியா பண்ணிடுடா வெங்கடேசா, அது சாவுக்கு உருண்டோடறதை நிறுத்துடா’ன்னு வேண்டிண்டேன். அது அப்புறம் கண்ணிலே படலை. ரோட்டிலேதான் உருண்டு விழுந்திருக்கணும். அப்பா, என்ன பயங்கரம். எப்போடாப்பா இதுக்கு முடிவு காலம்னு தோணிப் போயிடுத்து.’
வாசிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு மேலே வெங்கட் சாமிநாதன் நமக்குக் காட்டும் சம்பத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். இந்த உலகின் மகா பெரிய கலைஞன் ஒருவனின் தரிசனம் கிட்டும்...
பின்குறிப்புகள்: 1. இடைவெளி பற்றிய சி. மோகன் கட்டுரையின் இணைப்பு: http://azhiyasudargal.blogspot.in/2009/07/blog-post_9933.html 2. சம்பத் பற்றிய R.P. ராஜநாயஹம் கட்டுரையின் இணைப்பு: http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_21.html 3. இடைவெளி நாவல் அழகியசிங்கர் தொகுத்த சம்பத் கதைகள் தொகுப்பில் உள்ளது. ஆனால் அது தெறிகள் பத்திரிகையில் வந்த rough draft. சி. மோகனும் சம்பத்தும் செப்பனிட்ட பதிப்பு (க்ரியா வெளியீடு) இப்போது கிடைக்கவில்லை. ஆனால் இணையத்தில் PDF வடிவத்தில் உள்ளது. மறுபிரசுரம் செய்ய சம்பத் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே இணையத்தில் தேடிப் படிக்கவும். தெறிகளில் வந்த பிரதி நமக்குப் புரியாது. |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


