.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }
‘புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம்’ என்று ஆ. மாதவனின் சிறுகதைகளுக்கு எழுதிய முன்னுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டது இன்று நேற்று அல்ல; முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். ஆ. மாதவன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு அவரை வட்டார வழக்கு எழுத்தாளர் எனவும், யதார்த்தவாதி எனவும் குறுக்கி ஒரு மூலையில் உட்கார்த்தி வைத்து விட்டார்கள் என்பதே என் புகார். மற்றபடி அவருடைய எழுத்து பற்றி யார் யார் எத்தனை பக்கம் எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட அவரை சரியானபடி அடையாளம் காட்டியிருப்பவர்கள் என ஜெயமோகனையும் கவிஞர் சுகுமாரனையும் குறிப்பிட்டேன். இன்னும் சரியாகச் சொன்னால், சினிமாத் துறையைப் போல் இலக்கியத்திலும் பெயர் வாங்க திறமை மட்டும் இருந்தால் போதாது போல் இருக்கிறது; நல்லூழ் வேண்டும். வாழ்க்கையில் க்ஷீணப்பட்ட ஜி. நாகராஜனுக்கு இலக்கியத்தில் அந்த நல்லூழ் இருந்திருக்கிறது போலும். திருடர்கள், பொறுக்கிகள், வேசிகள், கொலைகாரர்கள், ரவுடிகள், பெண்களை பலாத்காரம் செய்பவர்கள் போன்ற கடைநிலை மக்களைப் பற்றி எழுதியவர் என்று சொன்னால் அங்கே ஜி. நாகராஜனின் பெயர் மட்டுமே இருந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த படிகள் என்ற பத்திரிகையில் கூட நாகார்ச்சுனன் ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலைப் பற்றித்தான் எழுதினாரே தவிர யாருமே ஆ. மாதவனின் பெயரைக் குறிப்பிடவில்லை. காரணம், மாதவன் இடதுசாரிப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக இருக்கலாம். அல்லது, நாகராஜனுக்கு இருந்த நல்லூழ் மாதவனுக்கு இல்லை என்று கொள்ளலாம். இவ்வளவுக்கும் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியும், subaltern வரலாறு பற்றியும் தமிழில் முதலில் விவாதித்த பத்திரிகை படிகள். இடதுசாரிகள், சுந்தர ராமசாமி பள்ளியைச் சேர்ந்தவர்கள், அமைப்பியல்வாதிகள் என்று எந்தக் குழுவைச் சேர்ந்தாலும் விளிம்பு நிலை வாழ்க்கையை எழுதியவர் என்று எடுத்தால் அங்கே ஜி. நாகராஜனைத் தவிர வேறு எவர் ஒருவருமே பேசப்பட்டதில்லை. (வெகுஜன அளவில் ஜெயகாந்தன்.) ஆ. மாதவன் பற்றி யாரும் பேசவில்லை என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் இதுதான். அங்கீகரித்தாலும் சரி, நிராகரித்தாலும் சரி, மையப் புள்ளி ஜி. நாகராஜனாகவே இருந்தார்.
***
உலக இலக்கியத்தில் Jean Genet (ஃப்ரெஞ்ச்), Charles Bukowski (ஆங்கிலம்), Muhammad Shukri (அரபி) ஆகிய மூவர்தான் தீமையின் அழகியலை எழுதியவர்களில் முக்கியமானவர்கள். ஆனால் அந்த மூவருமே தங்களுடைய சொந்த அனுபவங்களையே இலக்கியமாகப் படைத்தார்கள். அந்த வகையில் இவர்களின் இலக்கியம் சுயசரிதைத் தன்மை வாய்ந்தது. ஆனால் மாதவன் மற்றவர்களின் வாழ்க்கையை எழுதினார். அதன் காரணமாகவே அவர் மேற்குறிப்பிட்ட மூவரை விடவும் முக்கியமானவர் ஆகிறார். சில சமயங்களில் தமிழின் சிகர சாதனையாகக் கருதப்படும் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் அடைந்தால் ஆங்கிலத்தில் அந்தப் படைப்புகள் எந்தப் பேச்சையும் ஏற்படுத்துவதில்லை; எந்த அதிர்வலைகளையும் உண்டாக்குவதில்லை. அதற்கு ஒரு முக்கியக் காரணம், அப்படைப்புகள் ethnocentric ஆக அமைவதுதான். எந்த மொழியில் அந்தப் பிரதி உருவாக்கப்படுகிறதோ அந்த மொழியில் மட்டுமே அதன் ஜீவிதம் உருவாகி முடிந்து விடுகிறது. தாய் மொழியை விட்டு வெளியில் போகவே முடியாது. போனாலும் யாருக்கும் புரிவதில்லை. மாதவனின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல. உலகில் எந்த மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டாலும் அவை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் மாதவனின் கதைகள் காலம் இடம் என்ற இரண்டையும் கடந்ததாகவும், மனிதனின் ஆதி உணர்வுகளைப் பற்றிப் பேசுபவையாகவும் இருக்கின்றன.
மாதவன் கதைகள் இருத்தலியல் கோட்பாட்டுக்குள் அடங்குபவை அல்ல என்பது பற்றிச் சென்ற வாரம் பார்த்தோம். சொல்லப் போனால் மாதவன் கதைகள் இருத்தலியல் கோட்பாட்டைத் தாண்டி வந்து விட்டவை எனலாம். உதாரணமாக, எட்டாவது நாள் என்ற கதையில் வரும் சாளப் பட்டாணி ஏன் அவ்வளவு குரூரமான மனிதனாக வாழ்ந்தான் என்று பார்ப்போம்.
சாளப் பட்டாணியின் தந்தை ஹமீம் பாய் திருவிழாக்களில் புலி வேஷம் போடுபவர்களின் பெயிண்டர். ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்குப் புலி வேஷம் போடுவார்கள்? அந்த வேலையில் எவ்வளவு சம்பாத்தியம் வரும்? இதோ அந்தச் சூழல்: வீட்டிலே தினமும் அரைப் பட்டினிதான். வீட்டுக்குள்ளேயே இருக்கக் கூடிய அக்காமாரு ரெண்டு பேருக்கும் ஆப்பம் சுட்டு விக்கக் கூடிய ஜோலி. அதிலெதான் வீட்டுச் சங்கதியெல்லாம் ஒரு மாதிரி நடக்கும். தினமும் மீனும் கிழங்கும்தான். எப்பவாவது ஒருக்கெ கஞ்சியோ சோறோ கெடைக்கும். அப்பனுக்கு பெயிண்டு ஜோலி என்னைக்குமிருக்காது. ஜோலி உள்ளப்போ கெடைக்கிறதெல்லாம் அவருக்கு வெள்ளமடிக்கத்தான் காணும். அப்போ, அப்பனுக்கு ஒரு எழுபது வயசும் எனக்கொரு பதினாலு, பதினஞ்சு வயசும் இருக்கும். எங்க வீட்டுக்குக் கீழப் பொறத்திலெ ஒரு தண்டாத்தி தாமசிச்சிருந்தா. காணக் கொஞ்சம் நல்லா இருப்பா. அந்தப் பங்கி கூட அப்பனுக்குச் சிநேகம். அவளுக்குச் செலவுக்குக் கொடுக்கிறதுண்டாம். ஒருநாள் நான் பார்த்துக்கிட்டு நிக்க அப்பன் பங்கி வீட்டிலெ ஏறிப் போறாரு.’
அன்று இரவு பனிரண்டு மணிக்கு வீட்டுக்குக் கடுமையான குடி போதையில் வந்தவரை அடித்துப் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான் பட்டாணி. அதற்குப் பிறகு அவனுக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லாத தெருப் பொறுக்கியாக மாறுகிறான். இப்படிப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவன் எப்படி இருப்பான் என்ற கேள்வி கதை முழுவதும் அடியோட்டமாக இருக்கிறது.
காமம், வன்முறை ஆகியவற்றைப் போலவே மாதவனின் பாத்திரங்கள் வெகு அனாயாசமாக ஈடுபடும் மற்றொரு விஷயம், துரோகம். வீட்டை விட்டு வெளியேறிய பட்டாணிக்கு நல்ல குணமுடைய, நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு செட்டியார் வேலை கொடுக்கிறார். அப்படிப்பட்டவரிடம் பணத்தைத் திருடி விட்டுத் தெருவுக்கு வருகிறான் பட்டாணி.
மாதவனின் படைப்புகளிலேயே அதிகம் பேசப்பட்ட நாவலான கிருஷ்ணப் பருந்துவிலும் துரோகம்தான் நாவலை இயக்கும் கண்ணியாக விளங்குகிறது. மனித வாழ்வில் காமம், வன்முறை போன்றவற்றைப் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும் துரோகம் தான் யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருந்து வருகிறது. ஜெனேயின் எழுத்துக்களில் அடியோட்டமாக இருக்கும் கருத்தாக்கம் துரோகம். ‘துரோகத்தின் பரவசத்தை உணராதவர்களுக்குப் பரவசம் என்றால் என்னவென்றே தெரியாது’ என்பது ஜெனேயின் புகழ்பெற்ற வாசகம். இலக்கியத்தின் அடிப்படை அன்பு. தி. ஜானகிராமனை நாம் அனைவரும் கொண்டாடுவதன் காரணம், அவரது எழுத்தின் அடிப்படையாக இருக்கும் காதல். அதுவும் அன்பின் இன்னொரு வடிவம். தெய்வத்தையே அன்பின் சொரூபமாகத்தான் காண்கிறோம். அப்பேர்ப்பட்ட அன்பை மறுதலிப்பதன் மூலம், நிராகரிப்பதன் மூலம் மாதவனின் பாத்திரங்கள் துரோகத்தின் இருள் சார்ந்த கடவுளற்ற பிரதேசங்களில் அனாதையாகத் திரிகிறார்கள். அந்த வகையில்தான் தி. ஜானகிராமனை விடவும் மற்ற எல்லோரையும் விடவும் ஆ.மாதவனை மிக முக்கியமான சாதனையாளராகக் கருதுகிறேன்.
ஜானகிராமனின் அம்மா வந்தாள் ஒரு கிளாஸிக் என்பதில் இரண்டு வித கருத்துக்கே இடம் இல்லை. உலகின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று என அதைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிருஷ்ணப் பருந்து அதை விடவும் வலுவானது என்பது என் கருத்து. எப்போதுமே பெண்ணின் பிறழ்வு தான் அதிகம் பேசப்படும் என்பது நியதி. அந்த நியதியின்படி குடும்பத்துக்கு வெளியே காமம் கண்ட பெண்ணை எழுதியதால் அம்மா வந்தாள் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணப் பருந்துவில் ஒரு ஆணின் காமப் பிறழ்வு பாடுபொருள் ஆகியிருக்கிறது. அம்மா வந்தாளை விட கிருஷ்ணப் பருந்து வலுவானது என்று நான் கூறும் காரணம், அம்மா வந்தாளைப் போல் பின்னதில் காமப் பிறழ்வு வெளிப்படையாக இல்லை. அதற்கான சமிக்ஞைகள் நாவலில் ஒன்றிரண்டு இடங்களில்தான் தென்படுகின்றன.
நாவலின் நாயகனாக வரும் குருஸ்வாமி ராஜ வம்சத்தோடு தொடர்பு கொண்டிருந்த பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். இருந்த சொத்தையெல்லாம் பாட்டனாரும் தகப்பனாரும் தாஸிகளுக்கும் வைப்பாட்டிகளுக்கும் கொடுத்து விட கடைசியில் குருஸ்வாமியின் தலைமுறையில் மிச்சமிருந்தது ஒரு பெரிய தோப்பு. மனைவி இறந்த பிறகு அந்தத் தோப்பில் தனி மனிதராக வாழ்ந்து வருகிறார். குழந்தையும் இல்லை. இப்படியாக ஐம்பது வயதுக்குள் வாழ்வின் நல்லது கெட்டதுகளைப் பார்த்து விடுகிறார் குருஸ்வாமி. புத்தகங்களே அவருக்குப் பெரும் துணை. கூடவே பெயிண்டர் ரவி. குருவின் தாயார் இளம் வயதிலேயே இறந்து விடுகிறாள். அம்மு தான் வளர்ப்புத் தாய். நாவலின் இரண்டு motifகளில் ஒன்றான காமம் என்பது குருவின் வாழ்வில் இந்த இடத்தில் துவங்குகிறது. சிறுவன் குருஸ்வாமிக்கு எப்போதும் அம்முவின் அரவணைப்பு தேவைப்படுகிறது. நல்ல முகராசியும், சொல் இனிமையும், லேசாக பூனைக் கண்களும் கொண்ட அம்மு அம்மை பாடுவதைக் கேட்காமல் குருவுக்கு உறக்கம் வராது. ‘அம்மு தினமும் காலையில் குளித்து, கூந்தலை முதுகு நிறையப் பரப்பிக் கொண்டு, கோயிலுக்குப் போய் நெற்றியில் சந்தனக்குறி இட்டுக் கொண்டு வந்து, குருவை அள்ளி அணைக்கும் போது, காய்ச்சிய உருக்கெண்ணெய் மணமும் பூமணமுமாக அம்மு, கதைகளில் வரும் வரதேவதையாக அவனுக்கு மனம் நிறைவாள். அந்த தேவதை ஒருநாள் கட்டிலில், பச்சை பச்சையாக, பிறந்த மேனியில், அப்பாவின் நரைத்துப் போன நெஞ்சு ரோமத்தை வருடியவாறு, அப்பாவின் வெற்றிலைச் சாயம் படிந்த தொங்கும் உதட்டைக் கடித்தவாறு… இன்னும்… இன்னும்… அய்யோ… சீ… அம்மு அம்மோவ்!’
இந்த வெறுப்புதான் குருவை சாமியாராக உரு மாற்றியதா? இருக்கலாம். ஆனால்- ‘ஸாமி ஸாமி என்றாலும் அவரது அந்தரங்கத்தில் ஒரு தாகப் பருந்து வட்டமிடுகிறது. உயர உயர வட்டமிடுகிறது. மாலை வேளைகளில் தன் மொட்டை மாடித் தவங்களின் போது தொலைவில் பெருமரக் கிளைகளிடையே சிறகு கோதிக் கழுத்து சிலுப்பி, வெறிச்சிட்டு அமர்ந்திருக்கிறது.’
இன்னொரு காட்சி: பெயிண்டர் ரவி குருஸ்வாமியிடம் சொல்கிறான்: ‘மஹா பத்திரகாளி தேவியெ – மஹிஷாசுர மர்த்தினி – துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலகியாகத்தானே ஒவ்வொருத்தரும் ரூபப்படுத்தினா? நீங்க சொன்னேளே, காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரின்னு. அதுக்கொரு ரூப விளக்கமும் சொன்னியோ. திரண்ட முலையும், திரண்ட பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமவெறியையும் பஸ்மீகாரம் செய்து விட்டு காம சொரூபினியான, திறந்த நிர்வாண நிலையின் அந்த விஸ்வரூபத்தை உள் பிரகாரச் சுவரில் வரைஞ்சேன் என்றாலும், இன்னைக்கும் ஜ்வர வேகம் கொண்டது போல் நெஞ்சு பதறி சுடுது ஸ்வாமி. உங்க மனவெளியை நான் திருப்தியா வரஞ்சிட்டேனு அறிஞ்சப்போ…’
இன்னொரு படிமம்: ‘அழகிய அந்தப் பூனைக் கண்ணிலிருந்து செம்பருத்திப் பூவிலிருந்து பனித்துளி சொட்டுவது போல கண்ணீர் சொட்டுகிறது. அம்மு அம்மேய், கரையாதே… ஆனால், அம்மு அம்மையின் நிர்வாணம்… தேவி கோவில் சுவரில் அந்த ஓவியம் போல திரண்ட முலையும் திறந்த பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமாக்னியையும் ஊதி அகற்றி விட்டு, பின்னும் காம சொரூபினியான அகிலாண்டேஸ்வரி… அவளது வார்சடை சிலிர்ப்பில் சூரியன் நெருப்புக் கிரணங்களால் வளர்கிறான்… அம்மு அம்மேய்… சூரிய கிரணத்தின் பொன்னொளி நடுவே அம்மு அம்மா இறங்கி வருகிறாள். மெல்ல மெலிதாக. தொட்டில் ஆட்டும் மென்மை ஊஞ்சலில் அம்மு அம்மா தவழ்ந்து வருகிறாள்… அருகில், அருகில், தொட்டு அருகில்… என்ன இது மனைவி சுப்புலக்ஷ்மியா, இல்லை… ராணி குழந்தையுடன் நிற்கிறாள்!’

இந்த ராணி யார்? குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட வேலப்பன் என்ற பத்து வயது சிறுவனுக்குப் புகலிடம் கொடுத்து வளர்த்து வருகிறார் குருஸ்வாமி. பிராயமானதும் அவனுக்குத் தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவரின் பண்ணையில் வேலை வாங்கித் தருகிறார். அவனோ அந்த நண்பரின் தங்கையைக் காதலித்து அவளை இழுத்துக் கொண்டு வருகிறான். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தன் தோப்பிலேயே வைத்துக் கொள்கிறார். இதன் காரணமாக, நண்பனையும் பகைத்துக் கொள்ள வேண்டி வருகிறது. இதற்குப் பிறகுதான் நாவலின் அடுத்த motif துலக்கம் கொள்கிறது. வேலப்பன் தொழிற்சங்கத்தில் சேர்ந்து தலைவன் ஆகிறான். கூடவே குடியும் ரவுடித்தனமும் சேர்கிறது. தன்னுடைய செல்வத்தையும், ஆடம்பரத்தையும், கௌரவத்தையும், உற்றார் உறவினரையும், பெரிய படிப்பையும் துறந்து விட்டு கீழ்த்தட்டு மனிதனான வேலுவுடன் ஓடி வந்த ராணியை அடித்து உதைக்கவும் தொடங்குகிறான் வேலு. சமயம் கிடைக்கும் போதெல்லாம் குருஸ்வாமியை அவமானப்படுத்துகிறான். கள்ளச்சாமி என்கிறான். ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தின் போது குருஸ்வாமியின் மீது பெரிய செங்கல்லை எடுத்து வீசிக் காயப்படுத்துகிறான். துரோகம் என்பதன் ஒட்டு மொத்த உருவமாக மாறுகிறான் வேலப்பன். இங்கே திரும்பவும் நாம் ஜெனேயிடம் போக வேண்டும். அன்பினால் வாழ்பவன் ஞானி. ஆனால் அன்பைத் தேர்ந்தெடுப்பது சுலபம். துரோகத்தை ஒருவன் தன் மனமறிந்து தேர்ந்தெடுக்க முடியுமா? அந்த வகையிலே அவன் அன்பைத் தேர்ந்தெடுத்தவனை விட ஒருபடி மேலே போகிறான். அன்பினால் வரும் பெருமையையும், கௌரவத்தையும், அதிகாரத்தையும், மேன்மையையும் நிராகரிப்பதன் மூலமாக அது அவனுக்கு சாத்தியமாகிறது. வேலப்பனா? குருஸ்வாமியா? துரோகமா? அன்பா? எது மனித தர்மம்? இரண்டும்தான் என்கிறது கிருஷ்ணப் பருந்து.
மூன்றே மூன்று வரிகளில் கதையின் போக்கையே தடம் மாற்றி விடும் நாவலின் முடிவு பற்றியும் பேச நினைக்கிறேன். ஆனால் அதை நீங்களேதான் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் மிக முக்கியமான அந்தப் பகுதியை இங்கே விவாதிக்காமல் விடுகிறேன்.
ஆ. மாதவனின் பாத்திரங்களில் விளிம்பு நிலை மக்கள் மட்டும் அல்லாமல் மனிதனின் நேசத்துக்குரிய பிராணிகளும் கூட முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. 1966-ம் ஆண்டு மாதவனின் 32-வது வயதில் திருவனந்தபுரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கிறது. அதற்குச் சென்றிருந்த எழுத்தாளர் கோஷ்டியில் இருந்த சுந்தர ராமசாமி அதுவரை திராவிடப் பத்திரிகைகளிலேயே எழுதி வந்த மாதவனைப் பார்த்து மலையாள இலக்கியப் பரிச்சயம் கொண்ட அவர் தாமரை, தீபம் போன்ற பத்திரிகைகளில் இன்னும் எதார்த்த வகைக் கதைகளை எழுதினால் என்ன என்று கேட்ட போது, அதையே சவாலாக எடுத்துக் கொண்டு தீபத்தில் எழுதிய கதை பாச்சி. பாச்சி செத்துப் போனாள் என்று துவங்கும் அந்தக் கதையில் பாச்சி ஒரு தெருநாய் என்று தெரியவே எனக்குப் பாதிக் கதை ஆகிப் போனது. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான இது ஆ. மாதவன் இலக்கியத்தரமாக எழுத முனைந்து எழுதிய முதல் கதை!
பறிமுதல் என்று ஒரு கதை. நாம் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது டிக்கட்டுக்குக் காசு குறைகிறது என்று சொல்லிப் பணம் கேட்பார்கள் அல்லவா? அந்தத் தொழில் செய்பவன் அப்புக் குட்டன். அவன் ஒரு ஆளை மடக்கி, ‘யாரது? பூஜப்புரை குஞ்சு பிள்ளையல்லியோ நீங்கள்?’ என்று ரொம்ப நாள் பழகியவன் போல புளித்த சிரிப்பு சிரித்துக் குசலம் விசாரிக்கிறான். ஆள் பூஜப்புரை குஞ்சு பிள்ளை அல்ல என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஏரியா பெயரைச் சொல்லி விசாரிக்கிறான். அதுவும் இல்லை என்று ஆகிறது. ‘பிள்ளைக்கு ஆள் மாறிப் போச்சு, எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு’ என்று சொல்லிக் கிளம்பப் பார்க்கிறார் அந்த ஆள். அப்போதுதான் அப்புக் குட்டனின் முடிவுரை நடத்தப்படும். அது:
‘அது போகட்டும். நான் பூஜப்புரை குஞ்சு அண்ணன் ஆக்கும்னுதான் கூப்பிட்டது. காரியம் ஒண்ணும் வலுதாயிட்டு இல்லே. இங்கே, சாலைக்கு ஒரு காரியமாயிட்டு வந்தேன். பஸ்ஸுக்கு ஒரு அம்பது பைசா குறையுது. நீங்க ஆரோ ஆகட்டும். ஒரு செறிய உபகாரம் செய்தா கொள்ளாம். வேறே யாரிட்டையாவது கேக்க நாணம் தோணுது. நம்பளைப் போல, சொந்த நாட்டுக்காரங்களானா விஷயம் மனசிலாகும்…’
அந்த ஆள் பாக்கெட்டைத் தடவி, அசடு வழிய இருபதோ, முப்பதோ, பையில் மிஞ்சியிருக்கும் பைசாவைக் கொடுத்து விட்டு ’வரட்டுமா?’ என்று விடை கேட்டுக் கொண்டு போகிறார். அப்புக் குட்டனுக்கு ஒருநாள் அப்படி யாரும் மாட்டவில்லை. வழியில் சூதாடுபவர்களைப் பார்க்கிறான். ஆட்டத்தில் தயவு தாட்சண்யம் இல்லாமல் தோற்பவனிடமிருந்து அஞ்சு பத்து என்று பணத்தைப் பறித்துக் கொள்கிறான்கள்; ஆனால் நாலணா எட்டணா வயத்துப்பாட்டுக்குக் கெடச்சா போதும்னிருக்கிற நம்மெ கிட்ட மட்டும், கடவுளு ஆளெ அனுப்ப மாட்டாரு என்று யோசித்தபடி நடக்கிறான். ஒன்றுமே தோன்றாதவனாக ஸ்ரீ குமார் தியேட்டர் வழியாகத் தம்பானூர் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் பக்கமாகப் போகிறான். ‘சே, என்ன பொழைப்பு’ என்று வாழ்க்கையே வெறுத்தது. வயிற்றினுள் பசி காந்தலாகக் கவிந்திருந்தது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. தெருக் குழாய்த் தண்ணீரை எத்தனை தடவைதான் குடிக்க முடியும்? பட்டினி புதிதல்ல என்றாலும், இன்று எதுவும் எங்கும் இல்லை என்ற நினைவின் வாதனையில் அம்போ என்று சங்கடமாக உதைத்தது.’
வயிற்றுக் காந்தலில், மனதின் விரக்தியில், அலைச்சலின் சோர்வில், கொஞ்ச நேரம் தூக்கம் வராத வாதனை குமைந்தது. எண்ணிக் கொண்டிருக்க எதுவுமில்லை. குடும்பம் இல்லை. வீடு இல்லை. வகை இல்லை. செய்து முடிக்கவும் எதுவுமில்லை. அதனால் மனதில் எண்ணங்கள் இல்லை. பசி முக்கியம்… அப்போது அந்தப் பக்கம் ஒரு பெண் வருகிறாள். அவளோடு வந்த நாலு கச்சடா ஆட்களுக்கு யார் அவளிடம் முதலில் செல்வது என்ற தர்க்கம். அவளை யார் என்று விசாரிக்கிறான் அப்புக் குட்டன்.
‘நானா, அட்றசில்லே. கேர் ஆப் மாடத் தெரு. இந்தா பாத்தேரா, இருட்டிலெ தெரியுதா? இருவத்தி ரெண்டு ரூபா. மூணு பேறா தந்திட்டானுக. இந்த எச்சில் இலைக்கு’ என்று சொல்லும் அவள் அவனிடம் ஒரு உபகாரம் கேட்கிறாள். அவளிடமிருக்கும் 22 ரூபாயை அப்புக் குட்டன் வைத்திருந்து மூவரையும் அனுப்பி விட்டு வந்து அவள் கேட்கும் போது கொடுக்க வேண்டும். ஏனென்றால், ‘தடிமாடப் பயக்கொ, செலப்போ, சங்கதி முடிஞ்சதும், என் கையிலெ உள்ளதெப் புடுங்கிக் கிட்டுப் போயிருவானுக. நீங்க அந்த இருட்டு வாக்கிலெ அனங்காமெ இருந்தா போதும். ஒடுக்கம், வாச்சரையும் ஒரு நடை கவனிச்சுக்கிடுதேன். இந்தாரும்…’
அப்படி அந்த வேசி கொடுத்த 22 ரூபாயை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுகிறான் அப்புக் குட்டன்.
ஆ. மாதவனின் விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் இடம் பற்றிய ஒரு வர்ணனை - பதினாலு முறி என்ற கதையில்: ‘ராத்திரியும் இல்லாத பகலும் இல்லாத எடம். நெடுக எருமைக் கொட்டில். நாப்பது அம்பது மாடுக இருக்கும். கறவக்காரனும், சுமட்டுக்காரன்களும், பேரீச்சம்பழக்காரனும், சாய அடிப்பு குட்டன் பிள்ளையும், பூ கட்டுகிற நாணியும், ரேஷன் கடை உன்னியும், எல்லாரும் அங்கேதான் தாமசம். ஆக ஒரு நெடுந்திண்ணை. ஒவ்வொரு குச்சு சாய்ப்பு, உள்ளார அவ்வளவுதான் வீடு. ராத்திரிக்கு எல்லா வீட்டு ஆம்பிளைக்கும் திண்ணையிலேதான் படுக்கை. ஒவ்வொருத்தனும் ராத்திரி ஒவ்வொரு நேரம் வருவான். கொசுவுக்கு நெருப்பு குண்டு புகையிருந்தாலும் கொசு ராகம் நொய்யென்று முழங்கும். வைக்கோலும் சாணியும் கலந்த மணம் வேற. கறண்டு விளக்கு கிடையாது. கிணறு கிடையாது. முக்குத் திருப்பதிலே தான் குழாய் இருக்கிறது. ராத்திரி குளிக்கிறது, துவைக்கிறது, கஞ்சிக்குத் தண்ணீர் எடுக்கிறது எல்லாம் அங்கேதான். ராத்திரி முன்சிபாலிட்டிக்காரன் வர மாட்டான். அதனாலே வெளிக்குப் போய் விட்டு, செய்ய வேண்டியதைச் செய்யிறதும் குழாயடியிலேதான். காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம், புல்லுக்கட்டு விக்கிற சந்தை, ஓலைப்புரை. புல்லுக்காரி செல்லம்மா ஒருக்க யாரோ ஒருத்தன் கூட ஒளிஞ்சிருந்தா. எப்பவும் அந்தக் கதைதான். செல்லம்மா இல்லாட்டி காளி. அவ இல்லியானா, கறவை. வரம்பு மொற இல்லே. இல்லையும் காட்டி எதுக்குத்தான் வரம்பு முறை இருக்கு?’
காமம், வன்முறை, துரோகம் என்ற motif-களில் காமத்தை முகத்தில் அறையச் சொல்லும் ஒரு கதை பண்பாடு. புதுமைப்பித்தனின் பொன்னகரம் பற்றிப் பலரும் சொல்வார்கள். அதை விட வலுவான கதை ‘ பண்பாடு.’ சாலைக் கடையின் ஒரு திண்ணையில் வந்து சேர்ந்து கொள்கிறாள் ஒரு தொழுநோய்க்காரி. முகம், காதுகள், மூக்கு, கன்னப் பகுதிகள் என்று முற்றிப் போன குஷ்டம். அவள் அருகே அலுமினியக் குவளை, நெளிந்து போன தட்டு, ஒரு காகித விசிறி, இனியும் என்னவெல்லாமோ கண்டான் கிண்டான் காரியங்கள். அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த யார் யாரோ என்னவெல்லாமோ செய்கிறார்கள். போலீஸ் கூட அவளை அகற்ற முயற்சிக்கிறது. ஒருநாள் அவளை அந்த இடத்தில் காணோம். கொஞ்ச காலம் கழித்து அவள் இன்னொரு இடத்தில் தென்படுகிறாள். ‘இப்போழுது அவள், இன்னுங் கொஞ்சம் விகாரமாக நோய் முற்றிய அவலத்தில்… அவள் பக்கத்தில் – பழைய துணி விரிப்பில் – கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டு புதிய பச்சைக் குழந்தை ஒன்று அழுதவாறு…’
ஆ. மாதவன் நம் தமிழின் ஆகப் பெரிய பொக்கிஷம். நான் ஆரம்பத்தில் சொன்னது போல் ஜான் ஜெனேயை விடவும் சிறந்த கலைஞன். அவரைக் கொண்டாடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

