புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அசோகமித்திரன்- 2

பேண்டெல்லாம் என்ன கரி என்று கேட்பவர்களிடம் சைக்கிள் செயின் மசி துணியில் பட்டு விட்டது என்கிறான் ராஜ்கோபா

Updated On :24 மே 2015, 4:49 am

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }பே
ண்டெல்லாம் என்ன கரி என்று கேட்பவர்களிடம் சைக்கிள் செயின் மசி துணியில் பட்டு விட்டது என்கிறான் ராஜ்கோபால்.  சாஹினி ஸ்டுடியோவில் சாப்பாட்டுக்காக அங்கும் இங்கும் அலைகிறான்.  அந்த அத்தியாயத்தில்தான் ரெட்டியார் படம் எடுக்க முடியாமல் ஊரை விட்டே ஓடி விட்டார் என்ற செய்தி போகிற போக்கில் சொல்லப்படுகிறது.   அங்கிருக்கும் சிட்டி என்ற நண்பனிடம் தான் நாள் பூராவும் பட்டினி என்கிறான்.  இயக்குநர் ராம்சிங்கின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  ராம்சிங்கின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் நூறு நாட்கள் ஓடியிருந்தன.   சிட்டி என்பவனிடம் தன்னை ராம்சிங்கிடம் அறிமுகப்படுத்தச் சொல்கிறான் ராஜ்கோபால்.  அந்த நேரம் பார்த்து அங்கே வரும் ஜயசந்திரிகா ராஜ்கோபாலின் மூக்கைப் பிடித்துக் கிள்ளி விளையாடி விட்டுப் போகிறாள்.  எல்லோரும் இதைக் கவனிக்கிறார்கள்.  குறிப்பாக இயக்குநர் ராம்சிங்.  பலரும் சூழ்ந்திருக்கும் இடத்தில் யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது ஜயசந்திரிகாவின் இயல்பு என்று அவர்களுக்குத் தெரியாதே என்கிறார் அசோகமித்திரன்.  அதற்கு மேலும் ராஜ்கோபாலுக்கு வாய்ப்பு கொடுப்பாரா இயக்குநர்?  அதுவும் கை விட்டுப் போகிறது.  பட்டினி.  யாரோ எல்லோருக்கும் லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தத் தள்ளுமுள்ளுவில் ராஜ்கோபாலுக்கு லட்டு கிடைக்கவில்லை.  பசி வயிற்றைக் கிள்ளுகிறது.  சிட்டி ராஜ்கோபாலை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டுடியோ காரில் சாப்பிடக் கிளம்புகிறான்.  கௌடியாமட் அருகில் வீடு மாதிரி ஒரு உணவு விடுதி இருக்குமே?  ஆமாம்; பழனியாண்டி ஹோட்டல் என்கிறான் டிரைவர்.  ‘வண்டியை அங்கே விடுப்பா. ’  ‘உட்லண்ட்ஸே போயிடலாமே? ’ இது ராஜ்கோபால்.  இடையில் ராஜ்கோபால் சைக்கிளை விட்ட இடம் வருகிறது.  காரை அவசரமாக நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்கிறான்.  சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டலுக்கு வந்து விடுவதாகச் சொல்கிறான். 

ஆனால் அது அவன் நினைத்த கடை இல்லை.  பிறகு அவன் சைக்கிள் விட்ட கடையைத் தேடிக் கண்டு பிடித்துக் காசு கொடுத்து விட்டு சைக்கிளை எடுக்கிறான்.  வெகுநேரமாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டதால் சைக்கிள் சூடேறி இருக்கிறது.  இரு சக்கர டியூப்களும் வயதானவை.

பசி மயக்கத்துடன் மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கத்தைக் கடந்து மவுண்ட் ரோட்டை அடையும் போது கிட்டத்தட்ட சுயநினைவே இல்லை.  பழனியாண்டி ஹோட்டல் என்ற நிழல்தான் தெளிவற்றதாகத் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது.  லாயிட்ஸ் ரோட்டை நெருங்கும் போது அவனுக்குப் பழக்கப்பட்ட ஒலி வருகிறது.  ராஜ்கோபால் கீழே இறங்குமுன் சக்கரத்தை அழுத்திப் பார்க்கிறான்.  அது தட்டையாக இருக்கிறது.  சைக்கிளைத் தள்ளிக் கொண்டே பழனியாண்டி ஹோட்டலை வந்து சேர்கிறான். அங்கே சிட்டி இல்லை.  வீட்டுக்குப் போனால் ஆறிக் குளிர்ந்து போயிருக்கும் பழைய சாதம் கிடைக்கும்.  அப்பளம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.  பல்லால் கிழித்துத்தான் தின்ன வேண்டும்.  பழனியாண்டியில் ராஜ்கோபாலால் அசைவம் சாப்பிட முடியாது என்று உடுப்பி ஹோட்டல் போகிறார்கள்.  இடையில் அங்கே வந்து சேரும் நண்பன் மாணிக்கராஜ் ராஜ்கோபாலின் சைக்கிளை வாங்கிக் கொண்டு ‘பொட்டலம்’ வாங்கப் போகிறான்.  காற்று இல்லாத டயர்.  ‘பஞ்சர் ஒட்டிக் கொள்கிறேன். ’  பொட்டலம் வாங்கும் ஜோர்.  பொட்டலத்தைப் புகைத்ததும் ராஜ்கோபாலின் துயரம் அத்தனையும் பீறிட்டு அடிக்கிறது.

Story image

அசோகமித்திரனிடம் நான் வியக்கும் விஷயம் என்னவென்றால், கஞ்சாவிலேயே மூழ்கிக் கிடப்பவன் எப்படிப் பேசுவானோ, எப்படி நடந்து கொள்வானோ அப்படி எழுதியிருக்கிறார்.  ராஜ்கோபாலின் தயக்கம், தடை எல்லாம் காணாமல் போய் விடுகிறது.  ‘போடா பேமானி! என்னை எத்தனை வருஷமாத் தெரியும்?  ஒரு பிச்சைக்காசு கடன் தர நாலு நாழி யோசிக்கிறே! என்னைச் சாப்பிட வரச் சொல்லிட்டு நீ தின்னுட்டு வந்து நிக்கிறே! எனக்கு சிபாரிசாடா பண்ணறே சிபாரிசு, புளுகுணிப் பயலே! என்னை வைச்சுண்டே நீ சிபாரிசு பண்ணினா எந்த முட்டாள்டா காது கொடுத்துக் கேப்பான்! ’

மற்ற இருவருக்கும் போதை தெளிந்து விடுகிறது.  ‘இப்போ உன் வீட்டுக்கு டாக்ஸியிலே போயிடலாம்.  சாயங்காலமா நான் உன் சைக்கிளைக் கொண்டு வந்திடறேன். ’  ‘அதைக் கொண்டு போய் சாக்கடையிலே போடு! ’ ராஜ்கோபாலுக்கு வெறியே வந்து விடுகிறது. 

‘தெருவுக்கு வந்தவுடன் ராஜ்கோபால் கைகளை உயர்த்தினான்.  மூச்சுப் பிதுங்கும் குமட்டல் ஒன்றின் காரணமாக வாந்தி எடுத்தான்.  கணக்கற்ற முறை காய்ந்து ஆறிப் போன கடலை எண்ணெய் பஜ்ஜியும் தோசையும் பீறிக் கொண்டு வந்து சிந்தின.  அதை நக்க ஒரு சொறி நாய் வந்தது.’

மூச்சு முட்டியது எனக்கு.  இந்த இடம் வந்ததும் ஒருமுறை தாந்தேயின் டிவைன் காமெடியின் நரகத்தைப் படித்தேன்.  தாந்தேயும் வர்ஜிலும் கடந்து செல்லும் நரகம்.  ஆனால் அந்தக் காவிய கவிஞர்களுக்கு சொர்க்கம் என்ற ஒரு இறுதி நம்பிக்கை இருந்தது.  ஆனால் நவீனத்துவத்தின் உச்சபட்ச கலைஞனான அசோகமித்திரனின் உலகில் ஆன்மீகத்தின் நம்பிக்கை ஒளி தெரிவதில்லை.  மாறாக அங்கே வருவது ஒரு சொறிநாய்.  வீட்டுக்குப் போய்ச் சேரும் ராஜ்கோபால் அம்மாவைக் கட்டிக் கொண்டு ‘நான் சீரழிஞ்சு போயிட்டேம்மா! ’ என்று கதறுகிறான்.  அவள் மனத்தில் ‘எங்கோ முட்டிண்டு என்ன பிரயோசனம்?’ என்ற ஒரு சிறு குரலாவது ஒலித்திருக்க வேண்டும்.  ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் அவன் முதுகைத் தடவிக் கொடுக்கிறாள். 

அதோடு ராஜ்கோபால் நாவலில் காணாமல் போகிறான்.  ராம ஐயங்காரின் கதை வந்து விடுகிறது.  ராஜ்கோபாலைப் பற்றி யாரோ யாரிடமோ ஒரு சேதியைச் சொல்கிறார்கள்,  ராஜ்கோபாலும் நடிகை ஜயசந்திரிகாவும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக. 

ராம ஐயங்கார் கோடீஸ்வரர்.   நாற்பது லட்சத்தில் ஹிந்திப் படம் எடுப்பவர்.  (கதை நடக்கும் போது சிமெண்ட் விலை கள்ள மார்க்கெட்டில் ஒரு மூட்டை பதிமூன்று ரூபாய்!) ராம ஐயங்கார் எதற்காவது அடிக்கல் நாட்டினால் ஜனாதிபதியிலிருந்து பிரதம மந்திரி வரை வாழ்த்து அனுப்புகிறார்கள்.  அப்படிப்பட்ட ஐயங்காரின் வாழ்க்கையும் நடராஜன், ராஜ்குமார் போன்றவர்களின் வாழ்க்கையைப் போலவே துயரத்தின் நிழல் படிந்ததாகவே இருக்கிறது.  ராம ஐயங்கார் தன் மகன் பாச்சாவிடம் பேசும் நீண்ட பேச்சை உலகின் மகா காவியங்களில் மட்டுமே நீங்கள் காண முடியும். 

எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கரைந்த நிழல்கள் என்ற இந்தச் சிறிய நாவலைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.  அசோகமித்திரனிடம் நான் கண்ட இன்னொரு அற்புதம், பெண்களைப் பற்றி இவர் அளவுக்குக் கருணையும் வாத்சல்யமும் அன்பும் பீறிட எழுதிய இன்னொருவரை என்னால் சொல்ல இயலவில்லை.  அப்படியே காட்சிப் படிமங்களாகவே என் மனதில் தங்கியிருக்கின்றன அந்தப் பகுதிகள்.   விழா மாலைப் போதில் என்ற ஒரு குறுநாவல்.  1990-ஆம் ஆண்டு அது பிரசுரமான போதே படித்தது.  அதற்குப் பிறகு படிக்கவில்லை.  ஆனால் அதில் வரும் ஒரு பிரபலமான நடிகை சினிமாத் துறையில் நுழைவதற்கு முன் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் ஒரு அம்மன் சிலைக்கு முன்னே நின்று அழும் காட்சி என்னால் மறக்க முடியாத ஒரு படிமம்.  அனாதையாக நிற்கும் இந்தியப் பெண்கள் அத்தனை பேரின் உருவகம் அவள்.  இருவர் என்று ஒரு குறுநாவல்.  அதில் வரும் வாலா என்றொரு பெண்.  இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் இனத்தின் குறியீடு.  இளம் வயதிலேயே கணவனை இழந்ததால் தலைமயிர் மழிக்கப்பட்டு நார்மடி கட்டிக் கொண்டிருப்பவள்.  சகோதரன் வீட்டில் வாழ்கிறாள்.  ஆனால் அங்கே அவளைக் கொடுமைப்படுத்துபவர்கள் யார் என்றால், அவளுடைய அம்மாவும், மன்னியும்.  வாலாவின் கணவன் தனம் என்ற ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டிருந்தான்.  கதையில் அவள் ஒரு அற்புதமான காவிய நாயகியாக படைக்கப்பட்டிருக்கிறாள்.  வாலாவின் மகன் விசு தனத்தைப் பார்க்க அவ்வப்போது செல்வதுண்டு.  கொஞ்ச நாள் போகாமல் இருந்து விட்டான்.  எனவே சிறுவனைப் பார்க்க அவன் வீடு தேடி வண்டி வைத்துக் கொண்டு வருகிறாள் தனம்.  அப்போது வாலாவின் அம்மா தனத்தை வரவேற்கும் காட்சி இது:

Story image

‘பாவி! நீ நன்னாயிருப்பியா?  உன் குடும்பம் விளங்குமா?  நீ உருப்படுவியா?  என் பொண்ணை மொட்டை அடிச்சு மூலையில் உக்கார வைச்சயே?  நீ நன்னாயிருப்பியா?  தங்கமாயிருந்தவனை சொக்குப் பொடி போட்டு மயக்கிக் காசு பணமெல்லாம் கறந்துண்டதோடு இல்லாமே அவன் உசிரையும் பிடுங்கிண்டியே? உன் குலம் விளங்குமா? நீ நாசமாப் போக! புழுத்துப் போக! கணுக்கணுவா அழுகிப் போக! நாறிப் போக!  வாய்க்கரிசிக்கு வழியில்லாம நாதியத்துப் போக! என் வயித்திலே கொள்ளியை வைச்சயே!  உன் மூஞ்சியிலே கொள்ளியைப் போட! அவனை அடியோட அழிச்சதுமில்லாம இப்ப என் வீட்டு வாசலை மிதிக்க வறயா! தட்டுவாணிப் பொணமே! தேவடியாப் பொணமே! நீ நாசமாப் போக! நீ கட்டேல போக! விளக்குமாத்தைக் கொண்டாடி, இந்தச் சிறுக்கியைத் தலையிலே அடிச்சுத் துரத்தலாம்! என்னை வயிறெரிய வைச்சயே! என் பொண்ணை வயிறெரிய வைச்சயே! நீ என்ன கதிக்குப் போகப் போறேடீ!  தேவடியா முண்டே! இங்கே ஏண்டி வந்தே? அப்பனை மயக்கி முழுங்கியாச்சு, பிள்ளையையும் முழுங்கிடப் பாக்கறயாடீ? நீ உருப்படுவியாடீ? ’

வாலா வந்து தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்.  சிறுவனைப் பார்த்து விட்டுத் தெருவிலிருந்தபடியே புறப்பட்டு விடுகிறாள் தனம்.  விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வரும் வாலாவின் அண்ணன் வாலாவை அடிக்கிறான்.  அவள் குறுகிக் கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது.  அதையும் கவனியாமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடிக்கிறான்.  அண்ணா அண்ணா என்று வாலா முனகுகிறாள்.  பிறகுதான் அம்மா வந்து அவனிடம் அவள் தூரம் என்று சொல்கிறாள்.  ‘இதை முன்னியே சொல்லறதுக்கு என்னம்மா? ’ ‘நீ தான் சொல்ல விடலியேடா. ’

தூரமாக இருக்கும் போது தொட்டு அடித்து விட்டதால் அண்ணன் கிணற்றுக்கு அருகே சென்று அமர்கிறான்.  ‘செத்த வீட்டுக்குப் போய் வந்த மாதிரி வந்ததும் வராததுமா குளிக்க வேண்டியிருக்கு’  என்று சொல்லிக் கொண்டே அவன் மனைவி அவனுக்குக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து விடுகிறாள். 

அடுத்து வாலாவின் அண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் நடக்கும் உரையாடல் சென்ற நூற்றாண்டில் குடும்பம் என்ற அமைப்பின் படுபயங்கரமான க்ஷீணநிலையைக் காண்பிக்கிறது. 

ஒரு ரகசிய பாவனையுடன் அவன் மனைவி ‘வந்தவ இவளுக்காக வரலை.  அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா.’

‘எது? அந்த பிரம்மஹத்திக்கா?’

‘ஆமாம்.  வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கிறா, இதுவும் தழுவிக் குலாவறது.  கொஞ்ச நாழியான்னா அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.’

அண்ணனிடம் வாங்கிய அடியில் ஜன்னி வந்து செத்துப் போகிறாள் வாலா.  தனத்தின் கதை அதற்குப் பிறகு தொடர்கிறது.  நோபல் பரிசு பெற்ற எத்தனையோ ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்களின் அத்தனை கதைகளையும் விட இந்த இருவர் என்ற குறுநாவலின் அடர்த்தியும் காவிய நயமும் மிகவும் பெரியது.

கரைந்த நிழல்கள் நாவலை தி.நகரில் உள்ள நடேசன் பார்க்கில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்துதான் எழுதியதாக அந்த நாவலில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன்.  அந்த பெஞ்ச் எனக்குத் தொழ வேண்டிய இடமாகத் தோன்றுகிறது.   சொல்லிக் கொண்டே போகலாம்.  அசோகமித்திரனின் எழுத்தை ஒன்று விடாமல் தேடிப் படியுங்கள்.  சர்வதேச அளவிலேயே அசோகமித்திரனைப் போன்ற அற்புதமான கலைஞர்கள் அரிது.   இந்த வார்த்தையை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  உலகின் அதியற்புதமான கலைஞன் ஒருவன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.   ஆஸ்திரியாவிலிருந்து எல்ஃப்ரீட் ஜெலினெக் என்ற எழுத்தாளருக்குச் சில ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு கிடைத்தது.  ஓரான் பாமுக்குக்கும் அப்படியே.  கார்ஸியா மார்க்கேஸ், மரியோ பர்கஸ் யோசா என்று பல பிரபலமான எழுத்தாளர்களும் நோபல் பரிசு பெற்றவர்கள்.  அவர்கள் எல்லோரையும் விட அப்பரிசுக்குத் தகுதியானவர் அசோகமித்திரன்.  இப்படிச் சொல்வது கூட அசோகமித்திரனின் தகுதிக்குக் குறைவு தான். அவர் இந்த நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.