எழுத்தின் வழியே சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. ஒரு சங்கீதக் கலைஞன் ராகத்தின் வழியே, தான் உணர்ந்ததை சங்கீதமாக வெளிப்படுத்துகிறான். அதை ரசிகன் உணர்வது ரஸம். ரஸம் என்றால் சாரம். ரஸத்தை எப்படியெப்படியெல்லாமோ விளக்கியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ரஸம் என்றால் பரவசம். Bliss. தெய்வத்தை தர்ஸிப்பது. பிரம்மனை உணர்தலே ரஸம் என்கிறது தைத்திரீய உபநிஷதம். எது எப்படியிருந்தாலும் நம்மையும் மறந்து பூமியிலிருந்து மேலெழுந்துப் பறக்கும் நிலை… இப்படி எதை எழுதிப் பார்த்தாலும் பரவசத்தை சொற்களால் விளக்குவது கடினம். வாழ்நாள் முழுவதும் கடவுளையே நினைந்து நினைந்து உருகும் பக்தனுக்குக் கடவுள் காட்சியளித்தால் அவனுடைய மனநிலை அப்போது எப்படி இருக்கும்?
பிஸ்மில்லா கான் இளைஞனாக இருந்த காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கர்ப்பக்கிரஹத்தில் தனியாக ஷெனாய் வாசித்துக் கொண்டிருப்பார். அப்போது ஒருநாள் அவர் அருகே வந்து இன்னும் வாசி, இன்னும் வாசி என்று விஸ்வநாதர் சொன்னபோது பிஸ்மில்லா கானுக்கு என்ன உணர்வுகள் ஏற்பட்டதோ அதுதான் பரவசம். கான் சாஹிப் அது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.
பிஸ்மில்லா கானின் இசையை ஒருவர் கேட்கும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகிறதோ அதேதான் தி.ஜானகிராமனின் எழுத்தைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது. எழுத்தால் இயலாததை சங்கீதத்தால் வெளிப்படுத்துகிறான் கலைஞன் என்றால் அந்தக் கலைஞனின் பரவச அனுபவத்தைத் திரும்பவும் எழுத்தில் கடத்துகிறார் தி.ஜா. என்று சொல்லலாம்.
தி.ஜா.வை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? ரஜினிகாந்த் கூட தனக்குப் பிடித்த எழுத்தாளர் தி.ஜா. என்று சொல்லியிருக்கிறார். காரணம், தி.ஜா. இந்த வாழ்க்கையையே ஒரு கலையாக ரசித்தார்; கொண்டாடினார். அவர் வளர்ந்த தஞ்சை மண்ணும் அவரது குடும்பமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. தந்தை, பாட்டனார் வழியில் அவரது சுவாசமே சங்கீதமாக ஆகியிருந்தது. சங்கீதத்தை விரும்பாதார் யார்? ஆனால் மற்றவர்களுக்கும் தி.ஜா.வுக்கும் வித்தியாசம் என்னவென்றால் தி.ஜா. பிதுரார்ஜிதமாகத் தான் பெற்ற சங்கீதத்தின் கண் கொண்டு இந்த உலகத்தைப் பார்த்தார். உதாரணமாக, தி.ஜா. தஞ்சாவூருக்கு வரும் போது அவரைத் தவறாமல் சந்திக்கும் தஞ்சை ப்ரகாஷ் இப்படி எழுதுகிறார்:
‘வெண்ணாற்றங்கரை போவோம். ஹோவென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலாமுற்றத்தில் காலத்தை வென்ற காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித் தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு ஸ்லோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜீவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார். கொண்டி ராஜபாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத்தான். குழந்தை சந்தோஷந்தான். ஆச்சர்யம்தான். ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பக்ஷந்தான். வாழ்க்கைதான் அவரது ருசி. மழை பெய்து கொண்டிருக்கும் வராந்தாவில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்து கொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும். இரவு இரண்டு மணி மூன்று மணி என்று பேசிக் கொண்டிருப்போம். தூக்கம் அண்டாது. மூன்று மணிக்குக் குஞ்சாலாடு சாப்பிட்டுப் பால் குடிப்போம். ஜீரணிக்கும்.’
வெங்கட் சாமிநாதனுடனான பேட்டியிலும் வாழ்க்கையையே இசையாகக் காணும் மனோபாவம் பற்றிப் பேசுகிறார் தி.ஜா.
‘மன்னார்குடி சுவாமிநாதையர்னு ஒருத்தர். அவர்கிட்டேயும் படிச்சேன். அப்புறம் உமையாள்புரம் சுவாமிநாதையர்னு மகா வைத்யநாதய்யரோட சிஷ்யர். அவர்கிட்ட கொஞ்சநாள் படிச்சேன். தியாகராஜர் பரம்பரையில வந்தவர்னு அவரைச் சொல்வார்கள். அவர்தான் இந்த சுருதி… வாழ்க்கையை பாக்கறபோது… எல்லாம்… வாழ்க்கையே ஒரு இசை மாதிரி அவர் பாத்துண்டு இருப்பார். அவர்கிட்ட நான் அடிக்கடி பாத்துருக்கேன். அதுக்கு முன்னாடியே என் தகப்பானார்கிட்டேயும் இந்தக் குணம் உண்டு. எதைப் பார்த்தாலும் அதிகமான, முரட்டுத்தனமா பேசறது, முரட்டுத்தனமா சத்தங்ளைக் கேக்கறது, இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.’
அதே பேட்டியில் ‘மோகமுள்’ளில் வரும் பாபுவின் தகப்பனார் வைத்தியைத் தன்னுடைய தகப்பனாரைக் கொண்டே உருவாக்கியதாகக் கூறுகிறார். மேலும் தி.ஜா.:

‘அந்த உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் ரொம்ப நுணுக்கமான செவி கொண்டவர். அவர் சுதி சேக்கறதுக்கு ஒரு மணி நேரமாகும். சுதி சேக்கத் தெரியாதுன்னு அர்த்தமில்லே. சுதில அவருக்கு அத்தனை லயிப்புண்டு. சரியா நூறு பெர்செண்ட் வர்ற வரையில் தம்பூராவில சுதி சேத்துண்டே இருப்பார். அவ்வளவு இம்மி குறையாம இருக்கணும் அவருக்கு. ஒரு fantastic செவி அது. அவர் பேசிண்டேயிருக்கறப்ப ஏதாவது சத்தம் கேட்டதுண்ணா கவனிக்கச் சொல்வார். பறவைகள் சப்தம், செக்கு சப்தம், யாராவது பேசற சப்தம், குழந்தை அழற சப்தம் – இதெல்லாம் கேட்டுண்டு இருக்கச் சொல்வார். அதாவது இந்த உலகம் முழுக்க ஒலி மயம், பேசறபோதுகூட பேசறவர்கள் எந்த சுதியில் பேசுகிறார்கள் – சுதி concept இருக்கே – சுதியப் பற்றி அடிக்கடி சொல்லிண்டே இருப்பார். இது வந்து எனக்கு ஒரு பெரிய விழிப்பா இருந்தது. எங்க பார்த்தாலும்… தாம்பாளம் விழறது… சமையல் உள்ள சத்தம் கேக்கறது… வாசல்ல மசியில்லாம வண்டி போகும் – இதையெல்லாம் கவனிக்கச் சொல்வார். உங்களுடைய basic note-லேருந்து எவ்வளவு தூரத்திலே இருக்கு என்பதையெல்லாம் பார்க்கச் சொல்வார். இது நமக்கு உள்ளுக்குள்ள இருந்த உணர்ச்சியை அதிகமா உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தது. பிறகு நான் சென்னைக்கு வந்தப்புறம் பத்தமடை சுந்தரமய்யர் என்பவர் கிட்டக்க, முத்துசாமி தீட்சிதருடைய கீர்த்தனைகள் பல பாடம் பண்ணினேன். அவரும் சங்கீதத்துல ரொம்ப ஆராய்ச்சி பண்ணினவர். உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் போலவே ரொம்ப நுணுக்கமான பிரக்ஞையும், நுணுக்கமான நாதப் பிரக்ஞையும் கொண்டவர். அவரோட பழகினதுனாலேயும் எனக்குப் பற்பல விஷயங்கள் தெரிந்தது. வாழ்க்கையப் பற்றி… சங்கீதத்தைப் பற்றி… வாழ்க்கையில் உள்ள அடிப்படையான தொடர்புகளைப் பற்றி அடிக்கடி என்கிட்ட பேசிண்டிருப்பார். அவர் என்னை ஒரு சீடனா கருதாமல் ஒரு நண்பனா கருதி எல்லாம் சொல்லிண்டு வருவார். அவர்கிட்டேயும் எனக்குப் பல நுணுக்கங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சது. நல்ல சங்கீதத்தை அனுபவிக்கத் தெரியறது என்கிறதுக்கு நாம் இறைவனுக்குக் கடமைப்பட்டிருக்கணும். அந்த மாதிரி ஒரு ஆற்றல் கொடுத்ததுக்கு. அதனால்தான்… of course சங்கீதத்தை அனுபவிக்கறது அதிர்ஷ்டம்தான்… நல்ல சங்கீதம் கேக்கறது…’
தி.ஜா.வின் இசை பற்றி சேதுபதி அருணாசலத்தின் அருமையான கட்டுரை ஒன்றில் தி.ஜா.வின் இசை ரசனை மற்ற எல்லோரையும் விட எப்படி வித்தியாசமானது என்பதை நான் எப்படி உணர்ந்தேனோ அப்படியே எழுதியிருக்கக் கண்டு வியந்தேன். பின்வருவது சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையிலிருந்து:
‘ஜானகிராமனின் இசை ரசனை வெறுமனே தொழில்நுட்ப அறிவைச் சார்ந்தது இல்லை என்பதை அவர் இசை குறித்து எழுதிய படைப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பெரிய மேதைகளிடம் இசை கற்றிருந்தாலும், நன்றாகப் பாடக்கூடியவராக இருந்தாலும் தன் மேதைமையை வெளிக்காட்டுவது ஜானகிராமனுக்குக் குறிக்கோளாக இருந்திருக்கவில்லை. அவருக்கு இசை என்பது வெறும் புற உலகைச் சார்ந்ததொரு சிற்றின்ப அனுபவமாக இருப்பதில்லை. அதைத் தாண்டிய – அக உலகம் முழுதும் விரியும் ஒரு பெரிய எழுச்சியாக இருக்கிறது. ஜானகிராமனை வசீகரித்த இன்னொரு பெரிய பிரம்மாண்டமான அனுபவம் இயற்கை. அந்த இயற்கையையும், இசையையும் ஒன்றாகவே பார்த்தார். அதனால்தான் பெரும்பாலும் அவருடைய இசை குறித்த வர்ணனைகள் இயற்கை சார்ந்ததாகவே, மலர்களை, பறவைகளை, இயற்கையின் பேரமைதியை நினைவூட்டுவதாக இருக்கிறது. இயற்கையின் முன்னால் ஒரு திறந்த மனதுடைய மனிதராகத் தோன்றும் பெரும் வியப்பு, இசை முன்னாலும் தோன்றுகிறது. அது வெறும் தொழில்நுட்ப அறிவால் மட்டும் வருவதல்ல.’
மேலும் சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் மற்றொரு முக்கியமான தகவலும் கிடைத்தது. தி.ஜா. அவர் காலத்திய சங்கீதக் கலைஞர்களைப் போலவே கச்சேரி செய்யும் அளவுக்கு ஞானம் உள்ளவராக இருந்த போதிலும் கச்சேரி செய்ய வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். ‘ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார். நாங்கள் நண்பர்களெல்லாம் கூடியிருக்கும்போது அவரைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஒருமுறை வானொலியில் மதுரை மணி ஐயர் கச்சேரிக்கு ஜானகிராமன் ஒரு அறிமுக உரையைப் போலப் பேசியிருக்கிறார். தஞ்சாவூரிலிருந்தபோது ஜானகிராமன் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்’ என்றார் ஆத்ரேயன். இவ்வாறாக தி.ஜா. பற்றி அவரது நண்பர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார் சேதுபதி அருணாசலம்.
மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் சங்கீதம் என்பது பணம் பண்ணும் விஷயமாக மாறி இருக்கிறது. ஆனால் தி.ஜா. குறிப்பிடும் சங்கீதம் என்பது சங்கீத மும்மூர்த்திகள் உபாசித்த சங்கீதம் போன்றது. அங்கே பணம், புகழ் போன்ற விஷயங்கள் எல்லாமே செல்லாதவை. அதன் காரணமாகவே தி.ஜா. கச்சேரிகள் செய்யவில்லை. இல்லாவிட்டால் அவர் பெயர் சங்கீதத் துறையிலும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆத்மார்த்தமான ஒரு கலையை மேடை போட்டு விற்பதா என்றே அவர் நினைத்திருக்கிறார். மோகமுள்ளின் ரங்கண்ணாவைப் பார்க்கும்போது சங்கீதம் பற்றிய தி.ஜா.வின் பார்வையை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தத் தொடருக்காக தி.ஜா.வின் அம்மா வந்தாள், மோகமுள், செம்பருத்தி போன்ற நாவல்களையும் அவரது சிறுகதைகளையும் படித்தபோது என் உணர்வு முழுவதும் சங்கீதமாகவே இருந்தது. உறக்கத்திலும் கூட சங்கீதமே மிதந்து கொண்டிருந்தது. எழுத்து எப்படி சங்கீதம் கேட்ட உணர்வைத் தரும் என்று யாரேனும் கேட்டால் அவர்களை தி.ஜா.வின் எழுத்தைப் படிக்கச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
கவிஞர் பெருந்தேவியின் இந்தக் குறிப்பு ஒரு உதாரணம்:
‘இரு மாதங்களாகத் தூக்கமில்லாத துயரம். தூக்கத்துக்குக் கண் செருகும்போது ஏதோ ஒரு புற, அகச் சப்தம் எழுப்பிவிடும். கூடவே, வலது மூளை இருபது திரைப்பக்கங்கள் திறக்கப்பட்ட பழைய கணினி போல சூடாகி விடும். வியர்வை கழுத்தை நனைக்கும். தூக்கத் தொந்தரவு என்பதைவிட தூங்குவது எப்படி என்பது மறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
மாலை சாய்ந்து இரவு வரும்போதே தூக்கம் குறித்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். வார்த்தைகள் நிற்காத வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னை மீறி, என்னுடையதில்லாமல். எப்படி நிறுத்துவதென்று புரியாத யோசனையும் வார்த்தைகளாகவே. காட்சிரூபமே கண்ணுக்கு எட்டாமல். செவிப்புலத்தின் சர்வாதிகாரத்தில் இருந்தேன். மருத்துவரின் எந்த மாத்திரையும் பயனளிக்கவில்லை.
சூடான பால், பாதத்தில் விளக்கெண்ணெய், வேலைக்காகவில்லை. பிராணாயாமமும் அமுக்கரா சூரணமும் கொஞ்சம் பயனளித்தன. ஆனால், கடைசியில் எனக்கு உதவியது தி. ஜானகிராமன்தான். செம்பருத்தியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல்நாள் கொஞ்சம் தூக்கம்வருவதுபோல் தெரிந்தவுடன், பகலில் ஒரு மணி, இரவில் தூங்கும்முன் ஒரு மணி என்று மாத்திரைபோல. நிதானமாக மிக நிதானமாக. ஒருவரி விடாமல். சிலவரிகளில் தேர்போல நின்று. ஒன்றி. தி.ஜா மொழியைப் பற்றி ‘இரகசியம்’ ஒன்று கண்டுபிடித்தேன். அவர் வார்த்தைகளைக் காட்சிரூபமாக மாற்றுவதில் வல்லவர்.
வாசிக்கும்போதே மொழி காட்சியாக மாற ஆரம்பிக்கும் மனதில். இதனால்தான் போலும், என்னில் நிற்காதிருந்த வார்த்தைகள் நிற்க ஆரம்பித்தன. ஒருவழியாகத் தூக்கத்தின் வசப்பட்டேன், கனவின் வசப்பட்டேன். இலக்கியத்தின் குணமாக்கும் சக்தியை, இறையின் அருளை அனுபவித்த ஒருத்தியின் சாட்சியம் போல, இங்கே சாட்சியம் கூறுகிறேன்.’
தி.ஜா.வின் எழுத்து ஏன் நம்மைப் பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதற்கு அவர் எழுத்திலிருந்து சில உதாரணங்கள் தருகிறேன்.
‘பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலிபெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிஷம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றி விட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன்வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ… ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா… என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறி விட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு.
பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக் கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக் கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக் கூட மனம் வராத கண்கள் திறக்க மறுத்தன. காலமும் இடமும் மறந்து அற்றுப் போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஒரு கணப் பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகி விட்டன.’ (மோகமுள்)
பிஸ்மில்லா கானின் ஷெனாயில் பைரவி ராகம்:
எனக்கு மிகப் பிடித்த பாடகரான பண்டிட் ஜஸ்ராஜின் குரலில் பைரவி ராகம்:
இப்படி, உள்ளமும் ஒலியும் ஒன்றாகி விடும் தன்மையைத்தான் தி.ஜா.வின் எல்லா எழுத்திலும் காண்கிறோம்.
பாபு ஏழு வயதிலிருந்தே கச்சேரி கேட்க ஆரம்பித்து விடுகிறான். தகப்பனார்தான் காரணம். காசில்லாமல் சங்கீதம் கேட்க தஞ்சாவூரை விட வேறு இடம் உண்டா என்ன? (இப்போது எல்.ஆர். ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்களையோ அல்லது அதுவே பரவாயில்லை என்பது போன்ற ஆபாசமான சினிமா பாடல்களையோதான் கேட்க முடிகிறது. இன்றைய தஞ்சாவூர் வேறு. தி.ஜா.வின் தஞ்சாவூர் நூறு ஆண்டுகளுக்கு முந்தியது!)
ஒரு தை மாதத்தில் பாபுவும் அவன் தகப்பனார் வைத்தியும் ராமலிங்கர் திருவிழாவில் கச்சேரி கேட்டு விட்டுத் திரும்புகிறார்கள். நடுநிசிக்கு மேலாகி விடுகிறது. நல்ல குளிர். இந்தக் குளிரில் குழந்தையையும் கூட்டிக் கொண்டு கச்சேரிக்குப் போக வேண்டுமா என்று கேட்கிறாள் அம்மா.
‘என்ன பண்றது, நல்ல பனிக் காலமாப் பார்த்து தியாகராஜர் சமாதி ஆயிட்டார். பாபு கச்சேரி கேக்கப் போறான்னு தெரிஞ்சிருந்தா சித்திரை வைகாசி மாசமாப் பார்த்து சமாதி அடைஞ்சிருப்பார்’ என்று பகடி செய்கிறார் வைத்தி.
‘ராமலிங்கசாமியும்தான்’ என்கிறான் பாபு. உனக்கென்ன சங்கீதம் தெரியும் என்று நீ கச்சேரி கேட்கப் போனாய் என்கிறாள் அம்மா. ‘பியாகடை இன்னிக்கு ரொம்ப நன்னா வாசிச்சார் அம்மா’ என்கிறான் பாபு.
பாலைக் கொடுத்து விட்டு அவன் குடித்ததும் படுத்துக் கொள்ளச் சொல்கிறாள் அம்மா. பாபு படுத்துக் கொண்டான். அப்புறம் ஒரு நிமிஷம் தொண்டைக்குள்ளேயே ராகத்தை இழுத்தான். மூடியிருந்த கண்களும் உள்ளமும் ராமலிங்க மடத்தில் இன்னும் பியாகடை ராகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தன. ஒலியில் அதிரும் ஏனத்து நீர் போல அவன் இளம் நெஞ்சு அந்த நினைவின் கார்வையில் சிலிருத்துக் கொண்டிருந்தது.
‘பாபூ.’
‘…’
‘பாபூ.’
‘ஏம்மா?’
‘மணி மூணடிச்சுப்பிடுத்து.’
‘எப்பம்மா?’
‘இப்ப அடிச்சுதே, காதிலே விழலை? தூங்கு.’
‘பாபு, தூங்குடா’ என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார்.
என்ன ஆனந்தமான ஸ்பர்சம்! ஒரு ஸ்பர்சத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக் கூடிய அந்த உள்ளங்கை. இப்போது கூட தடவுவது போலிருக்கிறது. அப்போது கூடம் முழுவதும் பெட்ரூம் விளக்கின் முத்தொளியில், மார்பளவு நீரில் நிற்பவனைப் போல, இருளில் மௌனமாக அமுங்கிக் கிடந்தது. அந்த உள்ளங்கையில் ஊறி வடிந்த அமைதியையும் ஆறுதலையும் இன்னும் மறக்க முடியவில்லை.
இதுதான் தி.ஜா. தி.ஜா.வின் மேஜிக். தி.ஜா.வின் அற்புதம்.
(தொடரும்)
இணைப்பு:
http://solvanam.com/?issue=50
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

