தி.ஜா.வை விட்டு வெளியிலேயே வர முடியவில்லை. வசியத்துக்குக் கட்டுண்டதுபோல் அந்த உலகத்திலேயே கிடக்கிறேன். தி.ஜா. எழுதிய எல்லாவற்றையும், அவர் பற்றி மற்றவர்கள் எழுதிய எல்லாவற்றையும் படிப்பதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும்போல் இருக்கிறது. அவர் அளவுக்குக் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே தோன்றுகிறது. அதேசமயம் இந்தச் சாதனையையும் புகழையும் தி.ஜா. ஒரு ஞானியைப் போல் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார். தன்னுடைய எழுத்து பற்றி எங்கேயுமே அவர் பெருமையாகச் சொல்லிக் கொண்டதில்லை. அவர் சொல்வதை நாம் நம்பினால் அவரைக் காணாமலே கடந்து சென்று விடுவோம். அந்த அளவுக்குத் தன்னடக்கம். இதைத் தன்னடக்கம் என்று சொல்வதை விட ஒரு ஞானியின் ஆழ்ந்த அமைதி என்றே சொல்லத் தோன்றுகிறது. சமுத்திரம் அதன் கரையில் நிற்கும் மனிதனைப் பார்த்து என்ன சொல்லும்? தன்னுடைய பிரம்மாண்டத்தை, தன்னுடைய அகண்டகாரத்தைச் சொல்லிக் கொள்ளுமா? அது போலவேதான் தன் எழுத்தைப் பற்றி தி.ஜா. பெரிதாக ஒன்றும் சொல்லவில்லையோ என நினைக்கிறேன்.
‘இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.’ தி.ஜா. கொண்டாடிய இயற்கையைப் போலவே நாதத்தைப் போலவேதான் அவர் தன் எழுத்தையும் பார்த்திருக்கிறார். பவளமல்லிப் பூக்களுக்கும் மலையடிவாரத்தின் மாலைநேரக் காற்றுக்கும் கோடை மழை கொண்டு வரும் மண் வாசனைக்கும் என்ன அர்த்தம் உண்டோ அதேதான் தி.ஜா.வின் எழுத்துக்கும் என்று தோன்றுகிறது.
‘தியானம் பண்ணு. சுருதிதான் தெய்வம். பெற்ற தாய் அது. ஸ்வரங்களையெல்லாம் தியானம் பண்ணி தியானம் பண்ணித்தான் வசப்படுத்த முடியும்.’ (மோகமுள்)
‘தியான முறையில் சின்ன வயதிலேயே ஈடுபட்ட அப்பா தினமும் வெகு நேரம் தியானத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக இருந்தது’ என்று தி.ஜா. பற்றிச் சொல்கிறார் தி.ஜா.வின் புதல்வியான உமா சங்கரி.

‘கரையிலிருந்த மரத்தில் டூவ் டூவ் டூவ் என்று ஒரு குருவி வேகமாகக் கத்திக் கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தான். மிளகாய் அளவுதான், விரல் நீளம்தான் இருக்கும். பச்சைப் பசேலென்று உடல். எவ்வளவு பெரிய குரல்! எவ்வளவு இனிமை!’ (மோகமுள்)
தியானத்தின்போது மனம், பேரண்டத்தின் லயத்தோடு சேர்வதால் ஏற்படும் ஓர்மையையே தி.ஜா.வின் எழுத்தும் தருகிறது என்பதால்தான் அவரைப் படிப்பவர்கள் அனைவரும் இனம் புரியாத ஒரு உன்னத உணர்வெழுச்சியை அடைகிறார்கள். ‘இந்த மாதிரி மனிதர்கள், சுத்தாத்மாக்கள் இருந்து கொண்டிருந்தாலே உலகம் க்ஷேமம் அடையும். அவர்கள் யாருக்கும் வாயைத் திறந்து உபதேசமோ நல்ல வார்த்தைகளோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.’ இது ரங்கண்ணாவைப் பற்றி பாபுவின் ராஜத்தின் தகப்பனார் தியாகராமன் சொல்வது.
‘அவர் சொல்வது உண்மைதான். நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும். தன்னைச் சுற்றித் தூய்மையின் ஒளியை அவனால் பரப்ப முடியும்; அருவியினின்று எட்டி நின்றும் திவலைகள் பட்டு சுகப்படுவது போல அதன் திவலைகளை உணர முடியும்.’
தி.ஜா.வின் எழுத்துக்கும் இது பொருந்தும்.
‘ரங்கண்ணாவுக்கு வாழைப்பட்டையில் சாப்பிடுவதில் தனி ஆசை. கிராமத்தில் வாழை இல்லாதவர்கள் தார் அறுத்த மரத்தை இலவசமாக வாங்கி வந்து திண்ணையில் உட்கார்ந்து துண்டு போட்டு, சூர்க்கத்தியால் சோறு வழித்து, பட்டைகளைத் தேய்த்துப் படுகிற அவதி இந்தக் கும்பகோணத்தில் இவர் ஏன் பட வேண்டும் என்று புரியத்தான் இல்லை. ஆனால் வாழைப்பட்டையைப் பார்த்தாலே உண்டாகிற கவர்ச்சியும் கிளுகிளுப்பும் அவனுக்குப் புரியாமல் இல்லை. ரங்கண்ணா தங்கத் தட்டைப் பார்க்கிறது போல அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். சாம்பன் தான் பட்டைகளைச் சோறு வழித்துத் தைக்கிற வழக்கம். இப்போது இந்த வேலையையும் ஏற்றுக் கொண்டான் பாபு.
‘அன்று ஒரு மரத்தைத் துண்டு போட்டு மேல் பட்டையை உரித்து அடுத்த பட்டையை உரிக்கும் போது, ரங்கண்ணா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கையை நீட்டிப் பட்டையை எடுத்து சோறு அமைந்திருந்த வரிசைகளையும் சச்சதுரமான துவாரங்களையும் பார்த்துக் கொண்டே இருந்தார்.
‘பாபு, இதைப் பார்த்தியாடா? இதைப் பாரேன். என்னமோ தம்புரா, வீணைங்கிறானேடா இந்தச் சோற்றிலே இருக்கிற துவாரத்தைப் பாரு. லக்ஷக்கணக்கிலே இருக்கும் போலிருக்கு. எங்கேயாவது ஒரு கோணல் மாணல் இருக்கா பாத்தியா? பத்து வாத்தியத்தைச் சுருதி சேர்த்துண்டு, ஒருத்தனே ஏக காலத்திலேயே வாசிக்கிறாப்பல இருக்கு… இத்தனை அழகாக ஒரு பாட்டுப் பாட முடிஞ்சாப் போரும். இல்லாட்டா இந்த மாதிரி ஒரு வாத்யம் எங்கேயாவது தேவலோகத்தில் இருக்குமோன்னு தோண்றது.’
‘பேரண்டம் (Universe) உருவாகிய 'பிக்பாங்' கணத்தை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாக நிரூபிப்பதற்கு இயற்பியலாளர்கள் முயல்கின்றனர். பிக்பாங் வெடிப்பின் கணத்தைக் 'கடவுளின் கணம்' என்று சொல்வார்கள். அண்டத்தைப் படைத்தது கடவுள் என்றால், அவர் அதை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாகத்தான் படைத்திருக்க வேண்டும். 'The whole Universe is nothing but mathematical equations'. கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்தக் கணிதச் சமன்பாடு, 'ஸ்ட்ரிங் தியரி' என்னும் ஒரு கோட்பாட்டின் மூலம் கண்டுபிடிக்கப்படும் நிலைக்கு வந்தது. அணுமுதல், அண்டம் வரை இசைக்கருவிகளில் இருக்கும் இழைகள் (Strings) போல அதிர்ந்து கொண்டிருக்கின்றன’ என்று ஸ்ட்ரிங்க் தியரியை விளக்குகிறார் ராஜ் சிவா. முழுக் கட்டுரைக்குப் பார்க்கவும்: http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6098
சிலருக்கு அறிவியலைத் தமிழில் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்காக இந்த இணைப்பு:
மேலே சொன்ன ஸ்ட்ரிங் தியரிக்கும் ரங்கண்ணாவின் சங்கீதத்துக்கும் உள்ள உறவைப் பற்றி நீங்களே சற்று நேரம் சிந்தியுங்கள்.
ரங்கண்ணா வீட்டுக்கு மகாராஷ்ட்ராவிலிருந்து ஒரு சங்கீதக் கலைஞர் தனது மூன்று சிஷ்யர்களுடன் வருகிறார். ‘இது என்ன சாரீரம்! இவ்வளவு கனமாகவா மனிதக் குரல் இருக்க முடியும்! இந்தக் குரலுக்கும்தான் எவ்வளவு பலம்! ஆ…ம் என்று அலட்சியமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றது பாபுவுக்குக் கவலையாகத்தானிருந்தது, இவ்வளவு மொத்தமான சாரீரம் மேலே போய் எப்படி எட்டப் போகிறது என்று. ஆனால் மந்திரத்தில் நாலு நிமிஷம் நின்று பிரமிக்க அடித்துவிட்டு, அவர் படிப்படியாக ஏறி, மேல் ஷட்ஜமத்தில் ஏறி கம்பீரமாகக் கார்வை கொடுத்து நின்ற போது, அவன் உடல் அதிர்ந்தது. புல்லரித்தது. கண்ணில் நீர் மல்கிற்று.’ இப்படி மூன்று மணி நேரம் பாடுகிறார்கள் அவர்கள். அப்போது ரங்கண்ணாவின் பழைய சீடர் ராமு வருகிறார். அவரிடம் அவர்களைப் பற்றிச் சொல்லி, மீண்டும் பாடச் சொல்கிறார் ரங்கண்ணா.
வடக்கத்திப் பாடகன், ராமுவுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு மறுபடியும் பாட ஆரம்பிக்கிறான். மந்த்ர பஞ்சமத்தில் ஒரு நிமிஷம் நின்று விட்டு, கீழே இறங்கி மந்த்ர ஷட்ஜமத்திலும் ஒரு நிமிஷம் நின்று ராகச் சாயை காண்பித்ததைக் கேட்டதும் ராமுவின் அலட்சியப் புன்சிரிப்பு உதட்டுக்குள் ஒளிந்து கொள்கிறது.
‘இது என்னடா சாரீரம்! அதல பாதாளங்களெல்லாம் போறது! மேலே போனா, சத்யலோகம் எல்லாம் போறது! த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப்பிரம்மாதிகளாலே. இவன் போய் எட்டிப்பிடுவான் போலிருக்கே!’ என்று கண் அகல வியக்கிறார் ரங்கண்ணா. மேலும் சொல்கிறார்:
‘எழுபது வருஷமாக நான் சங்கீதம் கேட்கிறேன். சங்கீதத்தைப் பத்தி தியானம் பண்றேன். சிந்தை பண்றேன். ஏதோ பகவான் கிருபையினாலே அந்த சமுத்திரத்திலே கொஞ்சம் காலையும் நனைச்சுண்டு நிக்கிறேன். ஆனா இந்த மாதிரி சாரீரத்தை நான் கேட்டதில்லை ராமு. இது ஆச்சரியமான சாரீரம்.’
‘சாரீரம் மர்மாவை எல்லாம் சிலிர்க்க அடிக்கிறது. கேக்கற போதே மயிர்க் கூச்செறியறது. அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுபிடறான்.’
அன்று கிருஷ்ணபட்ச பஞ்சமி. பழம்பித்தளைத் தட்டைப் போல சந்திரன் எழவும் இரண்டு நாழிக்கு மேலிருந்தது. நட்சத்திரங்களைத் தவிர வேறு ஒளிகள் இல்லை. கோயிலுக்குள் மட்டும் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
அந்த வடக்கத்திக் கலைஞர்கள் நாகேச்வரன் கோவிலின் உள்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுருதி சேர்த்து விட்டு மீட்டினபொழுது கோயில் மண்டபத்தில் தம்புராவின் நாதம் எதிரொலித்து வந்தது. பெரியவர் சுருதி சேர்த்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். கந்தர்வ கானம். அந்த கனமும் கம்மலும் நிறைந்த இனிமை, மண்டபத்தில் மேளம் கட்டி உள்ளத்தை மிதக்க வைத்தது. அந்த கானம் பட்டுப் பரவசமடைந்து ஆகாகாரம் செய்வதுபோல், மண்டபம் குரல் நின்ற ஒவ்வொரு கனத்தையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. யமுனாவும் ஒரு தூணில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள். சுமார் ஒரு மணிக்குப் பிறகு இசை ஓய்ந்தது. யாரும் எழுந்திருக்கவில்லை. பேசவும் இல்லை. அப்படியே மௌனமாகச் சற்று நேரம் உட்கார்ந்திருந்தார்கள். மயக்கம் தெளியாதது போல.
யமுனாவிடம் சென்றான் பாபு. ‘என்ன யமுனா?’
‘நெஞ்செல்லாம் வலிக்கிறது பாபு.’
‘ஏன்?’
‘இவர் ஏன் இப்படிப் பாடறார்? எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு, பாபு. இவ்வளவு பரவசமாய்ப் பாடினால், என்னால் கேட்க முடியவில்லையே. உடம்பெல்லாம் என்னமோ பண்றது’ என்று மீண்டும் கண்ணை மூடித் தூணில் பின் தலையைச் சாய்த்துக் கொண்டாள் யமுனா. ‘உடம்பெல்லாம் கூடப் பறக்கிறது’ என்று கண்ணைத் திறந்து மீண்டும் சொன்னாள்.
அதன் பிறகு மறுநாள் அவர்களை நினைத்து மீண்டும் பாபுவிடம் சொல்கிறாள்: ‘எவ்வளவு நல்லாப் பாடினார், எனக்குப் பயமாயிருந்தது. மாரை மாரை வந்தடைச்சுது. அழுகை அழுகையா வந்தது. அவர் நிறுத்தினதால்தானோ என்னவோ. நிறுத்தாம பாடிட்டே இருந்திருந்தா நானும் அங்கேயே உட்கார்ந்து பிராணனை விட்டிருப்பேன்.’
‘மோகமுள் படித்து விட்டேன்’ என்றேன் நண்பரிடம். ‘எப்படி இருந்தது?’ என்று கேட்டார். ‘செத்துட்லாம் போலருக்கு.’ அவ்வளவுதான் சொன்னேன். வடக்கத்திக் கலைஞர்களைக் கேட்டதும் யமுனா சொன்ன பதில். இதுதான் கலையின் உன்னதம். கலை தரும் அனுபூதி நிலை.
***
தி.ஜா. பற்றி கரிச்சான் குஞ்சு சொல்கிறார்: ‘மன்னார்குடியில் இருந்த மஹாமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர், புராணம் சொல்லும் தொழிலை மேற்கொண்டு பொருளும், வசதியும் பெற்றனர். மாயவரம் சிவராம சாஸ்திரிகள், சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள், தேவங்குடி தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர்கள் அம்மூவர். தியாகராஜ சாஸ்திரிகளின் குமாரர்கள் இருவரில், ஜானகிராமன் இளையவன். சிமிழி சாஸ்திரிகளின் குமாரர்கள் நால்வரில் இரண்டாமவர் ‘ஆத்ரேயன்’. தஞ்சாவூரில் ஜானகிராமன் தந்தையும், ஆத்ரேயன் தந்தையும் புராணப் பிரசங்கம் செய்து வந்தனர். என் தந்தை, ஜானகிராமன் தந்தையாருக்குச் சீடன் போன்றவர். உறவும் உண்டு.’ ஆத்ரேயன் என்பது ஸ்வாமிநாத ஆத்ரேயன்.
‘1936ல் நான் கும்பகோணம் ராஜா பாடசாலையில் சேர்ந்து ‘ஓரியண்டல் எண்டிரன்ஸ்’ பரிக்ஷைக்காகப் படித்தபோது, ஜானகிராமன் காலேஜில் படித்து வந்தான். தனியே ரூமில் இருந்தான். அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் சந்திப்பதுண்டு. எப்படியோ என்னிடம் அவனுக்கு ஒரு ஆழமான அன்பு பிறந்தது. எனக்கு அவன் படிக்கும் ஆங்கில நூல்களைப் பற்றியும் ஆங்கில இலக்கிய விவரங்களும் சொல்வான்.’
‘1940-இல், நான் சென்னையில் தமிழாசிரியன் உத்தியோகம் பெற்றுக் குடியேறினேன். ஜானகிராமன் 39-இல் அல்லது 40-இல் பி.ஏ. முடித்து வேலை தேடினான். கிடைக்கவில்லை. என்னைவிட ஒன்றரை வருஷம் வயதில் சிறியவன் என்று ஞாபகம். ஜானகிராமனின் தந்தையார் தஞ்சையைவிட்டுக் குடிபெயர்ந்து வலங்கிமான் அருகே கீழவிடையல் என்ற கிராமத்தில் குடியேறினார். அப்போதுதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்கப்போனவன், விரைவில் உதறிவிட்டு, மீண்டும் வேலை தேடி அயர்ந்து, எல்.டி. படிக்கச் சென்னைக்கு வந்தான். எல்.டி. முடித்தபின் சென்னையில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தான். அந்த இரண்டு மூன்று வருஷங்கள் என்னால் என்றுமே மறக்க இயலாதவை. மாம்பலத்தில் ரூமில் சேர்ந்தோம். ஹோட்டல் சாப்பாடு. எனக்கு 25 ரூபாய் சம்பளம். அவனுக்கு 35 அல்லது 40 ரூபாய். அதிருசியான சாப்பாடு அப்போதெல்லாம். 10 ரூபாய்க்கு 60 சாப்பாடுகள். நாங்கள் இருவருமே ருசி பார்த்துச் சாப்பிடுகிறவர்கள். மிகவும் சுகமான நாட்கள், பாட்டு, படிப்பு, சர்ச்சைகள், பழைய இலக்கியம், புது இலக்கியம், ஸம்ஸ்கிருத நாடகங்கள், வாய்விட்டு நடிப்பதைப் போலவே படித்து ரஸிப்பது, நல்ல கோஷ்டி.’
கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையிலிருந்தும் தி.ஜா.வின் புதல்வியான டாக்டர் உமா சங்கரியின் கட்டுரையிலிருந்தும் தி.ஜா.வும் அவரது குருவான கு.ப.ரா.வைப் போலவே நல்ல ஆங்கில இலக்கியப் புலமையும் சம காலத்து இலக்கியம் குறித்துக் கறாரான இலக்கியப் பார்வையையும் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது. கரிச்சான் குஞ்சு சொல்கிறார்: ‘ஜானகிராமனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது. போலிக் கவிதை என்பான். இது அவனுடைய இங்கிலீஷ் புரபஸர் பழமார்நேரி ஸ்ரீ தாராமய்யரும் பகிர்ந்துகொண்ட அபிப்ராயம். என்னிடம் அவன் கீதாஞ்சலிப் பாடல்கள் சிலவற்றை விவரித்து விமர்ஸனம் செய்ததுண்டு.’ தாகூர் குறித்த அடியேனுடைய பார்வையும் அதுதான். ‘அப்பா டில்லிக்கு மாற்றலாகி நான் பள்ளியில் சேர்ந்து வரலாறும் ஷேக்ஸ்பியரும் படிக்க வேண்டி வந்தபோது, அவற்றையெல்லாம் எனக்குத் தெளிவாக அல்வா போல சொல்லிக் கொடுத்துவிட்டார். அப்பாவுக்கு எப்படி இங்கிலீஷில் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.’ இது உமா சங்கரி.
தி.ஜா.வின் இளமைப் பருவத்தையும், பெண்கள் குறித்த அவரது பார்வையையும் பற்றி கரிச்சான் குஞ்சு விவரிக்கிறார். கரிச்சான் குஞ்சு அப்போது மாம்பலத்தில் ஒரு பெண்கள் பள்ளியில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதப் பண்டிதராக வேலையில் இருந்தார். (அந்தக் காலத்தில் தமிழ்ப் பண்டிதர் என்றால் அவருக்குக் கட்டாயமாக சம்ஸ்கிருதமும் தெரிந்திருந்தது. இப்போது இருப்பதைப் போன்ற பிற மொழிகள் மீதான துவேஷம் அப்போது இல்லை.) 19 வயதில் கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கரிச்சான் குஞ்சு. மனைவி தீராத நோயாளி. அப்போது தாகூர் இறந்த செய்தி கேட்டு அவரது பள்ளியில் கரிச்சான் குஞ்சுவைப் பேசச் சொல்கிறார்கள். இவரும் நன்றாகப் பேசி விடவே அன்றிலிருந்து அவருக்கு ஹீரோ அந்தஸ்து வந்து விடுகிறது. மேலே கரிச்சான் குஞ்சு சொல்கிறார்:
‘என்னைத் தேடிக்கொண்டு பெண்கள், என் மாணாக்கியர் சிலர் வரத் தொடங்கினார்கள். நான் மிகவும் சங்கடப்படுவேன் அந்த நேரங்களில். ஜானகிராமன் அவர்களுடன் நெருங்கிப் பேசிப் பழகிக் குதுகுதுப்படைவான். அவன் இளமைப் பருவத்திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன். மூன்றாவது புருஷார்த்தத்தில் அவனுக்கு எல்லையில்லா வேகம் உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. என்னைத் தேடி என் ரூமுக்கு வரும் பெண்களில் ஒருத்தி என்னைக் கேட்டு என் திருமண அவலத்தைப் புரிந்துகொண்டவள், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று பச்சையாகச் சொல்லிவிட்டாள். எனக்குத் தைரியமில்லை. வசதிகளும் இல்லை. ஸமூக பயம் வேறு. எடுத்துரைத்து அவளை விலகச் செய்தேன். ஆனால் அவள் அதற்குப் பிறகும் என்னிடம் நேசத்தை மிகுதியாகவே காட்டினாள். ஜானகிராமன் நான் அவளை மணந்து கொள்ளத்தான் வேண்டுமென்றும், என் தாயாரிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் தானே எல்லாம் சொல்லி ஏற்பாடு செய்வதாகவும் ஒற்றைக் காலால் நின்றான். நான் மறுத்துவிட்டேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை. அவன்தான் மிகவும் வருத்தப்பட்டான். நான் மனோ வேகங்களை அடக்கி ஒடுக்க நிறையப் படித்தேன். முக்கியமாக அன்றும் இன்றும் நான் ஆர்வத்துடன் படிப்பது உபநிஷத்துக்களே. அதற்குப் பிறகு ரொம்ப நாள் வரை ‘வைதீகம்’, ‘சாமியார்’ என்று என்னை அவன் பரிகாசம் செய்து கொண்டே இருப்பான்.’
தி.ஜா. சங்கீதத்தில் ஊறினவர். தி.ஜா.வும் ரங்கண்ணாவைப் போல் தான் வாழ்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் கச்சேரி செய்யவில்லையோ என சந்தேகப்படுகிறேன். ஆனாலும் அந்த விஷயம் குறித்து, ஒரு மாபெரும் சங்கீத மேதையை சங்கீத உலகம் இழந்து விட்டதே என்று தி.ஜா.வின் மீது மிகுந்த வருத்தமும் கோபமும் ஏற்படுகிறது. அவரது இசை ரசனை பற்றி அவருடைய நண்பர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். கரிச்சான் குஞ்சு இப்படி எழுதுகிறார்:
‘அப்போதெல்லாம் நானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச் சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான்.
இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு. அவன் தந்தையாருக்கு நல்ல ஸங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே ஒரு அருமையான அபூர்வமான முறை. அதாவது கதையில் வர்ணனை உரையாடல் முதலியவை எல்லாம் அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்ப பல ராகங்களில் வரும். அவர் வாக்கிலிருந்து அந்தக் காலத்துத் தஞ்சாவூர் சுருதிப்பெட்டி தம்பூராவை விடச் சுத்தமாய், அந்தர காந்தாரம் பேசும். ஒரு கட்டை சுருதியில் நாட்டையில் மங்களம் சுலோகம் – பூர்வ கதைச் சுருக்கம், பின்னால் ஒருவர் – அநேகமாக ஜானகிராமனுடைய அண்ணன் அல்லது அவனே மூலசுலோகங்களைச் சிறிதளவு ராகத்துடன் வாசிப்பார்கள். தொடர்ந்து அதே ராகத்தில் – கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில் கதை கூறுவார் தந்தை. அப்பொழுது வீட்டில் ஜானகிராமனுடைய சகோதரிகளுக்கு இசைப்பயிற்சி நடக்கும். இந்த வகையில் வயதுடன் கூடவே வளர்ந்தது அவனுக்கு ஸங்கீதம். பின்னர் கும்பகோணம், குற்றாலம், அய்யம்பேட்டை, சென்னை எல்லா இடங்களிலும் மேலும் மேலும் பயிற்சி செய்தான். பாடுவான். மேடை ஏறிக் கச்சேரி செய்யவில்லையே தவிர, ஒரு வித்துவானுக்குரிய அத்தனை லக்ஷண, லக்ஷய ஞானம் உண்டு அவனுக்கு. கும்பகோணத்திற்குப் பக்கத்தில், எங்கே உத்ஸவம், கச்சேரிகள் போல் நடந்தாலும் நாங்கள் போவோம். திருவிடைமருதூரில் அந்தக் காலத்தில் நல்ல கச்சேரிகள் நடக்கும். நாங்கள் போவோம். திருவிடைமருதூரில் தைப்பூசத்தன்று இரவு 10 மணிக்கு மேல் புஷ்ய மண்டபத்துறையிலிருந்து சுவாமி புறப்பாடு. கோவில் வாசலுக்கு வருவதற்குள் பொழுது புலரச் சிறிது நேரமே மீதியிருக்கும். அன்று தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள எல்லா நாயனக்காரர்களும் வந்து கூடி வாசிப்பார்கள்.
திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிகள் பல்லக்கில் வருவார். காலை 3 மணிக்குப் பிறகு டி.என்.ராஜரத்தினம் வந்து வாசிப்பார். தேன் மழைதான். ஆனால் அந்த இரவில் பெய்யும் பனி மழையும் ரஸிகர்கள் மேலே பொழிந்து நனைக்கும். அந்த நாயனங்களை நாங்கள் இருவரும் சேர்ந்து சில வருஷங்கள் கேட்டிருக்கிறோம். ஒரு தடவை, பொழுது விடியும் வரை ராஜரத்தினம் வாசித்தார். நூற்றுக்கணக்கில் கூட்டம் கேட்டுப் பரவசம் கண்டது. விடிந்ததும் நாங்கள் ஹோட்டலில் இட்லி, சாப்பிட்டுவிட்டு நடந்தோம். அவன் இரவில் கேட்ட ராகங்களைச் சன்னக் குரலில் பாடிக்கொண்டே வந்தான். நடந்தே திருநாகேசுவரம் வரை வந்துவிட்டோம்.’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

