புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

க.நா.சு. பகுதி – 4

உ.வே.சா.வுக்குப் பிறகு தமிழர்கள் யாருக்கேனும் தலையாய நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என்றால் அது க.நா.சு. என்ற மேதைக்குத்தான்.

Updated On :3 அக்டோபர் 2015, 9:59 am

உ.வே.சா.வுக்குப் பிறகு தமிழர்கள் யாருக்கேனும் தலையாய நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என்றால் அது க.நா.சு. என்ற மேதைக்குத்தான். மேதை என்ற வார்த்தைக்கே க.நா.சு. என்று பொருள் கொள்ளலாம் என்ற அளவுக்கு உலக இலக்கியத்தைக் கற்றறிந்திருந்தார் அவர். 

‘அவரவர் பாடு’ என்ற நாவலை க.நா.சு. 1963-ல் எழுதினார். அதன் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்: ‘எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு. ஓரளவுக்கு மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாகச் சமீப காலத்தில் பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் பண்ணுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக்கூடாது என்று தோன்றிற்று. சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்த பின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன்.’

Story image

1940, 50களில் ஃப்ரெஞ்சில் பிரபலமாக இருந்த ஒரு துப்பறியும் நாவலாசிரியர் Georges Simenon (1903-1989). இவரது நாவல்கள்தான் ஒரு மர்ம நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் க.நா.சு. அந்த ஆண்டு 1963! அவரது வாசிப்பு எந்த அளவுக்குப் பரந்து பட்டு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  அதே சமயத்தில் அவர் காலத்தில் மர்ம நாவல் எழுதிக் கொண்டிருந்தவர்கள் எத்தனை போலியாக இருந்தார்கள் என்பதையும் ‘அவரவர் பாடு’ முன்னுரையில் பகடி செய்கிறார்.

க.நா.சு. அளவுக்கு உலக இலக்கியம் பயின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவருடைய உலக இலக்கிய மதிப்புரைகளையும், அறிமுகங்களையும், அதையும் தாண்டி அவர் செய்த மொழிபெயர்ப்புகளையும் பார்த்தால் நமக்குப் புரியும். இதையெல்லாம் க.நா.சு. ஏன் செய்தார்? ஏன் அவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்தார்?

சுந்தர ராமசாமி, தான் நெருங்கிப் பழகிய ஆளுமைகளைப் பற்றி அரவிந்தனிடம் உரையாடியிருக்கிறார். அந்த உரையாடல்கள் ‘நினைவோடை’ என்ற தலைப்பில் தனித்தனி நூல்களாக வந்துள்ளன. அதில் சி.சு. செல்லப்பா, க.நா.சு. இருவர் பற்றியுமான நூல்கள் க.நா.சு. பற்றி அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. செல்லப்பா பற்றிய நூலாக இருந்தாலும் அந்த நூல் முழுக்கவும் சு.ரா. செல்லப்பாவை க.நா.சு.வோடு ஒப்பிட்டுக் கொண்டே பேசிச் செல்கிறார். இந்த நூலின் மூலம் க.நா.சு.வின் வாழ்க்கைச் சித்திரம் மிகக் கச்சிதமாக நம்முன் கவிகிறது. அதில் க.நா.சு.வின் வாசிப்பு பற்றி சு.ரா. கூறுகிறார்:

‘க.நா.சு. நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். உட்கார்ந்து உட்கார்ந்து படித்து வந்ததால் அவரது முதுகு வளைந்து விட்டிருந்தது. தலையை நிமிர்த்தவே மாட்டார். ரோட்டில் நடக்கும்போது கூட அப்படித்தான் நடப்பார். உத்தமமான ஆண்கள் பெண்களின் பாதங்களை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்களே, அது போல் இவரும் பெண்களின் பாதங்களையும் ஆண்களின் பாதங்களையும் மட்டுமே பார்த்தது போல்தான் இருப்பார். நாற்காலியில் உட்கார்ந்து குனிந்தபடியே படித்ததால் அப்படி ஆகியிருக்கிறது என்றால் நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அவருக்கு வசதியாகச் சாய்ந்து கொண்டு படிப்பதற்கு ஏற்ற நாற்காலி இருக்கவில்லை.’

இந்த அளவுக்கு ஏன் ஒருவர் படிக்கவேண்டும் என்றால், க.நா.சு. என்ற ஒரே ஒரு மனிதர்தான் ஒட்டு மொத்தத் தமிழ் இலக்கியச் சூழலையும் மேற்கத்திய இலக்கியச் சூழலுக்கு இணையானதாக மாற்ற வேண்டியிருந்தது. ஏதோ ஒருவரைப் பிடித்து விட்டது என்பதற்காக உயர்த்தி வைத்துச் சொல்வதற்காக இப்படி நான் எழுதவில்லை. எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியச் சூழலில் க.நா.சு. பல எதிரிகளை ஒற்றை ஆளாகச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒன்று, பண்டிதர்கள். இவர்களுக்கு மரபு இலக்கியம் மட்டுமே போதும். இவர்கள் பார்வையில் கழுதையும் குதிரையும் ஒன்றுதான்; பாகுபாடே இல்லை. எதைப் பற்றியுமே விமரிசன நோக்கு கிடையாது. இரண்டு, சி.சு. செல்லப்பா மற்றும் அவரது குழுவினரின் சநாதனப் பார்வை. செல்லப்பாவுக்கும் க.நா.சு.வுக்குமான முரண் வெறும் விமரிசனத்தோடு நின்று விடவில்லை. தனிப்பட்ட முறையில் க.நா.சு.வை ஓரங்கட்டுவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் செல்லப்பா. உதாரணமாக, 1959-ல் நடந்த எழுத்தாளர் சங்கத் தேர்தலில் க.நா.சு. போட்டியிட்டார். அப்போது அவர் அகில இந்திய அளவில் எல்லா எழுத்தாளர்களின் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். பிரான்சு சென்று ஜான் பால் சார்த்தர், ஆல்பெர் கம்யு போன்றவர்களோடும் பழகியிருந்திருக்கிறார். சார்த்தரை விட கம்யுவிடம் அவருக்குச் சற்று அதிக நெருக்கம் இருந்தது. இவ்வளவு செல்வாக்காக இருந்தும் சி.சு. செல்லப்பா செய்த உள்அரசியலால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் க.நா.சு. தோற்றார். வென்றவர் பன்மொழிப் புலவர் அப்பாத்துரை!

(க.நா.சு.வின் மேல் அவர் காலத்திய எழுத்தாளர்கள் எவ்வளவு புகைச்சலில் இருந்தார்கள் என்பதற்கு நான் தில்லியில் இருந்த போது க.நா.சு.வின் ‘நண்பரான’ எழுத்தாளர் ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது. அவர் என்னிடம் ‘க.நா.சு. பாரீஸுக்கே போனதில்லை; சும்மா காமுவைத் தெரியும்; கோமுவைத் தெரியும் என்று புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்’ என்றார். அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது இதெல்லாம் உள்காய்ச்சல் என்று. இதற்குக் காரணம், க.நா.சு. அவர் காலத்திய எழுத்தாளர்களெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத உயரத்தில் இருந்தார். ஆல்பெர் கம்யு மட்டும் அல்ல; உலகில் அவர் காலத்தில் இருந்த பல பிரபலமான எழுத்தாளர்களோடும் அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்தது. சுந்தர ராமசாமி சொல்கிறார்: ‘கம்யுவுக்கும் க.நா.சு.வுக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போயிருக்கிறது. ஆனால் அது பற்றி க.நா.சு. எதுவுமே எழுதினதில்லை. மஞ்சரியில் ‘பாரீஸுக்குப் போனேன்’ என்ற தலைப்பில் இரண்டு பக்கக் கட்டுரை வெளிவந்திருந்தது. அவ்வளவுதான். மணியனோ வேறு யாரோ இப்படிப் போய் விட்டு வந்தால் ஆனந்த விகடனில் ஐம்பது வாரத்துக்குப் பயணக் கட்டுரைத் தொடர் வந்திருக்கும். க.நா.சு.வுக்கு அந்த எண்ணமே கிடையாது. அவர் போவதும் தெரியாது; வருவதும் தெரியாது.’ (நினைவோடை) என்ன காரணம் என்றால், தஞ்சாவூர்க்காரர்களின் பொதுவான குணம் இது. தங்களைப் பற்றி அதிகமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தஞ்சை ப்ரகாஷ் விஷயத்திலும் அதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். (அடியேன் விதிவிலக்கு.) இது தவிர, க.நா.சு.வுக்கு அடிப்படையிலேயே ஒரு துறவு மனம் இருந்தது. இது பற்றியும் சு.ரா. சொல்கிறார்: ‘நாம் இறந்து போவதோடு நாம் எழுதியவை எல்லாமே அழிந்து விடும் என்றாலும் க.நா.சு.வுக்குப் பெரிய வருத்தம் கிடையாது. அப்படியான ஒரு மனோபாவம் அவருடையது. எல்லாமே போய் விடலாம். ஏனென்றால், புதிய காற்று, புதிய மழை பெய்யும். வெய்யில் அடிக்கும். அதில் ஜனங்கள் போய்க் கொண்டிருப்பார்கள். நான் ஏதோ பைத்தியம் பிடித்ததினால் இதை எழுதியிருக்கிறேன். மற்றவர்களுக்கு அதில் ஈடுபாடு இருப்பதால் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். புதுசு புதுசாக விஷயங்கள் வர வேண்டும். வரத்தான் செய்யும். ஒரு குறுகிய காலம்தான் எதுவுமே வாழ முடியும். வாழணும். ஒரு ஆமைக்கு இருக்கிற ஆயுட்காலம் வரைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய புத்தகம் இதுவரை எழுதப்பட்டதே கிடையாது.’ இது ந. பிச்சமூர்த்தி கூறியதாக இருந்தாலும் க.நா.சு.வுக்கும் இது பொருந்தும் என்கிறார் சு.ரா. 

க.நா.சு. எதிர்கொள்ள வேண்டியிருந்த மூன்றாவது எதிரி, முற்போக்கு எழுத்தாளர்கள். ‘கம்யூனிஸ்டுகள் சொல்வதில் நியாயம் இருக்கலாம்; ஆனால் அவர்கள் எழுதுவது இலக்கியமே அல்ல’ என்று வாதிட்டார் க.நா.சு. இதனால் க.நா.சு.வுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது என்று சொன்னார்கள் கம்யூனிஸ்டுகள். அவரோ அன்றாடங்காய்ச்சியாக அலைந்து கொண்டிருந்தார். இது பற்றியும் சு.ரா. குறிப்பிடுவது மனதைத் தொடுகிறது. சி.சு. செல்லப்பா தன் வீட்டுக்கு எல்லா எழுத்தாளர்களையும் அழைத்து விருந்து அளிப்பது வழக்கம். தர்மு சிவராமு செல்லப்பா வீட்டிலேயே பல மாதங்கள் தங்கியிருக்கிறார். ஏ.கே. ராமானுஜம் போன்றவர்கள் எல்லாம் செல்லப்பா வீட்டில் உணவருந்தியிருக்கிறார்கள். ஆனால் க.நா.சு.வோ காபி குடிப்பதற்குக் கூட யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டார். ‘ஏனென்றால் யாராவது வந்தால் காப்பி போட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் அவருக்கு இல்லை.’ இது சுந்தர ராமசாமியின் வார்த்தை. 

இதெல்லாம் போக, இன்னொரு பெரிய எதிரியையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது க.நா.சு.வுக்கு. அதுதான் தமிழ்ச் சமூகத்தில் இருந்த ஃபிலிஸ்டைன் மனோபாவம். ‘இலக்கிய சுரணையுணர்வு இல்லாத சமூகம்’ என்ற பொருளில் ஃபிலிஸ்டைன் என்ற சொல்லைத் தமிழில் முதலில் உபயோகித்தது நான்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை. ஐம்பதுகளிலேயே இதே வார்த்தையால் தமிழ்ச் சமூகத்தை வர்ணித்திருக்கிறார் க.நா.சு. அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், சமூகவியல், பொருளாதாரம் என்று மற்ற துறைகளில் சிகர சாதனைகள் செய்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இலக்கியம் என்று வந்து விட்டால் பாமரத்தனமாக உளறுவார்கள். அதுதான் ஃபிலிஸ்டைன் மனோபாவம். அந்த மனிதர்களின் தகுதியையும் சமூக அந்தஸ்தையும் நினைத்து நம்மால் வாயே திறக்க முடியாது. க.நா.சு. அப்படி இல்லை. ஒற்றை ஆளாக நின்று கொண்டு பெரும் பத்திரிகைகளிலிருந்து மிகப் பெரிய ஆளுமைகள் வரை எதிர்த்துப் போராடியிருக்கிறார். நமக்கெல்லாம் தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் பாரதி மகாத்மா காந்தியை அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று சந்தித்தது. அன்றைய தினம் திருவல்லிக்கேணியில் பாரதி நடத்த இருந்த கூட்டத்துக்கு மகாத்மாவை அழைக்கிறார். மகாத்மாவுக்கோ அன்று மாலை வேறொரு வேலை இருந்தது. நாளை வருகிறேனே என்று மகாத்மா சொல்ல, ‘உங்கள் துரதிர்ஷ்டம் மிஸ்டர் காந்தி, நான் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் பாரதி. அப்போது பக்கத்திலிருந்த ராஜாஜியிடம் பாரதி பற்றி காந்தி விசாரிக்கிறார். ராஜாஜி ஏதோ பதில் சொல்ல, அதற்கு காந்தி, ‘இவர் மிகவும் போஷிக்கப்பட வேண்டிய ஆத்மா’ என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ராஜாஜி காந்தியிடம் பாரதி பற்றி என்ன சொல்லியிருக்கக் கூடும்? நிச்சயம் உயர்வான அபிப்பிராயமாக இருக்க முடியாது அல்லவா? ஆனால் அப்படியே வங்காளத்தை நினைத்துப் பாருங்கள். அந்த மொழியின் கவிஞனை அவர்கள் குருதேவ் என்று அழைத்தார்கள். அதனால்தான் மகாத்மாவும் அவரை குருதேவ் என்றே அழைத்தார். 

இன்னொரு உதாரணம் தரலாம். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ என்ற சிறுகதை தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. (முப்பது ஆண்டுகளாக புதுமைப்பித்தன் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை இந்தக் கதையைப் படித்ததன் மூலம் மாற்றிக் கொண்டேன். அவர் பற்றிப் பிறகு இந்தத் தொடரில் பார்ப்போம்.) கலைமகளில் மே 1943-ல் ‘சாப விமோசனம்’ வெளிவந்தது. ராமனுக்கு அகலிகையைக் குறித்து ஒரு நோக்கும், தன் மனைவி சீதையைக் குறித்து ஒரு நோக்கும் இருந்ததால் வெகுண்ட அகலிகை மீண்டும் கல்லாக மாறினாள் என்பது கதை.

இந்தக் கதை பற்றி அடுத்த மாதமே ராஜாஜி ஒரு கடிதம் எழுதி புதுமைப்பித்தனைக் கண்டித்தார். வால்மீகி போன்ற ஒரு மகரிஷியின் கதையில் கை வைக்க புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கெல்லாம் இடம் கிடையாது என்பது கடிதத்தின் சாரம். இது பற்றி க.நா.சு., ‘எத்தனையோ கெட்டிக்காரரும் அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தொடக்கூடிய சக்தி வாய்ந்தவருமான ராஜாஜியின் அசட்டுத்தனமான கருத்து இது’ என்று சொன்னார். அதுவும் எந்த இடத்தில்? நட்வர்சிங் தொகுத்த இந்தியச் சிறுகதைகள் என்ற ஆங்கிலத் தொகுப்பில் தமிழ் சார்பாக ராஜாஜியின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. அது பற்றி பிற மொழி எழுத்தாளர்கள் க.நா.சு.வை ஆட்சேபத்துடன் கேள்விகள் கேட்டபோது, ராஜாஜியின் இலக்கிய உணர்வு பற்றிக் கேலி செய்து மேற்கண்ட புதுமைப்பித்தன் – ராஜாஜி சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

ஒருமுறை ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு ராஜாஜியை அழைக்கச் செல்கிறார் க.நா.சு. அது பற்றி அவர்: ‘என்னைப் பார்த்ததும் அதட்டலாக ‘யார் அது? ஐ அம் வெரி பிசி’ என்று சொன்னார். நான் முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக ‘ஐ அம் கே.என். சுப்ரமணியம்’ என்றேன். உடனே ராஜாஜி அவருக்கே உரிய எகத்தாளமான கிண்டல் தொனிக்கும் குரலில் ‘தி ஃபேமஸ் ரைட்டர்’ என்றார். நானும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் ‘நாட் ஸோ ஃபேமஸ் அஸ் ஸம் பீப்பிள் அன்ஜஸ்ட்லி ஆர்!’ என்று பதில் சொன்னேன். என் பதிலைக் கேட்டு கே. ஸ்ரீனிவாஸன் (ஹிண்டு ஆசிரியர்) சிரித்து விட்டார். ‘என்ன வேணும்?’ என்று கடுமையைக் குரலில் வரவழைத்துக் கொண்டு கேட்டார் ராஜாஜி.

இதுதான் தமிழ்ச் சமூகம் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனுக்குக் கொடுக்கும் மரியாதை. இதுதான் வங்காளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மற்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்.  

Salvador de Madariaga (1886-1976) என்பவர் ஒரு பிரபலமான ஸ்பானிஷ் அறிஞர்; வரலாற்றாசிரியர். க.நா.சு.வின் நண்பர். (கம்யு என் நண்பர் என்று க.நா.சு. சொல்வது புருடா என்று சொன்ன எழுத்தாளரை நினைவு கூர்கிறேன்.) மதாரியகாவும் க.நா.சு.வும் 1956 வாக்கில் ராஜாஜியைச் சந்திக்கச் செல்கிறார்கள். முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு. இரண்டரை மணி நேரம் சுவாரசியமான பேச்சு. முடிவில் மதாரியகா தான் எழுதிய ‘The Blowing Up of the Parthenon’ என்ற நூலை சுப்ரமணியம் மூலம் தங்களுக்குக் கொடுத்தனுப்புகிறேன்; நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள் என்கிறார். உடனே ராஜாஜி க.நா.சு.விடம் தமிழில், ‘தராவிட்டாலும் பாதகம் இல்லை; இப்போதெல்லாம் படிக்க நேரம் கிடைப்பதில்லை’ என்று சொல்கிறார். உடனே க.நா.சு., ‘புத்தகங்கள் எழுதியிருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது’ என்று ராஜாஜியை நேரடியாக அப்போதே கண்டிக்க ராஜாஜியின் நண்பர்கள் க.நா.சு.வின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜாஜி அவர்களைக் கையமர்த்தி விட்டு க.நா.சு.விடம், ‘நான் சொன்னது தப்புதான் சுப்ரமணியம். கொண்டு வந்து கொடு; படிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்’ என்கிறார்.

இதெல்லாம், ஒரு சமூகமே எப்படி இலக்கியச் சுரணை உணர்வு இல்லாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் சில உதாரணங்களே ஆகும். க.நா.சு.வின் இலக்கிய அக்கறையும், விமரிசனமும் எந்த அளவுக்குக் கறாராக இருந்தன என்பதற்கு ராஜாஜி பற்றிய அவரது கருத்தே சான்று. ‘என் சிறுகதைச் சாதனையாளர்களின் பட்டியலில் ராஜாஜிக்கு இடம் கிடையாது. எனக்குத் தெரிந்த அளவில் பாரதம், ராமாயணம், உபநிஷத் என்று பல புராதன நூல்களை காலத்துக்கு ஏற்றபடி திறம்படச் சொல்லியிருக்கிறார், அவை பல்லாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதற்கு மேல் அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் அபிப்பிராயம் கிடையாது.’

***

க.நா.சு.வின் நாவல்களையும், சிறுகதைகளையும், விமரிசனக் கட்டுரைகளில் மிகச் சிலவற்றையும், கிடைத்த மொழிபெயர்ப்புகளையும் வாசித்துவிட்டு க.நா.சு. நடத்திய பத்திரிகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் என எண்ணி முதலில் அவருடைய ‘இலக்கிய வட்ட’த்தைத் தேடினேன். அந்தப் பத்திரிகையில் வெளிவந்தவற்றில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது சந்தியா பதிப்பகம். அந்த அரும்பணியைச் செய்திருப்பவர் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.அ. சச்சிதானந்தன். ஆனால் அந்த நூல் எனக்கு எந்த இடத்திலும் கிடைக்கவில்லை. கன்னிமாராவின் நூற்பட்டியலில் இருந்தது. ஆனால் அலமாரியில் இல்லை. பல்வேறு இடங்களில் தேடிய பின்னர் ‘விருட்சம்’ அழகிய சிங்கர் தான் சந்தியா பதிப்பக உரிமையாளர் நடராஜனிடம் இருந்த சொந்தப் பிரதியை வாங்கிப் புகைப்பட நகல் எடுத்துக் கொடுத்தார். அதில் கி.அ. சச்சிதானந்தன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து நாம் சில அரிய தகவல்களைத் தொகுத்துக் கொள்ளலாம். க.நா.சு. நடத்திய, ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள் கொண்ட ‘சூறாவளி’ பத்திரிகையின் முதல் இதழ் ஏப்ரல் 23, 1939 அன்றும், இருபதாவது இதழ் அக்டோபர் 15, 1939 அன்றும் வெளியானது. ‘சூறாவளி’ ஞாயிறு தோறும் வெளிவந்த வாரப் பத்திரிகை என்பது இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. ‘சூறாவளி’யின் துணையாசிரியர் கி.ரா. (நம்முடைய கி. ராஜநாராயணன் அல்ல; முப்பதுகள், நாற்பதுகளின் கி.ரா. வேறு.) இலக்கியம் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் உலக அரசியல், சங்கீதம், சினிமா போன்ற விஷயங்களும் இதில் அலசப்பட்டுள்ளது. மயன், ராஜா, நசிகேதன், தேவசன்மன், சுயம் போன்ற பதினைந்து புனைப்பெயர்களில் க.நா.சு.வும், மற்றும் ச.து.சு. யோகியார், சி.சு.செல்லப்பா, கே. பரமசிவம், பி.எஸ். ராமையா, கி.ரா., கு.ப.ரா., சாலிவாஹனன், இலங்கையர்கோன், அ.கி. ஜெயராமன் போன்றவர்களும் ‘சூறாவளி’யில் எழுதியிருக்கின்றனர்.

Story image

‘சூறாவளி’க்குப் பிறகு க.நா.சு. நடத்திய பத்திரிகை ‘சந்திரோதயம்’. முதல் இதழ் வெளியான ஆண்டு 1945. மாதமிருமுறை இதழ். ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள். தமிழ்நாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டு அரசியல், சங்கீதம் சினிமா பற்றிய கட்டுரைகளோடு இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் மகளான லலிதா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சமையல் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இவை தவிர, புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்களும் எழுதியிருக்கின்றனர்.

தன் வாழ்நாள் முழுவதும் முதுகே வளைந்து விடும் அளவுக்கு க.நா.சு. ஏன் படித்தார் என்பதற்கு ‘சந்திரோதயம்’ பொங்கல் இதழில் (1946) பதில் கிடைக்கிறது: ‘உலகத்து இலக்கியங்களிலே மகோன்னதமான சிகரங்கள் பல இருக்கின்றன… தமிழ் மரபு தெரிய வேண்டும் என்றும் அதில்லாவிட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமில்லை என்றும் கூறுகிறவர்களுக்குப் பதில் கூறுவது போல உலக இலக்கிய மரபுகள் தெரிய வேண்டும்; அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம்.’

‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ பத்திரிகைகளுக்குப் பிறகு க.நா.சு. நடத்திய பத்திரிகை ‘இலக்கிய வட்டம்.’ முதல் இதழ் நவம்பர் 22, 1963-ம் ஆண்டு வெளிவந்தது.

*

நினைவோடை: க.நா.சு. பற்றி சுந்தர ராமசாமி

http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_8372.html

புதுமைப் பித்தனின் ‘சாப விமோசனம்’:

http://azhiyasudargal.blogspot.in/2010/01/blog-post_08.html

க.நா.சு. பற்றிய தகவல்களுக்குப் பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முக்கியமாக அழகியசிங்கர், அரவிந்தன், சந்தியா பதிப்பகம் நடராஜன், சி.சு. செல்லப்பா பற்றிய சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை’ நூலை புகைப்பட நகல் எடுத்து அனுப்பிய செல்வேந்திரன், எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கிய வட்டம் இதழைத் தொகுத்த கி.அ. சச்சிதானந்தன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.