புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தி. ஜானகிராமன் (1921-1982)

என் இளமைக் காலம் தீண்டத்தகாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது.

Updated On :24 அக்டோபர் 2015, 9:13 am

என் இளமைக் காலம் தீண்டத்தகாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் - ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் பெண்களின் வேலை, மேட்டுக்குடி வீடுகளில் போய் மலம் அள்ளி அதை பீ சந்து என்ற இடத்தில் நிற்கும் லாரியில் சேர்ப்பது. ஆண்களுக்கு வயல் வேலை கூட கிடைக்காது. எங்காவது காட்டுக்குப் போய் முயல், காட்டுக் கோழி, உடும்பு என்று எதையாவது அடித்துக் கொண்டு வந்து விற்று காசாக்குவார்கள். பிறகு வேலிமுட்டி சாராயத்தைக் குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பார்கள்.

இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்த ஒருவனின் மனநிலை எப்படியிருக்கும், உலகத்தை அவன் எந்த அடிப்படையில் பார்ப்பான் என்று நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த சாதீயப் படிநிலைக்குக் காரணம் என்ன? வெறுப்பு. சாதீய அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவர்களின் மீதான வெறுப்பும் அசூயையும்தானே அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தது?

இப்படி வெறுப்பின் அடிப்படையில் உருவான பிரிவினையை ஒரு காலகட்டத்தில் இன்னொரு வெறுப்பு எதிர்கொண்டது. மேல்சாதி மற்றும் அவர்களது கலாசாரத்தின் மீதான வெறுப்பு அது. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை அடி என்று கற்பிக்கப்பட்ட பள்ளியில் சேர்ந்து முதல் வரிசை மாணாக்கனாகத் தேறினேன். 25 வயது. தி. ஜானகிராமன் கசந்தார். என்னய்யா எழுத்து இது? தீண்டாமை என்ற கொடுமை கொழுந்து விட்டு எரிகிறது; அதைப் பற்றி இந்த எழுத்தாளருக்குக் கவலையோ அக்கறையோ இல்லை; அவாளுக்கும் இவாளுக்கும் காதலாம், கத்தரிக்காயாம். வெங்காயம். இதில் சங்கீதம் வேறு. எழுத்தில் பறை சத்தம் கேட்கிறதா? என்ன, கேட்கவில்லையா? தூக்கிக் குப்பையிலே போடு.

ஒரு அரசியல் சமூக சித்தாந்தமாக என்னுள் வளர்ந்து விட்ட வெறுப்பு என்ற புற்று நோயை அகற்றியவர் 25 ஆண்டுகளாக என்னோடு உரையாடி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன். எவ்வளவு வசவுகளைச் சகித்துக் கொண்டிருப்பார் அவர்! ‘பரவாயில்லை சாரு, உங்கள் நிலையில் நான் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் திட்டியிருப்பேன்’ என்று மட்டுமே பதில் சொல்வார். அவர்தான் எனக்கு ஆப்ரஹாம் லிங்கனை அறிமுகப்படுத்தினார். நான் அதுவரை அறிந்திருந்த கார்ல் மார்க்ஸ், ஈ.வே. ராமசாமி ஆகிய இரண்டு பேரும் ஆப்ரஹாம் லிங்கனும் எதிர் எதிர் துருவங்களில் நின்றார்கள். அதற்குப் பிறகே தொல்ஸ்தோய், காந்தி என்று வந்தேன். வெறுப்பு என்ற புற்றுநோய் என்னை விட்டு அகன்றது.

இப்படிப்பட்ட பின்னணியிலும் கூட எம்.வி. வெங்கட்ராம், மௌனி, கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு போன்ற கும்பகோணத்துக்காரர்களைப் பிடித்துப் போனதற்குக் காரணம், அவர்களிடமிருந்த ‘ட்ரான்ஸ்கிரஸிவ்’ தன்மைதான் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் தி.ஜா.விடம் இருந்தது முழுக்க முழுக்க அன்பும் உன்னதமும் தரிசனமும். எனக்கோ அப்போது அதெல்லாம் கெட்ட வார்த்தைகள்.

ராகவனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை மங்கல். சரி செய்து கொள்ள முடியாதபடி வறுமை. கல்லூரியில் படிக்கும்போது மைனஸ் பத்து. பிறகு 25 வயதில் ஒரு லென்ஸ் போட்டுக் கொண்டார். லென்ஸ் போட்ட பிறகும் பார்வையில் உறுத்தல். தரைச் சக்கரம் சுற்றும் போது வட்டம் வட்டமாகத் தெறிக்குமே, அதுபோல பார்வையில் பட்ட எல்லாமே வளையம் வளையமாகத் தெரிகிறது. அல்லது, பனி விழும் மங்கல். உலகத்தையே மங்கலான திரை ஒன்று மறைத்திருந்தது. ராகவனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டே தவிர உறவுகளாலும் நண்பர்களாலும் நாஸ்திகர் என்றே கருதப்படுபவர். அதனால் அதிசயங்களில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. கண்களில் போட்டிருக்கும் லென்ஸைக் கழற்றி தினமும் நீரில் கழுவிப் போட்டுக் கொள்ள வேண்டியது லென்ஸ் அணிந்திருப்போரின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. அதன்படி ஒருநாள் அவர் காட்டழகர் கோவில் சென்றிருந்தபோது தன் லென்ஸைக் கழற்றி அங்கே வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சிறியதொரு அருவி நீரில் கழுவி கண்களில் போட்டுக் கொள்கிறார். ஆஹா, அவர் சொன்ன அற்புதத்தை நான் ஒரு கதையாகத்தான் எழுத வேண்டும். கார் கண்ணாடியைத் துடைத்தது போல் பனி விலகி விட்டது. இருளில் சூரிய ஒளி பாய்ந்தது போல் இந்த உலகமே பளீரென்று தெரிகிறது. அந்த அதிசயத்தோடு நிற்காமல் இன்னொரு அதிசயமும் தொடர்ந்தது. காட்டழகரின் தீர்த்தம் தொட்ட அந்த லென்ஸை கடந்த 35 ஆண்டுகளாக அவர் மாற்றவே இல்லை. இது கின்னஸில் பதிவு செய்யப்பட வேண்டிய உலக அதிசயம் என்கிறார் ராகவன்.

ஏன் இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், ராகவனுக்குக் காட்டழகர் அருவி நீரால் பார்வை வந்தது போல் என் மனதில் இருந்த வெறுப்பெனும் திரை விலகியவுடனேயே தி.ஜா.வின் பிரம்மாண்டமும் உன்னதமும் அழகின் ஆராதனையும் எனக்குப் பளீரென விளங்கலாயிற்று.

***

தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றிய பின் அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். கர்நாடக இசையிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த ஞானம் உண்டு. 1943-ல் எழுதத் தொடங்கிய தி. ஜா. எழுதிய நாவல்கள்: அமிர்தம், மோக முள், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம், உயிர்த்தேன், செம்பருத்தி, மரப்பசு, நளபாகம். இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைள், கட்டுரைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் (‘உதய சூரியன்’, சிட்டியுடன் சேர்ந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘கருங்கடலும் கலைக்கடலும்’, ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’)

Story image

மணிக்கொடி காலகட்டத்துக்குப் பிறகு சிறுகதையில் ஒரு தேக்கம் நிலவியது. கு.ப.ரா.வும் இறந்து விட்டார். அந்தத் தேக்கத்தை உடைத்தவர்கள் தி.ஜானகிராமன், லா.ச.ரா. என்ற இருவர். (லா.ச.ரா.வுக்கு இப்போது நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது.) இவர்கள் இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, இருவருமே 1940களிலிருந்து இன்றளவும் வாசகர்களால் விரும்பப்படும் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளிலேயே பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர்கள். எந்தவொரு எழுத்தாளரும் வாசகரும் தமிழின் ஆகச் சிறந்த பத்து நாவல்கள் என்று பட்டியலிட்டால் அதில் தி.ஜா.வின் மோகமுள்ளோ, அம்மா வந்தாளோ இல்லாமல் இராது. தி.ஜா. அளவுக்குக் கொண்டாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரே இல்லை என்று கூட சொல்லலாம். இன்றைய நிலையிலும் அத்தனை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கொண்டாட்டத்துக்குரிய எழுத்தாளராகவே இருந்து வருகிறார் தி.ஜா. காரணம், தி.ஜா.வின் உலகம் வான வேடிக்கைகளும் வர்ண ஜாலங்களும் கொண்ட ஆண் பெண் உறவு. அது மட்டும் அல்ல; அழகின் உபாசகர். அழகையே தெய்வமாக உபாசித்தவர். அதனால்தான் பாமரனிலிருந்து புத்திஜீவி வரை கொண்டாடும் எழுத்தாளராக இருக்கிறார்.

தி. ஜானகிராமனுக்கு நேர் எதிரானது அசோகமித்திரனின் உலகம். வாழ்வின் மிக இருண்ட பகுதிகளை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் இருண்மையான மொழியில் அல்ல; ப்ளாக் ஹ்யூமர் என்று சொல்லப்படும் துயரம் தோய்ந்த பகடி அவர் எழுத்தின் பலங்களில் ஒன்று. அந்த வகையில் அசோகமித்திரனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கூட சொல்லலாம். இன்னொரு விதமாக யோசித்தால், அசோகமித்திரன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நரகத்தையும் தி.ஜா. கடவுளால் அருளப்பட்ட சொர்க்கத்தையும் எழுதுகிறார்கள். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் நாம் தி.ஜா. அசோகமித்திரன் இருவரையும் இன்னும் சிறப்பாக வாசிக்க முடியும்.

Zeus என்ற கிரேக்கக் கடவுளின் புதல்வர்கள் அப்பல்லோ, டயோனிஸஸ். அப்பல்லோ உன்னதம், அழகு, மேன்மை போன்றவற்றின் குறியீடு. டயோனிஸஸ் குழப்பம், இருண்மை, துயரம் ஆகியவற்றின் அடையாளம். இவ்வாறாக இந்த இரண்டு கடவுளர்களையும் தத்துவப்படுத்தியவர் நீட்ஷே. அதை நாம் தி.ஜா.வுக்கும் அசோகமித்திரனுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

1972-ல் வெளிவந்த அசோகமித்திரனின் ‘விமோசனம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எஸ். வைதீஸ்வரன் இப்படி எழுதுகிறார்: ‘ (அசோகமித்திரனின் மனிதன்) Francis Bacon-ன் ஓவியங்களில் சித்தரிக்கப்படும் மனித முகத்தைப் போல துக்கமும் கோமாளித்தனமும் ஆணவமும் குற்றத்தின் சுமையும் பல பல கோணங்களில் காட்டும் உருக்கமான முகம் கொண்டவன்.’

அசோகமித்திரனின் ‘இருவர்’ என்ற குறுநாவல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். வாலாவின் கணவன் வெங்கடாசலம் தன் வைப்பாட்டி தனத்தைப் பார்த்து விட்டு வரும்போது ஆற்று மணலில் சிக்கி இறந்து விடுகிறான். தனத்துக்கு வாலாவின் மீதும் வாலாவின் மகன் விசுவின் மீதும் அதீதமான பாசம். வாலாவுக்கும் தனத்தின் மீது மிகுந்த பிரியம் உண்டு. (அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சகஜம்.) வாலா விசுவுடன் தன் அண்ணா வீட்டுக்குப் போய் வாழ்கிறாள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிராமண குலத்தில் இளம் விதவைகள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படிப்பட்ட வாழ்க்கை அது. இவ்வளவுக்கும் வறுமை ஒன்றும் இல்லை. வெங்கடேசன் ஒரு குட்டி ஜமீன்தார். ஆனாலும் அண்ணாவின் வீட்டில் விதவையாக வாழும் வாலா அடுக்களையை விட்டு வெளியே வந்ததில்லை. யாரிடமும் ஒரு பேச்சு பேசியதில்லை. இந்த நிலையில் தனம் தன் தாயாரோடு ஊரை விட்டு ஒரேயடியாக சென்னைக்குப் போவதால் கடைசி தடவையாக விசுவையும் வாலாவையும் பார்க்க வருகிறாள். வீட்டுக்குள் கூட நுழையாமல் தெருவிலேயே நின்று பார்த்து விட்டு, தான் செத்தால் கொள்ளி போட வருவாயா என்று விசுவிடம் கேட்டு விட்டுப் போகிறாள். தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் விசுவின் மீது அப்படி ஒரு பாசம் அவளுக்கு. அவள் போன பிறகு வாலாவின் அண்ணா வருகிறான். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் நரகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து காண்பிக்கிறார் அசோகமித்திரன். நேராகச் சென்று வாலாவின் கன்னத்தில் அறைகிறான் அவள் அண்ணா. அவள் குறுகிக் கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது. ஆனால் அதையும் கவனிக்காமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடிக்கிறான். ‘அண்ணா, அண்ணா’ என்று அவள் முனகுகிறாள். ‘கட்டினவனை முழுங்கிட்டு இங்கே வந்து என்னடி ஆட்டம் போடறே!’ என்று சொல்லிக் கொண்டே அடித்து விளாசுகிறான். இடையில் ஓடி வரும் அவன் அம்மா ‘டேய், டேய், அவ தூரண்டா’ என்கிறாள். ‘அதை ஏன் முன்னமே சொல்லவில்லை?’ என்று அம்மாவைத் திட்டுகிறான்.

‘நீ தான் சொல்ல விடலியேடா.’

‘நீ ஏன் இந்த மூதேவியைத் தடுக்கலே? வாசல்லே ஒரு குச்சுக்காரி வந்தாக்க இவளா அவளைப் போய்ப் பாக்கப் போனாளா?’

தூரமானவளைத் தொட்டு தீட்டுப் பட்டு விட்டதால் கிணற்றடியில் போய் குளிக்க அமர்கிறான். அவனுடைய மனைவி தண்ணீர் சேந்தி ஊற்றிக் கொண்டே அவனிடம் சொல்கிறாள்: ‘வந்தவ இவளுக்காக வரலை. அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா. வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கிறா. இதுவும் தழுவிக் குலாவறது. கொஞ்ச நாழியான்னா ரெண்டு பேரும் அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.’

இப்படி மனிதர்கள் உருவாக்கிய நரகத்தின் வாயில்கள் திறந்து திறந்து போய்க் கொண்டே இருக்கிறது அசோகமித்திரனின் எழுத்தில்.

இதற்கு நேர் எதிரான தெய்வீக உலகம் தி.ஜா.வினுடையது. அந்த உலகில் உன்னதமும் அழகும் ஆராதிக்கப்படுகின்றன. ‘மோகமுள்’ ஒரு ஆகச் சிறந்த உதாரணம். அதன் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னதத்தின் சிலிர்ப்பு என்றே சொல்லலாம்.

‘பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழந்து வந்து கொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிஷம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றி விட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன்வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ… ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா… என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை…’

‘ஆகா! எவ்வளவு பாக்கியம் செய்த விரல்கள்! பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக் கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக் கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக் கூட மனம் வராத கண்கள் திறக்க மறுத்தன. காலமும் இடமும் மறந்து அற்றுப் போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழந்தது. ஒரு கணப்பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகி விட்டன. ஆனால் அடுத்த வினாடி உள்ளம் ஒலியினின்றும் விண்டு தனியாகப் பிரிந்து, கேட்பவனாக, அனுபவிப்பவனாகத் தனியாக நின்றது.’

‘பாபுவுக்கு உள்ளம் நெகிழ்ந்து விட்டது. பைரவி ராக வர்ணத்தில் உள்ளம் மபகாரீஸநீதபமா என்று வீணை கீழே இறங்குவது கேட்டது. என்னடா இப்படிச் செய்து விட்டாயே என்று பொறுமையாகவும், இடித்தும் கேட்பது போல் விழுந்த அந்த ஸ்வர வரிசை, நெஞ்சில் பாய்ந்து வயிற்றைக் கலக்கிற்று. மறுபடியும் தாரைதாரையாக அவன் கண்ணில் நீர் பெருகிற்று. தன் தவறிய கடமைகளை நினைத்தா அல்லது, ராகத்தின் வடிவத்தை சுத்தமாக எழுப்பிய அந்த சுருதியைக் கவ்வின இசையில் நனைந்தா. அவன் கண் நனைந்தது. அவன் இதயம் விம்மிற்று!’

இந்த விம்மலைத்தான் ‘மோகமுள்’ முழுவதுமே நாம் உணர்கிறோம்.

அந்தக் காலத்தில் – அதாவது, எண்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சாவூரில் வெங்கடேச பெருமாள் அனுமார், சிவகங்கை அனுமார், மேலவீதி விச்வாநதய்யர் கோவில், வாகைப்பையர் சந்தில் தியாகப் பிரம்மம் பூஜை, தெற்கு வீதி காளி கோவில் என்று வருஷம் முழுவதுமே சங்கீதக் கச்சேரிகள் இருந்து கொண்டேயிருக்கும். ஏழு வயதுச் சிறுவனான பாபுவும் அவன் தந்தையும் நள்ளிரவு வரை கச்சேரி கேட்டு விட்டு வீட்டுக்கு வருவார்கள். அப்படி ஒரு பனிக்காலத்தில் நள்ளிரவில் வீடு திரும்பும் போது ‘உனக்கென்னடா கச்சேரி கேட்கத் தெரியும்?’ என்று கேலியுடன் கேட்டுப் புன்னகை செய்கிறாள் அம்மா. அதன் பிறகு நடக்கும் சம்பாஷணை:

‘பியாகடை இன்னிக்கு ரொம்ப நன்னா வாசிச்சார் அம்மா.’

‘சரி சரி, படுத்துக்கோ’ என்றாள் தாயார். பாபு படுத்துக் கொண்டான். அப்புறம் ஒரு நிமிஷம் தொண்டைக்குள்ளேயே ராகத்தை இழுத்தான். மூடியிருந்த கண்களும் உள்ளமும் ராமலிங்க மடத்தில் இன்னும் பியாகடை ராகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தன. ஒலியில் அதிரும் ஏனத்து நீர் போல அவன் இளம் நெஞ்சு அந்த நினைவின் கார்வையில் சிலிர்த்துக் கொண்டிருந்தது.

‘பாபூ.’

‘……’

‘பாபூ.’

‘ஏம்மா?’

‘மணி மூணடிச்சுப்பிடுத்து.’

‘எப்பம்மா?’

‘இப்ப அடிச்சுதே, காதிலே விழலை? தூங்கு.’

‘பாபு, தூங்குடா’ என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார். என்ன ஆனந்தமான ஸ்பர்சம்! ஒரு ஸ்பர்சத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக் கூடிய அந்த உள்ளங்கை. இப்போது கூட தடவுவது போலிருக்கிறது.

***

கும்பகோணத்தில் படித்துக் கொண்டிருக்கிறான் பாபு. இருபது வயது. வடவண்டை இருந்த சித்திரக்குளப் படிக்கட்டில் காலை அலம்பி விட்டு உள்ளே நகர்கிறான். அம்மன் சந்நிதியில் கூட்டம் நெரிந்தது. எதிரே உயரத்தில் சற்று சாய்த்து மாட்டியிருந்த நிலைக்கண்ணாடியில் அம்மனின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இடையைச் சற்று வளைத்து, முடியில் ராஜமகுடம் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல அழகிய சிலைகளில் ஒன்று இது. யமுனாவை விட வனப்பில் குறைந்தவள்தான் இவள். ஆனாலும் கண்ணை மூடி நின்ற பாபுவுக்கு இந்தச் சிலைதான் கண்முன் நின்றது. யமுனாவை வீட்டில் இருக்கும்போது இதயத்தில் வைத்து வணங்குகிற வழக்கம்தான். ஆனால் இந்த மங்களாம்பிகையின் முக அமைப்பிலும், நிற்கும் நிலையிலும் ஒரு அசாதாரணத்தன்மை, ஒரு அமானுஷ்யம் ஓங்கி ஒளி வீசுகிறது.

மோகமுள்ளைப் படித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு க்ஷணத்திலும் எனக்கு ஏதோ ஒரு தெய்வத்தோடு பேசிக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அதுதான் ஜானகிராமன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.