‘நான் அப்போது சி.சு. செல்லப்பா அல்ல. 1939-ல் வ.ரா. ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்த வாரப் பத்திரிகையான ‘பாரத தேவி’யில்தான் நான் சி.சு. செல்லப்பா ஆனேன். என் முதல் கதை புரூப் ஸ்டாண்டிங் காலியை எடுத்துக்கொண்டு என் மேஜை முன் வந்து நின்ற வ.ரா. திடுதிப்பென என் ஊரையும் அப்பாவின் பெயரையும் கேட்டார். சொல்லவும், ‘ஏன் ஸார், சி.சு. செல்லப்பா என்று வைத்துக் கொள்ளக் கூடாது? அரைத் தமிழனாக இருக்கிறீர்’ என்று கேட்டு விட்டு சடக்கெனத் திரும்பி தன் அறைக்குப் போய் விட்டார். பக்கத்தில் இருந்த கு.ப.ரா.வைப் பார்த்தேன். புன்னகையுடன், ‘அவர் இப்படித்தான் ‘படக்’ எனச் சொல்லுவார்’ என்றார்.’ அன்றைய தினமே ஸி.எஸ். செல்லப்பா சி.சு.செல்லப்பாவாக மாறினார்.
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. எல்லா எழுத்தாளர்களும் சிறுகதைகளை எழுதினர். ஆனந்த விகடன் ஆரம்பமாகி ஓர் ஆண்டிலேயே ‘நூறு ரூபாய் சிறுகதைப் போட்டி’ நடத்தியது. கலைமகளில் பதினைந்து ரூபாய் போட்டி. இதெல்லாம் நடந்தது 1933. ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகை சங்கு சுப்ரமணியனை ஆசிரியராகக் கொண்டு ஓரணா விலையில் 24.11.1933 அன்று வெளிவந்தது. மணிக்கொடி வந்து அப்போது ஏழு வாரங்கள் ஆகியிருந்தன.
அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு. செல்லப்பா. செல்லப்பாவின் சிறுகதைகள் அனைத்தும் ‘காவ்யா’ பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 97 கதைகள். 940 பக்கங்கள். சி.சு. செல்லப்பா என்றால் நம் நினைவுக்கு வருவது ‘எழுத்து’ பத்திரிகைதான். ஆனால் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. செல்லப்பாவின் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று சொல்ல முடியாவிட்டாலும் 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
***
1946 ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்; ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன.


ஆகஸ்ட் 16-18, 1946-ல் நடந்த படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக – ஏன், மறைமுகமாகவும் கூட - சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை. இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் புனைகதைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
கல்கத்தா படுகொலைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றுவது பற்றி யோசித்தது. அச்சட்டத்தின்படி அரசியல் கைதிகள் கூட குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழே வருவார்கள். அச்சட்டத்தின்படி தேவர், கள்ளர் மற்றும் பல்வேறு சாதியைச் சேர்ந்த ஆண்கள் இரவு ஆனதும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விடவேண்டும். இந்த மனித விரோத சட்டத்துக்குப் பெயர் Criminal Tribles Act. இது மக்களிடையே அக்காலகட்டத்தில் சி.டி. ஆக்ட் என்றே பிரபலமாகியிருந்தது. தென்னாஃப்ரிக்காவின் கருப்பின மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு நிகரான கொடுமையான சட்டம் இது. ஆனால் நம் நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், தென்னாஃப்ரிக்காவின் அத்தகைய சட்டங்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய மக்களுக்கு எதிரான குற்றப் பரம்பரை சட்டம் பற்றி எதுவுமே தெரியாது.
அந்தச் சட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் அன்றைய தினம் திருமணம் நடந்தது என்றால் கூட அந்தப் புது மாப்பிள்ளை அன்று இரவு வீட்டில் தங்க முடியாது; போலீஸ் ஸ்டேஷன் தான் போயாக வேண்டும்.
சி.சு. செல்லப்பாவின் தொகுப்பில் ‘குற்றப் பரம்பரை’ என்று ஒரு சிறுகதை உள்ளது. கதை நடப்பது 1946-ல். மூன்று இளைஞர்கள் ரயிலில் மூன்றாம் வகுப்பில் ஐம்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது ‘ஆகஸ்ட் கலவரம்’ தொடர்பாக பிரிட்டிஷ் சர்க்கார் போட நினைக்கும் புதிய சட்டம் பற்றிய பேச்சு வருகிறது. திருடர்களைத் திருத்துவதற்காகப் போட்ட சட்டத்தை ராஜீயவாதிக்கு உபயோகிக்கலாமா என்று கேட்கிறான் ஒரு மாணவன். மூவருமே உயர் சாதி என்பதைக் கதையோட்டத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் பேச்சில் குறுக்கிடுகிறார் ஒரு பெரியவர். வயது ஐம்பதுக்கு சமீபம் இருக்கும். தசைநார்கள் மெலிந்து இளைத்து இருந்தாலும், உடல் கருத்து வைரம் ஏறினதாக இருந்தது. காதுகளில் செகப்புக் கல் கடுக்கன்கள்; தலையில் ஒரு கட்டம் போட்ட செகப்புத் துண்டால் முண்டாசு. இடது கையில் ஒரு வெள்ளி விருது. இடுப்பில் ஒரு வெற்றிலைப் பை.
அவர் அந்த மாணவர்களுக்கு ஒரு கதை சொல்கிறார். ‘கள்ள ஜாதியிலே பிறந்துட்டதுக்காக ஆயுசு பூராவும் இந்த சி.டி. ஆக்டுக்குள்ற அகப்பட்டுக்கிட்டு படுகிற அவஸ்தை கள்ளனுக்குத்தான் தெரியுங்க’ என்று ஆரம்பிக்கிறார் கதையை.
அவன் பெயர் வீரண்ணத் தேவன். இளவயதில் ஒரு மாதிரியாகத்தான் இருந்தான். ரெண்டு மூணு முறை ஐந்து கம்பிகளுக்குள்ளும் இருந்து விட்டு வந்தான். பிறகு என்னவோ தோன்றி புத்தியாகப் பிழைக்க ஆரம்பித்தான். இரண்டு காடு மேட்டை வாங்கி, கிணற்றை வெட்டி இரண்டு மிளகாய் வெங்காயத்தைப் போட்டான். வேட்டியைக் கச்சம் கட்டி உழைத்தான். அவன் அதிட்டம், இரண்டும் விலை ஏறி விற்க, அவனிடம் படிப்படியாக நாலு காசு சேர்ந்தது. ஒரு ஓட்டு வீட்டையும் கட்டினான். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் மனிதனாக வாழ ஆரம்பித்தான்.
ஒரே ஒரு மகள். அவளைப் பெற்றுப் போட்டு விட்டு ஆத்தாள் போய் விட்டாள். மகளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்துத் திருமணம் செய்து வைத்தான். முறைமைப் படி அக்காள் மகனுக்கே கட்டிக் கொடுத்து மருமகனை வீட்டிலேயே வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளில் மருமகன் வெளிநாடு போய் பிழைக்க ஆசைப்பட்டான். மனைவியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். வாழ்நாள் பூராவும் மகளுக்காகவே வாழ்ந்து விட்டு இப்போது ஐம்பது வயதுக்கு மேல் அனாதையாக வாழ்வதா என்று வீரண்ணனுக்கு ஒரே கவலை. அப்பன் மீது உயிரையே வைத்திருக்கும் மகளுக்கும் தாங்க முடியவில்லை. ஆனாலும் கட்டியவன் அழைத்தால் போய்த்தானே ஆக வேண்டும்?
இருவரையும் வண்டியேற்றி அனுப்புவதற்காக மெயின் ரோடு வரை வந்தான் வீரண்ணன். நீயும் என் கூடவே வந்து விடேன் என்கிறாள் மகள். ஆடு, மாடு, கோழி, நிலம், தோட்டம் எல்லாவற்றையும் விட்டு விட்டு எப்படி வருவது? அப்பனுக்கும் மகளுக்கும் அழுது அழுது ஆறவில்லை. மெயின் ரோடு வருகிறது. போய்ட்டு வாறேம்மா. மகள் பிழிந்து பிழிந்து அழுகிறாள். சரி, ரயில் வரைக்கும் வருகிறேன் என்று அவர்கள் கூடவே போகிறான். பத்து மைல் தூரத்தில் இருந்தது ஸ்டேஷன்.
ஸ்டேஷனுக்கும் வந்தாயிற்று. கைகாட்டி இறங்கிவிட்டது. ரயில் வரப் போகுதேன்னு தகப்பனும் மகளும் பட்டபாடு சொல்ல முடியாதுங்க. பெரியவர் கதையோடு ஒன்றி விடுகிறார். ரயில் நாகப்பட்டினம் போகிறது. அங்கேதான் மகளும் மருமகனும் கப்பல் ஏற வேண்டும்.
ரயில் வந்த பிறகு மகள் கதற ஆரம்பித்து விடுகிறாள். நீயும் வா. நீயும் வா.
போய் வா என்று சொல்ல வீரண்ணனுக்கு மனசு வரவில்லை. இந்தா வாரேன் இரு என்று சொல்லிவிட்டு நாகப்பட்டினத்துக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு வந்து ரயிலில் ஏறி விடுகிறான்.
நாகப்பட்டினம். ஸ்டேஷனில் வண்டி நின்றதும் கீழே இறங்கி ஓர் ஓரமாக இருந்த குழாய்க்குப் போய் தண்ணீர் குடித்தான் வீரண்ணன். குடித்து நிமிர்ந்ததும் ‘ஏனப்பா, நீதானே வீரண்ணத் தேவன்?’ என்று குரல் கேட்கிறது.
போலீஸ்காரர். பொய்யே சொல்ல முடியாது. வீரண்ணனின் முக மாறுதலை போலீஸ்காரர் கவனித்து விட்டார். ‘உன் ஊரு கள்ளப்பட்டிதானே? நீ ஊரைவிட்டு வெளியேர்ரபோது சொல்லிட்டு வந்தியா?’ என்று கேட்கிறான் சாதாரண உடையில் இருந்த அந்த சி.ஐ.டி. திட்டமிடாமல் கிளம்பியதால் சி.டி. ஆக்டின் அந்த ஷரத்தை மறந்தே போனான் வீரண்ணத் தேவன். குற்றப் பரம்பரை சட்டப்படி, கீழ்நிலைச் சாதியினர் போலீஸ் அனுமதி இல்லாமல் வெளியூர் செல்லக்கூடாது.
போலீஸிடம் ரெண்டு நிமிடம் சொல்லிவிட்டு மகளிடம் வந்து தான் கிளம்புவதாகச் சொல்கிறான். போலீஸ் விஷயம் அவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் அவமானம். கப்பல் வரை அழைக்கிறாள் அவள். அதெல்லாம் வேண்டாம் அம்மா என்று வீரண்ணன் சொல்ல, மருமகனும் அதை ஆமோதிக்க, ஒருமாதிரி அவர்களிடமிருந்து பிரிந்து போலீஸிடம் வருகிறான்.
வீரண்ணத் தேவன் நாலு காசு சம்பாதித்து வளமாக வாழ்வதைப் பொறுக்க மாட்டாத ஊர் சனத்தில் ஓரிருவர் அவன் வெளியூர் சென்றதை போலீஸிடம் போட்டுக் கொடுத்து விட்டனர். அதோடு, குற்றவாளிகள் சிக்காமல் திணறிக் கொண்டிருந்த நாலைந்து வழக்குகளையும் வீரண்ணன் மீது போட்டு நாலு ஆண்டு தண்டனை கிடைக்கிறது.
இனிமேலும் என்னால் மறைக்க முடியவில்லை தம்பிங்களா, அந்த ஆள் நான்தான், இப்போது ஜெயிலிலிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்று கதையை முடிக்கிறான் வீரண்ணன்.
மலாயா போன மகளும் மருமகனும்? அவர்கள் போனதுமே ஜப்பான்காரன் அந்த இடத்தைப் பிடித்துவிட்டான். அவர்கள் எதிர்பார்த்த சொர்க்கம் அங்கே கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று வீரண்ணனுக்கும் தெரியாது. சிறையில் அல்லவா இருந்தான்? இப்போதுதான் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
இதுபோல் 97 கதைகள். எல்லாக் கதைகளுமே செல்லப்பாவின் வாழ்வில் நடந்த, கேட்ட அனுபவங்களாகவே தெரிகின்றன. இப்பேர்ப்பட்ட கதைகளை விட்டுவிட்டு நாம் சி.சு. செல்லப்பாவை ‘எழுத்து’ பத்திரிகையோடு மட்டுமே குறுக்குவது நியாயமே இல்லை எனத் தோன்றுகிறது.
சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட ‘சரஸாவின் பொம்மை’ என்ற கதை மிக வித்தியாசமான ஒரு படைப்பு. செல்லப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு குடும்ப சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அறை எடுத்துத் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் நாயகன், தன் மாமா வீட்டுக்கு அவ்வப்போது போகிறான். அவனுடைய அம்மங்காள் சரஸா சாதம் சாப்பிட அடம் பிடிக்கிற சமயங்களில் அம்மாமி அவனிடம் புகார் பண்ணுகிறாள். ‘உன் அம்மங்காள் சாப்பிடறதுக்குள்ளே என் பிராணனை வாங்கிடறாளப்பா. இனிமே என்னாலே இவளோடே பிராணனைக் கொடுக்கமுடியாது. இன்னும் ஐந்தாறு வருஷங் கழித்து நீ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு, உனக்குப் புண்ணியம் உண்டு, இப்போதே கல்யாணம் பண்ணிக் கூட்டிண்டு போயிடு.’
முறைப் பையன்கள் இருக்கும் எல்லோருடைய வீடுகளிலும் நடக்கும் சமாச்சாரம்தான். ஆனால் இப்போதைய ‘சிறு குடும்பச்’ சூழலில் இதெல்லாம் காணாமல் ஆகி விட்ட விஷயம்.
அம்மாமி சொல்வதைக் கேட்டு இளைஞன் தன் அம்மங்காவிடம் போய், ‘சரஸா, என்ன இது! இப்படி இன்னிக்கு அசடு மாதிரி, பார்த்தியா ஐயே… இங்கே வா’ என்று மிருதுவாக அழைக்கிறான். உடனே சரஸாவின் அழுகை போன இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. அதற்குப் பிறகு அத்தானும் அம்மங்காளும் பேசிச் சிரித்துக் கொண்டு பொழுது போகிறது. சாப்பாடும் ஆகிறது. மீண்டும் சரஸாவின் கல்யாணப் பேச்சை எடுக்கிறாள் அம்மாமி. இளைஞனும் ‘சரஸா, என்னைக் கல்யாணம் பண்ணிண்டுடறியா?’ என்று கேட்க அவள் குனிந்த தலை நிமிராமலே, ‘நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ; வேறே ஒருத்தரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என்று மழலைக் குரலில் பதில் சொல்கிறாள்.
ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம்தான் கொஞ்சம் அதிகம். சரஸாவுக்கு இன்னும் ஆறு முடியவில்லை. அவனுக்கு இருபத்திரண்டுக்கு மேல்.
நாளாக நாளாக அவர்கள் இருவருக்கிடையேயும் அன்பும் பாசமும் வளர்ந்து கொண்டே போகிறது. சரஸாவைக் காணாவிட்டால் அவனுக்குப் பொழுதே போகாது. சரஸாவுக்கும் அப்படியே. அவனைக் கண்டு விட்டால் இதர வேலைகள் எல்லாம் அவளுக்கு அலட்சியமாகப் போய் விடும். போட்டது போட்டவாக்கில்தான். குடும்பத்திலேயே அவர்கள் உறவைக் கண்டு வியப்பு அடையாதவர்களும் பொறாமைப்படாதவர்களும் இல்லை.
ஓரிரு ஆண்டுகளில் இளைஞனுக்கு மணமாகிறது. அன்றைய தினம் சிறுமி சரஸாவின் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர். ஐந்து நாள் கல்யாணம். அந்த ஐந்து நாட்களும் சரஸா அவள் அத்தானை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. அதற்குப் பிறகு ஐந்தாறு ஆண்டுகள் கழிகின்றன. சரஸாவுக்கும் திருமணம் ஆகிறது. அத்தானைப் போலவே அவளுக்கும் வாழ்க்கை அவள் முன்பின் பார்த்திராத ஒருவனுடன் பிணைக்கப்படுகிறது. (கதையில் ‘முன்பின் பார்த்திராதவர்களை’ மணம் செய்து கொள்ளும் முறை பற்றிய கிண்டலும் விமரிசனமும் இரண்டு முறை வருகிறது.) இரண்டு பேருக்குமே இரண்டு இரண்டு குழந்தைகள்.
அதற்குப் பிறகு அவள் பழைய சரஸா இல்லை. அத்தான் முன்பு நின்று ஒரு வார்த்தை பேசவில்லை. ஒருநாள் சாப்பாடு முடிந்த பிறகு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன அம்மாமி, சரஸா இப்போது என்னோடு பேசுவதே இல்லை என்று அங்கலாய்க்கிறான் இவன். அதற்கு அம்மாமி பழையபடியே ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளோ இல்லையோ, அதனால்தான் வெட்கப்படறாள்’ என்று சொல்ல, கடும் கோபத்துடன் எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் சரஸா.
கதைசொல்லிக்கு அப்போதுதான் புரிகிறது, தான் இவ்வளவு காலம் சரஸாவுக்கு ஒரு பொம்மையாக இருந்திருக்கிறோம் என்று. கதையின் இறுதி வரிதான் நம்மைச் சுண்டி இழுக்கிறது.
‘குழந்தை சரஸாவின் பொம்மையாக இருந்ததில் எனக்குப் பரம திருப்திதான். ஆனால் அதைப் பற்றி நினைக்கும்போது என் அந்தரங்கத்தில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த உணர்ச்சி எழாமல் இருப்பதில்லை.’
பி.எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த போது வெளிவந்த கதை ‘சரஸாவின் பொம்மை.’ 90 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. பின்னாளில் செல்லப்பா குழந்தைகளை மையமாக வைத்து எழுதுவதில் விற்பன்னர் என்று பெயர் எடுத்தார். அதற்கு ‘சரஸாவின் பொம்மை’ ஓர் ஆரம்பம். மேலும், செல்லப்பா தலித் கதைகளெல்லாம் எழுதியிருக்கிறார். தமிழில் வெளிவந்த முதல் தலித் கதைகள் அவையாகத்தான் இருக்கும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார் செல்லப்பா. செல்லப்பாவுக்கு முன்பே பாரதி எழுதியிருக்கிறார். ஆனாலும் பாரதிக்குப் பிறகு செல்லப்பா தான் நவதமிழின் முதல் தலித் கதைகளை எழுதியிருக்கிறார். ‘நந்தன் – நந்தி’, ‘அவள் மேல் ஜாதியாம்’ போன்ற கதைகள் அதற்கு உதாரணம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

