38. நடுவில் வாழ்

புத்தரின் ஞானத்தில் மிக முக்கியமானது நடுநிலைமை. வண்டிச் சக்கரம் நன்கு சுழல்வதற்கு அதன் நடுவிலே அச்சாணி எவ்வளவு அவசியமோ, அதனைப்போல வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழல்வதற்கு
Updated on
6 min read

புத்தரின் ஞானத்தில் மிக முக்கியமானது நடுநிலைமை. வண்டிச் சக்கரம் நன்கு சுழல்வதற்கு அதன் நடுவிலே அச்சாணி எவ்வளவு அவசியமோ, அதனைப்போல வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழல்வதற்கு நடுநிலைமையான மனப்பான்மை அவசியம் என்பதை புத்தர் ஞானத்தால் அறிந்தார். மனத்தையும் உடலையும் சுகபோகங்களுக்கு அடிமையாக்கும் தீவிர நிலைமைக்கோ, அதேபோல் மனத்தையும் உடலையும் தவத்தின் பெயரால் மிகவும் வருத்தும் மறுதீவிர நிலைமைக்கோ சென்றுவிடாமல் எளிய கட்டுப்பாடுகள், தியான, யோக முறைகளின் மூலம் மனத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி, உலக விஷயங்களில் அடிமையாகிவிடாமல் அவற்றை மிதமாக துய்க்கின்ற நடுநிலைமையே புத்தரின் உன்னத உபதேசம். இரண்டு உச்சகட்டங்களுக்கும் சென்றுவிடாத இந்த நடுநிலைமையை ஆன்மிகத் தத்துவங்கள் அனைத்திலும் பயன்படுத்தியுள்ளார் புத்தர்.

‘இந்த உலகம் தோன்றியது தற்செயல், ஒரு விபத்துபோல’ என்பது லோகாயதவாதிகளின் வாதம். ஆனால், மறுமுனையில், ‘இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதி’ என்று ஆஜீவிகமும், ‘ஏற்கெனவே உள்ள ஒன்றுதான் உலகின் தோற்றதுக்குக் காரணம்’ என்று சாங்கியம் உள்ளிட்ட தத்துவங்களும் கூறுகின்றன. ஆனால் இந்த இரண்டுவித கூற்றுகளையும் நிராகரிக்கிறார் புத்தர். ‘இந்த உலகம் தோன்றியது தற்செயலும் அல்ல, அதேநேரத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியோ அல்லது ஏற்கெனவே உள்ள ஏதோ ஒன்றோ இதற்குக் காரணமும் அல்ல. எனினும், எந்த ஒரு தோற்றமும் ஏதேனும் ஒரு வகையில் மற்ற ஒன்றை சார்ந்து இருக்கிறது என்பதால், பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கான காரணம் உறுதியாகத் தீர்மானிக்க இயலாத விஷயம்’ என்கிறார் புத்தர். நம்மால் விடைகாண முடியாத ஒரு விஷயத்தை, அது புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்று விட்டுவிடுவதுதானே நேர்மை, நடுநிலை? அதைத்தான் புத்தார் கூறினார்.

இதேபோல், இந்த உலகம் உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல. உடனுக்குடன் மாறுபடும் உண்மை (Changing Reality) என்கிறார் புத்தர். இதற்கு க்ஷணிக வாதம் என்று பெயர். நதி ஓடிக்கொண்டிருக்கும்போது நதி நிலையாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அதன் நீர் மாறிக்கொண்டே இருப்பதைப் போன்றது இந்த உலகம் என்பது புத்தரின் விளக்கம். இந்த மாறுபடும் உண்மையே பின்பு மாயாவாதம் ஆகியது.

ஆன்மா, ஆண்டவன் ஆகியவற்றுக்கும் இதேபோல் நடுநிலை அளவுகோலைத்தான் புத்தர் பயன்படுத்துகிறார். ஆன்மா, அதாவது ஆத்மா என்பது பாலி மொழியில் அத்தா என்று அழைக்கப்படுகிறது. ஆனால், புத்தர் இந்த அத்தாவை (ஆன்மாவை) தனியொரு அலகாக, தனிப்பட்ட ஒரு பொருளாகக் கருதாமல், 5 ஸ்கந்தங்களால் (சேர்க்கைகளால்) தோன்றுகிற விஷயம் என்றே கூறுகிறார். வடிவம், உணர்ச்சி, மனம், முற்கடன் (சம்ஸ்காரம்), பிரக்ஞை (விஞ்ஞானம்) ஆகியவையே அந்த 5 ஸ்கந்தங்கள். இதில் முற்கடன் என்பது ஏறத்தாழ முற்பிறவிக் கர்மம் போன்றது. ஒரு பிறவியில் செய்கின்ற கர்ம வினைகளும், எண்ணங்களும் மறு பிறவிக்குக் காரணமாகின்றன. எனினும் அதே ஆத்மாதான் மறுபிறவி எடுக்கிறது என்று அர்த்தமல்ல, அதன் கர்மங்கள் மறு பிறவிக்குக் காரணமாகின்றன என்று சொல்கிறார் புத்தர். அதாவது ஒரு தீபத்தைக் கொண்டு பல தீபங்களை ஏற்றலாம், முந்தைய தீபத்தில் உள்ள தீதான் மற்ற தீபங்களுக்குக் காரணம், எனினும் இது வேறு அது வேறு என்பதைப்போல என்று விளக்கம் அளிக்கிறார்.

இதனால் அத்தா தனியொரு விஷயமாக இருப்பதில்லை என்பதால், அது அனத்தா என்கிறது பௌத்தம். அப்படியானால், அத்தா கிடையாதா? அப்படியல்ல. ஒருவகையில் இருக்கிறது, மற்றொரு வகையில் இல்லை என்பதே இதன் பொருள். அதாவது, குறிப்பிட்ட உடலின் மூலம் செயல்படும் வகையில் அத்தா இருக்கிறது. அதன்மூலம் கம்மத்தை (கர்மத்தை) தோற்றுவிக்கிறது. எனினும் அதனைத் தனியாகப் பிரித்துப் பார்க்க இயலாததால் அனத்தாவாக இருக்கிறது. அதாவது, அத்தா ஏதுமற்றதாக இருக்கிறது. இதற்கு சூன்யவாதம் என்று பெயர். ஆக, ஆன்மாவை பௌத்தம் ஏற்கவுமில்லை; மறுக்கவுமில்லை.

இதேபோல், ஆண்டவனையும் பௌத்தம் ஏற்கவுமில்லை; மறுக்கவுமில்லை. எதற்கு அந்த வீண் ஆராய்ச்சி? என்று வினவுகிறது. இதற்கு புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். மஜ்ஜிம நிகாயம் என்ற பௌத்த நூலில் இச் சம்பவம் கூறப்பட்டுள்ளது. மலுங்க்யபுத்தர் (மலுங்கியபுத்திரர்) என்ற சீடர், கௌதம புத்தரிடம் ஆண்டவனைப் பற்றி பலமுறை கேள்வி கேட்டும் மௌனமே பதிலாகக் கிடைத்தது. இதனால் சலிப்புற்ற மலுங்க்யர், ஆண்டவனைப் பற்றிய கேள்விக்கு புத்தர் பதிலளித்தால் அவரது சீடராக அற வாழ்க்கையைத் தான் தொடரத் தயார் என்றும், இல்லையேல் இதனை விடுத்து லௌகீக வாழ்க்கைக்கு திரும்பிவிடப்போவதாகவும் கூறுகிறார். புத்தருக்கு பதில் தெரியாவிடில், தனக்குத் தெரியாது என்பதை நேரடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறார்.

அதற்கு பதிலளிப்பதைப்போல் புத்தபிரான் ஒரு குட்டிக்கதையைக் கூறுகிறார் - ஒரு மனிதன் விஷம் தோய்ந்த அம்பால் தாக்கப்பட்டுள்ளான். அவனது நண்பர்கள், விரைந்து அவனை மருத்துவனிடம் அழைத்துச் செல்ல முயலுகின்றனர். வலியால் கதறுகின்ற நிலையிலும் அந்த மனிதன், நண்பர்களைத் தடுத்து, என் மீது அம்பு எய்தவர் யார் என்பது தெரியாத வரையில், இந்த அம்பைப் பிடுங்கி எறிய சம்மதிக்கமாட்டேன் என்கிறான். என் மீது அம்பு எய்தது ஆணா? பெண்ணா? பிராமணரா? வைசியரா? எந்தச் சாதியினர்? அவரது கோத்திரம் என்ன? அந்த நபர் எப்படி இருப்பார்? என்று சாகக்கிடக்கும் அந்த மனிதன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால் என்ன பயன் ஏற்படும்? ஒரு கேள்விக்கு பதில் கிடைப்பதற்கு முன்பேயே அவனது உயிர் பிரிந்துவிடும். அதுபோல, சீடர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையைத் தேடப் புகுந்தால், காலம்தான் விரயமாகும். துக்கமயமான இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுபடுவதற்கான 4 ஆரிய சத்தியங்களை புரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துவிடும் என்று சொல்கிறார் புத்தர்.

புத்தர் இன்று கடவுளாக வணங்கப்பட்டாலும் அவர் எந்த இடத்திலும் தன்னைக் கடவுளாகக் கூறியதுமில்லை, கடவுள் என்ற ஒன்று இருப்பதாகவும் கூறியதில்லை. அற்புதங்கள் நடத்திக் காப்பாற்றும் ஆண்டவன், இறுதித் தீர்ப்பை அளித்து தண்டிக்கும் ஆண்டவன் என்ற கருத்தெல்லாம் புத்தர் முன் செல்லுபடியாகாது. இறந்த மகனைப் பிழைக்கவைத்துத் தருமாறு கேட்ட ஒரு பெண்மணியிடம், ‘சாவே நிகழாத வீட்டிலிருந்து ஒரு குவளை கடுகு வாங்கி வா, நான் உன் மகனைப் பிழைக்கவைக்கிறேன்’ என்று கூறி, மரணம், தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்பதை எளிமையாகப் புரியவைத்தவர் புத்தர்.

‘இந்த உலகம் அனாதியானது, அதன் தொடக்கத்தை அறிய இயலாது. எனவே அதனை ஆண்டவன் என்ற ஒரு சக்தி படைத்ததாகக் கூற இயலாது’ என அனாதபிண்டிகர் என்ற பண்டிதரிடம் புத்தர் வாதிட்டதாக அசுவகோஷ் இயற்றிய புத்தசரிதம் விவரிக்கிறது. (கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசுவகோஷ், பௌத்தத்தைத் தழுவிய பிராமண அறிஞர்; கனிஷ்கரின் அமைச்சர்களில் ஒருவர்).

இவ்வாறாக படைப்புக் கடவுளை புத்தர் மறுக்கின்றபோதிலும், இந்த உலகை மேற்பார்வையிடும் ஒரு சக்தி இருப்பதை மறுக்கவில்லை. அந்தச் சக்தி, தம்மம் (தர்மம்), அதாவது அறம் என்று கூறுகிறார். புத்தரின் வார்த்தைகளில் உபநிஷதக் கருத்துகள் புதுப் பொலிவு பெற்றன. புராண ஆர்ய தர்மத்தையே தான் போதிப்பதாக புத்தரே கூறியுள்ளார். அதேநேரத்தில், தர்மம் இல்லாத பல விஷயங்கள் தர்மம் என்ற பெயரில் சமூகத்தில் மண்டிக் கிடப்பதை அவர் சாடத் தயங்கவில்லை. வேள்விச் சடங்குகளில் செய்யப்படும் உயிர்ப்பலியையும், வர்ணாசிரமம் என்ற பெயரிலான சாதிப் பாகுபாடுகளையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். கடவுளைப் பற்றி ஆராய்ந்து காலத்தை வீணடிப்பதை விடுத்து, தர்மத்தைப் பின்பற்றி தனக்கும் பிறருக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ புத்தர் வலியுறுத்தினார்.

தர்ம பிரசாரத்தை முதன்முறையாக ஓர் இயக்கமாக நடத்தி பெருவெற்றி பெற்றவர் புத்தர். நாடு முழுவதும் பல மடங்களை நிறுவி, அறப்பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் வெளிநாடுகளுக்கும் பௌத்தத் துறவிகளை (பிக்குகளை) புத்தர் அனுப்பினார். (பௌத்த சங்கத்தில் பெண்கள் சேர்ந்தால் குழப்பம் ஏற்படும் என்று கருதிய புத்தர், ஆரம்ப கட்டத்தில் அவர்களைச் சேர்க்கவில்லை. எனினும், ஆனந்தன் என்ற சீடர் எடுத்துக்கூறியதை ஏற்றுக்கொண்டு பின்னர் பெண்களும் சங்கத்தில் சேர சம்மதித்தார்). பௌத்த சங்கங்கள் பல நாடு, நகரங்களில் தோன்றின. இவ்வாறாகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும் புத்தர் ‘நான்தான் வழிகாட்டி, என்னையே சரணடையுங்கள்’ என்றோ ‘என்னையன்றி உங்களால் முக்தியை அடைய முடியாது’ என்றோ கூறி மக்களை மயக்கவில்லை.

புத்தர் தனது முதல் அறப்பிரசாரத்தை வாரணாசி (காசி) அருகேயுள்ள சாரநாத் என்ற இடத்தில் தொடங்கியபோதே, “புத்திசாலிகள் எப்படி தங்கத்தை தீயிலிட்டுப் பொசுக்கியும், அறுத்தும், உரசிப்பார்த்தும் அது உண்மையா போலியா என்பதைக் கண்டறிகிறார்களோ, அதேபோல் என் மீதுள்ள மதிப்பால் எனது வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், நன்கு ஆராய்ந்த பிறகே அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றுதான் மக்களிடம் வலியுறுத்தினார்.

மனிதர்கள் தமக்குத் தாமே ஆத்ம ஒளியாய் திகழ வேண்டும் என்றே புத்தர் போதித்தார். மஹாபரிநிப்பாண ஸூத்தத்தில் புத்தர் இவ்வாறு கூறுகிறார் -

அத்ததீபா அத்தஸரணா அனன்ன ஸரணா
தம்மதீபா தம்மஸரணா ஹோத

“நீங்கள் ஆன்ம தீபங்களாகச் சுற்றுங்கள். தம்மிடமே சரண் புகுங்கள். பிறர் யாரிடமும் சரணடையாதீர்கள். தர்மத்தையே வழிகாட்டும் விளக்காகக் கொள்ளுங்கள். தர்மத்திடமே சரண் புகுங்கள்”.

‘ஸர்வே ஜனோ சுகினோ பவந்து’ (எல்லோரும் இன்புறிருக்க) என்ற உபநிஷத வாக்கியத்தை புதிய வார்த்தைகளால் புரியவைத்தார் புத்தர்.

யேகேகி பாணபூதத்தி தஸா வா தாவரா வா அனவஸேஸா
தீகா வாயே மஹந்தா வா மஜ்ஜிமா ரஸ்ஸகா ()ணுகதூலா
திட்டாவா ஏவ அத்திட்டா ஏ ச தூரே வஸந்தி அவதூரே
பூதா வா ஸம்பவேஸீவா ஸப்பே ஸத்தா பவந்தி ஸுகிதத்தா

- (பிரம்ம விஹாரம்)

“சுற்றித் திரியும் உயிரினங்களோ, நிலையாக நிற்கும் தாவர உயிரினங்களோ, பெரியவையோ, சிறியவையோ, நுண்ணியவையோ, பருத்தவையோ, கண்ணுக்குத் தெரிபவையோ, தெரியாதவையோ, தொலைவில் இருப்பவையோ, அருகில் இருப்பவையோ, பிறந்திருப்பவையோ, பிறக்க இருப்பவையோ - எல்லாமே இன்பம் எய்துவதாகுக!”

அதேநேரத்தில், அஹிம்சையை புத்தர் வலியுறுத்தினாலும் புலால் உண்ணக்கூடாது என்று தெளிவாகத் தடை விதிக்கவில்லை என்பது குறித்த வாதப் பிரதிவாதங்கள் பௌத்தத்தில் எழுந்துள்ளன. பிறர் பிட்சையாக இடும் உணவு புலாலாக இருந்தாலும் பிக்குகள் உண்ணலாம் என்று புத்தர் கூறியதாகவும், அவரேகூட உண்டிருப்பதாகவும் தேராவாதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கருணையே வடிவான போதிசத்துவராகவும், சகல உயிர்களுக்கும் மைத்ரேயராகவும் (நண்பராகவும்), பூரணநிலை அடைந்த ததாகதராகவும், அறமே உருவெடுத்த தர்மகாயர் ஆகவும் இருக்கின்ற உயர்வெய்திய புத்தர், எப்படி ஒரு பிராணியின் உடலை உண்பதை ஏற்றுக்கொள்வார்? என்பது மஹாயானர்களின் கேள்வி.

கேள்விகளை எழுப்பி வளர்ந்த பௌத்தமும் பிற்காலத்தில் கேள்விக்கணைகளுக்குத் தப்பவில்லை. அத்தா அனத்தாவாக இருக்கிறது என்றால் மறுபிறவி எடுப்பது எது? நிப்பாணம் என்பது என்ன? இதற்குப் பதில்கூறும் வகையில் எழுந்ததுதான் சூன்யவாதம். புத்தர் ஓரளவு இதனைக் கூறியபோதிலும், தனியொரு கோட்பாடாக இதற்கு விளக்கமளித்தவர், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ஆந்திரத்தில் பிறந்த பௌத்த அறிஞரான நாகார்ஜுனர். அத்தாவின் அடிப்படை, தான் என்ற உணர்வோ, சலனமோ அற்ற அனத்தா. இந்த வெறுமையை உணர்ந்துகொள்ளும்போது, மறுபிறவிக்குக் காரணமான சம்ஸ்காரம் நின்றுவிடுகிறது என்கிறது சூன்யவாதம்.

இப்போது, அடிப்படையிலேயே அத்தா அனத்தாவாக இருக்கும்போது மறுபிறவி எடுப்பது எது? பிரபஞ்சத்தின் உச்சபட்ச அடிப்படையே வெறுமை என்றால் நிப்பாணத்தின் மூலம் அதனை எட்டுவதற்கா இத்தனைப் போராட்டம்? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்குப் பதிலளிக்கும்வகையில் பௌத்தத்தில் பிற்காலத்தில், புத்கலவாதம், தர்மகாயம், மனோவிஞ்ஞானம், ஆலயவிஞ்ஞானம் ஆகிய தத்துவங்கள் தோன்றின. அத்தா ஏதுமற்றதாக (அனத்தாவாக) இருந்தாலும், ஐந்து ஸ்கந்தங்களால் தோன்றும் அனத்தாவின் சம்ஸ்காரங்களால் புத்கலம் எனப்படும் கர்மவடிவம் ஏற்பட்டு, அதுவே மறுபிறவிகளை எடுக்கிறது என்ற விளக்கம் கூறப்பட்டது. இந்த புத்கலம், ஏறத்தாழ சாங்கியர்கள் கூறும் லிங்க சரீரம் (நுண்ணுடல்) என்ற தத்துவத்தை ஒத்திருக்கிறது.

இதேபோல், மனமே உலகின் தோற்றத்துக்குக் காரணம் என யோகாசார பௌத்தம் கூறுகிறது. இது ஏறத்தாழ சாங்கியத்தில் கூறப்படும் மஹத் அதாவது புத்தியை ஒத்திருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் மனங்களால் சித்த விருத்தி ஏற்படுகிறது. இது மனோவிஞ்ஞானம் ஆகும். இவ்வாறான அனைத்து மனங்களின் ஒட்டுமொத்தம் ஆலயவிஞ்ஞானம் ஆகும். இதுவே உலகின் இயக்கத்துக்குக் காரணம். நாம் அனத்தா என்பதும், உலகின் அடிப்படை சூன்யம் என்பதும் ஒருசேர உணரப்படும்போது இந்த இயக்கம் நின்றுவிடுகிறது என விளக்கம் அளிக்கப்படுகிறது. இதற்குப் பதில், அறவடிவமே (தர்மகாயம்) உலகின் அடிப்படை என்ற கருத்தும் கூறப்படுகிறது. அறமே உலகத்தைத் தாங்கி நிற்கிறது என்ற இந்தக் கருத்து, தர்மமே உலகின் அடிப்படை என்ற உபநிஷதக் கருத்தை ஒத்திருக்கிறது.

இவ்வாறாக தர்ம விளக்கங்களால் பௌத்தத்தில் புதுப்புது தத்துவங்களும் அந்த வழிமுறைகளை ஒட்டிய பிரிவுகளும் தோன்றின. அதேபோல், பாமரர்களையும், ஆதிவாசிகளையும் அரவணைத்தபோக்கினால், அவர்களது கர்மச் சடங்குகளும் பௌத்தத்தில் தொற்றிக்கொண்டன. இதனால், தாந்திரீகச் சடங்குகளுடன் கூடிய வஜ்ரயானம் எனப்படும் திபெத் லாமா பௌத்தப் பிரிவும் பிற்காலத்தில் தோன்றியது. சீனத்தில் பௌத்தத்துடன் சென்ற தியான முறைகளின் அடிப்படையில் பிற்காலத்தில் ஜென் பௌத்தம் தோன்றியது. தியான் என்பதே சீன மொழியில் ஜென் என மருவியது. இவ்வாறு பௌத்தம் செழித்தபோதிலும், காலப்போக்கில் அது தோன்றி வளர்ந்த பாரத்திலேயே அதன் வீழ்ச்சியும் நேரிட்டது. அரசர்களின் ஆதரவு மற்றும் செல்வாக்கு காரணமாக வளர்ந்த பௌத்த சங்கங்களில் காலப்போக்கில் ஊழல் மலிந்ததாலும், இதன்காரணமாக பிற்காலத்தில் அரசர்களின் ஆதரவு அற்றுப்போனதாலும், புத்தர் எதிர்த்த உருவ வழிபாடும் சடங்குகளும் பௌத்தத்திலேயே பெருகிவிட்டதாலும், பக்தி இயக்கம் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததாலும் பௌத்தம் வீழ்ச்சியடைய நேரிட்டது. எனினும் வெறுமைவாதம் பேசுகின்ற பௌத்தம், பாரதீய தத்துவ ஞானத்துக்கு ஒரு முழுமையைக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அந்த அடிப்படையில் பௌத்தத்தின் சூன்யவாதத்தை பூரணவாதமாகக் கூறும் அத்வைதம் குறித்து அடுத்த வாரம் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com