“காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம்” என்றார் மகாகவி பாரதியார். அதாவது, காக்கை குருவி உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களும், கடல், வான் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும், பார்க்கும் இடங்களில் காணப்படுகின்ற உயிரினங்கள், உயிரற்ற பொருள்கள் ஆகிய அனைத்தும் நம்மில் இருந்து வேறுபட்டவை அல்ல; அவை அனைத்தும் நாமேதான். நாமேதான் அனைத்திலும் வியாபித்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வதால், துன்பத்தைக் கடந்த ஆனந்தக் களியாட்டத்தில் திளைக்கிறோம் என்பதே மகாகவியினுடைய கவிதை வரிகளின் உட்பொருள். இங்கே நாம் என்பது பன்மைச் சொல்லாகக் கூறப்பட்டாலும், அது உணர்த்துவது நான், நீ, அது, இது ஆகிய பேதங்களைக் கடந்த ஒருமையையே.
இந்த ஒருமைதான் வேதாந்தத்தின் முக்கியப் பகுதியான அத்வைதத்தின் சாரம். அத்வைதம் என்பதை அ + (த்)துவைதம் என்று பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். துவைதம் என்றால் இருமை என்று பொருள். அ என்ற முன்னொட்டு, இன்மை, இல்லாதது என்ற பொருளைத் தருவது. ஆக, அத்வைதம் என்றால் இருமை இல்லாத ஒருமை என்று பொருள்.
பரமாத்மா (ஆண்டவன்) வேறு, ஜீவாத்மா (மனிதர் உள்ளிட்ட உயிரினங்கள்) வேறு என்பது துவைதம். பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு அல்ல, இரண்டும் ஒன்றே, இவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பது அஞ்ஞானம் என்பதே அத்வைதம் என சுருக்கமாகக் கூறலாம். ஆனால், விரித்துப் பார்த்தால் இதன் பொருள் மேலும் நுட்பமானது. துவைதம், அத்வைதம் மட்டுமின்றி விசிஷ்டாத்வைதம் என்ற மற்றொரு பெரும் தத்துவப் பிரிவும், பேதாபேத (பேதஅபேத) வாதம், துவைதாத்வைத வாதம், சுத்தாத்வைதம், பேதவாதம், ஆத்ம பிரும்ம ஐக்ய-பேதவாதம் என பல்வேறு சிறு தத்துவப் பிரிவுகளையும் உள்ளடக்கியதே வேதாந்தம். வேதத்தின் அந்தம், அதாவது இறுதிப் பகுதி என்பதே வேதாந்தத்தின் பெயர்க் காரணம். வேதமானது சம்ஹிதை (வேத மந்திரங்கள்), பிராம்மணம் (வேள்விகளை இயற்றும் முறை பற்றி விளக்கும் நூல்கள்), ஆரண்யகம் (காடுகளில் தவமியற்றிய ரிஷிகள், முனிவர்கள் இயற்றிய அறிவுரை நூல்கள்), உபநிஷதம் (தத்துவ ஆய்வு நூல்கள்) என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. (இதில் சம்ஹிதையை ஒரு பகுதியாகவும், பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷதம் ஆகிய மூன்றையும் சேர்த்து பிராம்மணங்கள் என மற்றொரு பகுதியாகவும் கூறப்படுவதுண்டு). இதில், உபநிஷதம் என்பதுதான் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். உபநிஷதம் என்றால் அருகே அமர்ந்து உரைப்பது (ஆத்மா, பரமாத்மா குறித்த ரகசியங்களை நமக்குப் புரியும் வகையில் அருகே அமர்ந்து உரைக்கின்ற தத்துவங்கள்), அறியாமையை அழிப்பது என்று பொருள்கள் கூறப்படுகின்றன. இந்த உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த தத்துவங்களே வேதாந்தம் ஆகும். மேலும், வேதத்தின் ஆறு தரிசனங்களில் இறுதியாகிய உத்தர மீமாம்சை என்பதையும் வேதாந்தம் குறிக்கிறது.
உத்தர மீமாம்சையாகிய வேதாந்த தரிசனத்தின் மிகப்பெரிய தூணாக அத்வைதம் உள்ளது. உலகில் உள்ள ஜீவன்களின் (ஆத்மாக்களின்) உள்ளீடாக இருப்பதும், பிரபஞ்சத்தின் உள்ளீடாக இருப்பதும் ஏதுமற்ற வெறுமை என்று புத்தர் கூறினார். பிருஹதாரண்யக உபநிஷதத்தில் கூறப்படுவதுபோல ‘நேதி, நேதி’, அதாவது ‘இதுவன்று, இதுவன்று’ என்று அடிப்படைக் காரணத்தைத் தேடும் ஆராய்ச்சியில் பலவற்றை விலக்கிக்கொண்டே போனோல், இறுதியில் அகப்படுவதை சூன்யம் (வெறுமை) என்கிறது பௌத்தம். ஆனால், அதனை பூரணம் (முழுமை) என்கிறது அத்வைதம்.
‘துக்கமே வாழ்வின் சாரமாக இருக்கிறது, ஆசைகளால் உந்தப்படும் செயல்களே பிறவிச் சுழலுக்குக் காரணமாக அமைகின்றன, ஆகையால் ஆசைகளைத் துறந்து துக்கமயமான பிறவிக் கடலுக்கான கட்டுகளை அறுப்பதே நிப்பாணத்துக்கு (முக்திக்கு) வழி’ என்று புத்தர் தெளிவாகச் சொன்னார். ஆயினும், அத்தா (ஆன்மா) மற்றும் இந்த உலகின் தோற்றத்துக்கான காரணம் வெறுமை என்று கூறுகிறார். இது, ‘இல்லாததில் இருந்து இருப்பது தோன்றமுடியாது’ என்று கபிலரின் சாங்கிய தத்துவம் கூறுகின்ற அறிவுக் கருத்தில் இருந்து மாறுபடுகிறது. இதற்கு விடையாக, “ஆன்மாக்கள் மட்டுமின்றி, உலகின் அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது ஒன்றுதான்; அது, ஏதுமற்ற வெறுமை அல்ல, எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமை” என்கிறது அத்வைதம்.
பூர்ணமதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூரணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே
ஈஷாவஸ்ய உபநிஷதத்தின் சாந்தி மந்திரம்.
(முழுமை தானதுவும் முழுமை தானிதுவும்
முழுமை யிலிருந்தே முழுமை உதித்தது
முழுமை யிலிருந்து முழுமை கழிந்திடினும்
முழுமை தானே மீதமாய் இருப்பது).
இருப்பு என்பதே அந்த முழுமை (பூரணம்). அதற்கு பிரும்மம் என்று பெயரிட்டுள்ளது அத்வைதம். அந்தப் பிரும்மமாகிய முழுமையில் இருந்தே உலகம், உயிரினங்கள் ஆகியவை தோன்றின. ஆகையால், தோன்றாதிருக்கும் அடிப்படையாகிய அதுவும் பிரும்மமே (இருப்பே), தோன்றி இருக்கக்கூடிய உலகமும், உயிரினங்களாகிய இதுவும் பிரும்மமே (இருப்பே). தோன்றா இருப்பில் இருந்தே தோன்றிய இருப்பு உருவாகியுள்ளது. தோன்றா இருப்பில் இருந்து தோன்றிய இருப்பைக் கழித்துப் பார்த்தாலும், இருப்பு என்கிற முழுமை மாத்திரமே மீதமாய் இருக்கிறது என்று தத்துவம் பேசுகிறது அத்வைதம்.
ஆதியில் இருந்தே இருக்கின்ற ஒன்றுதான் அனைத்து விளைவுகளுக்கும் காரணமாக உள்ளது. அந்த ஒன்றுதான் பிரும்மம். அது, இந்த உலகத் தோற்றத்துக்கு வெறும் நிமித்த காரணமாக, அதாவது கருவி போன்ற அல்லது கர்த்தாவாகிய கருத்தியல் காரணமாக மட்டுமின்றி, பொருளியல் (மெட்டீரியல்) காரணமாகவும் இருக்கிறது. அடிப்படையாக இருக்கக்கூடிய அந்தப் பிரும்மம், மாற்றம் எதுவும் இல்லாதது, எவ்வித குணங்களும் அற்றது. ஆகையால், அதற்கு நிர்குண பிரும்மம் என்று பெயர். அது எவ்வித நாம ரூப மாறுபாடுகளும் அற்ற உயர்வானது என்பதால் அதற்கு பரப்பிரும்மம் (மேலான இருப்பு) என்றும் பெயர். அதேநேரத்தில், பரப்பிரும்மத்தில் இருந்து தோன்றிய உலகம் மாறிக்கொண்டே இருப்பதாக அல்லவா இருக்கிறது? அவ்வாறெனில், மூலமான பரப்பிரும்மமும் மாறக்கூடியதா?
இந்தக் கேள்விக்கு அத்வைதம் கூறுகின்ற பதில், பரப்பிரும்மம் மாற்றம் எதுவும் இல்லாதது என்பதே. பரப்பிரும்மத்தில் இருந்து தோன்றிய உலகம், உயிரினங்கள் உள்ளிட்டவை மாறிக்கொண்டே இருக்கின்றன, விருத்தி அடைகின்றன, தோன்றி-மறைகின்றன. இவ்வாறாக மாறுபடுவதாகத் தோற்றமளிக்கக்கூடிய பிரும்மத்துக்கு அபரப்பிரும்மம் என்று பெயர். உண்மையில் பிரும்மம், இந்த மாறக்கூடிய உலகமாக மாற்றம் அடைந்துவிடவில்லை. அவ்வாறான ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. இதற்கு விவர்த்தம் என்று பெயர். விவர்த்தம் என்பதற்கு தோற்றத்தில் மாற்றம் தென்படினும் உண்மையான தன்மையில் மாற்றம் எதுவும் இல்லாதது என்று பொருள். இதற்கு எதிர்மாறானது பரிணாமம். ஒன்று சிதைந்து அல்லது அழிந்து மற்றொன்றாக உருவெடுப்பதற்குப் பெயர் பரிணாமம். பால் தயிராக மாறுவது பரிணாமம். தயிராக மாறிவிட்ட பாலில், பாலைக் கண்டறியமுடியாது. ஆனால், தங்கத்தில் இருந்து நகைகளைச் செய்யும்போது, தங்கம் என்பதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? இல்லையே! அதன் தோற்றத்தில் காதணி, ஒட்டியாணம், வளையல் என்று மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது தங்கம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதுதான் விவர்த்தம்.
அந்தவகையில் பிரும்மம், தான் மாறாமல் இருந்துகொண்டு, மாறுபடுகின்ற ஜீவன்கள் உள்ளிட்டவையாகத் தோற்றம் கொடுக்கிறது. ஆகையால், மனிதர்கள் உள்ளிட்ட ஜீவன்களுக்குள் ஆன்மாவாக இருப்பது அந்தப் பிரும்மமே. மனிதன் தனது சம்சார சாகரத்தில் (பிறவிச் சுழலான வாழ்க்கைக் கடலில்) இருந்து விடுபட உண்மைத் தெளிவு ஏற்பட வேண்டும். அந்தத் தெளிவான உண்மை யாதெனில், உடல் என்னும் கட்டுக்குள் இருக்கின்ற ஆன்மா, உண்மையில் சுதந்தரமயமானது. அந்த ஆன்மா, பிரும்மம் அன்றி வேறல்ல. அதனை உணராமல் இருப்பதாலேயே அது கட்டுண்டு (பந்தமுற்று) கிடக்கிறது. தன்னை உடல் என்று மயங்குவதும் தனக்குள் இருக்கும் ஆன்மா, பிரும்மமே என்பதை உணராமல் இருப்பதும் ஒருவித மயக்கமே. அவித்யா எனப்படும் அறியாமையால் இது ஏற்படுகிறது. இதற்குப் பெயர்தான் மாயை. ஞான விழிப்புணர்வு ஏற்படும்போது இந்த மாயை அகன்று, தன்னுள் இருக்கும் தூய இருப்பை மனிதன் உணர்ந்துகொள்கிறான். அந்தத் தூய இருப்பை (பிரும்மத்தை) வெறும் ஏட்டறிவால் அன்றி, அனுபவத்தால் உணர்ந்துகொள்ளும்போது மனிதன், மீண்டும் பிறவா நிலையாகிய விடுதலைப் பேறு (முக்திப் பேறு) பெறுகிறான்.
இருப்பதனைத்தும் ஒரே இருப்பாகிய பிரும்மமே. அதுவன்றி வேறு எதுவும் இல்லை. அறிதலின் எல்லையில் அறிவு மாத்திரமே எஞ்சியிருக்கிறது. அந்த அறிவும் இருப்பில் நிலைபெறுகிறது. அதுதான் ஸத் (உண்மை). உள்ளது என்ற பொருளில்தான் உண்மை என்ற சொல் பிறந்தது. அனைத்திலும் வியாபித்துள்ள அந்த ஒற்றை இருப்பாகிய பிரும்மமே உண்மை. அதனை உணராமல் இருப்பதற்குக் காரணம் மாயை. மாயை என்றால் பொய் என்று பொருள் அல்ல, உண்மைபோல் தோற்றமளிக்கக்கூடிய ஒருவித மயக்கநிலை. அரையிருட்டில் பாம்புபோல் தென்படும் கயிற்றைப் போன்றதே மாயை. பாலைவனத்தில் தென்படும் கானல்நீர் போன்றதே மாயை. கயிற்றை பாம்பு என்று கருதும்போதும், கானல்நீரை நீர்ச்சுனையாகக் கருதும்போதும் அதுகுறித்த மாயத்தோற்றம் விலகும்வரையில், அது நமது சிந்தனையில் உண்மையானதாகவே தோற்றம் அளிக்கிறது. அந்த மாயை விலகும்போது நமக்கு உண்மை புலனாகிறது. அதுபோல்தான், பிரும்மத்தை உணர்ந்துகொள்ளாததால் நாம் உலக மயக்கத்துக்கு ஆளாகிறோம். இந்த மாயையை விலக்கி தன்னுள் ஆத்மனாகப் பிரதிபலிக்கும் பிரும்மத்தை முற்றுணரும்போது, விடுதலையாகிய முக்தி கிடைக்கிறது என்கிறது அத்வைதம்.
இதனை ஆதிசங்கரர் இவ்வாறு கூறுகிறார் –
‘பிரும்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ பிரும்மைவ நாபர’.
இதன் பொருள், ‘பிரும்மம் மாத்திரமே உண்மை, உலகம் ஒரு மாயத்தோற்றம். ஆத்மாவானது பிரும்மமே, அதிலிருந்து வேறுபட்டதல்ல’ என்பதே. பிரும்மத்தின் பிரதிபலிப்பே ஆத்மா. வானத்தில் இருக்கும் சூரியன், பல்வேறு நீர்நிலைகளில் பிரதிபலிப்பதைப்போல பிரும்மமானது, ஆன்மாக்களாகப் பிரதிபலிக்கிறது என்கிறார் ஆதிசங்கரர்.
மற்றோர் உதாரணத்தில், உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் வெளி (Space), குடம் போன்ற ஒரு பாத்திரத்துக்குள்ளும் பிரதிபலிக்கிறது. அந்தக் குடம் உடைவதால் அதில் உள்ள வெளி மறைந்துவிடுகிறதா? வேறு எங்கும் சென்றுவிடுகிறதா? உண்மையில், எங்கும் வியாபித்திருக்கும் வெளி அந்தக் குடத்துக்குள், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கொடுத்தது. ஆனால், குடம் உடைந்தபோதிலும் அந்த வெளிக்கு எந்தச் சேதமும் இல்லை. அது முன்பும் அப்படியேதான் இருந்தது, இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. அதுபோல்தான் பிரும்மமும் குறிப்பிட்ட உடலுக்குள், குறிப்பிட்ட காலம் வரை வரையறைக்கு உட்பட்ட ஆன்மாபோல் பிரதிபலிக்கிறது. உண்மையில், உடல் இருக்கின்றபோதிலும், அழிகின்றபோதிலும் பிரும்மம் எவ்வித மாறுபாட்டுக்கும் உட்படவில்லை. ஆனால், பிரும்மத்தின் அங்கமாகிய ஆன்மா, ஓர் உடலுக்குள் பிரதிபலிக்கும்போது மாயையால் பீடிக்கப்பட்டுள்ளது.
ஆன்மா என்பது பிரும்மத்தைப்போல தூய அறிவு (சைதன்யம்) அன்றி வேறில்லை. ஆனால் மனம் என்ற உட்கருவியின் (அந்தகரணம்) தொடர்பு காரணமாக, ஆன்மாவானது நிலைப்பு (நித்ய), தூய்மை (சுத்த), விழிப்பு (புத்த), விடுதலை (முக்த) ஆகிய தனது தன்மைகளை மறந்து, தன்னை செயல்படுபவனாகவும் (கர்த்தா), அனுபவிப்பவனாகவும் (போக்தா) கருதிக்கொள்கிறது. ஞானத்தால், அவித்தையாகிய இந்த மாயையை விலக்கும்போது, பிரும்மத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள வேறுபாடற்ற ஒருமை உணர்ந்துகொள்ளப்பட்டு முக்தி கிடைக்கிறது. இது, பல பிறவிகள் எடுத்து கர்மவினைகள் படிப்படியாகத் தீர்ந்துபோய் கிடைக்கும் கிரமமுக்தியாகவும் இருக்கலாம் அல்லது இந்தப் பிறவியிலேயே அபார ஞானம் கைவரப்பற்று வாழ்ந்துகொண்டிருக்கும்போதே உடனடியாகக் கிடைக்கின்ற ஜீவன்முக்தியாகவும் இருக்கலாம் என்கிறார் ஆதிசங்கரர்.
ரிக்வேத காலந்தொட்டே அத்வைதக் கருத்துகள் உள்ளபோதிலும், அதனை இன்று உலகமே வியக்கும் வகையிலான தனியொரு தத்துவமாக கட்டமைத்த பெருமை, கி.பி. 788-ல் கேரள மாநிலம் காலடி என்ற இடத்தில் அவதரித்த சங்கரர் எனப்படும் ஆதிசங்கராசாரியரையே சாரும். இவர் வாழ்ந்த காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று சொல்வாரும் உண்டு. மண்ணுலகில் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சங்கரர், ஆன்மிக உலகத்துக்கு ஆற்றிய சேவை மாப்பெரியது, மகத்தானது.
வெகுகாலம் பிள்ளைப்பேறு இல்லாத சிவகுரு – ஆர்யாம்பாள் என்ற நம்பூதிரி பிராமண தம்பதியர், திருச்சூர் வடக்குநாதன் ஆலயம் சென்று, சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர். அவர்களது கனவில் வந்த சிவபெருமான், புத்தியில்லாத நீண்ட ஆயுள் கொண்ட பல பிள்ளைகள் வேண்டுமா, புத்திசாலியான குறைந்த ஆயுள் கொண்ட குழந்தை வேண்டுமா என்று கேட்டதாகவும், அதற்கு அத்தம்பதியர் பிந்தைய வரத்தையே கேட்டதாகவும், அதன்படி சங்கரர் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையை இழந்துவிட்ட சங்கரர், சிறு வயதில் தன்னை ஆற்றுக்குள் முதலை விழுங்க வந்தபோது ஆபத்சன்யாசம் (அவசரத் துறவு) பெற்றுக்கொண்டதாகவும், அதனால் அவரை முதலை விடுத்ததாகவும், தனது வாக்குறுதியை நிறைவேற்ற அவர் துறவு பூண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தாயின் அந்திமக் காலத்தில் அவரது இறுதிக்கடனை நிறைவேற்ற தான் வருவேன் என்ற வாக்குறுதியைக் காப்பாற்றினார் சங்கரர். துறவுக்கோலம் பூண்ட சங்கரர், குருவைத் தேடி அலைந்தார். இறுதியில், நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்திருந்த கோவிந்தபாதர் (இவர் மாண்டூக்ய உபநிஷதத்துக்கு விளக்கவுரை அளித்த கௌடபாதரின் சீடர்) என்பவரின் சீடராக ஆனார். பதின்ம வயது மாறாத சங்கரர், அந்தச் சிறுவயதிலேயே தனது அபார ஞானத்தால் பரமஹம்ஸர் எனப்படும் உயர்நிலைத் துறவியாக உயர்ந்தார்.
வேதங்களையும், உபநிஷதங்களையும் ஆராய்ந்து, குறைந்த வயதிலேயே அத்வைத ஞானத்தில் முதிர்ச்சி அடைந்த சங்கரர், பின்னர் பாரதம் முழுவதும் பாதயாத்திரையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு தத்துவ ஆசார்யர்கள், துறவிகளுடன் வாதம் புரிந்து அத்வைத தத்துவத்தை நிலைநாட்டினார். அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த பௌத்தர்கள், மீமாம்சகர்கள், சாங்கியர்கள் ஆகியோரை வாதங்களில் வென்று அத்வைதத்தை ஏற்கச் செய்தார். மரணப் படுக்கையில் இருந்த புகழ்பெற்ற மீமாம்சக தத்துவ ஆசார்யரான குமாரில பட்டர், தனக்குப் பதில் தனது பிரதம சீடரான மண்டன மிஸ்ரர் எனப்படும் விஸ்வரூபருடன் வாதிடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி மண்டன மிஸ்ரருடன் வாதிட்டு அவரை வென்ற சங்கரர், அவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டு சுரேஷ்வரர் என்று பெயர்சூட்டினார். அவர் தவிர, பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மேலும் 3 பிரதான சீடர்களும் சங்கரருக்கு உண்டு.
சிருங்கேரி (கர்நாடகா – தெற்கு), புரி (ஒடிஸா – கிழக்கு), துவாரகா (குஜராத் – மேற்கு), பத்ரிநாத் (உத்தரப் பிரதேசம் – வடக்கு) ஆகிய இடங்களில், அத்வைத பிரசாரத்துக்கான மடங்களை ஸ்தாபித்த சங்கரர், அந்த மடங்களுக்கு, முறையே சுரேஷ்வரர், பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரை தலைவர்களாக நியமித்தார். இந்த மடங்களின் தலைவர்களும் அவர்களது சீட பரம்பரையினரும் சங்கராசார்யர்கள் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஆகையால், இவற்றை நிறுவிய சங்கரர், ஆதிசங்கராசார்யர் என்று போற்றப்படுகிறார்.
வேதாந்த மார்க்கத்தில், தத்துவங்களை நிலைநாட்ட அடிப்படையான மூன்று நூல்களுக்குப் பிரஸ்தான திரையம் என்று பெயர். அவை, வேதம் சார்ந்த உபநிஷதங்கள் (ஸ்ருதி பிரஸ்தானம்), வியாஸர் என்று கருதப்படும் பாதராயணர் இயற்றிய பிரும்ம சூத்திரம் (நியாய பிரஸ்தானம்), மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் கூறியதாகக் கருதப்படும் பகவத் கீதை (ஸ்மிருதி பிரஸ்தானம்) ஆகியவையே. இந்த பிரஸ்தான திரையங்களுக்கு மிகச் சிறந்த விளக்கவுரைகளை (பாஷ்யம்) ஆதிசங்கரர் எழுதியிருக்கிறார். மேலும், பதஞ்சலியின் யோகசூத்திரங்களுக்கு வியாஸர் எழுதிய விளக்கவுரைகளுக்கு விரிவுரைகளையும், ஆபத்ஸ்தம்ப சூத்திரங்களுக்கான விரிவுரைகளையும் எழுதியிருப்பதுடன், உபதேச சஹஸ்ரி, ஆத்மபோதம் உள்ளிட்ட பல தத்துவ நூல்களையும், நிர்வாண ஷட்கம், தசஸ்லோகி, பஜகோவிந்தம், மதுராஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம், தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தத்துவ, பக்தி ஸ்லோகங்களையும் இயற்றியிருக்கிறார்.
ஆதிசங்கரரின் கருத்துப்படி, பிரும்மம் எவ்வித நாம, ரூப, குண வேறுபாடுகளும் இல்லாத நிர்குண பிரும்மமாக இருக்கின்றபோதிலும், சாதகர்கள் தங்களது மேம்பாட்டுக்காக, அதனை நற்குணங்கள் நிரம்பிய கடவுளாக, அதாவது சகுண பிரும்மமாகக் கருதி வழிபடுவது ஏற்புடையதே. தனக்குள் பிரும்மத்தை உணர்ந்து திளைக்கின்ற ஞானம் அடைகின்றவரையில், பக்தி, பிரார்த்தனை என்ற வடிவிலான வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவதை ஆதிசங்கரர் தடுக்கவில்லை. மாறாக, அதனை முறைப்படுத்திக் கொடுத்தார். ஏராளமான வழிபாட்டு முறைகளுடன், தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களும், ஏன் நரபலி உள்ளிட்ட கொடூர வழிபாடுகளும் காலப்போக்கில் பாமர சமூகத்திடம் பரவிக் கிடப்பதைப் பார்த்த ஆதிசங்கரர், அவற்றில் கண்டித்து ஒதுக்க வேண்டியதைக் கண்டித்தும், சிலவற்றை மேம்படுத்தியும், முக்கியமான ஆறு மதங்களாகத் தொகுத்துக் கொடுத்தார். இதற்கு ஷண்மதம் என்று பெயர். சைவம் (சிவன்), சாக்தம் (சக்தி), வைஷ்ணவம் (விஷ்ணு), காணாபத்யம் (கணபதி), கௌமாரம் (குமாரன் எனப்படும் முருகன்), சௌரம் (சூர்யன்) ஆகியவையே அவை. சிலர் கௌமாரத்துக்குப் பதில் அக்னியை வழிபடும் ஆக்னேயம், சௌரத்துக்குப் பதில் இந்திரனை வழிபடும் ஐந்திரம் என்றும் கூறுவார்கள்.
ஆதிசங்கரர், பேதமற்ற ஒருமையான அத்வைதத்தை போதித்ததால் அவருக்கு அனைத்தும் பிரும்மமே (பரமாத்மாவே). இதில் மத பேதங்களுக்கு இடமில்லை. எந்தக் கடவுளை வழிபட்டாலும் அது அந்தப் பரப்பிரும்மத்தையே சாரும் என்பதே அவரது கொள்கை. மேலும், தனக்குள் பிரும்மத்தை முழுமையாக உணர்ந்துகொண்ட முக்தனுக்கு வழிபாடு அவசியமில்லை என்பதும் அவர்தம் கருத்து.
அதேநேரத்தில், அத்வைதத்துக்கு ஆதிசங்கரர் புதுமையான விளக்கங்கள் கொடுத்தாலும், பழைமையான வேத, உபநிஷதக் கருத்துகளைத்தான் எடுத்துரைத்தார். அந்தவகையில், அத்வைத கருத்துகளுக்கு அடிப்படையாக உள்ள வேத, உபநிஷதக் கருத்துகளை அடுத்த வாரம் காண்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.