31. கர்மமே பிரதானம்

ஹிந்து தர்மத்தின் 6 தத்துவ நோக்குகளில் (ஷட்தர்சனங்களில்) ஒன்றாகிய மீமாம்சை எனப்படும் பூர்வ மீமாம்சை அலாதியானது. இது, தெய்வத்தைவிட
Updated on
3 min read

ஹிந்து தர்மத்தின் 6 தத்துவ நோக்குகளில் (ஷட்தர்சனங்களில்) ஒன்றாகிய மீமாம்சை எனப்படும் பூர்வ மீமாம்சை அலாதியானது. இது, தெய்வத்தைவிட தெய்வீகமான வேதத்துக்கே முக்கியத்துவம் தருகிறது. முக்திக்கான நாட்டத்தைவிட, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளாகிய கடமைகளை நிறைவேற்றி அதன்மூலம் கிடைக்கும் உயர் பலன்களை அனுபவிப்பதே வாழ்வின் லட்சியம் என்று வலியுறுத்துகிறது. ஆகையால் ஆராய்ந்து அறியும் ஞானத்தைவிட, வேதத்தின் ஆணைகளை (அதாவது, கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளையும், சடங்குகளையும்) நிறைவேற்றுகின்ற கர்மமே இதற்கு பிரதானம்.

நடைமுறையில் தற்போதுள்ள ஹிந்து மதம் இரு கூறுகளைக் கொண்டு துலங்குகிறது. அதில் ஒன்று, வேதாந்தம் எனப்படும் ஞான மார்க்கம் என்றால், மற்றொன்று சந்தியா வந்தனம், ஹோமம் உள்ளிட்ட வேதச் சடங்குகளைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று விதிக்கின்ற மீமாம்சையாகிய கர்ம மார்க்கம். உண்மையில், வேதாந்தமும் மீமாம்சையும் அடிப்படை வேறுபாடுகளுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போன்றவை. மீமாம்சைக்குப் பெயர் பூர்வ மீமாம்சை என்றால், வேதாந்தத்துக்குப் பெயர் உத்தர மீமாம்சை.

பூர்வ என்றால் முந்தையது என்று பொருள். மீமாம்சை என்றால் ஆய்வு, விசாரணை என்று பொருள். வேதத்தின் முன் பகுதிகளான பிராமணங்களையும், சம்ஹிதைகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்குப் பொருள் கூறி, சடங்குகளை வலியுறுத்துகிறது பூர்வ மீமாம்சை. உத்தர என்றால் பிந்தையது என்று பொருள். அந்த வகையில் உத்தர மீமாம்சையாகிய வேதாந்தம், வேதத்தின் பின் பகுதியான உபநிஷதங்களின் அடிப்படையில் தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு, தவத்தையும் முக்தி நாட்டத்தையும் வலியுறுத்துகிறது.

வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மம் (அறநெறி) கர்மங்கள் எனப்படும் சடங்குகளைச் செய்வதுதான் என்று வலியுறுத்துவதால், பூர்வ மீமாம்சைக்கு கர்ம காண்டம் என்றும் பெயர் உண்டு. அதேபோல், முக்திக்கான வழியை வலியுறுத்துவதால் உத்தர மீமாம்சைக்கு ஞான காண்டம் என்று பெயர். ஷட்தர்சனங்களில், இன்றைய ஹிந்து மதத்தில் உயிர்ப்புடன் உள்ள இரண்டு தரிசனங்கள் இவை இரண்டு மட்டுமே. இன்றைய ஹிந்து மதத்தில் ஆன்ம நாட்டம், முக்தி தேட்டம் ஆகியவற்றைக் கூறும் வேதாந்தம் செல்வாக்கு பெற்றுள்ள போதிலும், அதற்கு இணையாக சந்தியா வந்தனம், யாகங்கள் உள்ளிட்ட சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதே இதற்குச் சான்று. இக்கால ஹிந்து மதம் உத்தர மீமாம்சையை தலையாகவும், பூர்வ மீமாம்சையை உடலாகவும் கொண்டு இயங்குவதாகக் கூறலாம். அதேநேரத்தில், மீமாம்சை என்று கூறுகையில், அது பூர்வ மீமாம்சையை மட்டுமே குறிக்கிறது.

மீமாம்சையைப் பொருத்தமட்டில், வேதம் ஆண்டவனாலோ அல்லது ரிஷிகளாலோ படைக்கப்பட்டது அல்ல. அது தானே தோன்றிய தெய்வீகமானது, எக்காலத்திலும் அழியாத நிரந்தரமானது, யாதொரு குறைபாடும் அற்றது. இதனை அபௌருஷ்யத்துவம் - அதாவது யாராலும் இயற்றப்படாத மாண்புடையது என்கிறார்கள் மீமாம்சகர்கள். அதன்படி, வேதச் சடங்குகளை நிறைவேற்றுவதே மனிதருக்கு விதிக்கப்பட்ட கடமையாகும்.

வேதங்களில் கூறப்பட்டுள்ள சந்தியா வந்தனம், அக்னிஹோத்ரம் உள்ளிட்ட தினசரி சடங்குகளையும் (நித்ய கர்மானுஷ்டானங்கள்) உயிர் நீத்த முன்னோர்களுக்கான நீத்தார் கடன் எனப்படும் மாதாந்திர அமாவாசை தர்ப்பணம், வருடாந்திர திதி மற்றும் பல்வேறு யாகங்கள் (ஹோமங்கள்) உள்ளிட்ட காலச் சடங்குகளையும் (நைமித்திக கர்மங்கள்) ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டும். இதேபோல், பிறந்த குழந்தைக்கான ஜாதகர்மா (பெயர்சூட்டுதல்), குறிப்பிட்ட வயதில் உபநயனம் (பூணூல் அணிவித்தல்), பருவமடைந்து திருமணக் காலத்தில் ருது சாந்தி உள்ளிட்ட சடங்குகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் விடுத்தால், கர்மானுஷ்டானங்களை (கடமைகளை) கைவிட்ட பாவம் (பிரத்யவய தோஷம்) பிடித்துக்கொள்ளும். இதேபோல், குறிப்பிட்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள, உதாரணத்துக்கு பிள்ளை பிறப்பதற்காக புத்ர காமேஷ்டி யாகம் போன்றவற்றைச் செய்து, அதற்குரிய பலன்களைப் பெறலாம். இதற்கு காம்ய கர்மம் என்று பெயர்.

இந்த வேதச் சடங்குகளால் குறிப்பிட்ட ஆற்றலும், பலன்களும் கிடைக்கின்றன. உடல் அழிவுற்ற பிறகும் நீடித்திருக்கும் ஆன்மாவானது, வேள்வி உள்ளிட்ட சடங்குகளால் பெற்ற பலன்களை இறந்தபின் சொர்க்கத்தில் அனுபவிக்கிறது. இதேபோல், வேதங்களில் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட செயல்களை (நிஷித்த கர்மங்கள்) செய்வதன் மூலம் பாவம் பற்றிக்கொண்டு, நரகம் கிடைக்கிறது. இவ்வாறாக கர்மங்களின் அடிப்படையில், சொர்க்கமோ, நரகமோ கிடைக்கிறது. நாம் வாழ்கின்ற இந்த உலகம் உண்மையானது. அதேபோல் நாம் வாழ்கின்ற வாழ்க்கையும், செய்கின்ற செயல்களும் உண்மையானவையே தவிர, கனவோ மாயையோ அல்ல என்கிறது மீமாம்சை.

வாழ்க்கை உண்மையானது என்பதால், அதனைச் சிறந்த வகையில் அனுபவிக்கவும், இறந்த பின் மேலிருக்கும் சொர்க்கத்தில் மேலான பலன்களைப் பெறவும் வேதச் சடங்குகள் அவசியம் என்பதே மீமாம்சையின் கொள்கை. தவம், யோகம், ஆத்ம சாதனை, அதன் மூலம் அடையப்பெறும் முக்தி உள்ளிட்டவற்றை மீமாம்சை மறுதலிக்கிறது. கடமையைச் செய் என்பது இதனைப் பொருத்தமட்டிலும், சந்தியா வந்தனம், யாகங்கள் உள்ளிட்ட வேதச் சடங்குகளைச் செய்வதுதான். இது சொல்லுகின்ற தர்மம் (அறம்) வேதத்தில் கூறப்பட்டுள்ள கடமைகளான மேற்கண்டவற்றை தவறாமல் மேற்கொள்வதுதான்.

குறிப்பிட்ட பலன்களைப் பெற குறிப்பிட்ட இயற்கை ஆற்றல்களான தேவ-தேவதைகளை குளிர்விக்கும் வேள்விச் சடங்குகளைச் செய்தால் போதுமானது. இதற்கு மேல், உலகைப் படைத்து, கட்டிக் காக்கும் கடவுள் என்று எதுவும் இல்லை என்பதே முற்கால மீமாம்சகர்களின் கருத்து. இதேபோல், வேள்விச் சடங்குகளால் ஏற்படும் விளைவுகளுக்கு அபூர்வம் என்று பெயர். இது கண்ணுக்குத் தெரியாத (அத்ருஷ்டம்) ஆற்றலாகும். இந்த அபூர்வமே உரிய பலனைக் கொடுத்துவிடும் என்பதும் அவர்களது வாதம். ஆனால், பிற்காலத்தில் வேதாந்திகள் உள்ளிட்ட மாற்று தத்துவவாதிகளின் கடுமையான விமர்சனங்களால், இக் கருத்துகளை மீமாம்சை மாற்றிக்கொண்டது. அறிவற்ற அபூர்வமானது எப்படி அந்தந்த செயல்களுக்குரிய பலன்களைக் கொடுக்கமுடியும் என்ற சிக்கலான கேள்விக்கு விடையாக, அபூர்வம் என்ற விளைவைக் கொண்டு உரிய பலன்களை கடவுள் அளிப்பதாக பிற்கால மீமாம்சகர்கள் கூறினர்.

வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு அப்படியே கொச்சையான பொருளை எடுத்துக்கொண்டு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது மீமாம்சை என்று கூறப்படுவதுண்டு. வேதத்தின் உட்கருத்தை மிகவும் நுணுகி ஆராயாமல், யதார்த்த உலகுக்கான புரோகித தேவைகளுக்கேற்ப சடங்கு ரீதியிலேயே அந்தத் தத்துவம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு. வேதத்தின் உட்பொருள் ஆத்ம அறிவும், அதன் அடிப்படையிலான ஆன்ம விடுதலையும் (முக்தியும்) தான் என்பது, பூர்வ மீமாம்சைக்கு பதிலடி கொடுப்பதுபோல் எழுந்த உத்தர மீமாம்சையின் வாதம். இருப்பினும், இவை இரண்டுக்குமே ஆதார மூலங்கள் வேதத்தில் உள்ளன. தரிசனம் என்பதே அவரவர் கண்ட காட்சிதானே. ஒரே காட்சிப் பொருளே அவரவர் பார்வைக்கும், கோணத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப வெவ்வேறு அனுபவங்களை அல்லவா தருகிறது?

அந்த வகையில், மீமாம்சை என்பதை தனியொரு தரிசனமாக வார்த்தெடுத்தவராக கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான ஜைமினி கருதப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு அல்லது கி.பி. 2-ம் நூற்றாண்டு என்று கூறுவோரும் உண்டு. வேதத்தின் வெவ்வேறு சம்ஹிதைகளிலும், பிரமாணங்களிலும் கூறப்பட்டுள்ள பல்வேறு வேள்விச் சடங்குகளையும், அவற்றுக்குரிய பலன்களையும் விளக்கும் வகையில் மீமாம்ச சூத்திரம் என்ற நூலை ஜைமினி படைத்தார். 12 பாகங்களில், 60 அத்தியாயங்களின் கீழ் 2,500 ஸ்லோகங்களை (செய்யுள்களை) உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது.

இந்த மீமாம்ச சூத்திரத்துக்கு கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சபர ஸ்வாமி என்பவர் எழுதிய விளக்கவுரை மிகச் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இதற்கு சபர பாஷ்யம் என்று பெயர். அவருக்குப் பின், கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபாகரரும், கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டரும் மீமாம்சை தத்துவத்தில் காலத்துக்கேற்ப சில மாற்றங்களுடன் புதிய தத்துவ விளக்கங்களைப் படைத்தனர். அந்த வகையில், பிரபாகரர் இயற்றிய மீமாம்சை தத்துவ விளக்க நூலுக்கு ப்ருஹதி என்று பெயர். அவரைத் தொடர்ந்து குமாரில பட்டர் மீமாம்ச சூத்திரத்துக்கு, ஸ்லோக வார்த்திக, தந்திர வார்த்திக, துப்தீக என்ற மூன்று பாகங்களைக் கொண்ட விளக்கவுரை நூலை இயற்றினார்.

பிரபாகரரின் சீடரான சாலிகநாதர் என்பவர் பிராகரணபஞ்சிகா என்ற நூலையும், கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சாஸ்திர தீபிகா என்ற நூலையும் எழுதியுள்ளனர். கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாதவ வித்யாரண்யர் என்பவர் நியாயமாலாவிஸ்தர என்ற நூலையும், 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லௌகாக்ஷி பாஸ்கரர் என்பவர் அர்த்தசங்க்ரஹ என்ற நூலையும் இயற்றியுள்ளனர்.

மீமாம்சை தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்தும் முக்தி, ஈஸ்வரன் ஆகிய விஷயங்களில் அது செய்துகொண்ட சமரசங்கள் குறித்தும் அடுத்த வாரம் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com