இப்போதெல்லாம் பலவிதங்களில் செலவழித்து திருமணம் செய்கின்றனர். காரணம் கேட்டால் திருமணம் வாழ்வில் ஒருமுறைதான் என்றும் அதை தடபுடலா செய்யணும் என்கின்றனர். சிலசமயம் தனது தகுதிக்கு மீறிய இடத்தில் பெண் கொடுத்துவிட்டு படாதபாடு படும் நிலையும் காண நேரிடுகிறது. இதில் பல கருத்து வேறுபாடுகள் பலருக்கும் இருக்கலாம்.
இப்படி தகுதிக்கு மீறிய செயல்களைப் பார்த்து அதே மாதிரி செய்ய ஆசைப்படுவதுதான் பல்வேறு முறை தவறிய செயல்களுக்கு அடிப்படை காரணமாகிறது.
இப்போது நடைபெறுகின்ற திருமண சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் திருமணத்திற்கு வருபவர்களில் பெரும்பாலோர் பார்ப்பதில்லை. அருகில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசிக்கொண்டும் செல்போனில் பேசிக்கொண்டும்தான் இருக்கின்றனர்.
சிலர் செல்போன் பேசுவதை சாக்காக வைத்து வெளியே சென்றுவிடுகின்றனர். மணமக்களை வாழ்த்த அட்சதை தருகிறார்கள். அதை அனைவரும் இருந்த இடத்திலிருந்தே போடுகிறார்கள். அது மணமக்கள் மேல் சென்று விழாமல் அருகில் இருப்பவர்கள் மீதுதான் விழுகிறது. அருகில் சென்று போட்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தாமல், ஏதோ தன் வேலை முடிந்துவிட்டதாக மணமேடையை நோக்கி அட்சதையை வீசிவிட்டு அமர்ந்துவிடுகின்றனர்.
அடுத்ததாக மணமகன் தாலி கட்டியவுடன் அனைவரும் திடீரென எழுந்து கொள்கிறார்கள். என்ன என்று பார்த்தால் சாப்பிடச் சென்றுகொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும்தான் முறையாக மணமக்கள் அருகில் சென்று அட்சதையைப் போட்டு வாழ்த்திவிட்டு அவர்கள் கொண்டுவந்துள்ள பரிசுப் பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.
இவர்கள் ஏன் சாப்பிடுவதற்கு இப்படி அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? வந்த வேலை என்பது மணமக்களை சந்தித்து வாழ்த்திவிட்டு மனதிருப்தியோடு செல்வதே முறையான செயல்.
என்ன செய்வது? சிலர் அடுத்தவர் செய்ததைப் பார்த்து செய்தே பழக்கம் என்பதால் ஒருவர் எழுந்தவுடன் அனைவரும் எழுந்துவிடுகின்றனர். முறையாக வாழ்த்துகள் இல்லை. நின்று நலம் விசாரித்தலும் இல்லை. மண்டபத்தில் ஏதோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் தனித்தனியாக மொய்ப் பணம் வசூலித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் தேடிச் சென்று தான் கொண்டுவந்த பணத்தை பெயரும் ஊரும் சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும்! தங்களின் பெரும் சுமை தீர்ந்ததாக நினைக்கின்றனர். சிலசமயம் மணமக்களைக் கூட பார்க்காமல் சென்றுவிடுகின்றனர்.
அப்படி என்ன பரபரப்பான உலகில் வாழ்ந்து என்ன சாதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை? எதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி எப்படி செயல்பட வேண்டும் என்பதுகூட பலருக்குத் தெரியவில்லை. காரணம், தாங்கள் வந்ததை மொய்ப்பணம் மூலம் வருகைப் பதிவாக அவர்கள் நிரூபித்தது போதும் என்பதுதான். அதுவும் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ அந்த வீட்டார் எவ்வளவு மொய்ப்பணம் வைத்திருந்தனர் என்பதைப் பார்த்து அதைவிட ரூ.50 அல்லது ரூ.100 அதிகம் வைத்து தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது என்ன கணக்கோ தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தனது வீட்டு விசேஷத்திற்கு இதைவிட அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோ என்னவோ?
திருமணத்தில் நடக்கும் ஆடம்பரச் செலவு பற்றி சொல்லவே வேண்டாம். வந்தவர்களுக்கு உணவு வழங்க எளிய வகையில் ஏற்பாடு செய்தால்கூட போதும். இலை நிறைய பல உணவு வகைகளை நிரப்பி வைத்து தங்களது செல்வாக்கை காண்பிக்கின்றனர். வந்து அமர்வதற்கு முன்பே அனைத்து வகைகளையும் இலையில் போட்டு பரப்பிவிடுகின்றனர். சிலருக்கு சில தேவையில்லாமலும் பிடிக்காமலும் இருக்கலாம். அவர்கள் நிச்சயமாக அதை மீதம் வைத்து வீணாக்கத்தான் போகிறார்கள். எது தேவையோ அதைப் பெற்று வீணாக்குதலைத் தவிர்க்கலாம்.
இதற்காக வந்ததுதான் நின்று கொண்டே சாப்பிடும் பஃபே முறை. எனவே, இப்போது நல்ல ஆடம்பர திருமணம் என்றால், இரண்டு முறைகளிலும் உணவு வழங்குகின்றனர். உட்கார்ந்து சாப்பிட விரும்புவோர் தனியான இடத்திலும் நின்று சாப்பிடுவோர் அதற்கு தனி இடத்திலும் சாப்பிட ஏற்பாடு செய்கின்றனர்.
இதையெல்லாம் ஓரளவு குறைத்து மணமக்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தால் பலவிதங்களில் பயனுள்ளதாக அமையும். விசேஷங்களுக்கு வருபவர்களும் செல்வாக்கை காண்பிக்கவே வருகின்றனர்.
ஒன்று கவனித்திருந்தால் தெரியும். இம்மாதிரி ஆடம்பர திருமண விசேஷங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தில் ஒருவித மன இறுக்கம் நிலவுவதை உணரலாம். காரணம், தாங்கள் சந்தித்த பொருளாதார ஏற்றத்தாழ்வான சமுதாய மக்களே காரணம். வசதிகளைக் கணக்கிடாமல் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இம் மாதிரி மனவேறுபாடு நிகழாது.
இன்னொரு விஷயம், மணமக்களுக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்கள். அவை பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதால் உபயோகமற்றுப் போகிறது. பரிசுகளை விற்கக்கூடாது என்பதால் பரணில் பயனற்று அடைத்து வைக்கப்படுகிறது.
இதைவிட உங்களுக்கு என்ன பொருள் வேண்டும் என்று அவர்களிடமே கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் பயன், நமக்கும் திருப்தி ஏற்படும்.
மணவிழாவிற்குச் செல்வதை ஒரு சடங்காக இல்லாமல் மனமுவந்து சென்று மணமக்களை வாழ்த்துவோம். மணமக்களின் பெயரையும் மணநாளையும் குறித்து வைத்துக் கொண்டு மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ வாழ்த்து தெரிவிக்க மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் மீதே உங்களுக்கே பெருமையாக இருக்கும். வாழ்த்து பெறுபவர்கள் உங்களை தங்கள் வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டார்கள். முறையாக வாழ்த்துவோம். நல்ல சமுதாயம் அமைய நாமும் துணை நிற்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


